name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வீரராகவர் பாடல் (01) இம்பர் வான் எல்லை இராமனையே பாடி !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

வீரராகவர் பாடல் (01) இம்பர் வான் எல்லை இராமனையே பாடி !

தனிப்பாடல் - பாணன், பாணி உரையாடல் !


-----------------------------------------------------------------------------------------------------
பாடல்
-----------------------------------------------------------------------------------------------------

இம்பர்வான்   எல்லை   இராமனையே   பாடி
என்கொணர்ந்தாய்   பாணாநீ   என்றாள் ,  பாணி
வம்பதாம்   களப   மென்றேன்,  பூசுமென்றாள்,
மாதங்க    மென்றேன்,   யாம்வாழ்ந்தே   மென்றாள்,
பம்புசீர்   வேழமென்   றேன்தின்னு    மென்றாள்,
 பகடென்றேன்   உழுமென்றாள்   பழனந்   தன்னை
கம்பமா  என்றேன்    நற்களியா    மென்றாள்,
கைம்மா  என்றேன்    சும்மா    கலங்கினாளே !

-------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
-----------------

அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு யானை ஒன்றைப் பரிசிலாகப் பெற்று வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனைவி கேட்கிறாள் !



புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! (களபம் = யானை, சந்தனம்)

அது கேட்ட அவர் மனைவி, ’சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள் !

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் !(மாதங்கம் = யானை, நிரம்ப தங்கம்)

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார் !

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம் ! (வேழம் = யானை, கரும்பு)

அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார் !

பாணினி இப்போதும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறள் என்பதை உணர்ந்த பாணன், ’பகடு’ கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார் ! (பகடு = யானை, உழவுமாடு)

பகடு கொண்டு வந்திருக்கிறீர்களா, நல்லதாய்ப் போயிற்று, அதை ஏரில் பூட்டி வயலை உழும் என்று சொன்னாள் !

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! (கம்பமா = யானை, கம்புமாவு)

மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள் !

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைம்மா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ! (கைம்மா = யானை)

அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை (கை + மா = கைம்மா) என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம் !

------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

இம்பர் = இவ்வுலகம்; வான் எல்லை = வானத்தை எல்லையாகக் கொண்ட (கீழே நிலத்தையும் மேலே வானத்தையும் எல்லைகளாகக் கொண்ட பரந்த நாட்டை ஆளும் ) இராமனையே பாடி = இராமன் என்னும் மன்னனை நேரில் சென்று பார்த்துப் பாடி ;

என் கொணர்ந்தாய் பாணா நீ =  என்ன பரிசில் பெற்று வந்திருக்கிறாய் பாணா நீ;  என்றாள் பாணி = என்று பாணனாகிய தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள் பாணி ; வம்பு + தாம் = வம்பதாம் = வம்பதாம் களபம் = கயிற்றில் கட்டப்பட்டுள்ள யானை [வம்பதாம் களபம் = புதுமையான சந்தனம்]; என்றேன் = என்று சொன்னேன்;

(அவள் சந்தனம் என்று நினைத்துக் கொண்டு) பூசும் என்றாள் = உடம்பில் பூசிக் கொள்ளும் என்று சொன்னாள்; மாதங்கம் = யானை ; [மா தங்கம் = நிரம்பத் தங்கம்}; (அவள் நிரம்பத் தங்கம் கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு) யாம் வாழ்ந்தேம் என்றாள் = நம் வறுமை நீங்கி வாழலாம் என்று சொன்னாள்;

பம்பு சீர் = பொலிவு மிக்க ; வேழம் = யானை ; [ வேழம் = கரும்பு ] ; (அவள் கரும்பு கொண்டு வந்துள்ளேன் என நினைத்துக் கொண்டு) தின்னும் என்றாள்;

பகடு = யானை; [பகடு = உழவு மாடு]; (அவள் உழவு மாடுகள் என்று நினைத்துக் கொண்டு வயல்களை உழுதிடுங்கள் என்று சொன்னாள்) பழனம் = வயல்; கம்பமா = யானை; [ கம்ப மா = கம்பு மாவு ] (அவள் கம்பு மாவு என்று நினைத்துக் கொண்டு களிக்கு ஆகும் என்று சொன்னாள்);

கைம்மா = யானை; சும்மா கலங்கினாளே = (இப்பொழுதுதான் சரியாகப் புரிந்து கொண்டு) வறுமையில் வாடும் நாம்  யானையைக் கட்டி எப்படித் தீனி போடுவது என்று சொல்லி மனம் கலங்கினாள்.


-------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை.

-------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 29] 
(13-01-2019)
-------------------------------------------------------------------------------------------------------






11 கருத்துகள்:

  1. பாடலின் ஆசிரியர் பெயர் தெரிவிக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து பதிவு அருமை தமிழ் வாழ்க வளர்க

      நீக்கு
    2. மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி ! இதுபோன்று வலைப்பூக்களைத் திறந்து படிப்பதற்கென கூகுள் கணக்கு (ஜி.மெயில் தான்) ஒன்று தனியாகத் தொடங்கி அதில் உங்கள் நிழற்படத்தையும் இணையுங்கள். அந்தக் கணக்கின் வழியாக நீங்கள் வலைப்பூவுக்குள் வந்து கருத்துரை எழுதினால், அதில் உங்கள் பெயரும் படமும் பதிவாகும். செய்வீர்களா ?

      நீக்கு
  2. தங்கள் வினாவை மிகத் தாதமாகக் கண்ணுற்றேன். பொறுத்தருள்க ! இன்பர்வான் எல்லை இராமனையே பாடி என்னும் பாடலை எழுதியவர் “அந்தகக் கவி வீரராகவ முதலியார்”. பார்வைத் திறனை இழந்துவிட்டமையால் “அந்தகக் கவி” என்னும் அடைமொழியுடன் இவர் அழைக்கபடுகிறார்.

    பதிலளிநீக்கு
  3. அய்யா இராமன் காப்பிய ராமனையா குறிக்கிறது

    பதிலளிநீக்கு
  4. இல்லை ! இப்பாடலில் வரும் ”இராமன்” காப்பிய இராமனைக் குறிப்பதன்று ; இந்த இராமன் ஒரு சிற்றரசனாக இருக்கக் கூடும் !

    பதிலளிநீக்கு
  5. விளக்கம் உரை அருமை

    பதிலளிநீக்கு
  6. எத்தனை நாட்கள் ஆகிவிட்ட ன இப்படியொரு பழம் பாடல் விளக்க உரையுடன் படித்து.நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சிறப்புடைத்து. எனது காணொளிக்கும் பயன்மிக்கதாய் இருந்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .