name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/20/20

செவ்வாய், அக்டோபர் 20, 2020

தனிப்பாடல் (130) வடிவினிற் சிறந்தோய் நின் மருங்குற்ற - புதிர்ப் பாடல் !

யார் இந்தப் பிள்ளை ?

கடந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை, தமிழைக் கற்றறிந்து துறைபோகிய அறிஞர்கள் பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் பெயர் குமாரசாமி முதலியார். இவரைப் பற்றிய வேறெந்தச் செய்தியும் வரலாற்றில் பதிவாக வில்லை. இவர் இயற்றிய  ஒரு பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

                               வடிவினிற்   சிறந்தோய் !   நின்மருங்   குற்ற

                                .....மைந்தனார்    என்றவன்   றனக்கு

                                மடவர    லிவன்றன்    தந்தையார்    யார்க்கு

                                ....மாமனோ    அவன்றந்தை    யெனக்கு

                                 நடைபெறு    மாம    னாகுமென்    றனளந்

                                  .....நங்கைக்கும்   அம்மக    னுக்கும்

                                  புடவியில்    வழங்கும்    முறையறிந்    தெனக்குப்

                                   .....புகன்றிட    வேண்டுகின்    றனனே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

படிப்பதற்கும், படித்துப் புரிந்துகொள்வதற்கும் சற்றுக் கடினமான இப்பாடலை, சந்தி பிரித்து எழுதித் தருகிறேன்எளிமையாகப் படிக்க வாய்ப்பாக !

-----------------------------------------------------------------------------------------------------------

                                  வடிவினில்     சிறந்தோய்நின்  மருங்கு  உற்ற

                                   .....மைந்தன்  யார்என்ற   அவன்  தனக்கு

                                   மடவரல், ”இவன்  தன்  தந்தையார்  யார்க்கு

                                   .....மாமனோ;   அவன்  தந்தை  எனக்கு

                                    நடைபெறு   மாமனாகும்  என்றனள்அந்

                                     .....நங்கைக்கும்  அம்மகனுக்கும்

                                    புடவியில்  வழங்கும்  முறை  அறிந்து  எனக்குப்

                                     .....புகன்றிட  வேண்டுகின்றனனே !

 

----------------------------------------------------------------------------------------------------------

 சொற்பொருளுரை:-

----------------------------------


வடிவினிற் சிறந்தோய் = ! அழகிய பெண்ணே! ; நின் மருங்குற்ற = உன் பக்கத்தில் நிற்கிறமைந்தனார் ? =  (மைந்தன் யார் ?) இந்தப் பையன் யார் ? ; என்றவன் றனக்கு = என்று வினவிய எனக்கு ; மடவரல் = அந்தப் பெண்இவன்றன் தந்தையார் = இவனுடைய  தந்தை ; யார்க்கு = யாருக்கு ; மாமனோ = மாமன் முறை  வேண்டுமோஅவன்றந்தை = அவனுடைய தந்தைஎனக்கு நடைபெறு மாமனாகும் = எனக்கு இப்பொழுது  மாமன் முறை ஆகும்; என்றனள் = என்று கூறினாள்; அந் நங்கைக்கும் அம்மகனுக்கும் = அந்தப் பெண்ணுக்கும் அந்தப் பையனுக்கும் ; புடவியில் = இவ்வுலகத்தில் ; வழங்கும் முறை = வழங்கப்பெறும் உறவு முறை; அறிந்து = அலசி ஆராய்ந்து ; எனக்குப் புகன்றிட = எனக்குச் சொல்லுமாறு; வேண்டுகின்றனனே = வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------

! பெண்ணே ! உன் அருகில் நிற்கும் இந்தப் பையன் யார்என நான் கேட்டேன்.

 

அதற்கு அந்தப் பெண்,“இந்தப் பையனின் தந்தை யாருக்கு மாமன் முறை உள்ளவரோ, அவருடைய தந்தை  எனக்கு மாமன் ஆகும்.” என்றாள்.

 

அப்படியானால், அந்தப் பெண்ணுக்கு, அவர் அருகில் நிற்கும் பையன் என்ன உறவு முறை வேண்டும் என்பதே இப்பாடல் மூலம் விடுக்கப்படும் புதிர் ?

 

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ! உங்கள் விடையைக் கருத்துரைப் பகுதியில்  பதிவு செய்யுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

ITI முகநூற் குழு.

[தி.பி: 2051, துலை (ஐப்பசி),02]

{18-10-2020}

----------------------------------------------------------------------------------------------------------

                  தமிழ்ப் பணி மன்றம்  முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------