திருவாசகத்துக்கு மனமுருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார் !
சைவ சமயக் குரவர்கள் நால்வரில், தேவாரத்தைப் படைத்தவர்கள் திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர்.
திருவாசகத்தை அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான் ! சிவபெருமான் மீது பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே திருவாசகம் ! இஃது எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றுள்ளது !
மாணிக்கவாசகர், பாண்டிவள நாட்டில் மதுரைக்குக் கிழக்கே
24 கி.மீ தொலைவில் உள்ள திருவாதவூர் என்னும் சிற்றூரில்
பிறந்தார். தந்தையார் பெயர் சம்புபாதர். தாயார் சிவஞானவதி. கி.பி
.9 –ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகர் இளமையிலேயே அறிவாற்றல்
மிக்கவராகத் திகழ்ந்தார் !
மாணிக்க வாசகரின் மேதைமையை கேள்வியுற்ற பாண்டிய
மன்னன் அரிமர்த்தனன், அவரை வரவழைத்து தனது அரசவையில் அமைச்சர் பொறுப்பை வழங்கினான். அவரது செயலாற்றலை உற்று நோக்கி வந்த பாண்டிய மன்னன், மாணிக்க வாசகருக்கு “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டத்தையும் அளித்து மகிழ்ந்தான் !
உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும், மாணிக்கவாசகர், அவற்றில் அதிக ஈடுபாடு காட்டாமல்,
சிவ வழிபாட்டிலேயே நாட்டம் கொண்டிருந்தார் ! அதன்
வெளிப்பாடு தான் அவர் இயற்றிய திருவாசகம் !
திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள்
உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல்
என்னூம் நான்கு பெரும் பகுதிகள் இதிலுள்ளன !
--------------------------------------------------------------------------------------------
அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே !
அன்பினில் விளைந்த ஆரமுதே !
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையலேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே !
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே !
--------------------------------------------------------------------------------------------
இறைமைச் சுவையும், இனிமைத் தமிழும் ஒருங்கே இணைந்த
இத்தகு பாடல்கள் திருவாசகத்தின்கண் நிரம்ப உள்ளன !
மார்கழித் திங்களில் கோயில்களில் ஒலிபரப்பப் படும்
திருப்பாவை, திருவெம்பாவைப்
பாடல்களை அனைவரும் செவி மடுத்திருக்கிறோம். திருவெம்பாவை மொத்தம்
20 பாடல்கள் ஆகும். இவற்றை இயற்றியவர் மாணிக்க
வாசகரே. திருவாசகத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் திருவெம்பாவையில்
எட்டாவது பாடல் இதோ இப்படித் தொடங்குகிறது !
----------------------------------------------------------------------------------------
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்;
.......ஏழில் இயம்ப இயம்புவெண் சங்கெங்கும்;
----------------------------------------------------------------------------------------
இப்பாடலில் வரும் “ஏழில்” என்னும்
சொல் இக்காலத்தில் “நாதஸ்வரம்” என்றும்
“நாகஸ்வரம்” என்றும் பலவாறாகச் சொல்லப்படும் இசைக்
கருவியைக் குறிக்கிறது. “ஏழில்” என்னும்
தமிழ்ச் சொல் மறைந்து போய் “நாதஸ்வரம்” என்னும் வடமொழிச் சொல் கோயில்களில் மட்டுமன்றி, தமிழர்களின்
நாவிலும் புழங்குவது தான் தமிழ் மீது வடமொழி மேலாண்மை செலுத்துவதன் அடையாளம்
!
தமிழை விட வடமொழியே உயர்ந்தது என்னும் கொள்கையுடைய
பார்ப்பனர் குலத்தில் பிறந்திருந்தாலும், வடமொழி மேலாண்மை முனைப்பாக வேரூன்றித் தழைத்து வந்த அக்காலத்திலும்
கூட, அழகிய தமிழில் பாடல்களைப் படைத்து, தமிழ்கூறும் நல்லுலகத்தில், தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி
வைத்திருக்கும் மாணிக்க வாசகர் என்றென்றும் போற்றுதற்குரியவரே !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ் பணி
மன்றம்.
[தி.ஆ:2050: நளி (கார்த்திகை) 12]
{28-11-2019}
-------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------