name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 08/31/19

சனி, ஆகஸ்ட் 31, 2019

மூதுரை (17) அற்றகுளத்து அறுநீர்ப் பறவை !

நீர் வற்றிய குளத்தை விட்டு நீங்கிச் செல்லும் பறவைகள் !

அற்ற குளத்து அறு நீர்ப்பறவை போலஎன்ற வரிகளைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். காலங்கள் பல கடந்தாலும், கரைந்து போகாத இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் நமது தமிழ் மூதாட்டி ஔவையார் தான். இவர் இயற்றியமூதுரையில் 17 –ஆவது பாடலாக வரும்அற்ற குளத்து அறு நீர்ப்பறவை....” என்ற பாடலைப் பார்ப்போமா !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (17)
------------------------------------------------------------------------------------------------------------

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர்அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

அற்ற குளத்தின் = நீர் வற்றிய குளத்தினின்றும் ; அறு = நீங்குகிற ; நீர்ப் பறவை போல் = நீர் வாழ் பறவைகள் போல ; உற்றுழி = நமக்கு வறுமை வந்த பொழுது ; தீர்வார் = நம்மை விட்டு விலகிச் செல்வோர் ; உறவு அல்லர் = உறவினர் ஆகார் ; அக்குளத்தில் = அந்தக் குளத்திலுள்ள ; கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல = கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ; ஒட்டி உறுவார் = நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உறவு = உறவினராவார்.

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------
குளத்தில் நீர் நிறைந்திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மனமில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களேயானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. “உறவினர்கள்என்று சொல்லிக் கொள்ளும் அருகதை அற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------
      
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மீனம்,02]
{16-03-2019}

----------------------------------------------------------------------------------------------------------

மூதுரை (14) கான மயிலாடக் கண்டிருந்த !

கல்லாதான் கற்ற கவி !

கானகத்தில்  தனது அழகிய தோகையை விரித்து ஆடிய மயிலைப் பார்த்து வான்கோழியும் தனது அருவருப்பான சிறகை விரித்து ஆட முயன்றதாம். இந்தக் காட்சியை உவமையாக்கி தனதுமூதுரையில் ஒரு பாடலைப் படைத்திருக்கிறார் ஔவையார். இதோ அந்தப் பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.14.
------------------------------------------------------------------------------------------------------------

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி !

-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------------------------

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத்தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி !

-----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------

கானம் = காடு ; தானும் அதுவாகப் பாவித்து = தன்னையும் மயில் போல நினைத்துக் கொண்டு ; தானும் = அதுவும் ; தன் பொல்லாச் சிறகை = தன் அழகில்லாத சிறகை ; கல்லாதான் = கற்க வேண்டியவைகளை முறைப்படிக் கல்லாதவன் ; கற்ற கவி = (கற்றோர் கூறுவதைச்  கேட்டு) ஒரு கவியைக் கற்றுக் கொண்டு சொல்லுதல்.

-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

கற்க வேண்டிய கல்வியை முறைப்படிக் கல்லாத ஒரு மனிதன்,  வேறு ஒருவர் எழுதிய கவிதையை மனப்பாடம் செய்துகொண்டு வந்து மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுதல் என்பது காட்டிலுள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்து ஆடுகையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த  வான்கோழியானது, தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக் கொண்டு தானும் தன் அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதைப் போன்றதாகும் !

------------------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------

கல்லாதவன் கற்றவனைப் போல் நடித்தாலும் கற்றவன் ஆக மாட்டான் !

------------------------------------------------------------------------------------------------------------
          
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),18]
{04-09-2019}

-------------------------------------------------------------------------------------------------------------

மூதுரை (13) கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே !

மரத்திற்கு ஒப்பான மனிதன் யார் ? 

பாடத் திட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றத்தினால் நல்வழி, நன்னெறி, மூதுரை, திருவருட்பா போன்ற நீதி நெறி வழிகாட்டும் நூல்களிலிருந்து பாடல்களைப் படிக்கும் வாய்ப்பினை மாணவர்கள்  இழந்து விட்டனர். எனவே, இளைய தலைமுறைக்குப் பயன்படும் வகையில் மூதுரையிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.13.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

கவையாகி = கவை போன்ற கிளைகளையும்; கொம்பாகி = நீண்ட குச்சிகளையும் உடையதாகி ; காட்டகத்தே = காட்டில் ; நிற்கும் = வளர்ந்து நிற்கும் ; அவை = அந்த மரங்கள் ; நல்ல மரங்கள் அல்ல = நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே = கற்றோர் நிறைந்த அரங்கத்தில் ;நீட்டு ஓலை = (ஒருவர்) நீட்டிய ஓலையை ; வாசியா நின்றான் = வாசிக்க மாட்டாமல் நின்றவனும் ; குறிப்பு அறிய மாட்டாதவன் = பிறர் முகக் குறிப்பை அறிந்து செயல்படாதவனுமே ; நன் மரம் = நல்ல மரங்களாம்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

கவை போன்ற கிளைகளையும், நீண்டு வளர்ந்ததிருக்கும் போத்துகளையும் (தடித்த நீண்ட குச்சி) உடையதாகி, காட்டில் செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள் எல்லாம் நல்ல மரங்கள் அல்ல. கற்றோர் நிறைந்த அரங்கத்தில், ஒருவர் தருகின்ற  ஓலைச் சுவடியைப் படித்துப் பார்த்து  அதில் உள்ள கருத்துகளை எடுத்துரைக்க வல்லமை இன்றி, வெளிறிய முகத்துடன் நிற்பவனும், மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்களது முகக் குறிப்பைப் பார்த்துச் செயல்படாதவனுமே காட்டில் உள்ள மரங்களை விட மேலான  மரங்களாகும் !

------------------------------------------------------------------------------------------------------------

சுருக்க விளக்கம்:
-----------------------------
ஆறு அறிவுடைய மனித குலத்தில்  பிறந்து இருந்தாலும், கல்வி இல்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஓரறிவுடைய மரத்தினும் கடையர் ஆவார் !

------------------------------------------------------------------------------------------------------------

  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),17]
{03-09-2019}

------------------------------------------------------------------------------------------------------------

மூதுரை (12) மடல் பெரிது தாழை !

மகிழம்பூ உருவில் சிறியது; மணத்தில் பெரியது  !

மூதுரையில் வரும் பாடல்கள் நான்கு அடிகளால் ஆனவை. அடியளவில் சிறியவையானாலும் அவை நமக்கு எடுத்து உரைக்கும் நீதிக் கருத்துகள்  மதிப்பளவில் பெரியவை. ஔவையாரின்  அருட்கொடை இந்நூல். அதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------------

பாடல்.12.

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டாகடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூரல்
உண்ணீரு மாகி விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------------------------------------------------------------------

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்;
உடல் சிறியர் என்று இருக்க வேண்டாகடல் பெரிது
மண் நீரும் ஆகாது அதனருகே சிற்றூரல்
உண்ணீரும் ஆகி விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

தாழை மடல் பெரிது = தாழம் பூ இதழ்களினாலே பெரிதாக இருக்கின்றது ;மகிழ் கந்தம் இனிது = மகிழம் பூ (இதழ்களினாலே சிறிதாக இருந்தாலும்) மணத்தினாலே (தாழம் பூவினும்)  பெரிதாக இருக்கின்றது ; கடல் பெரிது = ஆழிப் பெருங்கடலானது வடிவில் பெரிதாக இருக்கின்றது; மண் = (ஆயினும்) உடம்பின் அழுக்கைக் கழுவுவதற்குக் கூட  (மண்ணுதல் = கழுவுதல்) ; நீரும் ஆகாது = உகந்த நீரும் ஆகாது ; அதனருகே = அப் பெரிய கடலின் அருகே ; சிற்றூரல் = (தோண்டப் பெறும்) சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீர் ; உண் நீரும் ஆகும் = குடிக்கத் தக்க நீரும் ஆகும் ; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா =  உருவத்தினாலே சிறியவர் என்று மதியாமல் இருக்க வேண்டாம்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

தாழம் பூ உருவத்தில் பெரியதாக  இருந்தாலும், அதன் மணம், (சிலருக்குப் பிடித்தாலும்) இனியது என்று பெரும்பாலோர் சொல்வதில்லை. ஆனால் மகிழம் பூ உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இனிய நறுமணத்தில்  தாழம் பூவை விடப் பெரியது. அதுபோல், கடலானது வடிவத்தில் மிகப் பெரியது என்றாலும், அதன் நீரானது அழுக்கு உடம்பைக் கழுவுவதற்குக் கூடப் பயன் படுவதில்லை. ஆனால், அதன் பக்கத்தில் தோண்டப்படும் சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீரானது, அழுக்கு தீரக் குளிப்பதற்கு மட்டுமின்றிக் குடிப்பதற்கும் கூடப் பயன்படுகிறது. ஆதலால், ஒருவரை உருவத்தினாலே சிறியவர் என்று மதிப்புத் தராமல் புறந் தள்ளக் கூடாது !

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்
------------------------------

உருவத்தால் பெரியவர், குணத்தால் சிறியராக இருப்பதுண்டு; உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியராக இருப்பதும் உண்டு. ஆகையால், தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது !

----------------------------------------------------------------------------------------------------------
     
கலைச் சொற்கள்
     உண்ணீர் = DRINKING WATER ;
             மண்ணீர் = WATER USED FOR OTHER PURPOSES.( சென்னை            மக்கள் மொழியில்உப்புத் தண்ணீர்”)
     சிற்றூரல் = SPRING

----------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------

  ஆக்கம் + இடுகை:
  வை.வேதரெத்தினம்,
  ஆட்சியர்,
   தமிழ்ப் பணி மன்றம்.
   [தி.:2050,மடங்கல்(ஆவணி),16]
  {02-09-2019}

-----------------------------------------------------------------------------------------------------------

மூதுரை (10) நெல்லுக்கு இறைத்த நீர் !

மழை, இடம் பார்த்துப் பெய்வதில்லை !

முப்பது பாடல்களைக் கொண்டமூதுரைஎளிய சொற்களால் இயற்றப்பட்ட நீதி நூல். ஔவையார்   அருளிச் செய்த இந்நூல் அருமையான கருத்துக் கருவூலம். இதிலிருந்து ஒரு பாடல்.

-------------------------------------------------------------------------------------------------------------

பாடல்.10.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -  தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

நெற்பயிருக்கு இறைக்கப் பட்ட தண்ணீரானது கால்வாய் வழியாக ஓடும்போது, கால்வாய்க் கரையில் உள்ள புற்களுக்கும் பயன்படுகிறது. அதுபோல இவ்வுலகில் குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் ஒரேயொருவர்  இருந்தால் கூட , அவர் நிமித்தமாக  அனைவர்க்கும் மழை பெய்து உலகம் செழிக்க உதவும் !

------------------------------------------------------------------------------------------------------------

தீவினையாளர்கள் பெருகி வரும் இந்த நாட்டில் இன்னும் மழை பெய்கிறதே எனச் சிலருக்கு வியப்பாக இருக்கும். அதற்குத்தான் ஔவையார்  விடை கூறுகிறார் இந்தப் பாடல் மூலம். நல்லவர் ஒரே ஒருவர் இருந்தாலும், அந்த நாட்டில் அவருக்காக ஓரளவு மழை பெய்யவே செய்யும். அந்த நல்லவரும் மறைந்துவிட்டால், மழை முற்றாகப் பொய்த்துப் போய்விடும் !

நல்லவர் எண்ணிக்கை பெருகப் பெருக, வன வளம் பெருகும். தீவினையாளர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக வனவளம் துப்புரவாக அழிக்கப்பட்டு விடும். வனவளம் அழிந்து போனால் மழைவளமும் மறைந்து போகும் என்பதே இப்பாடல் நமக்கு உணர்த்தும் கருத்து !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
-------------------------------------

பொசியும் = கசிந்து ஊட்டும்.; தொல் உலகில் = உருவாகிப் பலகோடி ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த உலகத்தில் ;

------------------------------------------------------------------------------------------------------------

கலைச்சொற்கள்:
பொசி = PERCOLATE
வாய்க்கால்= CHANNEL

-----------------------------------------------------------------------------------------------------------
       
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மடங்கல் (ஆவணி)14,]
{31-08-2019}

--------------------------------------------------------------------------------------------------------

மூதுரை (04) அட்டாலும் பால் சுவையில் !

எத்துணைக் காய்ச்சினாலும் பால் தன் சுவையிற் குன்றாது !

ஔவையார் இயற்றிய பல்வேறு நூல்களுள் மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் மாந்தர்களுக்கு அறநெறிக் கருத்துகளை நயம்பட எடுத்துரைக்கிறது. அதிலிருந்து ஒரு பாடல்

-------------------------------------------------------------------------------------------------------------
பாடல். 04.

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

பால் = பாலினை ; அட்டாலும் = காய்ச்சினாலும் ; சுவையிற் குன்றாது = அஃது இனிய சுவையிற் குறையாது ; சங்கு = சங்கினை ; சுட்டாலும் = சுட்டு நீறாக்கினாலும் ; வெண்மை தரும் = அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல) ; மேன்மக்கள் = கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மேலோர் ; கெட்டாலும் = வறுமையுற்றாலும் ; மேன் மக்களே = மேலோராகவே விளங்குவர் ; நண்பு அல்லார் (நண்பல்லார்) = நட்பின் குணமில்லாத கீழோர் ; அளவளாய் நட்டாலும் = கலந்து (ஒட்டி உறவாடி ) நட்புச் செய்தாலும் ; நண்பு அல்லர் = நண்பராகார்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

பாலினை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது; கடலில் விளையும் சங்கினை நெருப்பில் இட்டுச் சுட்டு நீறாக்கினாலும் அதனுடைய வெண்மை நிறம் மாறவே மாறாது; அவைபோல அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மேன்மக்களாகிய நல்லோர் வறுமையுற்று வாடும் காலையிலும், தமது உயரிய குணநலன்களில் இருந்து சிறிதும் விலகிச் செல்ல மாட்டார். ஆனால் நட்பின் மேன்மையை அறியாக் கீழோர், எத்துணை நெருக்கமாக நம்முடன் பழகினாலும், அவர் நமக்கு உற்ற நண்பராக எக்காலத்திலும் இருக்க மாட்டார் !

------------------------------------------------------------------------------------------------------------

கலைச் சொற்கள்:
அடுதல் = BAKING
குன்றல் = DECREASE

-----------------------------------------------------------------------------------------------------------

        ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),15]
{01-09-2019}

-------------------------------------------------------------------------------------------------------------

மூதுரை (01)நன்றி ஒருவற்குச் செய்தக்கால் !

நற்குணமுடைய ஒருவனுக்குநாம் செய்யும்  உதவி !

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள்மூதுரையும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்குவாக்குண்டாம்என்று இன்னொரு பெயருமுண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.01.
------------------------------------------------------------------------------------------------------------

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டாநின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்றரு தலால்.

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------------------------

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டாநின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

-----------------------------------------------------------------------------------------------------------

நன்றிஎன்னும் சொல்லுக்குநன்மைஎன்று பொருள். இக்காலத்தில்
நன்றிஎன்னும் சொல் வேறு பொருளில் கையாளப் படுகிறது

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

நின்று = நிலைபெற்று ; தளரா = சோர்ந்து போகாமல் ; வளர் தெங்கு = வளர்கின்ற தென்னையானதுதாள் உண்ட நீரை = தன் அடியால் (அடிமரத்தால்) உண்ட தண்ணீரை ; தலையாலே = தன் முடியாலே (உச்சிப் பகுதியாகிய காய்கள் தோன்றும் பகுதியாலே) ; தான் தருதலால் = (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால் ; ஒருவற்கு = (நற்குணமுடைய) ஒருவனுக்கு ; நன்றி செய்தக்கால் = (நன்மை) உதவி செய்தால்;  அந்நன்றி = அவ்வுதவியை ; என்று தருங்கொல் = அவன் எப்பொழுது செய்வானோ ; என வேண்டா = என்று ஐயுற வேண்டுவதில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

நற்குணமுடைய ஒருவனுக்கு, நாம் ஓர் உதவி செய்தால், அவ்வுதவிக்குப் பதில் உதவியை அவன் எப்பொழுது நமக்குச் செய்வான் என்று ஐயுற  வேண்டாம். ஏனெனில், எப்படி ஒரு தென்னை மரமானது, தன் அடிப்பகுதியால் நிலத்திலிருந்து உறிஞ்சிய நீரை, நுனிப் பகுதியால் சுவையுள்ள இளநீராக்கித் தானே தருகிறதோ, அவ்வாறே, அம்மனிதனும் தகுந்த நேரத்தில் தானாக முன்வந்து நமக்குப் பதிலுதவியை கட்டாயம் செய்திடுவான்.

-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:
-------------------------------

பிறருக்கு நாம் செய்யும் உதவியை, எதையும் எதிர்பார்த்துச் செய்யக் கூடாது. நாம் செய்யும் உதவியால் உருவாகும் நற்பயன், நமக்கு உதவி தேவையுள்ள நேரத்தில் கட்டாயம் கிட்டும் என்பதே இப்பாடலின் கருத்துரை.

-----------------------------------------------------------------------------------------------------------

        ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மீனம்,12]
{26-03-2019}