name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 10/03/20

சனி, அக்டோபர் 03, 2020

சிந்தனை செய் மனமே (81) - மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


----------------------------------------------------------------------------------------------------------

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று, வீடு தோறும் நீரிழிவு நோயாளி ஒருவராவது இருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பு மூட்டுவலியைப் பற்றி யாருக்கும் தெரியாது.  இன்றைய நிலைமை என்ன? ஐம்பது விழுக்காடு மக்கள் மூட்டு வலியால்  அவதிப்பட்டு  வருகிறார்கள். இத்தகைய நிலைமை ஏன் வந்தது ?

மைய அரசில் மக்கள் நலம் காக்க  ஒரு துறை இருக்கிறது. அதற்கு முதனிலை அமைச்சர் (CABINET MINISTER) இடைநிலை அமைச்சர் (DEPUTY MINISTER) என நான்கைந்து  அமைச்சர்களும்  உள்ளனர். மாநிலங்களிலும் மக்கள் நலத்துறையும் அதற்கென அமைச்சர்களும் இருக்கின்றனர். இவர்கள் தமது கடமையாகக் கருதுவது  ஒன்றைத்தான். மக்களை நோயாளி ஆகாமல் தடுப்பது அல்ல ! நோயாளி ஆன பின்பு அவர்களுக்குப் பண்டுவம் (TREATMENT) செய்திட புதிய மருத்துவ மனைகளைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவது மட்டுமே !

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நலமுடன் திகழ்ந்த இந்தியக் குடும்பங்கள், இன்று நோயாளிக் குடும்பங்களாகிவிட்டதே என்று இந்த அமைச்சர் பெருமக்களில் யாராவது, கவலைப் படுகிறார்களா ? இல்லை ! அதற்கு அவர்களுக்கு நேரமுமில்லை ! அவர்கள் கவலை எல்லாம் வேறு விதமாக இருக்கிறது !

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு  ஒரு குறிப்பிட்ட மருந்தினை ஒரு மருந்தாக்க நிறுவனம் (PHARMACEUTICAL COMPANY) அறிமுகப்படுத்திச் சந்தைப்படுத்துகிறது. அம்மருந்தில் என்னென்ன பொருள்கள் (INGREDIENTS) கலக்கப் பெற்றுள்ளன, அம்மருந்து மெய்யாகவே, குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்துகிறதா, பக்க விளைவுகளேதும் ஏற்படுகிறதா  என்பதைத் துல்லியமாக ஆய்வு செய்து, அதன்பின் அதைத் தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் அனுமதிக்க வேண்டிய மைய அரசு, இப்பணியைச் செய்வது இல்லை. மாநில அரசும் இதைப் பற்றிச் சிந்திப்பது இல்லை !

நம்மை ஆள்கின்ற அரசுகள், இந்தப் புலனத்தில் (விஷயத்தில்) தமது கண்களை இறுக மூடிக்கொண்டு விட்டன. இதன் விளைவாக, மருந்தாக்க நிறுவனங்கள், குறிப்பிட்ட நோய்க்கு மருந்து தயாரிப்பதாகச் சொல்லி, வேறுவகை நோய்க்கு நம்மை ஆட்படுத்தும் விதமாகக் கூட்டு மருந்தில் உள்ள ஓரிரு பொருள்களின் (INGREDIENTS)  கலவை வீத அளவைச் சிறிது கூடுதலாக்கி அம்மருந்தினை மெல்லிய நச்சுத் தன்மை உடையதாக  ஆக்கிவிடுகின்றன என ஆய்வாளர்கள் பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர் !

ஒரு கூட்டு மருந்து, 10 வகையான பொருள்கள் கலக்கப்பெற்று தயாரிக்கப் பெறுவதாக வைத்துக்கொள்வோம்., கலவைப் பொருள்களுள் ஒருசில (SOME INGREDIENTS), குறிப்பிட்ட நோயைக் குணமாக்கத் தேவையில்லாமல் (NOT NECESSARY) இருக்கலாம். என்றாலும் அவற்றையும் கலந்து, அவற்றின் மெல்லிய  நச்சுத் தன்மை (SLOW POISON)  காரணமாக நம்மை வேறு வகையான நோயாளியாக மாற்றக் கூடிய மருந்தாக அதை உருவாக்கிச் சந்தைப் படுத்தி விடுகின்றனர், என்பது ஆய்வாளர்களின் குற்றசாட்டு.  இதைப்பற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்ட மைய அரசு, ஆய்வு செய்து அனுமதிக்கும் கொள்கையைப் பின்பற்றாததால், மருந்தாக்க நிறுவனங்களின் கமுக்க (SECRET) நடவடிக்கைகளால், நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்திலும் இருக்கும் மென்மையான நச்சுப் பொருள் நம்மை நிரந்தர (PERMANENT) நோயாளி ஆக்கிவிடுகிறது !

எடுத்துக்காட்டாக,  முறைக் காய்ச்சலுக்கு (MALERIA FEVER) மருந்து சாப்பிடும், ஒரு மனிதன், 10 நாள்களில் காய்ச்சலிலிருந்து விடுபடுகிறான். ஆனால் காலப்போக்கில் அவன் நீரிழிவு நோயாளியாகவோ, மூட்டுவலி நோயாளியாகவோ, உயர் குருதி அழுத்த (HYPER TENSION) நோயாளியாகவோ, குண்டிக்காய் செயலிழப்பு (KIDNEY FAILURE) நோயாளியாகவோ மாறிவிடுகிறான் !

மருந்தாக்க நிறுவனங்கள் ஏன் இந்த கமுக்க (SECRET) நடவடிக்கைகளில் இறங்குகின்றன. நோயாளிகள் பெருகினால் தான் மருந்து விற்பனை பெருகும். விற்பனை பெருகினால் தான் கொள்ளை கொள்ளையாகப் பணம் சேர்க்க முடியும். மைய, மாநில அரசுகள் ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டால் மருந்தாக்க நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாக தேர்தல் நிதி கிடைப்பது பறிபோய்விடுமே !

மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரும்பான்மையோர் அவர்கள் செய்யக் கூடாததைச் செய்து, நோயாளி ஆவதில்லை. மருந்தாக்க நிறுவனங்களின் பேராசையால், நலமுள்ள மனிதனும் நோயாளி ஆக்கப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை !

மக்களைக் காப்பாற்ற வேண்டிய மைய, மாநில அரசுகளின் செயல்பாடின்மை, மருந்தாக்க நிறுவனங்களின் பேராசை ஆகியவற்றால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நீரிழிவு நோயாளியோ, ஒரு மூட்டு வலி நோயாளியோ இருக்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது !

ஆங்கில முறை மருத்துவராக உள்ள நம்மவரே, அவர்களையும் அறியாமல், மருந்தாக்க நிறுவனங்களின் சம்பளமில்லா முகவர்களாக மாறி, ஒரு நோய்க்கு ஏழெட்டு மருந்துகளை எழுதித் தந்து எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர் !

மைய, மாநில அரசுகளின் மக்கள் நலத்  துறை அமைச்சர்கள் இனிமேலாவது தமது கடமையை உணர்ந்து செயல்படுவார்களா ? அல்லது  வீட்டுக்கு ஓரிருவரை நிரந்தர நோயாளியாக மாற்றும் மருந்தாக்க நிறுவனங்களின் சூழ்ச்சிக்குத் துணை போவார்களா ? வாக்களிக்கும் மக்கள் தான் விழிப்படைய வேண்டும் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்,
[தி.: 2050, சுறவம், 11.]
{25-01-2019}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் மனமே (80) வணக்கம் சொல்வதில் மரபுகள் உண்டா ?

வணக்கம் சொல்வது எப்படி என்பது பற்றி மக்களிடையே  போதுமான புரிதல் இல்லை !

                                                         ***************     

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது வணக்கம் சொல்லுதல் என்பது ஒரு நல்ல பண்பாடு ! இரண்டு பேரும் தமது பேச்சைத் தொடங்குவதற்கு இது முன்னோட்டமாக அமையும் ! சீறூர்களில் (கிராமங்களில்) வணக்கம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்;  இதற்கு மாற்றாகவாங்க அண்ணே” “வாங்க மாமா” “வாம்மா மல்லிகாஎன்று விளித்துப் பேச்சைத் தொடங்குபவர்களும் உண்டு !

 

நாம் சந்திப்பவர் நமது நண்பராகவும் இருக்கலாம்; அல்லது நமது மனதிற்கு உகந்தவராக இல்லாமலும் இருக்கலாம் ! எதிரில் வருபவர் நம்முடன் பகைமை பாராட்டுபவராக இருந்தால், அவரைக் கண்டவுடன் நம்  மனதில் ஓர்  இறுக்கம் தோன்றும். அந்த இறுக்கத்துடன் நாம் பேச்சைத் தொடங்க முடியாது. இறுக்கம் விலகிட இந்த வணக்கம் சொல்லும் முறை கைகொடுக்கிறது !

 

வணக்கம் சொல்வதற்கென்று ஏதேனும் மரபுகள் இருக்கின்றவா ? ஆம் ! மரபுகள் இருக்கின்றன ! ஆனால் அவற்றை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்தால், நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் ! எப்படி வணக்கம் சொல்வது என்பது பற்றிப் போதுமான புரிதல் இல்லாமலேயே செயற்கைத் தனமாக வணக்கம் சொல்வோர் நிரம்பவே இருக்கிறார்கள் !

 

ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அஞ்சற்காரர் (POST-MAN) எதிரில் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு ஈருருளியிலிருந்து (BI-CYCLE) இறங்கியவர்குட் மாணிங் சார். உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதுஎன்று சொல்லிக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார் !

 

தம்பி ! இப்பொழுது நேரம் என்ன ? “ “மணி இரண்டு சார்” “இது காலை நேரமா ?” “இல்லையே !” ”அப்புறம் ஏன் குட் மாணிங் என்று வணக்கம் சொல்கிறாய் ?”

 

இன்றைக்கு முதன்முதலாக இப்பொழுது தானே உங்களைப் பார்க்கிறேன். அதனால் தான்  குட் மாணிங் என்று சொன்னேன்

 

சரி ! இப்பொழுது பிற்பகல் நேரம் !  அடுத்து மாலை நேரம் வரப்போகிறது. இன்று நீ மீண்டும் என்னைப் பார்க்கப் போவதில்லை. அப்படியானால் எனக்குகுட் ஆப்டர் நூன்”, ”குட் ஈவினிங்ஆகிய வணக்கங்களை எப்போது சொல்லப் போகிறாய் ?”

 

அஞ்சற்காரர்  செய்வதறியாது தடுமாறினார் ! அவரைப் பார்க்க இரக்கமாக இருந்தது !

 

நானே விடை இறுத்தேன். ”தம்பி !  ஒரு நாளில்முதன்முதலாக எப்போது, எந்த வேளையில் பார்த்தாலும்குட் மாணிங்என்று  வணக்கம் சொல்ல  வேண்டும் என்பது தவறு. முதன்முதல் காலையில் பார்த்தால்குட் மாணிங்”. பிற்பகலில் பார்த்தால்குட் ஆப்டர்நூன்” “மாலையில் பார்த்தால்குட் ஈவினிங்”. அவ்வளவு தான் !

 

முதன்முதல்என்பதை மறந்து விடு. எப்போது பார்க்கிறாயோ அந்த வேளைக்குத் தக்கபடி வணக்கம் சொல்வதே சரி ! பிற்பகலில் பார்த்தால்குட் ஆப்டர்நூன்” !  மாலையில் பார்த்தால்குட் ஈவினிங்முதன்முதல் எப்போது பார்க்கிறாய் என்பதைக் கருத்திற் கொள்ளாதே !

 

சரி ஐயா ! என் அறியாமையைப் போக்கி விட்டீர்கள் ! இனி தவறு செய்ய மாட்டேன் ! மிக்க நன்றி ! வருகிறேன் !”

 

காலை வணக்கம்” ”மாலை வணக்கம்என்பதெல்லாம் ஆங்கிலேயர்கள் பண்பாடு. தமிழ்ப் பண்பாடுவணக்கம்மட்டுமே ! எப்போது யாரைக் கண்டாலும்வணக்கம் அய்யா  “வணக்கம் அம்மாஎன்று சொல்லிப் பழகுவோம் !

 

காலை வணக்கம்” “நண்பகல் வணக்கம்”, “மாலை வணக்கம்”, “இரவு வணக்கம்என்பதெல்லாம் நமக்கு ஒத்து வராது. ஆங்கிலேயர்களின் வழக்கத்தைப் பின்பற்றுவதால் விளைந்த தவறே பிற்பகல் நேரத்தில் கூடகுட் மாணிங்சொல்வது. இனி எந்த நேரம் என்றாலும்வணக்கம்என்றே சொல்வோமே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),14]

{30-09-2020}

----------------------------------------------------------------------------------------------------------

              தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------