name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (80) வணக்கம் சொல்வதில் மரபுகள் உண்டா ?

சனி, அக்டோபர் 03, 2020

சிந்தனை செய் மனமே (80) வணக்கம் சொல்வதில் மரபுகள் உண்டா ?

வணக்கம் சொல்வது எப்படி என்பது பற்றி மக்களிடையே  போதுமான புரிதல் இல்லை !

                                                         ***************     

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது வணக்கம் சொல்லுதல் என்பது ஒரு நல்ல பண்பாடு ! இரண்டு பேரும் தமது பேச்சைத் தொடங்குவதற்கு இது முன்னோட்டமாக அமையும் ! சீறூர்களில் (கிராமங்களில்) வணக்கம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்;  இதற்கு மாற்றாகவாங்க அண்ணே” “வாங்க மாமா” “வாம்மா மல்லிகாஎன்று விளித்துப் பேச்சைத் தொடங்குபவர்களும் உண்டு !

 

நாம் சந்திப்பவர் நமது நண்பராகவும் இருக்கலாம்; அல்லது நமது மனதிற்கு உகந்தவராக இல்லாமலும் இருக்கலாம் ! எதிரில் வருபவர் நம்முடன் பகைமை பாராட்டுபவராக இருந்தால், அவரைக் கண்டவுடன் நம்  மனதில் ஓர்  இறுக்கம் தோன்றும். அந்த இறுக்கத்துடன் நாம் பேச்சைத் தொடங்க முடியாது. இறுக்கம் விலகிட இந்த வணக்கம் சொல்லும் முறை கைகொடுக்கிறது !

 

வணக்கம் சொல்வதற்கென்று ஏதேனும் மரபுகள் இருக்கின்றவா ? ஆம் ! மரபுகள் இருக்கின்றன ! ஆனால் அவற்றை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்தால், நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் ! எப்படி வணக்கம் சொல்வது என்பது பற்றிப் போதுமான புரிதல் இல்லாமலேயே செயற்கைத் தனமாக வணக்கம் சொல்வோர் நிரம்பவே இருக்கிறார்கள் !

 

ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அஞ்சற்காரர் (POST-MAN) எதிரில் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு ஈருருளியிலிருந்து (BI-CYCLE) இறங்கியவர்குட் மாணிங் சார். உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதுஎன்று சொல்லிக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார் !

 

தம்பி ! இப்பொழுது நேரம் என்ன ? “ “மணி இரண்டு சார்” “இது காலை நேரமா ?” “இல்லையே !” ”அப்புறம் ஏன் குட் மாணிங் என்று வணக்கம் சொல்கிறாய் ?”

 

இன்றைக்கு முதன்முதலாக இப்பொழுது தானே உங்களைப் பார்க்கிறேன். அதனால் தான்  குட் மாணிங் என்று சொன்னேன்

 

சரி ! இப்பொழுது பிற்பகல் நேரம் !  அடுத்து மாலை நேரம் வரப்போகிறது. இன்று நீ மீண்டும் என்னைப் பார்க்கப் போவதில்லை. அப்படியானால் எனக்குகுட் ஆப்டர் நூன்”, ”குட் ஈவினிங்ஆகிய வணக்கங்களை எப்போது சொல்லப் போகிறாய் ?”

 

அஞ்சற்காரர்  செய்வதறியாது தடுமாறினார் ! அவரைப் பார்க்க இரக்கமாக இருந்தது !

 

நானே விடை இறுத்தேன். ”தம்பி !  ஒரு நாளில்முதன்முதலாக எப்போது, எந்த வேளையில் பார்த்தாலும்குட் மாணிங்என்று  வணக்கம் சொல்ல  வேண்டும் என்பது தவறு. முதன்முதல் காலையில் பார்த்தால்குட் மாணிங்”. பிற்பகலில் பார்த்தால்குட் ஆப்டர்நூன்” “மாலையில் பார்த்தால்குட் ஈவினிங்”. அவ்வளவு தான் !

 

முதன்முதல்என்பதை மறந்து விடு. எப்போது பார்க்கிறாயோ அந்த வேளைக்குத் தக்கபடி வணக்கம் சொல்வதே சரி ! பிற்பகலில் பார்த்தால்குட் ஆப்டர்நூன்” !  மாலையில் பார்த்தால்குட் ஈவினிங்முதன்முதல் எப்போது பார்க்கிறாய் என்பதைக் கருத்திற் கொள்ளாதே !

 

சரி ஐயா ! என் அறியாமையைப் போக்கி விட்டீர்கள் ! இனி தவறு செய்ய மாட்டேன் ! மிக்க நன்றி ! வருகிறேன் !”

 

காலை வணக்கம்” ”மாலை வணக்கம்என்பதெல்லாம் ஆங்கிலேயர்கள் பண்பாடு. தமிழ்ப் பண்பாடுவணக்கம்மட்டுமே ! எப்போது யாரைக் கண்டாலும்வணக்கம் அய்யா  “வணக்கம் அம்மாஎன்று சொல்லிப் பழகுவோம் !

 

காலை வணக்கம்” “நண்பகல் வணக்கம்”, “மாலை வணக்கம்”, “இரவு வணக்கம்என்பதெல்லாம் நமக்கு ஒத்து வராது. ஆங்கிலேயர்களின் வழக்கத்தைப் பின்பற்றுவதால் விளைந்த தவறே பிற்பகல் நேரத்தில் கூடகுட் மாணிங்சொல்வது. இனி எந்த நேரம் என்றாலும்வணக்கம்என்றே சொல்வோமே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),14]

{30-09-2020}

----------------------------------------------------------------------------------------------------------

              தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

 

 

 

5 கருத்துகள்:

  1. தமிழில் சரியான, துல்லியமான மொழிபெயர்ப்பு இருந்தால் இதுவும் ஒத்துவரும்.
    காலை வணக்கம்- Morning hello
    மாலை வணக்கம்- Evening hello
    இரவு வணக்கம்- Night hello

    இது ஆங்கிலத்தில் இப்படித்தான் ஒலிக்கும்😂😂

    சரியான மொழிபெயர்ப்பு இதோ:
    Good morning- நற்காலை
    Good afternoon- நற்பகல்
    Noon- நண்பகல்
    Good evening- நன்மாலை
    Good night- நல்லிரவு
    Midnight- நள்ளிரவு

    பிழையிருந்தால் திருத்திடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னித்துக் கொள்ளுங்கள் ! தங்கள் கருத்துரையை மிகத் தாமதமாகக் காண நேர்ந்தது. காரணம் பணிச்சுமை மிகுதி ! தங்கள் கருத்துரையை மதிக்கிறேன். எனினும் என் கருத்து எந்த வேளையாயினும் ”வணக்கம்” என்னும் ஒற்றைச் சொல்லே போதுமானது !

      நீக்கு
    2. அது எப்படி போதுமானதாக இருக்கும்?
      தமிழும் ஆங்கிலம் மட்டுமே கற்றால் இப்படி ஒரு மனப்பான்மை இருக்குமோ?

      சீனம், தமிழைப் போல பழமையான செம்மொழி...
      அதில்.,
      Hello-வணக்கம்-你好(நீ ஹாவ்)
      Good morning-நற்காலை-早上好/早安(ஜாஒ ஷாங் ஹாவ்/ ஜாஒ அஎன்)


      ஆங்கிலத்தில் "hello, goodmorning." என்பதை தங்கள் கூற்றுப்படி மொழிபெயர்த்தால் "வணக்கம்"
      அப்ப, Hello என்பதை மொழிபெயர்த்தாலும் "வணக்கம்" இதெப்படி சொல்ல வரும் கருத்தை சரியாக அடுத்தவருக்கு கடத்தும்?

      இந்த "வணக்கம்" என்று வணக்கம் சொல்கிறாரா அல்லது நல்ல காலை என சொல்கிறாரா என எப்படி ஒரு சாமானியருக்கு புரியும்?

      இதே, அந்த துல்லியமான மொழிபெயர்ப்பால் "வணக்கம், நற்காலை" என அனைவருக்கும் விளங்கும்.

      நீக்கு
  2. ஐயா, வணக்கம் என்னும் ஒற்றைச் சொல்லில் அனைத்தும் அடங்கிவிடுகிறதே ! காலை வணக்கம், நண்பகல் வணக்கம், மாலை வணக்கம் என்பது ஆங்கிலேயர்கள் முறை. தமிழர்கள் முறை “வணக்கம்” என்பதே ! ஆங்கிலத்தில் உள்ளதைச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க வேண்டியதில்லை. கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். ஆங்கிலத்தில் Butter Milk என்பதை வெண்ணெய்ப் பால் என்றா மொழியாக்கம் செய்கிறோம். “மோர்” என்ற ஒற்றைச் சொல்லில் Butter Milk கரைந்து போகிறதே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்தநாள் கூடத்தான் தமிழர் கொண்டாட்டம் கிடையாது, அதை இன்று கொண்டாடுவது இல்லையா..

      ஆக, நற்காலை என சொல்வது அவரவர் விருப்பம்... மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியது நம் கடமை...(துல்லியமான மொழிபெயர்ப்பு)

      மற்றவர்கள் எப்படி பேச வேண்டும் என்பது அவரவரின் விருப்பம்.

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .