name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பத்தாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தாம் வகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (04) வினா, விடை வகைகள் !

வினா வகையும் விடை வகையும் !
                                 


01. வினா (பக் 96) :- வினாக்கள் ஆறு வகைப்படும். அவை:- (01) அறி வினா (02) அறியா வினா (03) ஐய வினா (04) கொளல் வினா (05) கொடை வினா (06) ஏவல் வினா.


02. அறி வினா (பக்.96) :- தான் ஒரு பொருளை நன்கு அறிந்திருந்தும், அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்று அறியும்பொருட்டு வினாவப்படும் வினாவுக்கு அறிவினா என்று பெயர். (எ-டு) (01) (ஆசிரியர் கேட்கிறார்) இந்தியாவின் தலைநகரம் எது ? (02) (மகனைப் பார்த்து அப்பா கேட்கிறார்) உன் தாத்தா பெயர் என்ன ? (03) (கடைக்காரர் சிறுவனைப் பார்த்து) தம்பி ! இந்த அரிசி கிலோ என்ன விலை என்று உனக்குத் தெரியுமா ? (04) (தாத்தா தன் பெயரனைப் பார்த்து கேட்கிறார்) திருக்குறளை இயற்றியவர் யார் ?


03. அறியா வினா (பக் 96) :-தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையில் கேட்கும் வினா அறியா வினா எனப்படும். (எ-டு) (01) (இராமு வசந்தனிடம் கேட்கிறான்) வசந்தா ! இரண்டாம் பானிபட் போர் எந்த ஆண்டில் நடைபெற்றது ? (02) (ஆசிரியர் மாணவனிடம்) புகழேந்தி ! உன் பிறந்த தேதி என்ன ?


04. ஐய வினா (பக் 96) :- நமது ஐயத்தைப் போக்கிக் கொள்ளும் வகையில் பிறரிடம் கேட்கப்படும் வினாவுக்கு ஐய வினா எனப்பெயர். (எ-டு) (01) அங்கு வருவது கயல்விழியா ? தேன்மொழியா ? (02) காவிரி ஆறு உற்பத்தி ஆவது குடகு மலையிலா ? நீலகிரி மலையிலா ?


05. கொளல் வினா (பக் 96):- தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கடைகாரரிடம் கேட்கப்படும் வினா கொளல் வினா ஆகும். (எ-டு) ( கடைகாரரிடம் ) சிந்தால் வழலை (சோப்) இருக்கிறதா ? (02) (புத்தகப் பதிப்பக உரிமையாளரிடம்) பொன்னியின் செல்வன் புத்தகம் இருக்கிறதா ? (கொளல் = கொள்ளுதல், பெறுதல்)


06. கொடை வினா (பக் 96):- கொடை என்றால் கொடுத்தல் என்று பொருள். தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக மற்றவரிடம் அப்பொருள் இருக்கிறதா என் அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்கப்படும் வினா கொடை வினா எனப்படும். (எ-டு) (01) (கபிலன் பரிதியிடம் கேட்கிறான்) பரிதி ! குறிப்பேடு வாங்குவதற்கு உன்னிடம் போதிய பணம் இல்லையோ ? (02) (அம்மா தன் மகளிடம்) கவி ! உனக்கு இரண்டு தோசைகள் போதுமா ? (தோய் + செய் = தோசை)


07. ஏவல் வினா (பக் 96):- ஒரு செயலைச் செய்யும்படி ஏவும் வினா ஏவல் வினா ஆகும். (ஏவுதல் = கட்டளை இடுதல்) (எ-டு) (01) (ஆசிரியர் மாணவனிடம்) செழியா ! கடவுள் வாழ்த்துப் பாடலை மனப் பாடம் செய்து விட்டாயா ? (இது மனப்பாடம் செய் என்னும் ஏவல் பொருளைத் தருகிறது) (02) (தந்தை மகனிடம்) இளங்கோவா ! பால் வாங்கி வந்துவிட்டாயா ? (பால் வாங்கி வா என்னும் ஏவல் பொருளைத் தருகிறது)


08. விடை ( பக்.97) :- விடை என்றால் விடுக்கப்படுவது என்று பொருள். ஒரு வினாவுக்கு அளிக்கப்படும் மறுமொழியே விடை. விடைகள் எட்டு வகைப்படும். அவை :- (01) சுட்டு விடை (02) மறை விடை (03) நேர் விடை (04) ஏவல் விடை (05) வினா எதிர் வினாதல் விடை (06) உற்றது உரைத்தல் விடை (07) உறுவது கூறல் விடை (08) இனமொழி விடை.


09. விடை என்பதை இறை, செப்பு, பதில் என்றும் கூறலாம்.(பக். 97)


10. சுட்டு விடை (பக்97) :- இது, அது, இங்கே, அங்கே என்பது போல சுட்டிக் காட்டும் வகையில் கூறும் விடை சுட்டு விடை எனப்படும். (எ-டு) (01) ஐந்து ரூபாய் புத்தகம் எங்கே இருக்கிறது ? ஐந்து ரூபாய் புத்தகம் இங்கே இருக்கிறது. (02) கண்ணாடியை எங்கே வைத்தாய் ? கண்ணாடியை அங்கே வைத்திருக்கிறேன். (03) சென்னைக்கு எந்த வழியாகப்போக வேண்டும் ? சென்னைக்கு இந்த வழியாகப் போக வேண்டும். (04) இவற்றுள் விலை மலிவானது எது ? இவற்றுள் விலை மலிவானது இது.


11. மறைவிடை (97):- மறை என்றால் மறுத்துக் கூறுதல் என்று பொருள். ஒளித்து வைத்தல் என்று இங்கு பொருள் கொள்ளக் கூடாது. இதை எதிர்மறை விடை (Negative answer) என்றும் கூறலாம். (எ-டு) ”பாக்கு சுவைப்பாயா” ? என்று வினா எழுப்புபவர் இடத்தில் “ சுவையேன் ” (சுவைக்க மாட்டேன்) என்று எதிர் மறுத்துக் கூறுவது எதிர்மறை விடை எனப்படும்.


12. நேர்விடை (பக் 97):- ” பாக்கு சுவைப்பாயா ” ? என்று வினா எழுப்புபவர் இடத்தில் “ சுவைப்பேன் “ என்று நேர்மறையாக (Possitive) உடன்பட்டுப் பதில் கூறுவது நேர் விடை (Possitive Answer) எனப்படும்.


13. ஏவல் விடை (பக் 97) :- ” இதை எடுத்து பலகை மேல் வைப்பாயா “ ? என்று தந்தை வினவும் போது “நீங்களே எடுத்து வையுங்கள் “ என்று கூறுவது ஏவல் விடை ஆகும்.


14. வினா எதிர்வினாதல் விடை (பக் 97):- “பாக்கு சுவைப்பாயா” ? என்று வினவுபவர் இடத்தில் “சுவைக்காமல் இருப்பேனோ : ? என்று ஒரு வினாவையே விடையாகக் கூறுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.


15. உற்றது உரைத்தல் விடை (பக் 97):- “ பாக்கு சுவைப்பாயா ” ? என்று வினா எழுப்புபவர் இடத்தில் ” பல் வலிக்கிறது “ என்று தனக்கு உற்றதனை (நேர்ந்ததை) விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை ஆகும்.


16. உறுவது கூறல் விடை (பக் 97):- “ பாக்கு சுவைப்பாயா “? என்று வினா எழுப்புபவர் இடத்தில் “ பல் வலிக்கும் “ என்று தனக்கு வரப் போவதை உரைப்பது உறுவது கூறல் விடை ஆகும்.


17. இனமொழி விடை (பக் 97):- “ நடனம் தெரியுமா ?“ என்று கேட்பவர் இடத்தில் ” பாடத் தெரியும் “ என்று நடனத்திற்கு இனமான பாடுவதை விடையாகக் கூறுவது இனமொழி விடை ஆகும்.


18. சுட்டு விடை, மறை விடை, நேர் விடை மூன்றும் வெளிப்படையான விடையாக இருக்கும். ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை ஐந்தும் வெளிப்படையாக இல்லாமல் விடையைக் குறிப்பால் உணர்த்துவதாக அமையும்.


19. ஒருபொருட் பன் மொழி (பக்.98):- ஒரு பொருளையே குறிப்பிடும் சில சொற்கள் இணைந்து ஒரு சொற்றொடரில் அமைந்து வந்தால் அதை ஒரு பொருட் பன்மொழி என்று கூறுவர். (எ-டு) (01) இந்த மலை உயர்ந்தோங்கி நிற்கிறது. உயர்ந்து என்றாலும் ஓங்கி என்றாலும் ஒரே பொருள் தான். ஆனால் இங்கு இரண்டு சொற்களும் இணைந்து வந்து உயர்ந்து என்ற பொருளையே உணர்த்துகிறது.இதைத் தான் ஒரு பொருட் பன்மொழி என்று கூறுவர். வேறு சில எடுத்துக் காட்டுகள் வருமாறு;- (01) அந்தக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. (குழிந்து ஆழ்ந்து இரண்டுக்கும் ஒரே பொருள் தான்.) (02) நடு மையம். நடு என்றாலும் மையம் என்றாலும் ஒரே பொருள் தான்.) (03) மீமிசை ஞாயிறு. மீ என்றாலும் மிசை என்றாலும் “மேலே” என்று தான் பொருள் (மேலே வானத்தில் உள்ள சூரியன் என்பதைச் சொல்ல மீமிசை ஞாயிறு என்று சொல்லப்பட்டுள்ளது.)

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]

------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற்  குழுவில் வெளியப் பெற்ற  கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------



                            

பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (03) எழுத்து இயல் !

எழுத்து வகை, குறுக்கங்கள், பதம், மொழி, முற்று, எச்சம் !

                                    

 (பகுதி (01)



01.எழுத்து (பக்.22) :-எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை:- (1) முதலெழுத்து (2) சார்பெழுத்து.


02.முதலெழுத்து (பக்.22) :- அ முதல் ஔ வரையிலான உயிர் எழுத்துகள் 12 மற்றும் க் முதல் ன் வரையிலான மெய்யெழுத்துகள் 18 ஆக மொத்தம் 30 எழுத்துகளும் முதலெழுத்துகள் ஆகும். உயிர்மெய் முதலான சார்பெழுத்துகள் தோன்றுவதற்குக் காரணமாக 12 உயிர் எழுத்துகளும் 18 மெய் எழுத்துகளும் இருத்தலால், அவை முப்பதும் முதலெழுத்துகள் எனப்பட்டன. (பக் 22)


03.சார்பெழுத்து (பக் 22.):- முதலெழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பெழுத்துகள் ஆகும். உயிர்மெய்யெழுத்து (க, கா, கி, கீ போன்றவை) ஆய்த எழுத்து (ஃ) உயிரளபெடை (உடுப்பதூஉம்), ஒற்றளபெடை (கண்ண்ண்டான்), குற்றியலுகரம் (வந்து), குற்றியலிகரம் (வரகியாது), ஐ காரக் குறுக்கம், ஔ காரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்து வகை எழுத்துகளும் சார்பெழுத்துகள் ஆகும்.. (பக் 22)


04. ஐகாரக் குறுக்கம் (பக் 22.):- ஐ எனும் தனி நெட்டெழுத்து இரண்டு மாத்திரை அளவில் நீண்டு ஒலிக்கும். ஆனால் சொல்லின் முதலில் வரும் ஐ என்னும் எழுத்து (எடுத்துக் காட்டு = ஐம்பது, ஐயர், ஐயா, ஐந்நூறு, ஐங்குறு நூறு) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒன்றரை மாத்திரை அளவாகக் குறுகி ஒலிக்கும். இவ்வாறு ஐகாரம் (அதாவது ஐ எனும் எழுத்து) குறுகி ஒலிப்பதற்கு ஐ காரக் குறுக்கம் என்று பெயர். (பக் 22)


05. ஐகாரக் குறுக்கம் (பக் 22.)ம் :- சொல்லின் இடையில் வரும் ஐ காரமும் (எடுத்துக் காட்டு = தலைவன், கலைஞர், சிலைகள், மலையடிவாரம், வலைஞர்) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒரு மாத்திரை அளவுக்குக் குறுகி ஒலிக்கும். இதுவும் ஐ காரக் குறுக்கம் ஆகும்.(பக் 22)


06. ஐகாரக் குறுக்கம் (பக் 22) :-சொல்லின் ஈற்றில் (அதாவது கடைசியில்) வரும் ஐ காரமும் (எடுத்துக் காட்டு = கடலை, விடலை, சுடலை, குடலை, புடலை) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒரு மாத்திரை அளவுக்குக் குறுகி ஒலிக்கும். இதுவும் ஐ காரக் குறுக்கம் ஆகும் (பக் 22)


07. ஐகாரம் இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலித்தால் மட்டுமே அது முதலெழுத்து என்று கருதப்படும். ஒன்றரை மாத்திரையாகவோ ஒரு மாத்திரையாகவோ குறுகி ஒலித்தால் அது சார்பெழுத்து என்று தான் கருதப்படும்.


08. ஔகாரக் குறுக்கம் (பக் 22) :-ஔ என்னும் தனி நெட்டெழுத்து இரண்டு மாத்திரை அளவில் நீண்டு ஒலிக்கும். ஆனால் சொல்லின் முதலில் வரும் ஔ காரம் (எடுத்துக் காட்டு = ஔவையார், வௌவால், கௌதாரி, பௌவம் = கடல், மௌவல் = மல்லிகை மொட்டு) இரண்டு மாத்திரை அளவுக்கு நீண்டு ஒலிக்காமல் ஒன்றரை மாத்திரை அளவுக்குக் குறுகி ஒலிக்கும். இதற்கு ஔ காரக் குறுக்கம் என்று பெயர். (பக் 22)


09.ஔ காரமானது எந்தச் சொல்லிலும் இடையிலோ, ஈற்றிலோ (அதாவது கடைசியிலோ) வராது. முதலில் மட்டுமே வரும். (பக் 22)


10. மகரக் குறுக்கம் (பக் 23) :-ம என்னும் குறிலெழுத்து ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும். மகரக் குறுக்கம் என்றால் ம என்னும் குறிலெழுத்து ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிப்பது என்று பொருள் அல்ல. மகர மெய்யாகிய ம் என்னும் எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவாக ஒலிப்பதே மகரக் குறுக்கம் ஆகும். எடுத்துக் காட்டு;- போல்ம், போன்ம் (போலும் என்று பொருள்), மருண்ம் (மருளும் என்று பொருள்) செய்யுளில் மட்டுமே இது போன்ற சொற்கள் வரும். உரைநடையிலும், பேச்சு வழக்கிலும் இது போன்ற சொற்கள் வராது. (பக் 22)


11.மகரக் குறுக்கம் (பக் 23) :-போலும், மருளும் என்ற மகர ஈற்றுச் சொற்களில்   ( ம் கடைசியாக வரும் சொற்களில்) ஈற்றயல் உகரம் கெட்டு ( கடைசி எழுத்துக்கு முந்திய எழுத்தில் வரும் உகரம் ( உ ) மறைந்து ) போன்ம், மருண்ம் என்று திரியும் (அதாவது மாற்றம் அடையும்) இவ்வாறு திரிபடைந்த ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வரும் ம் என்னும் எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவில் மட்டுமே ஒலிக்கும். இதற்குப் பெயர்தான் மகரக் குறுக்கம். (பக் 23)


12. மகரக் குறுக்கம் (பக் 23) :-மகர ஈற்றுச் சொல் ( ம் கடைசியாக வரும் சொல்) தமிழில் பல உண்டு. வரும், தரும், பெரும் போன்றவை அவற்றுள் சில. வரும் + வண்டி என்பதில் வரும் என்பது நிலை மொழி (முன் சொல்) வண்டி என்பது வருமொழி அல்லது முதல் மொழி (பின் சொல்). வரும் + வண்டி என்ற இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும் போது வரும் வண்டி என்றே புதிய சொல் உருவாகும். இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும் போது நிலை மொழி ஈற்றில் ம் என்ற எழுத்தும் வரு மொழி முதலில் வகரமும் (வ என்னும் எழுத்து) வந்தால் உருவாகும் புதிய சொல்லில் (வரும் வண்டி) வரும் ம் என்னும் எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவுக்கே ஒலிக்கும். இவ்வாறு குறுகி ஒலிப்பதற்குப் பெயர் மகரக் குறுக்கம் ஆகும். (பக் 23)


13.ஆய்தக் குறுக்கம் (பக் 23) :-கல் + தீது இரண்டும் சேரும் போது கஃறீது என்று ஆகும். அதுபோல் முள் + தீது இரண்டும் சேரும் போது முஃறீது என்று ஆகும். நிலை மொழி ஈற்றில் வரும் ல கர, ள கரம் ( கல், முள் ) வருமொழி முதலில் வரும் த கரத்துடன் (தீது) சேரும் போது ஃ என்னும் ஆய்த எழுத்தாக மாறும். இவ்வாறு தோன்றும் ஆய்த எழுத்து தனது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகி கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். இவ்வாறு ஆய்த எழுத்தானது குறுகி ஒலிப்பதற்குப் பெயர் ஆய்தக்குறுக்கம் என்று பெயர்.


********************************************************************


தமிழ் இலக்கணம் (பகுதி (02)
2. சொல் (பக்.48)
........................................................................................................................................
01. சொல் (பக் 49) :- ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது சில எழுத்துகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பொருளை உணர்த்தினால் அது சொல் எனப்படும்.


02. பதம் என்றாலும், மொழி என்றாலும், கிளவி என்றாலும் பொருள் ஒன்றே. (பக்.48)


03. பதம் இரண்டு வகைப்படும். அவை (1) பகுபதம் (2) பகாப்பதம்.


04. பகுபதம் (பக் 49) :-ஒரு சொல்லை இரண்டாகவோ பலவாகவோ பகுக்க முடிந்தால் அது பகுபதம் எனப்படும். (பகுத்தல் = பிரித்தல்)


05. பகுபதம் (பக் 49) :-உண்டான் என்பதை உண்+ட்+ஆன் எனப் பகுக்க முடியும்.எனவே இது பகுபதம். (எ-டு) 1. படிக்கிறான் 2. நடந்தாள் 3. கண்டறிந்தார்.


06. பகாப்பதம் (பக் 49) :-அம்மா என்பதை எவ்வழியிலும் பகுக்க முடியாது. எனவே இது பகாப்பதம். (எ-டு) 1. மரம் 2. கடல் 3. பறவை.


07. மொழி மூன்று வகைப்படும்.(பக் 49):- அவை;- 1. தனிமொழி 2. தொடர் மொழி 3. பொதுமொழி.


08. தனிமொழி (பக். 49) :-ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளை உணர்த்தினால் அது தனி மொழி எனப்படும். (எ-டு) 1. படி 2. உயரம் 3. பெருமை 4. பார்த்தான்.


09. தொடர்மொழி (பக் 48) :-இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்தினால் அது தொடர்மொழி எனப்படும். (எ-டு) 1. பாடம் படித்தான் 2. பசு தோட்டத்தில் புல் மேய்கிறது.


10. பொதுமொழி (பக். 48) :-ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், இரண்டாகவோ பலவாகவோ பிரிந்து நின்று வேறு ஒரு பொருளையும் உணர்த்தினால் அது பொதுமொழி எனப்படும். (எ-டு) (1) அந்தமான் = இந்தியாவைச் சேர்ந்த ஒரு தீவுக் கூட்டம்; அந்த + மான் = அங்கு நிற்கும் மான். (2.) பலகை = மரப்பலகை; பல + கை =பல கைகள். (3.) வைகை = ஒரு ஆறு ; வை + கை = கையை (அதில்) வை. (4) தாமரை = ஒரு வகைப் பூ; தா + மரை = தாவும் மான். (5) வேங்கை = புலி; ஒரு வகை மரம். வேகு + கை = வேகும் கை = தீயினால் வெந்து போன கை.


11. சொற்களில் ஓரெழுத்துச் சொல், பல எழுத்துச் சொல் என இரு வகை உண்டு.(பக்48)


12. ஓரெழுத்துச் சொற்கள் சில வருமாறு ;- (1) ஆ = பசு (2) ஈ = தின் பண்டங்களின் மீது மொய்க்கும் ஒரு வகை உயிரினம். (3) கா = சோலை (4) கூ = கூவுதல் (5) கை = கரம் (6) கோ = அரசன் (7) தா= கொடு (8) தீ = எரியும் சுடர் (9) பா = பாட்டு (10) பூ = மலர் (11) பை = துணிப்பை.


13. பல எழுத்துச் சொற்கள் சில வருமாறு ;- (1) நாள் (ஈரெழுத்துச் சொல்) (2) மலர் (மூவெழுத்துச் சொல். (3) நெருப்பு (நான்கெழுத்துச் சொல்) (4) புறநானூறு (ஐந்தெழுத்துச் சொல்)


14. வினைச்சொல் (பக் 49.) :-செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொல், வினைச் சொல் (Verb) எனப்படும். (எ-டு) 1. நடந்தான் 2. பறக்கிறது 3. மலர்ந்தன.(பக்.49)


15. வினைமுற்று (பக். 49) :-வினைச் சொல் உணர்த்தும் பொருள் முற்றுப் பெற்றிருந்தால் அந்த சொல் வினை முற்று அல்லது முற்றுவினை எனப்படும். (எ-டு) குகன் நடந்தான். இதில் குகன் செய்த செயல் அல்லது வினை நிறைவடைந்தது என்று திட்டவட்டமாக உணர்த்தப் படுவதால் நடந்தான் என்பது வினைமுற்று ஆகும்.


16. நடந்தான் என்பதைப் பிரித்தால் நட + த் (ந்) + த் + ஆன். எனப் பிரியும். இதில் நட என்பது பகுதி. வளவன் என்ற சொல் ஒரு மனிதனைக் குறிப்பதால் அது உயர்திணை. ஆண்மகனைக் குறிப்பதால் ஆண் பால். வளவன் என்பது தனி ஒருவனைக் குறிப்பதால் ஒருமை; வளவன் என்ற பெயர் சுட்டும் இடம் படர்க்கை . எனவே ஆன் என்பது உயர்திணை ஆண்பால் ஒருமை, படர்க்கை விகுதி எனப்படும். த் என்பது சந்தி. த் (ந்) ஆனது விகாரம். அடுத்து வரும் த் இறந்த காலத்தைக் குறிக்கும் இடைநிலை.


17. வினைமுற்று என்பது எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்னும் வரிசையில் பயனிலையாய் அமையும். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றுள் ஒன்றான காலத்தைக் காட்டும். (பக். 49)


18. வினைமுற்றானது குறிப்பு வினைமுற்று, தெரிநிலை வினைமுற்று என இரண்டு வகைப்படும். (பக். 49)


19. தெரிநிலை வினைமுற்று (பக்.49) :-உழுதான் என்ற சொல் தெரிநிலை வினை முற்று ஆகும். இச்சொல்லானது குறிப்பிட்ட செயலைச் செய்பவன் யார் (உழவன்) என்பதையும், எந்தக் கருவி (கலப்பை) கொண்டு செய்கிறான் என்பதையும், எந்த நிலம் (அல்லது இடம்) (வயல்) என்பதையும், செய்த செயல் (உழுதல்) என்ன என்பதையும், செய்த காலம் (இறந்த கலம்) யாது என்பதையும், அச்செயலால் விளையும் பயன், அதாவது செய்பொருள் (புழுதியாதல்) என்ன என்பதையும் தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவ்வாறு செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையும் தெரிவித்து செயல் நிகழ்ந்த காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்றுச் சொல்லே தெரிநிலை வினை முற்று ஆகும். (பக். 49)


20. குறிப்பு வினைமுற்று (பக்.50);- பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறினையும் அடிப்படையாகக் கொண்டு, முன் பத்தியில் சொல்லிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினுள் கருத்தா (செய்பவன்) ஒன்றை மட்டும் தெரிவித்து, காலத்தைக் குறிபாகக் காட்டுவது குறிப்பு வினைமுற்று ஆகும். (பக்.50)


21. எச்சம்:- பொருள் முற்றுப் பெறாத வினைச் சொற்கள் எச்சம் எனப்படும். இதை வேறு வகையாகச் சொன்னால், விகுதி குறைந்து நிற்கும் வினைச் சொற்களே எச்சமெனப்படும். அவை இரு வகைப்படும். (1) பெயரெச்சம் (2) வினையெச்சம்.


22. பெயரெச்சம் (பக்.50):- ஓர் எச்சவினை அடுத்து வரும் ஒரு பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் ஆகும். படித்த கயல்விழி என்னும் சொற்றொடரில் படித்த என்னும் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அது பொருள் முற்றுப்பெறாத ஒரு வினைச் சொல் ஆகும். படித்தாள் என்ற சொல்லில் படித்தவள் ஒரு பெண் என்று வெளிபடையாகத் தெரிவதால் பொருள் முற்றுப்பெற்று விட்டது – அதாவது பொருள் முழுமை அடைந்து விட்டது. ஆனால் படித்த என்ற சொல்லில் படித்த பாடமா?, படித்த மனிதனா?, படித்த புத்தகமா? என்பது எதுவும் விளங்கவில்லை. இங்கு படித்த சொல்லுக்கான பொருள் கயல்விழி என்னும் பெயரைச் சார்ந்து இருக்கிறது. எனவே படித்த கயல்விழி என்னும் சொற்றொடரில் படித்த என்பது பெயரெச்சமாகும்.


23. பெயரெச்ச எடுத்துக் காட்டுகள் :- (1) உண்ட சோறு (2) ஒடிந்த கிளை (3) எரிந்த காடு (4) படிக்கின்ற கயல்விழி (5) அலையும் கடல் (6) வீசு தென்றல் (7) துள்ளிய கன்று (8) எழுதிய கட்டுரை (9) சென்ற வகுப்பு.


24. தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், எதிமறைப் பெயரெச்சம், எனப் பெயரெச்சங்கள் பல வகை உண்டு. (பக். 51 காண்க)


25. தெரிநிலைப் பெயரெச்சம் (பக்.51):- உண்ட மாதவி. இதில் காலமும் செயலும் வெளிப்படையாகத் தெரிகிறது. [ உண்ட என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்தது என்பதைக் காட்டுகிறது.; உண்ட என்ற சொல் உண்ணுதல் என்னும் செயல் நிகழ்ந்ததைக் காட்டுகிறது. எனவே காலமும் செயலும் வெளிப்படையாகத் தெரிகிறது..] ஆனால் உண்ட என்னும் சொல்லிலிருந்து செய்பவன், கருவி, நிலம், செய்பொருள் ஆகியவை வெளிபடையாகத் தெரியவில்லை. இவ்வாறு வருவது தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும். (பக். 51)


26. உண்ட மாதவி என்பது [ இறந்தகால ] தெரிநிலைப் பெயரெச்சம். உண்கின்ற மாதவி என்பது [ நிக்ழ்கால ] தெரிநிலைப் பெயரெச்சம். உண்ணும் மாதவி என்பது [ எதிர்கால ] தெரிநிலைப் பெயரெச்சம். உண்ட மாதவி என்பது உடன்பாட்டு [ positive ] தெரிநிலைப் பெயரெச்சம். உண்ணாத மாதவி என்பது எதிர்மறை(Negative ) தெரிநிலைப் பெயரெச்சம். உண்ணா மாதவி என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உண்ணாத என்ற சொல்லில் ஈற்றெழுத்தான த என்பது கெட்டு [மறைந்து] உண்ணா என்று நிற்பதால் உண்ணா மாதவி என்பது ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.


27. குறிப்புப் பெயரெச்சம் (பக்.51):- காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். (எ-டு) நல்ல பையன். இதில் நல்ல என்ற சொல் காலத்தைக் காட்டுவதில்லை; செயலைக் காட்டுவதில்லை. ஆனால் நல்ல என்ற பண்பினை (அதாவது குணத்தை) மட்டும் உணர்த்துவதாக அமைந்து பெயர்ச் சொல்லாகிய பையன் என்பதைக் கொண்டு முடிந்திருப்பதால் நல்ல பையன் என்பதில் வரும் நல்ல என்ற சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். (பக். 51)


28. நல்ல மாணவன் = உடன்பாட்டு (Possitive) குறிப்புப் பெயரெச்சம். தீய மாணவன் = எதிர்மறை (Negative) குறிப்புப் பெயரெச்சம்.


29. வினையெச்சம் (பக்.51) :- முற்றுப் பெறாத வினைச் சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினை முற்றைக் கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். (பக். 51) (எ-டு) படித்து வந்தான். இதில் படித்து என்பது முற்றுப் பெறாத வினைச்சொல். வந்தான் என்பது முற்றுப் பெற்ற வினைச் சொல். முற்றுப் பெறாத படித்து என்னும் வினைச்சொல், முற்றுப் பெற்ற வந்தான் என்னும் வினைச்சொல்லைக் கொண்டு முடிந்திருப்பதால் படித்து வந்தான் என்பதில் உள்ள படித்து என்னும் சொல் வினையெச்சம் ஆகும். (எ-டு) ஆடி மகிழ்ந்தான் (2) எழுதி அழித்தான் (3) உருண்டு ஓடியது (4) நிறைந்து வழிந்தது (5) வெந்து மடிந்தனர் (6) பறந்து சென்றன. (7) அமர்ந்து உண்டான் (8) மென்று விழுங்கினான் (9) வாரிக் குவித்தான் (10) கலைந்து சென்றனர்.


30.படித்து வந்தான் = இறந்தகால வினையெச்சம் படித்து வருகிறான். = நிகழ்கால வினையெச்சம் படித்து வருவான் = எதிர் கால வினையெச்சம்.


31. வினையெச்சம் இரண்டு வகைப்படும் . அவை (1) தெரிநிலை வினையெச்சம் (2) குறிப்பு வினையெச்சம்.


32. தெரிநிலை வினையெச்சம் (பக்.52):- வினை நிகழும் காலத்தையும் செயலையும் வெளிப்படையாக உணர்த்தி, வினை முற்றைக் கொண்டு முடியும் எச்ச வினைக்கு தெரிநிலை வினையெச்சம் என்று பெயர். (எ-டு) (1) படித்துத் தேறினான் . இதில் படித்து என்பது இறந்த காலத்தைச் சுட்டுகிறது. படித்தல் என்னும் செயலை நிகழ்த்தியதையும் சுட்டுகிறது. எனவே இது தெரிநிலை வினையெச்சம்.


33. குறிப்பு வினையெச்சம் (பக்.52);- எச்ச வினைச் சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி வினை முற்றைக் கொண்டு முடிந்தால் அது குறிப்பு வினையெச்சம் ஆகும். (எ-டு) மெல்லப் பேசினான். இதில் மெல்ல என்னும் எச்ச வினை காலத்தை வெளிப்படையாக உணர்த்துவதில்லை. ஆனால் பண்பை உணர்த்துகிறது (மெல்ல என்பது ஒரு பண்பு). எனவே இது குறிப்பு வினையெச்சம் ஆகும். (எ-டு) (1). விரைந்து சென்றான். (2) அழுத்தி ஊன்றினான் (3) தத்தித் தாவியது. (4) சீவி முடித்தாள் (5) எழுந்து நடப்பான். (6) குளித்து வருகின்றனர். (7) விழுந்து வணங்குவோம். (8) தைத்து முடித்திட்டார் (9) முறிந்து விழுந்தது. (10) ஓடி மறைந்தன.


34. முற்றெச்சம் (பக் 52):- ஒரு வினை முற்றுச் சொல் எச்சப்பொருளில் வந்து வேறொரு வினை முற்றைக் கொண்டு முடிந்தால் அது முற்றெச்சம் ஆகும். கோமதி வழியில் ஒரு பாம்பினைக் கண்டனள் நின்றாள். இதில் கண்டனள் என்னும் வினைமுற்று கண்டு என்னும் எச்சப் பொருளில் வந்து நின்றாள் என்னும் வினை முற்றைக் கொண்டு முடிந்திருப்பதால் இது முற்றெச்சம் ஆகும். (எடு) (1) மாலதி வந்தனள் சென்றாள். (2) அரசு நேற்று ஓடினன் வீழ்ந்தான். (3) தென்னை மரம் காற்றில் ஒடிந்தது வீழ்ந்தது. (4) கப்பல் கடலில் கவிழ்ந்தது அமிழ்ந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018

-----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி  மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (02) உவம உருபுகள் !

      உவமானம், உவமேயம் பற்றிய விதிகள் !




01. ஒரு பொருளை அதனைவிடச் சிறந்த வேறொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும். கபிலன் இடி போல மேடையில் முழங்கினான் என்னும் சொற்றொடரில், கபிலனது பேச்சு வலிமை இடியுடன் ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது.

02.மேற்கண்ட சொற்றொடரில் இடி என்பது உவமை. இதனை உவமானம் என்றும் சொல்வதுண்டு. கபிலனது முழக்கம் (அதாவது பேச்சு) என்பது உவமேயம்.


03. உவமானம் (இடி), உவமேயம் (கபிலனது முழக்கம்), இரண்டுக்கும் இடையில் வருகின்ற போல என்னும் சொல் ( இடி போல முழங்கினான்) உவம உருபு ஆகும். (எ-டு) (01) தமிழ் தேன் போல இனிமையானது. (02) குழந்தையின் முகம் தாமரை போல அழகானது. (03) சர்ச்சிலின் மனம் பாறை போல உறுதியானது. (04) குமரனின் பார்வை நெருப்புப் போல அனைவரையும் சுட்டது.


04. உவம உருபுகள் (பக் 120) :- போல என்னும் உவம உருபைப் போல வேறு சில உவம உருபுகளும் உள்ளன. அவை:- (01) புரைய (02) ஒப்ப (03) உறழ (04) அன்ன (05) மான (06) நேர (07) நிகர்ப்ப (08) ஏய்ப்ப (09) கடுப்ப. (10) இயைப (11) இன்ன (பக். 120)


05. மேற்கண்ட உவம உருபுகள் அனைத்திற்கும் பொருள் ” போல ” என்பது தான்.


06. விரியுவமை (விரி + உவமை) (பக்.120) :- உவமானம் (உவமை), உவமேயம் (உவமிக்கப்படும்பொருள்) ஆகிய இரண்டனையும் பொருத்துகின்ற உவம உருபு (போல, புரைய..........) வெளிப்படையாக வருவது விரியுவமை ஆகும். இதனை உவமைத் தொடர் என்றும் கூறுவதுண்டு. (எ-டு) அவனது தீ போன்ற விழிகள் அனைவரையும் அச்சுறுத்தின. இத்தொடரில் தீ என்பது உவமானம் (உவமை) ; விழிகள் என்பது உவமேயம்; போன்ற என்பது உவம உருபு. (பக் 120).


07. தொகையுவமை அல்லது உவமைத் தொகை (பக்.121):- ஒரு சொற்றொடரில் உவமானம், உவமேயம் இரண்டுக்கும் இடையில் உவம உருபு வெளிப்படையாக வராமல், மறைந்து நின்றால் அதற்குப் பெயர் உவமைத் தொகை அல்லது தொகையுவமை எனப்படும். (பக்.121)


08. உவமை (பக் 121):- ஒரு பொருளை அதைவிடச் சிறந்த மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.


09. உருவகம் (பக் 121) :- உவமானம், உவமேயம் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டாமல், இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப் படுத்திக் காட்டுவது உருவகம். (எ-டு) (01) தமிழ்த்தேன் (02) பாதமலர்.


10. உவமையும் உருவகமும் :- (01) பவளவாய். பவளம் போன்ற வாய் என்று பொருள். இங்கு பவளம் என்பது உவமை (உவமானம்); வாய் என்பது உவமேயம். இத்தொடரில் வாய் பவளத்தோடு ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பவளவாய் என்பது உவமைத் தொடர். ஆனால் வாய்ப்பவளம் என்ற சொற்றொடரில் வாயே பவளம் எனப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. இதில் பவளம் உவமானம்; வாய் உவமேயம்.


11. உவமைத் தொகையில் ( பவள வாய் ) முதற்பகுதி (பவளம்) உவமானம்; அடுத்த பகுதி ( வாய் ) உவமேயம். (121)


12. உருவகத் தொடரில் ( வாய்ப் பவளம் ) முதற்பகுதி (வாய்) உவமேயம்; அடுத்த பகுதி (பவளம்) உவமானம். (பக். 121)


13. உவமை, உருவக எடுத்துக் காட்டுகள் (பக் 121)

உவமை.....................................................உருவகம்

அமுதமொழி........................................... மொழியமுது
கயற்கண்................................................. கண்கயல்
தேன்தமிழ்.................................................தமிழ்த்தேன்
பூவிரல்.........................................................விரற்பூ
மதிமுகம்....................................................முகமதி
மலரடி..........................................................அடிமலர்
முத்துப்பல்.................................................பல்முத்து
விற்புவம்.....................................................புருவவில்
மலர்ப்பாதம்.............................................பாதமலர்
தாமரைமுகம்..........................................முகத்தாமரை
முகிற்குழல்...............................................குழல்முகில்
நிலவுமுகம்................................................முகநிலவு


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]


----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------
                                 
    

பத்தாம் வகுப்பு நிலை - இலக்கணம் (01) புணர்ச்சி !

புணர்ச்சி வகைகளும்   விதிகளும் !




01.புணர்ச்சி (பக்.138) :- தனித்தனியான இரண்டு சொற்கள் ஒன்றாக இணைவதற்குப் புணர்ச்சி என்று பெயர். இரண்டு சொற்களும் ஒன்றாக இணைந்து புதிய சொல் ஒன்று உருவாகும்.


02. நிலைமொழியும் வருமொழியும் (பக் 138) :- பொன் + வளையல். இதில் பொன் என்பது நிலைமொழி; வளையல் என்பது வருமொழி.


03. இயல்புப் புணர்ச்சி (பக் 138) :- இரண்டு சொற்கள் இணைந்து ஒரு புதிய சொல் ஒன்று உருவாகும் போது இணைந்த இரு சொற்களிலும் மாற்றம் ஏதுமின்றி அவை இயல்பாகப் புணர்ந்தால் அது இயல்புப் புணர்ச்சி ஆகும். (எ-டு) பொன் + வளையல் = பொன்வளையல்.


04. விகாரப் புணர்ச்சி (உருமாற்றம் ஏற்படும் புணர்ச்சி) (பக் 138) :- இரண்டு சொற்கள் சேரும்போது, அந்தச் சொற்களிலோ அல்லது அந்த சொற்களுக்கு இடையிலேயோ ஏதாவது உருமாற்றம் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். (எ-டு) (01) வாழை + பழம் = வாழைப்பழம். (இங்கு புதாக ஒரு ப் வந்து சேர்ந்துள்ளது) (02) கருமை + விழி = கருவிழி. ( இங்கு நிலைமொழியின் ஈற்றெழுத்து மறைந்துவிட்டது)


05. விகாரப் புணர்ச்சிகள் (பக் 138) விகாரப் புணர்ச்சி, தோன்றல் விகாரம், கெடுதல் விகாரம், திரிதல் விகாரம் என மூவகைப்படும்.


06. தோன்றல் விகாரம்:- வாழை + பழம் = வாழைப்பழம். இங்கு நிலைமொழி வருமொழி சொற்களுக்கு இடையே ப் என்னும் எழுத்து புதிதாகத் தோன்றியுள்ளது. எனவே இது தோன்றல் விகாரம் எனப்படும்.


07. கெடுதல் விகாரம் :- கருமை + விழி = கருவிழி. இங்கு நிலைமொழியின் ஈற்று எழுத்தான மை என்பது புணர்ச்சியில் மறைந்துவிட்டது. (அதாவது கெட்டுவிட்டது). எனவே இது கெடுதல் விகாரம் எனப்படும்.


08. திரிதல் விகாரம் :- பொன் + குடம் = பொற்குடம். இங்கு நிலைமொழியின் ஈற்றெழுத்தான ன் என்பது புணர்ச்சியில் ற் என உரு மாற்றம் (அதாவது திரிந்து விட்டது) அடைந்துவிட்டது. எனவே இது திரிதல் விகாரம் ஆகும்.


09. திசைப்பெயர்ப் புணர்ச்சி (பக் 138) :- திசைப் பெயர்கள் இரண்டு ஒன்றாகச் சேரும்போது என்ன நிகழ்கிறது என்பதைப் பார்ப்போம். வடக்கு + கிழக்கு = வடகிழக்கு. இங்கு நிலைமொழியின் ஈற்று எழுத்தும் ஈற்றயல் எழுத்தும் (க், கு) மறைந்துவிட்டன. இவ்வாறு வடக்கு என்னும் திசைப் பெயருடன் கிழக்கு மேற்கு ஆகிய திசைப் பெயர்கள் சேரும்போது நிலைமொழியின் ஈறு மற்றும் ஈற்றயல் எழுத்துகளான க், கு ஆகியவை மறைந்து வடகிழக்கு, வடமேற்கு ஆகிய புதிய சொற்கள் சொற்கள் பிறக்கின்றன. (இது கெடுதல் என்னும் விகாரம்)


10. திசைப்பெயர் புணர்ச்சி (பக்.138) :- தெற்கு என்னும் திசைப் பெயருடன் கிழக்கு, மேற்கு என்னும் திசைப் பெயர்கள் புணரும் போது என்ன நிகழ்கிறது ? தெற்கு + கிழக்கு = தென் கிழக்கு; தெற்கு + மேற்கு = தென் மேற்கு. இங்கு நிலை மொழியின் ஈற்று, ஈற்றயல் எழுத்துகளான ற், கு ஆகியவை மறைந்து புணர்ச்சியில் ன் என்னும் புதிய எழுத்து தோன்றுகிறது. (இது கெடுதல் மற்றும் தோன்றல் விகாரம்).


11. திசைப்பெயரோடு பிற பெயர்கள் புணர்ச்சி :- (01) வடக்கு + மலை = வடமலை. (கெடுதல் விகாரம்) (02) தெற்கு + திசை = தென்திசை. (கெடுதல் மற்றும் திரிதல் விகாரம்) (03) கிழக்கு + நாடு = கீழ்நாடு. (கெடுதல், திரிதல் விகாரம்) (04) மேற்கு + நாடு = மேல்நாடு / மேனாடு. (கெடுதல் மற்றும் திரிதல் விகாரம்)


12. பண்புப் பெயர் (பக் 139) :- நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றைக் குறிப்பிடும் சொற்கள் பண்புப் பெயர்களாகும். (எ-டு) (1) செம்மை, கருமை, பொன்மை, வெண்மை (02) இனிமை, உவர்மை (03) பருமை, மென்மை, சிறுமை, பெருமை, சேய்மை, அண்மை . பண்புப் பெயர்களுக்கு மையீற்றுப் பண்புப் பெயர் எனவும் ஒரு பெயருண்டு.


13. பண்புப் பெயர் புணர்ச்சி (01) கருமை + விழி = கருவிழி. ஈறு போதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் ஈற்று எழுத்தான மை நீங்கிப் புணர்ந்தது.


(02) பெருமை + அன் – [பெரு + அன்] ; [பெரி + அன்] ; [பெரி + ய் + அன்] = பெரியன். ஈறு போதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் ஈற்றெழுத்தான மை நீங்கி, பின் பெரு என்பதன் உகரம் இடை உகரம் எ ஆதல் என்னும் விதிப்படி பெரி ஆகி, பின் யகர உடம்படு மெய் பெற்று, பெரி + ய் + அன் என்பது உடல் மேல் உயிர் வந்து உன்றுவடு இயல்பே, என்னும் விதிப்படி, ய் + அ = ய என்றாகி, பெரியன் எனப் புணர்ந்தது.


(03) பசுமை + கூழ் = பைங்கூழ் , சிறுமை + ஓடை = சிற்றோடை, செம்மை + ஆம்பல் = சேதாம்பல், கருமை + குயில் = கருங்குயில் ஆகியவற்றுக்கான புணர்ச்சி விதிகளை புத்தகத்தில் படித்து தெளிவு பெறுக.


14. மகர ஈற்றுப்புணர்ச்சி: (பக்.140)


(01) மரம் + அடி = மரவடி { மர + அடி } {மர + வ் + அடி } = மரவடி. மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது நிலைமொழியின் ஈற்று மகரம் { ம் } கெட்டு, உயிர் ஈறு போல நின்று { மர }, உடம்படு மெய் பெற்று { வ் } புணரும்.


(02) வட்டம் + கல் = வட்டக்கல் {வட்டம் + கல்} { வட்ட + கல் } {வட்ட + க் + கல்} = வட்டக்கல். நிலைமொழியின் மகர ஈறு {ம்} கெட்டு, வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து {க} மிக்குப் {க்க ஆகி} புணர்ந்துள்ளது.


(03) நிலம் + கடந்தான் = நிலங்கடந்தான் . நிலைமொழியின் மகர ஈறு {ம்} வருமொழி முதலில் உள்ள வல்லினத்துக்கு இனமான {ங்} மெல்லினமாகத் திரிந்து புணர்ந்துள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------