name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 12/21/19

சனி, டிசம்பர் 21, 2019

வரலாறு பேசுகிறது (11) பேரா.சி.இலக்குவனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


வாய்மைமேடுபேராசிரியர்சி.இலக்குவனார் !


தோற்றம்:

பேராசிரியர் சி.இலக்குவனார் 1909 –ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17 –ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் சிங்காரவேல் தேவர். தாயார் இரத்தினத்தம்மாள். பிறந்த ஊர் வாய்மைமேடு (வாய்மேடு). திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியிலிருந்து திருமரைக்காடு (வேதாரணியம்) செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது !

பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் இலட்சுமணன்.  தந்தை சிங்காரவேல் தேவர் குறுநிலக் கிழாராகவும், மளிகைக் கடை உரிமையாளராகவும் திகழ்ந்தார். பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவர், தன் தந்தையை நான்கு வயதிலேயே இழந்தார் !

தொடக்கக் கல்வி:

வாய்மைமேட்டில் முதலில் சுப்பையா என்னும் ஆசியரின் திண்ணைப் பள்ளியிலும் பின்பு  கண்ணுச்சாமி என்னும் ஆசிரியரின் திண்ணைப் பள்ளியிலும் தனது கல்விச்செலவைத் (பயணத்தை) தொடங்கினார். அடுத்து  அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைத் தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்பு அண்ணன் நல்லபெருமாளுடன் வேளாண் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று !

இடைநிலைக் கல்வி:

இலட்சுமணனின் தாயாருக்குத் தன் பிள்ளை படிப்பை நிறுத்தியதில் உடன்பாடில்லை. எனவே, மன்னர் சரபோசி அறக்கட்டளை சார்பில் பட்டுக் கோட்டையை அடுத்த இராசாமடம் என்னும் ஊரில் இயங்கி வந்த நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் இலட்சுமணன் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் போது, அங்கு தமிழாசிரியராக இருந்த சாமி. சிதம்பரனார்  இலட்சுமணன் என்னும் பெயரைஇலக்குவன்என்று பள்ளி ஆவணங்களில் மாற்றி அமைத்தார் ! அப்பொழுது முதலே தனித் தமிழ் மீது நாட்டமும், தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனாருக்கு ஏற்பட்டது !

உயர்நிலைக் கல்வி:

பின்னர் 1924 –ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு முதலான உயர்நிலைக் கல்வியை உரத்தர் நாடு (அறிவும் திட்பமும் மிகுந்தோர் நாடு) என்னும் ஒரத்தநாட்டில் மேற்கொண்டார்.  தஞ்சாவூர் -  பட்டுக்கோட்டை பேருந்து வழித்தடத்தில் 15 கல் தொலைவில் இவ்வூர் உள்ளது.

தமிழ்ப் புலவர் படிப்பு:

பள்ளிப் படிப்பை முடித்த பின்பு தஞ்சையை அடுத்து உள்ள திருவையாறில் இருந்த அரசர் தமிழ்க் கல்லூரியில் பயின்று 1936 –ஆம் ஆண்டு புலவர் பட்டம் பெற்றார் ! இக்கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். !

பணி:

1936 சூன் மாதம் தொடங்கி 1942 –ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்டத்தில் இயங்கிவந்த பல உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். கலைஞர் மு.கருணாநிதி, திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கையில் அப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்து அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் இலக்குவனாருக்குக் கிடைத்தது !

பின்பு, குலசேகரன்பட்டினத்தில் தமிழ்க் கல்லூரி முதல்வர், நெல்லை, .தி.தா.இந்துக் கல்லூரியில் விரிவுரையாளர், எனப் பல்வேறு இடங்களில் பணி புரிந்தார் !

கீழைமொழி மேதை:

அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகம் வகுத்திருந்த விதிகளின்படி, தமிழில் புலவர் பட்டம் பெற்றிருந்தோருக்கு கலையியல் வாலை (B.A.) பட்டத்திற்கு இணையான கீழைமொழி வாலை ( B.O.L.) பட்டம் வழங்கப்பட்டது. இபட்டத்தைப் பெற்ற இலக்குவனார், பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்  என்னும் தலைப்பில் ஆய்வு செய்து கீழை மொழி மேதை (M.O.L) பட்டமும் பெற்றார் !

தமிழ்த் துறைத் தலைவர்:

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் இயங்கிவரும் தியாகராயர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலக்குவனாருக்குக் கிடைத்தது. அங்கு தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு தனது தமிழ்ப் பணியைத் தொடங்கினார் !

முனைவர் பட்டம்:

தொல்காப்பிய ஆய்வுக்காக 1963 –ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், இடையிடையே ஏற்பட்ட பணியிழப்புகளின் காரணமாகவும், முனைவர் பட்டத்தை அவர் தனது 53 – ஆம் அகவையில் தான் பெறமுடிந்தது.  காலந் தாழ்ந்து முனைவர் பட்டம் பெற்றாலும், தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்து போயின. பாராட்டு விழாக்கள் பல ஊர்களில் நடந்தன !

அண்ணாவின் அணிந்துரை:

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில நூலுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டிப் பெருமைப் படுத்தினார். அண்ணா அவர்கள் தமது அயல்நாட்டுப் பயணத்தின் போது, இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார் என்றால் அந்நூலின் விழுமிய தன்மையும் மேன்மையும் உங்களுக்குத் தெற்றென விளங்கும் !

தமிழ் காப்புக் கழகம்:

மதுரையை அடுத்த திருநகரில் 1962 –ஆம் ஆண்டுதமிழ்க் காப்புக் கழகம்என்னும்  அமைப்பை இலக்குவனார் தொடங்கினார். ”தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! தமிழில் பெயரிடுக ! தமிழில் பயில்க ! “ என்னும் நான்கு திட்டங்களை முன்வைத்து இந்த அமைப்பு பணியாற்றத் தொடங்கியது ! இவ்வமைப்பின் செயலாளராகப் புலவர் இளங்குமரன் அவர்கள் இலங்கி இலக்குவனாருடன் இணைந்து பணியாற்றி வந்தார் !

இந்தி எதிர்ப்பும் சிறை வாழ்வும்:

1965 –ஆம் ஆண்டு சனவரி 25 அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், இலக்குவனார் பங்கேற்றார். இதன் விளைவாக தான் வகித்து வந்த கல்லூரிப் பேராசிரியர் பணியை அவர் இழக்க நேர்ந்தது. மொழிகாப்புப் போராட்டத்தின் எதிரொலியாக முதன்முறையாகச் சிறைப்படுத்தப்பட்டார்.  ஐந்து வாரங்கள் சிறையில் இருந்தார். பின்பு மே மாதம் இரண்டாம் முறையாகத் தளைப்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தார் ! அன்னைத் தமிழ் காக்கச் சிறை சென்ற இலக்குவனார், தமிழர் நெஞ்சங்களில் அழிக்கவியலாப் படிமையாக இன்றும் வாழ்ந்து வருகிறார் !

தமிழகம் தந்த பட்டங்கள்:

மொழிப்போர் ஈகியார் (தியாகி) பேராசிரியர் இலக்குவனாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் உச்சி மோந்து முத்தமிட்டுப் பாராட்டிக் கொண்டாடியது. முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சி மொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ்காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல் போன்று மொத்தம் 14 பட்டங்களைத் தமிழர்கள் இவருக்கு அளித்து மகிழ்ந்தனர் !

நடத்திய இதழ்களும் படைத்த நூல்களும்:

சங்க இலக்கியம்”, “இலக்கியம்”, “திராவிடக் கூட்டரசு”, “குறள்நெறிஆகிய இதழ்களையும் நடத்தி இருக்கிறார். தொல்காப்பிய ஆராய்ச்சி உள்பட 21 தமிழ் நூல்களையும், 4 ஆங்கில நூல்களையும் படைத்துத் தமிழுக்குப் பெரும்பணி ஆற்றி இருக்கிறார் !

மாநிலக் கல்லூரியில் பணியேற்பு:

1967 –ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சார் ஆன பின்பு, சென்னை மாநிலக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். ஆனால் கல்வி அமைச்சர் நாவலருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஓராண்டுக்குப் பின் அப்பணியிலிருந்து விலகினார் !

கிட்டாமற்போன துணைவேந்தர் பதவி:

தமிழில் புலமை மிக்கவர்களிடம் செருக்கும் இணைந்திருக்கும் என்பது பொதுவான கூற்று ! இதுவே, இலக்குவனாருக்குக் கிடைத்திருக்க வேண்டிய துனைவேந்தர் பொறுப்பினைத் தொலைவில் துரத்திச் சென்று விட்டது என்பது பல அறிஞர்களின் கருத்து !

மறைவு:

தமிழ்த் தாயின் போர்த் தளபதி இலக்குவனார் தனது 64 –ஆம் அகவையில் 1973 –ஆம் ஆண்டு, செப்டம்பர்த் திங்கள் 3 –ஆம் நாள் தனது பூவுலக வாழ்வைத் துறந்து புகழுடம்பு எய்தினார் ! நீடுதுயில் நீக்க வந்த நிலா, தன் பணிமுடித்து, நிலையாகத் துயில் கொள்ளச் சென்றுவிட்டது !

முடிவுரை:

தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! தமிழில் பெயரிடுக ! தமிழில் பயில்க ! “ என்னும் அவருடைய சங்கொலி மீண்டும் எதிரொலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ! இலக்குவனார் ஊதி ஊதி உருவாக்கிப்  பெருக்கிய தமிழ்க் கனல் இன்று சாம்பல் பூத்துக் கிடக்கிறது ! இற்றைத் தமிழன் அக்கனலை மீண்டும் சுடர்விட்டு ஒளிரச் செய்வானா அல்லது தன்மானம் இழ்ந்து தளர்ந்து போவானா ? காலம் தாம் விடை சொல்ல வேண்டும் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050; சிலை (மார்கழி) 05]
{21-12-2019}

------------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------