name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 12/02/19

திங்கள், டிசம்பர் 02, 2019

தமிழிலக்கியம் (05) மனோன்மணீயம் !

பாண்டிய நாட்டு இளவரசி மனோன்மணி பற்றிய புனை காவியம் !

மனோன்மணீயம் ஒரு கவிதை நாடகம். பெரும்பான்மையாக ஆசிரியப் பாவே நாடகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியப்பா அல்லாமல், ஆசிரியத் தாழிசை, வெண்பா, கலித்துறை, வெண் செந்துறை, கொச்சகக்கலிபா, மருட்பா எனப் பிற பா வகைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்த் தெய்வ வணக்கத்தைச் சேர்த்து மொத்தம் 4502 அடிகளில் இந்நாடகம் அமைந்துள்ளது !

இதை இயற்றியவர் பேராசிரியர் பெ,சுந்தரம் பிள்ளை. இவர் பிறந்த ஊர், இப்போது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை. கி.பி. 1855 ஆம் ஆண்டு பிறந்த இவரது தந்தை பெயர் பெருமாள்பிள்ளை; தாயார் மாடத்தி அம்மாள். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் மெய்ப் பொருளியல் (PHILOSOPHY) துறைப் பேராசியராகப் பணிபுரிந்த இவர்  26-04-1897 அன்று  தனது 42 –ஆம் அகவையில் காலமானார் !

இவரது நினைவைப் போற்றும் வகையில் முந்தைய தமிழக அரசு நெல்லைப் பல்கலைக் கழகத்திற்கு மனோன்மணீயம் சுந்தரனார் பலகலைக் கழகம் என்று இவரது பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது !

மனோன்மணீயம் நாடகக்  காப்பியத்தின் கதைச் சுருக்கம் வருமாறு:-
பாண்டிய நாட்டு மன்னன் சீவகன். கள்ளம் கவடு அறியாத அருங்குணச் செம்மல். அவனது தலைமை அமைச்சர் பெயர் குடிலன். சூழ்ச்சித் திறனும் தீய குணங்களும் படைத்தவன் !

மன்னனிடம் நல்லவன் போல் நடித்து, அவனைத் தன்வயப்படுத்திக் கொண்டான். மன்னனைக் கவிழ்த்து விட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படலானான். இதற்கு முதற்படியாகப் பாண்டிய நாட்டின் தலைநகரை மதுரையிலிருந்து நெல்லைக்கு மாற்றி, அங்கு கோட்டை கொத்தளங்களை உருவாக்கினான் !

பாண்டிய மன்னன் சீவகனின் குலகுரு சுந்தர முனிவர். குடிலனில் நடவடிக்கைகளில் ஐயம் கொண்ட அவர், நெல்லைக்குத் தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டு, மன்னனுக்குப் பாதுகாப்பாக  இருக்கத் துணிந்தார். நெல்லை அரண்மனையில் சுந்தர முனிவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது !

பாண்டிய மன்னன்  சீவகனின் மகள் மனோன்மணி. அவளது தோழி. வாணி. நடராசன் என்னும் நற்குண நம்பி மனோன்மணியின் தோழி வாணியைக் காதலித்தான் !

நடராசனின் தந்தை சகடன். இவர் தனது மகளை (நடராசனின் தங்கையை) தலைமை அமைச்சர் குடிலனின் மகன் பலதேவனுக்கு மணம் செய்வித்து, அதன் மூலம் தனக்கு செல்வத்தையும் செல்வாக்கையும் தேடிக் கொள்ள விரும்பினார் !

இந்தச் சூழ்நிலையில், சேர நட்டு மன்னனான புருசோத்தமனைக் கனவில் கண்டு மயங்கிய மனோன்மணி, அவன் மீது காதல் கொண்டாள். சீவகனின் குலகுருவான சுந்தரமுனிவர், புருசோத்தமனிடம் தூதனை அனுப்பி, அவனது இசைவு பெற்று அவர்கள் திருமணத்தை நடத்திடலாம் என்று பாண்டிய மன்னன்  சீவகனிடம் கூறினார். தூதனாக அனுப்ப மனோன்மணியின் தோழி வாணியின் காதலன் நடராசனே சிறந்தவன் என்பதையும் அவர் எடுத்துரைத்தார் !

இதை அறிந்த சூழ்ச்சிக்கார குடிலன், தன்மகன் பலதேவனைத் தூதுவனாக அனுப்பிட சீவகனிடம் இசைவு பெற்றான். பலதேவன், தூதுவனாகப் புருசோத்தமனிடம் சென்று, அவனை வேண்டுமென்றே  சினப்படுத்தி, பாண்டிய நாட்டின் மீது போர் தொடுக்கச் செய்து விட்டான் !

சேரநாட்டுப் படைகளுக்கும் பாண்டிய நாட்டுப் படைகளுக்கும் இடையில் நெல்லையில் போர் ஏற்பட்டது. பாண்டியன் சீவகனின் படைகள் தோல்வியின் விளிம்பில் நின்றன.  சீவகன் உயிரை இழக்கும் நிலை உருவாயிற்று.  நடராசனின் நண்பன் நாராயணன் என்னும் வீரனால் சீவகன் காப்பாற்றப்பட்டான் !

ஆனால் நாராயணனால் தான் பாண்டிய நாட்டுப் படைகள் தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது என்று குடிலன் மன்னனிடம் திரித்துக் கூறினான். குடிலனின் பேச்சை நம்பிய சீவகன் நாராயணனைக் கழுவில் ஏற்ற (கொல்ல) உத்தரவிட்டான். ஆனால், சுந்தர முனிவரின் தலையீட்டால் கழுவேற்றம் தள்ளிவைக்கப்பட்டது !

சுந்தர முனிவர் அரண்மனையில் இருந்த தன் அறையிலிருந்து கோட்டைக்கு வெளியே செல்ல சுரங்கப் பாதை ஒன்றை மிகவும் கமுக்கமாக (ரகசியமாக) அமைத்திருந்தார். இந்தச் சுரங்கப் பாதை பற்றிய செய்தியை சீவகனிடம் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மன்னனிடமிருந்து குடிலன் இதை அறிந்து கொண்டான் !

நள்ளிரவு வேளையில், குடிலன் சுரங்கப் பாதை வழியாகச் சென்று, கோட்டைக்கு வெளியே படைகளுடன் தங்கி இருந்த சேர மன்னன் புருசோத்தமனைச் சந்தித்து,  சுரங்கப் பாதை பற்றிய செய்தியை அவனிடம் சொல்லி, தன்னுடன் வந்தால், போரே இல்லாமல் மன்னன் சீவகனைச் சிறைப்படுத்தி விடலாம் என்று கூறினான் !

சீவகன் அழிந்து விட்டால், அவன் மகள் மனோன்மணியை எளிதாகத் தன் மகன்  பலதேவனுக்கு மணம் முடித்து வைத்துவிடலாம்; அத்துடன் புருசோத்தமன் தயவால் பாண்டிய நாட்டுக்கு மன்னன் ஆகிவிடலாம் என்பது குடிலனின் எண்ணம் !

மனோன்மணி போலவே புருசோத்தமனும், அவள் மீது காதல் கொண்டிருந்தான். குடிலன் பாண்டிய நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்ததை ஏற்காத புருசோத்தமன், , குடிலனைத் தளையிட்டு (கைது செய்து) அழைத்துக் கொண்டு சுரங்கப் பாதை வழியாகவே சீவகனின் அரண்மனைக்குள் நுழைந்தான் !

சீவகனின் அரண்மனைக்குள் வந்த புருசோத்தமன், குடிலனின் சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் சீவகனிடம் எடுத்துரைத்தான். சுந்தரமுனிவர் அங்கு தோன்றி நடந்தவற்றை விளக்கி, சீவகனின் மன மயக்கம் தெளிவித்தார். புருசோத்தமன் மனோன்மணி திருமணம் சுந்தரர் வாழ்த்துளுடன் இனிது நிறைவேறியது !

நீராரும் கடலுத்த நிலமடந்தைக்கு எழிலொழுகும்...” என்று இப்போது அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நமக்களித்த மனோன்மணீயம் காப்பியத்தையும், அதைப் படைத்து  அழியாப் புகழ் எய்தியுள்ள  சுந்தரனாரையும் இந்த நேரத்தில் நினைவிற் கொண்டு, அவரைப் போல் நாமும் தமிழ்த் தாய்க்கு இயன்ற வகையில் தொண்டு செய்ய உறுதி ஏற்போம் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி,(கார்த்திகை)08]
(24-11-2019)
------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------

தமிழிலக்கியம் (04)நாலாயிரத் திவ்ய பிரபந்தம் !

ஆழ்வார்களின் அழகு தமிழ்ப் பாடல்களை அள்ளித் தரும்  பெட்டகம் !

திருமாலைப் பற்றிப் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தின் தமிழ் மறையாக இந்நூல் கொண்டாடப்படுகிறது !

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆகிய பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்றது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இவர்கள் கி.பி. 6, 7, 8, 9  ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் !

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பவர் பன்னிரு ஆழ்வார்கள் தனித் தனியாகப் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து, அதற்கு ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்என்று பெயர் சூட்டினார். பின்னர் வந்த  மணவாள மாமுனிகள், திருவரங்கத்து அமுதனார் அருளிய இராமாநுசர் நூற்று அந்தாதியையும் இதனுடன் சேர்த்து, “நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்எனப் பெயர் சூட்டி அழைத்தார் !

திவ்வியஎன்றால்மேலானஎன்று பொருள். “பிரபந்தம்என்றால்பாடல் தொகுதி”. நாலாயிரம் பாடல்கள் கொண்ட நூல் தொகுதி என்பதால்நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்என்று அழைத்தார் மணவாளர். வடமொழி மேலாண்மை தமிழ் நாட்டில் மிகுந்திருந்த காலத்தில் இந்நூல் தொகுக்கப் பெற்றதால், நூலின் பெயரிலும் வடமொழி புகுந்துவிட்டது !

இந்த நூல், “ஆன்ற தமிழ் மறை”, “ஐந்தாவது வேதம்”, “திராவிட வேதம்”, “திராவிடப் பிரபந்தம்என்றெல்லாம் வண்ணிக்கப்படுகிறது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் அன்றாடம் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு !

இந்நூல்,
------------------------------------------------------------------------------------------------

முதலாயிரம்...........................................................947 பாடல்கள்
பெரிய திருமொழி..............................................1134 பாடல்கள்
திருவாய்மொழி...................................................1102 பாடல்கள்
இயற்பா...................................................................817 பாடல்கள்

-------------------------------------------------------------------------------------------------

என  நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும் திருமாலையும், அவரது தோற்றரவுகளையும் (அவதாரங்களையும்) குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திருத் தலங்களில் (திவ்விய தேசங்களில்) பாடப்பட்டுள்ளன !

இந்தத் தொகுப்பில் ஏறத்தாழ 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பட்டுள்ளன. ஆழ்வார்  பாடல்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமாநுசர் நூற்று அந்தாதி 108 பாடல்களையும் சேர்த்து மொத்தப் பாடல்கள் 4000 ஆகும் ! இவற்றுள் பெரும்பாலான பாடல்கள் பண்ணுடன் அமைந்த இசைப் பாடல்கள் ஆகும் !

ஆண்டாள் நாச்சியார் பாடிய  திருப்பாவை 30 பாடல்களுடன் அவர் பாடிய நாச்சியார் திருமொழிப் பாடல்கள் 143 –ம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினுள் அடங்கும்தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய,

--------------------------------------------------------------------------------------------------------
பச்சைமா  மலைபோல்  மேனி,  பவளவாய்   கமலச்  செங்கண்,
அச்சுதா   அமரர்   ஏறேஆயர்தம் கொழுந்தே !   என்னும்....
---------------------------------------------------------------------------------------------------------

என்ற பாடல் இறையுணர்வுடன் தமிழும் கொஞ்சி விளையாடும் புகழ்பெற்ற பாடலாகும் !

---------------------------------------------------------------------------------------------------------
வண்டினம்   முரலும்   சோலை,   மயிலினம்   ஆலும்  சோலை,
கொண்டல்மீ  தணவும்   சோலைகுயிலினம்   கூவும்  சோலை..
----------------------------------------------------------------------------------------------------------

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இன்னொரு பாடல், இயற்கையை வண்ணிக்கும் அழகைப் பாருங்கள் !!

----------------------------------------------------------------------------------------------------------
பல்லாண்டு பல்லாண்டு  பல்லா  யிரத்தாண்டு,  பலகோடி  நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா   உன்  செவ்வடி  திருக்காப்பு !
----------------------------------------------------------------------------------------------------------

திருமாலை எத்துணை அழகாகமணிவண்ணன்என்று அழைக்கிறார் பெரியாழ்வார். இந்த அழகான தமிழ்ப் பெயரைப் புறந்தள்ளி, “கிருஷ்ணன்”, “சேஷாசலம்”, ”பத்மநாபன்என்றெல்லாம் குழந்தைகளுக்கு வடமொழிப்  பெயர் சூட்டுகிறோமே!

--------------------------------------------------------------------------------------------------------
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர் !
--------------------------------------------------------------------------------------------------------

ஆகா ! என்ன அருமையான பாடல் வரிகள் ! ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை தமிழ்த் தடாகத்தில் நம்மை நீராட்டிக் குளிர்விக்கிறது !

தமிழ்ச் சுவை தேடித் திரிகின்ற தும்பிகள், பறந்து சென்று தேன்துளிகளைப் பருக வேண்டிய மலர்கள் நிரம்பவே பூத்துச் சிரிக்கின்றன ஆழ்வார்கள் அருளிச் செய்த  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ! நூலின் பெயரில் உள்ள வடமொழியைப்  பார்த்து மனம் சுளிக்காமல், உள்ளே சென்று தமிழ்த் தேனைத் துய்த்து மகிழ்வீர் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி (கார்த்திகை)15]
{1-12-2019}
------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளிய்டப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------

தமிழிலக்கியம் (03) திருவருட்பா !

அருட்பேரொளியின் அமுதத்  திருமொழிகள் !

அருட்பேரொளி, இராமலிங்க அடிகள் என்னும் வள்ளல் பெருமான்  நமக்கு அளித்துள்ள பெரும் புதையல் திருவருட்பா ஆகும். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு தான் திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது !

-----------------------------------------------------------------------------------------------------------
இராமலிங்க அடிகளார் பின்பற்றி வந்த கொள்கைகளைப் பாரீர் !
 ------------------------------------------------------------------------------------------------------------

  • கடவுள் ஒருவரே. அவர் ஒளி வடிவானவர் ! (அருட்பெருஞ்சோதி
          ஆண்டவர்)

  • சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் உயிர்களைப் பலியிடுதல் கூடாது !

  • எந்த உயிரையும் கொல்லக் கூடாது !

  • எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தல் கூடாது !

  • புலால் உணவு உண்ணக் கூடாது !

  • சாதி, மதம், இனம், மொழி என்னும் வேறுபாடுகள் கூடாது !

  • பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடு கருதாது      உணவளித்தல் வேண்டும் !

  • மத நல்லிணக்கம் வேண்டும் ! மத வெறி கூடாது !

  • எதிலும் பொது நோக்கம் வேண்டும் !

  • இறந்தவர்களை எரிக்கக் கூடாது. புதைக்க வேண்டும் !
------------------------------------------------------------------------------------------------------------

இக்கொள்கைகளைப் பின்பற்றியே அவரது பாடல்கள் அமைந்துள்ளன. வள்ளலார் சொல்கிறார் ! ”மக்களே ! (01) ”நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதீர்”. (02) ”அறக்கொடை (தானம்) தருவதை அண்டித் தடுக்காதீர்”. (03) ”நம்பி வரும் நண்பர்களை வஞ்சிக்காதீர்”. (04) ”ஏழைகளின் வயிறு எரியச் செய்யாதீர்”. (05) ”பிறர் பொருளைப் பெற விரும்பிப் பொய்யுரை புகலாதீர்.” (06) ”பசித்தோர் முகத்தைப் பார்த்து, வாளாவிருக்காதீர்.” (07) ”இல்லை என்று வருவோர்க்கு இல்லை என்று சொல்லாதீர்”. (08) ”ஆசானின் அடிபணிய அணுவளவும் தயங்காதீர்”. (09) ”நிழல் தரும் மரங்களை அழிக்காதீர்.” (10) ”பெற்றோர் நல்லுரையைப் புறந்தள்ளிப் போகாதீர் !”

அனைத்து மதங்களும் வலியுறுத்தும் அன்பு, அறம் ஆகியவற்றை உள்ளடக்கிதூய நன்னெறிப் பொதுமை  (சமரச சுத்த சன்மார்க்கம்) என்னும் புதிய கோட்பாட்டை அறிவித்து, அனைவரும் அதன்படி ஒழுக வேண்டும் என்றும் பரப்புரை செய்து வந்தார் !

ஆண்டவன் ஒருவனே; அவனுக்கு உருவ வழிபாடு தேவையில்லை; அவன் ஒளிவடிவானவன்; அருட்குணம் மிக்கவன், என்று வலியுறுத்தி வந்தார் !

-----------------------------------------------------------------------------------------------------------
எய்வகைசார் மதங்களிலே பொய்வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே
........எமது தெய்வம் எமது தெய்வம் என்று உகைவகையே கதறுகின்றீர்
தெய்வம் ஒன்று என்று அறியீர்..
-----------------------------------------------------------------------------------------------------------

என இடித்துரைத்த வள்ளலார், சமயச் சடங்குகளை வெறுத்தார். மதச் சண்டைகள் மக்கி மண்ணாகிப் போக வேண்டும் என்று விரும்பினார் !

------------------------------------------------------------------------------------------------------------
.“இருட் சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
.......இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு,
மருட் சாதி சமயங்கள் மதங்கள், ஆச்சிரம
.......வழக்கெலாம் குழிக்கொட்டி மண் மூடிப் போட்டு..”

-----------------------------------------------------------------------------------------------------------
என்று சாடினார். தூய நன்னெறி வாழ்வை மக்கள் மேற்கொள்ள  வேண்டும் என்று  ஆசைப்பட்டார் !
------------------------------------------------------------------------------------------------------------

வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம்
......வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறும்  இரந்தும் பசியறாது அயர்ந்த
.....வெற்றரைக் கண்டு  உளம் பதைத்தேன்.
-----------------------------------------------------------------------------------------------------------

என்று பரிவு மனம் கொண்டிருந்த வள்ளலாரை, மதம் சாதிகளில் முனைப்பான பற்றுக் கொண்டிருந்த மனிதர்கள் புரிந்து கொள்ள வில்லை ! 

வடலூரில் 1867 ஆம் ஆண்டு நிறுவப் பெற்ற அறநிலையம் (தருமசாலை), அன்று முதல் இன்று வரை, (152 ஆண்டுகளாக) பசித்து வருகின்ற அனைவருக்கும் மூன்று வேளையும் உணவளித்து வருகின்ற அருந்தொண்டினைச் செய்து வருகிறது என்பதை சாதிமதப் பித்துப் பிடித்து இன்று அலைகின்றோர்  உணர வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------------------------
வாழையடி வாழையென வந்த  திருக்கூட்ட
.........மரபினில் யானொருவன் அன்றோ
................வகையறியேன் இந்த ஏழைபடும்பாடு 
......................உனக்குத் திருவுளச் சம்மதமோ..
------------------------------------------------------------------------------------------------------------

என்று எந்நேரமும் மக்கள் குமுகாயத்தைப் பற்றியே சிந்தித்து மனப் பரிவு கொண்ட வள்ளளார், சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லி, ஆடு, கோழி, பன்றி முதலிய உயிரினங்களைப் பலி கொடுத்தலைக் கண்டித்தார் !
-------------------------------------------------------------------------------------------------------------

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
........நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு, பன்றி குக்குடங்கள்
........பலிகடா முதலிய உயிரைப்
பொலியுறக் கொண்டே போகவுங் கண்டே
.......புத்தி நொந்துளம் நடுக்குற்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------

என்கிறார். ஐதீகம், சாத்திரம்  என்ற பெயரில் வடமொழியில் மந்திரம் சொல்லல், ஐயர் பூசனை செய்தல், கருவறைக்குள் நுழைவுமறுத்தல், தலையில் தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல், செடில் காவடி, கோயிலைச் சுற்றிப் உருண்டு புரளுதல் போன்ற தவறான பழக்க வழக்கங்களை வள்ளலார் ஏற்கவில்லை !

-----------------------------------------------------------------------------------------------------------

கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
........கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக..

-----------------------------------------------------------------------------------------------------------

என்று மனம் நொந்துப் பாடினார்.
-----------------------------------------------------------------------------------------------------------

கடுகு ஆட்டுக் கறிக்கு இடுக தாளிக்க எனக்
.......கழறிக் களிக்காநின்ற
சுடுகாட்டுப் பிணங்காள் இச்சுகமனைத்தும்
.......கணச் சுகமே சொல்லக் கேண்மின்.

------------------------------------------------------------------------------------------------------------

என்று புலால் உண்ணலை வெறுத்து  உரைத்தார் !

------------------------------------------------------------------------------------------------------------

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் திடுகின்றீர்
......பேயரே நீர்,
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ
.......இரவில் தூங்கி,
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால் நும்மனத்தை
......வயிர மான
சிறந்தவரை எனப்புகழ்ச் செய்துகொண்டீர் ஏன்பிறந்து
.......திரிகின்றீரே

------------------------------------------------------------------------------------------------------------

உயிரோடு இருக்கும் வரைப் பாராட்டிச் சீராட்டிப் போற்றி வந்த  உம் உறவினரை, அவர் இறந்த பிறகு தீயிலே இட்டு எரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது என்று கேட்கும் வள்ளலார், இறந்தவர்களைப் புதைக்க வேண்டுமேயன்றி எரிக்கலாகாது என்று வலியுறுத்துகிறார் !

அன்பும் அருளும் ஒருங்கிணைந்து உருவெடுத்து வந்ததைப் போல், பிறந்து அருளாட்சி செய்து, மக்களுக்கு நல்லுரை நல்கி வந்த வள்ளலாரை, பழமைப் பாசி மனம் படைத்தோர் அவர் உயிருக்கு ஊறு செய்து விட்டதாகவே மக்கள் நினைக்கிறார்களே அன்றி,  பூட்டிய அறைக்குள் மறைந்து விட்டார் என்று சொல்வதை நம்ப அணியமாக இல்லை ! பரிவு மனம் உடையோர் இருக்கும் வரை, வள்ளலார் புகழ் மறையாது !

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050. நளி (கார்த்திகை) 14]
{30-11-2019}