name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 12/12/19

வியாழன், டிசம்பர் 12, 2019

சிந்தனை செய் மனமே (55) ஆட்சிமுறையில் சீர்திருத்தம் தேவை !

மக்களைத் தேடிப் போக வேண்டிய அதிகாரிகள், நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் !



நடுவணரசு, மாநில அரசு என்னும் இரட்டை ஆளுமை முறை (GOVERNANCE) நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது ! இதில் மாநில அரசின் ஆளுமை முறை (GOVERNANCE) பற்றிச் சுருக்கமாக ஆய்வு செய்வோம் !

மாநில அளவில் ஒரு அமைச்சரவை (CABINET), கொள்கை முடிவுகளை எடுக்கிறது. அம் முடிவுகளைச் செயல்படுத்த ஒவ்வொரு அமைச்சரின் தலைமையின் கீழும் தனி அமைச்சகம் ஒரு செயலர் (SECRETARY) தலைமையில் இயங்குகிறது. ஒவ்வொரு துறைக்கும் தனித் தனிச் செயலர் என சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலகங்கள் (DEPARTMENT-WISE SECRETARIATES) இயங்கி வருகின்றன !

அந்தச் செயலருக்கு உதவியாக சிறப்புச் செயலர், கூடுதல் செயலர், ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட  இணைச் செயலர்கள், பல துணைச் செயலர்கள், பல உதவிச் செயலர்கள், பல சார்புச் செயலர்கள், பிரிவு அலுவலர்கள் பலர்  என ஒரு பெரிய அதிகாரிகள் கூட்டமே, தலைமைச் செயலகத்தில் உள்ளது. மக்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பு கிடையாது !

செயலருக்கு அடுத்த நிலையில், மாநில அளவில், ஒவ்வொரு துறைக்கும் ஒரு இயக்ககம் (DIRECTORATE) பெரும்பாலும் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டே இயங்கி வருகிறது. ஒரு இயக்குநர் தலைமையில் இயங்கி வரும் இவ்வலுவலகத்தில், அவருக்கு உதவியாக கூடுதல் இயக்குநர், ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இணை இயக்குநர்கள், பல துணை இயக்குநர்கள், பல உதவி இயக்குநர்கள், பல கண்காணிப்பாளர்கள்  என ஒரு பெரும் அதிகாரிகள் கூட்டமே அங்கு இருக்கிறது. இவர்களுக்கும் மக்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் கிடையாது !

மாநில அளவில் பெரிய அதிகாரிகள் கூட்டத்துடன் இயங்கி வரும் இயக்குநரகம் எனப்படும் இயக்ககத்திற்குத் துணையாக மண்டல அளவில்  (REGIONAL LEVEL) ஒரு இணை இயக்குநர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களுடன் மண்டல அலுவலகங்கள் (REGIONAL OFFICES) இயங்கி வருகின்றன. இத்தகைய மண்டல அலுவலகங்களின் எண்ணிக்கை, துறையைப் பொறுத்து ஐந்திலிருந்து, பத்து வரை அமைகின்றன. இந்த மண்டல அலுவலகங்களுக்கும், மக்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் கிடையாது !

வருவாய்த் துறையைப் பொறுத்த வரை மாநில அளவில் இயக்குநர் அலுவலகம் என்று ஒன்று கிடையாது. ஆனால் மண்டல அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என்ற அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கி வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மக்களுக்கும் பெரும்பாலும் நேரடித் தொடர்பு கிடையாது !

இப்படி ஒவ்வொரு துறையிலும், மக்களுடன் தொடர்பே இல்லாத வகையில் ஒரு பெரிய அதிகாரிகள் கூட்டம் பணியில் இருந்து வருகிறது. அரசின் வரி வருவாயின் பெரும் பகுதி இந்த வெள்ளை யானைகளுக்காகவே செலவாகிப் போகிறது !

மக்களுடன் நேரடித் தொடர்பு உள்ள நிலையில், துறை வாரியாக மாவட்ட அளவில், கோட்ட அளவில், வட்ட அளவில் பல அலுவகங்கள் செயல்படுகின்றன ! ஊராண்மை அலுவலகம் (V.A.O.OFFICE), ஊராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் போன்றவை அவற்றுள் மிக முதன்மையானவை !

வட்ட வழங்கல் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க அலுவலகம், பள்ளி ஆய்வாளர் அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், காவல் ஆய்வாளர் அலுவலகம், எனப் பல துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன ! தடுக்கி விழுந்தால், ஏதாவது ஒரு அரசு அலுவலகத்தின் மீது தான் விழ வேண்டி இருக்கும் என்ற அளவில் இவை மிகுதியான எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன !

இத்தகைய வட்டார அலுவலகங்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்  என்ற கருத்தில்தான் இவை உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன ! ஆனால், இத்தகைய அலுவலகங்களும் மக்களிடமிருந்து விலகியே நிற்கின்றன ! இந்த அலுவலகங்களிலிருந்து எந்த அலுவலரும் மக்களை நோக்கிச் செல்வதில்லை; மாறாக மக்கள் தான் இந்த அலுவலகங்களை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது !

வேணாண் துறை அலுவலர்கள், ஊர் ஊராகச் சென்று, வேளாண் நிலங்களை பார்வையிட்டு, வேளாண் பெருமக்களுக்குத் தக்க கருத்துரைகளைச் சொல்ல வேண்டும்; ஆனால் அவர்கள் தம் செயல்பாடுகளைத் தங்கள் அலுவலக அளவிலேயே சுருக்கிக் கொண்டுச் செயல்படுகிறார்கள் !

நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், அன்றாடம் சாலைகளைப் பார்வையிட வேண்டும். பழுதான சாலைகளைச் செப்பனிடச் செய்ய வேண்டும். சாலையில் வலிப்பற்று (ஆக்கிரமிப்பு) இருந்தால் உடனடியாக அதை நீக்க வேண்டும். ஆனால் ஆண்டு முழுதும் வாளாவிருந்து விட்டு, ஒரு நாள் தும்பியூர்தியைக் (BOKLINE) கொண்டு கடைகளின் முன் மறைப்புகளையும், கட்டுமானங்களையும் இடித்துத் தள்ளுகின்றனர். 300 நாள் தூங்குவதும் 5 நாள் விழிப்பதும் தான் இவர்கள் வேலை போலும் ! நகராட்சி, மாநகராட்சி அலுவலர்களும் இதைத் தான் கடைப் பிடிக்கின்றனர் ! ஒவ்வொரு அரசுத் துறையிலும் இது தான் நடக்கிறது !

மக்களைத் தேடிப் போக வேண்டிய அதிகாரிகள், மாநகராட்சி, நகராட்சி, வட்டார அலுவலகங்களில் ஓடும் மின் விசிறிகளின் கீழ் மிசை நாற்காலிகளைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ! மக்கள் இந்த அலுவலகங்களின் வாயிலில் தங்கள் வேலை வெட்டிகளை மறந்து விட்டு நாள்தோறும் காத்துக் கிடந்து நொந்து போகிறார்கள்  !

மக்கள் தரும் வரிப்பணத்தில், 75 % அளவுக்குத் தமது சம்பளம், வழிச் செலவுப் படி, வீட்டு வாடகைப் படி என்று பல வகைகளில் தாமே எடுத்துக் கொள்ளும் இந்த அதிகாரிகள் பட்டாளம் மக்கள் சேவையை மறந்து வழிதவறிப் போய்க் கொண்டிருக்கிறது ! இது தான் மக்களாட்சியின் கோட்பாடு போலும் ! இதற்காகத்தான் நம் முன்னோர்கள் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்கள் போலும் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.;2050,நளி (கார்த்திகை) 07]
{23-11-2019}

-------------------------------------------------------------------------------------------------------
                  தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில்  வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் மனமே (54) வினாக்குறியும் வியப்புக் குறியும் !

என்ன ?  ஏன் ?  எப்படி ?  எதற்கு ?  எங்கே ?  எவ்வாறு ? 


மரத்திலிருந்து ஒரு அரத்திப் பழம் (Apple Fruit) தரையில் விழுவதைப் பார்த்தார் நியூட்டன். அவர் உள்ளத்தில்  ஒரு வினா எழுந்தது. இந்தப் பழம் மரத்திலிருந்து விடுபட்டு விண்ணை நோக்கிச் செல்லாமல், மண்ணை நோக்கி வந்தது ஏன் ? இந்த வினா அவரைச்  சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவு தான் புவி ஈர்ப்பு விசைக் கண்டு பிடிப்பு !

என்ன ?, ஏன் ?, எப்படி ?, எதற்கு ?, எங்கே ? எவ்வாறு ? என்னும் வினாக்கள் தான் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன ! இத்தகைய சிந்தனைகளின் விளைவு தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் ! கணினி (Computer), கணிகை (Calculator), காசுப் பொறி (A.T.M) எழினி (Mobile Phone), எறிபடை (Weapon) ஏவுகணை (Rocket) எல்லாமே வினாக்களால் விளைந்த வெளிப்பாடு தான் !

வினாக்களால் தூண்டப்பெற்றுச் சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் அறிவாளிகள் ஆகிறார்கள்; தொழிற்கூடங்களை அமைக்கிறார்கள்; வணிக நிறுவனங்களை உருவாக்குகிறார்கள்;  ஆதாயம் தரும் துறைகளில் முதலீடுகள் செய்கிறார்கள் ! வாழ்க்கையில்  உயர உயரப் போகிறார்கள்; வாழ்வின் உச்சத்தை தொடுகிறார்கள் ! சிந்தனைக்கு இடம் தராமல் அனைத்தையும் வியப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய் பிளந்து நிற்கும் ஏனைய மாந்தர்கள், முட்டாள்களாக உலா வருகிறர்கள் ! இறுதியில் முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் முடங்கிப் போகிறார்கள் !

நம் நாட்டில் இரண்டாவது நிகழ்வு தான் நடந்து கொண்டிருக்கிறது ! படிப்பறிவு உள்ள மனிதனைக் கூட அவனது புறச் சூழல்கள் திசைதிருப்பி விட்டு விடுகின்றன ! நம் வாழ்க்கை வளம்  (Life Style) இன்னும் உயர்வடைய என்ன செய்யலாம் என்று சிந்திக்கின்ற நேரத்தைவிட, வெட்டிப் பொழுது போக்கும் நேரம் தான் ஒவ்வொரு மனிதனையும் புதைமணலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது !

ஆக்கச்சார்பாகச் சிந்திக்க விடாத தொலைக் காட்சிகள், நம் நாட்டிற்குத் தேவையேயில்லை; குமுகாய நாடகங்கள் என்ற பெயரில் கொலை, கொள்ளை, பழிவாங்கல் ஆகியவற்றைக் காட்சிபடுத்தும் இந்த மின்ம ஊடக நிறுவனங்களை  முற்றிலுமாக முடக்கிப் போட வேண்டும் !

இல்லத் தலைவியர், தம் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில் தொடர் நாடகக் காட்சிகளைத் தூண்டிலாக்கி தொலைக்காட்சிப் பேழைகள் முன்பு அவர்களைக் கட்டிப் போடும் அவலம் இந்த நாட்டில் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது ! தாய்மார்களைச் சிந்திக்க விடாமல் முட்டாள்களாக்கி .வியப்புடன்  நிகழ்ச்சிகளைப் பார்க்கச் செய்யும் இத்தகைய மூளைச் சலவைக்கு நம்மை ஆளும் அரசுகளும் துணை போகின்றன !

நூறாயிரக் கணக்கான (இலட்சக் கணக்கான) மக்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் இன்னொரு கவறாட்டம் (சூதாட்டம்) தான், மடலாட்டம் (CRICKET MATCHES). மடலாட்ட நிகழ்ச்சிகளை  ஏற்பாடு செய்யும் சீமான்களையும், புனையப்பட்ட பொய்களை விளம்பரமாக்கி மக்கள் மனதை மயக்கும் வணிக நிறுவனங்களையும், நாட்டுக்காக விளையாடுவதாகப் பசப்புக் காட்டித் தனக்காக விளையாடும் ஆடகர்களையும் (PLAYERS) பலகோடிச் செல்வர்களாக உயர்த்துவதற்கு, நடத்தப் பெறும் சூதாட்டமே மடலாட்டம் (CRICKET MATCH) !

பணம் படைத்தவர்களின் இந்தப் பகடை ஆட்டத்தில் பலிகடா ஆக்கப்படுபவர்கள், ஆயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து  நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு விளையாட்டுத் திடலில், “ஆகா ! என்னமாய் விளையாடுகிறான் பார்என்று வியப்புடன் கூவிக் கூச்சலிடும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களே ! மக்களை முட்டாளாக்கும் இந்த மதிமயக்குச் செயலுக்குத் தான் நாட்டில் எத்துணை வரவேற்பு !

திரைக்குப் பின்னால் இருப்பவர்களைப் பலகோடிச் செல்வர்களாக (Multi-milliner)  உயர்த்திடத் திரைக்கு முன்னால் இருப்பவர்களை முட்டாளாக்கி ஏமாற்றிப் பணம் பறிக்கும் இன்னொரு சூதாட்டம் திரைப்படம் !

ஒல்லிக் குச்சி நடிகனெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஐம்பது பேரை அடித்து உதைத்து வெற்றி வீரனாக உலா வருவது போலக் காண்பித்து, எல்லோரையும் ஏமாற்றி வருவதை, வாய் பிளந்து வியப்புடன் பார்த்து மகிழும் மக்கள் இருக்கும் வரை, அரசியலுக்கு வந்து உங்களது அவலங்களைத் துடைக்கப் போகிறேன் என்று  பொய்மூட்டைகளை அவிழ்த்து  விடும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை !

திரைப்படங்களையும் அவற்றை உருவாக்கும் திரைப்படத் துறையையும் முற்றிலுமாக முடமாக்க வேண்டும்; இல்லையேல் அறிவாளிகள் எல்லாம் முட்டாள்கள் ஆகும் நாள் விரைவாக வந்தே தீரும் !

நேர்மையற்ற அரசியல் ஈர்ப்புகள் மக்களை மடிமைப் படுத்தி, மடமையில் மூழ்க வைக்கும் இன்னொரு புறத் தூண்டல் ஆகும் ! அரசியல் ஆளிநர் எல்லாம் கொள்ளைக் காரர்களாக மாறிக் கொண்டிருக்கும் இற்றை நாளில் மக்களை மூளைச் சலவை செய்ய ஏதோதோ உளறுகிறார்கள் !

இந்த உளறல்களை எல்லாம் உண்மை என நம்பி மனதைப் பறிகொடுத்து, வெறிமையில் வீழ்ந்து வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞர்களோ ஏராளம் ! ஏராளம் ! இளைய குமுகாயத்தை சிந்திக்க விடாமற் செய்து, முட்டாளாக்கிக் கட்சி வளர்க்கும் இந்த முறைமையை முதுகெலும்பு ஒடித்துப் போட்டாலன்றி நம் நாடு முன்னேறப் போவதில்லை !


இன்னும் எத்துணையோ  காரணிகள் ஈங்கு உள்ளன மனிதனைச் சிந்திக்க விடாமற் செய்ய ! விளக்கிட இடம் போதா !

நண்பர்களே ! சிந்தியுங்கள் ! சிந்தித்துச் செயல்பட்டால் உங்கள் வாழ்க்கை வளமடையும் ! வினாக்குறிகள் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்; வியப்புக் குறிகள் உங்களை வீழ்த்திவிடும் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050; நளி (கார்த்திகை),11]
{27-11-2019}

---------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப்பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

வரலாறு பேசுகிறது (05) நாவலர் சோமசுந்தர பாரதியார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !

நாவலர் சோமசுந்தர பாரதியார் !


தோற்றம்:

நாவலர் சோமசுந்தர  பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1879 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 27 –ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் எட்டயப்ப பிள்ளை.  தாயார் முத்தம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். சோமசுந்தரன் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார் !

பாரதியுடன் நட்பு:

எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த இளம் அகவை சுப்பிரமணியனுக்கு (பிற்காலத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதியார் எனப் போற்றப் பெற்றவர்) சோமசுந்தரன் நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்கள் புனைவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர் !


:
பாரதிஅடைமொழி:

யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லைக்கு ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த ஒரு புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்து பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரனும், சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்தவை எனத் தெரிவு செய்த அப்புலவர், இருவருக்கும்பாரதிஎன்னும் பட்டத்தை வழங்கிப் பாராட்டினார் !

கல்வி:

சோமசுந்தர பாரதி தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும், இடைநிலைக் கல்வியை நெல்லையிலும் மேற்கொண்டார். அடுத்து சென்னை சென்று கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து கலையியல் வாலை (B.A.) பட்டமும், 1905 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டவியல் வாலை (B.L) பட்டமும் பெற்றார். வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டு தூத்துக்குடியில் பணியாற்றினார். அப்போது, இந்தியாவில் நாட்டு விடுதலைப் போராட்டம் எழுச்சி பெறத் தொடங்கி இருந்தது !

விடுதலைப் போராட்டம்:

தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. சோமசுந்தர பாரதியும் விடுதலைப் போராட்ட  நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால், சோமசுந்தர பாரதியின் குடும்பம் 1905 -ஆம் ஆண்டு முதல் 1919 -ஆம் ஆண்டு வரை வெள்ளையர் அரசினரின் மறைமுகக் கண்காணிப்பில் இருந்து வந்தது !

..சி.யுடன் தொடர்பு:

..சிதம்பரனார் தொடங்கிய கப்பல் நிறுவனத்தில், சிதம்பரனாரின் அழைப்பை ஏற்று, சோமசுந்தர பாரதியார், செயலாளராகப் பொறுப்பு  வகித்துச் செயலாற்றி வந்தார்.   தமிழ்நாடு  மாநிலக் காங்கிரசு மாநாட்டினை   மதுரையில்  கூட்டி, அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். தமது அரசியல் பணிகளுக்கு இடையேயும், தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு செலுத்தி, தனியாகத் தானே பயின்று 1913 –ஆம் ஆண்டு கலையியல் மேதை (M.A.) பட்டமும் பெற்றார் !

திருமணம்:

தனது 15 –ஆவது அகவையில் மீனாட்சி என்னும் மங்கையை மணம் புரிந்து கொண்டார். இவ்விணையருக்கு இராசாராம் பாரதி, இலக்குமிரதன் பாரதி, இலக்குமி பாரதி என்னும் ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தன. பின்பு தனது 48 –ஆவது அகவையில் வசுமதி என்னும் மங்கையை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த அம்மையார் வழியாக மீனாட்சி, லலிதா ஆகிய இரு மகள்கள் பிறந்தனர் !

லலிதா என்னும் பெண் குழந்தைதான், பிற்காலத்தில் மருத்துவராகி, காமேசுவரன் என்பவரை மணந்ததுடன், லலிதா காமேசுவரன் என்னும் பெயருடன் தமிழ்நாடு மருத்துப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பதவி வகித்து புகழ்பெற்ற மருத்துவராகவும் இலங்கியது !

வழக்குரைஞர் பணி:

சோமசுந்தர பாரதியார் 1905 –ஆம்  ஆண்டுமுதல் 1920 -ஆம் ஆண்டுவரைத் தூத்துக் குடியில் வழக்குரைஞராகப் பணிமேற்கொண்டார். பின்பு 1920 -ஆம் ஆண்டு  தொடங்கி 1933 –ஆம் ஆண்டு வரை சங்கம் வளர்த்த மாமதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார் !

பல்கலைக் கழகப் பணி:

பின்னர் இவரது பணிப்புலம் திசை மாறியது. இவர் தமிழில் கலையியல் மேதை (M.A.) பட்டம் பெற்றிருந்தமையால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933 –ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, ஐந்து ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலவராகப் பணியாற்றி,  1938, ஏப்ரல் மாததில் ஓய்வு பெற்றார் !

இந்தி எதிர்ப்பு:

தமிழ்நாட்டில் 1937 –ஆம் ஆண்டு இராசாசி முதல்வராகப் பொறுப்பு ஏற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 –ஆம் வகுப்புகளில்  இந்தி மொழி கட்டாயப் பாடம்  ஆக்கப்பட்டது.  இதை எதிர்த்து, சோமசுந்தர பாரதியார்,  இந்தி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார். 1937 –ஆம் ஆண்டு செப்டம்பர் 5 -ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார் !

மதுரைத் தமிழ்ச் சங்கப்பணி:

இளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக 1932 – 33 –ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார் !

நூல்கள் வெளியீடு:

தசரதன் குறையும் கைகேயி நிறையும் (தமிழ், ஆங்கிலம்); திருவள்ளுவர் (தமிழ், ஆங்கிலம்); சேரர் தாயமுறை (தமிழ் , ஆங்கிலம்); தமிழும் தமிழரும்; சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம்); அழகு; பழந்தமிழ் நாடு; நற்றமிழ்; TAMIL CLASSICS AND TAMILAKAM போன்ற பல நூல்களை சோமசுந்தர பாரதியார் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவையன்றி மாரிவாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி ஆகிய இரு கவிதை நூல்களும் இவரது படைப்புகளே !

பெரியாருடன் தொடர்பு:

இந்தி கட்டாயமா” ?; ”நான் கண்ட சுப்பிரமணிய பாரதிஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் ! பெரியாரின் தன்மான இயக்கத்தோடு ஈடுபாடு கொண்டு சடங்குகள் நீக்கிய திருமணம் பற்றிய பரப்புரைகளை மேற்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார் !

நாவலர்பட்டம்:

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம்நாவலர்என்னும் பட்டத்தை அளித்து சோமசுந்தர பாரதியாரைப் பெருமைப்படுத்தியது !

மறைவு:

இவ்வாறு பன்முகத் தன்மை கொண்ட சோமசுந்தர பாரதியார் 1959 –ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 14 –ஆம் நாள், தமது 80 –ஆவது அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார் ! தமிழ், தமிழன், தமிழகம் என்று தமது வாழ்நாள் முழுவதும் உழைத்த இம் மாமனிதரின் நினைவைப் போற்றும் வகையில் நாம் என்ன செய்யப் போகிறோம் ?

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,நளி (கார்த்திகை) 26]
{12-12-2019}

------------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------