name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வரலாறு பேசுகிறது (05) நாவலர் சோமசுந்தர பாரதியார் !

வியாழன், டிசம்பர் 12, 2019

வரலாறு பேசுகிறது (05) நாவலர் சோமசுந்தர பாரதியார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !

நாவலர் சோமசுந்தர பாரதியார் !


தோற்றம்:

நாவலர் சோமசுந்தர  பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1879 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 27 –ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் எட்டயப்ப பிள்ளை.  தாயார் முத்தம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். சோமசுந்தரன் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார் !

பாரதியுடன் நட்பு:

எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த இளம் அகவை சுப்பிரமணியனுக்கு (பிற்காலத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதியார் எனப் போற்றப் பெற்றவர்) சோமசுந்தரன் நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்கள் புனைவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர் !


:
பாரதிஅடைமொழி:

யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லைக்கு ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த ஒரு புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்து பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரனும், சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்தவை எனத் தெரிவு செய்த அப்புலவர், இருவருக்கும்பாரதிஎன்னும் பட்டத்தை வழங்கிப் பாராட்டினார் !

கல்வி:

சோமசுந்தர பாரதி தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும், இடைநிலைக் கல்வியை நெல்லையிலும் மேற்கொண்டார். அடுத்து சென்னை சென்று கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து கலையியல் வாலை (B.A.) பட்டமும், 1905 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டவியல் வாலை (B.L) பட்டமும் பெற்றார். வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டு தூத்துக்குடியில் பணியாற்றினார். அப்போது, இந்தியாவில் நாட்டு விடுதலைப் போராட்டம் எழுச்சி பெறத் தொடங்கி இருந்தது !

விடுதலைப் போராட்டம்:

தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. சோமசுந்தர பாரதியும் விடுதலைப் போராட்ட  நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால், சோமசுந்தர பாரதியின் குடும்பம் 1905 -ஆம் ஆண்டு முதல் 1919 -ஆம் ஆண்டு வரை வெள்ளையர் அரசினரின் மறைமுகக் கண்காணிப்பில் இருந்து வந்தது !

..சி.யுடன் தொடர்பு:

..சிதம்பரனார் தொடங்கிய கப்பல் நிறுவனத்தில், சிதம்பரனாரின் அழைப்பை ஏற்று, சோமசுந்தர பாரதியார், செயலாளராகப் பொறுப்பு  வகித்துச் செயலாற்றி வந்தார்.   தமிழ்நாடு  மாநிலக் காங்கிரசு மாநாட்டினை   மதுரையில்  கூட்டி, அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். தமது அரசியல் பணிகளுக்கு இடையேயும், தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு செலுத்தி, தனியாகத் தானே பயின்று 1913 –ஆம் ஆண்டு கலையியல் மேதை (M.A.) பட்டமும் பெற்றார் !

திருமணம்:

தனது 15 –ஆவது அகவையில் மீனாட்சி என்னும் மங்கையை மணம் புரிந்து கொண்டார். இவ்விணையருக்கு இராசாராம் பாரதி, இலக்குமிரதன் பாரதி, இலக்குமி பாரதி என்னும் ஆகிய மூன்று குழந்தைகள் பிறந்தன. பின்பு தனது 48 –ஆவது அகவையில் வசுமதி என்னும் மங்கையை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த அம்மையார் வழியாக மீனாட்சி, லலிதா ஆகிய இரு மகள்கள் பிறந்தனர் !

லலிதா என்னும் பெண் குழந்தைதான், பிற்காலத்தில் மருத்துவராகி, காமேசுவரன் என்பவரை மணந்ததுடன், லலிதா காமேசுவரன் என்னும் பெயருடன் தமிழ்நாடு மருத்துப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பதவி வகித்து புகழ்பெற்ற மருத்துவராகவும் இலங்கியது !

வழக்குரைஞர் பணி:

சோமசுந்தர பாரதியார் 1905 –ஆம்  ஆண்டுமுதல் 1920 -ஆம் ஆண்டுவரைத் தூத்துக் குடியில் வழக்குரைஞராகப் பணிமேற்கொண்டார். பின்பு 1920 -ஆம் ஆண்டு  தொடங்கி 1933 –ஆம் ஆண்டு வரை சங்கம் வளர்த்த மாமதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார் !

பல்கலைக் கழகப் பணி:

பின்னர் இவரது பணிப்புலம் திசை மாறியது. இவர் தமிழில் கலையியல் மேதை (M.A.) பட்டம் பெற்றிருந்தமையால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933 –ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, ஐந்து ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலவராகப் பணியாற்றி,  1938, ஏப்ரல் மாததில் ஓய்வு பெற்றார் !

இந்தி எதிர்ப்பு:

தமிழ்நாட்டில் 1937 –ஆம் ஆண்டு இராசாசி முதல்வராகப் பொறுப்பு ஏற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 –ஆம் வகுப்புகளில்  இந்தி மொழி கட்டாயப் பாடம்  ஆக்கப்பட்டது.  இதை எதிர்த்து, சோமசுந்தர பாரதியார்,  இந்தி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார். 1937 –ஆம் ஆண்டு செப்டம்பர் 5 -ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார் !

மதுரைத் தமிழ்ச் சங்கப்பணி:

இளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக 1932 – 33 –ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார் !

நூல்கள் வெளியீடு:

தசரதன் குறையும் கைகேயி நிறையும் (தமிழ், ஆங்கிலம்); திருவள்ளுவர் (தமிழ், ஆங்கிலம்); சேரர் தாயமுறை (தமிழ் , ஆங்கிலம்); தமிழும் தமிழரும்; சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம்); அழகு; பழந்தமிழ் நாடு; நற்றமிழ்; TAMIL CLASSICS AND TAMILAKAM போன்ற பல நூல்களை சோமசுந்தர பாரதியார் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவையன்றி மாரிவாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி ஆகிய இரு கவிதை நூல்களும் இவரது படைப்புகளே !

பெரியாருடன் தொடர்பு:

இந்தி கட்டாயமா” ?; ”நான் கண்ட சுப்பிரமணிய பாரதிஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் ! பெரியாரின் தன்மான இயக்கத்தோடு ஈடுபாடு கொண்டு சடங்குகள் நீக்கிய திருமணம் பற்றிய பரப்புரைகளை மேற்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார் !

நாவலர்பட்டம்:

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம்நாவலர்என்னும் பட்டத்தை அளித்து சோமசுந்தர பாரதியாரைப் பெருமைப்படுத்தியது !

மறைவு:

இவ்வாறு பன்முகத் தன்மை கொண்ட சோமசுந்தர பாரதியார் 1959 –ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 14 –ஆம் நாள், தமது 80 –ஆவது அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார் ! தமிழ், தமிழன், தமிழகம் என்று தமது வாழ்நாள் முழுவதும் உழைத்த இம் மாமனிதரின் நினைவைப் போற்றும் வகையில் நாம் என்ன செய்யப் போகிறோம் ?

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,நளி (கார்த்திகை) 26]
{12-12-2019}

------------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .