name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 09/17/19

செவ்வாய், செப்டம்பர் 17, 2019

புதிய தமிழ்ச் சொல் (52) உமிழி ( PUMP )


உமிழி - PUMP
----------------------------------------------------------------------------------------------------------

ஊர்ப்புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் மக்கள் தங்கள் நீர்த் தேவைக்கு ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளை (BORE WELL) அமைத்து கொள்வதைக் காண்கிறோம். இந்த குழாய்க் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியே எடுப்பதற்குச் சில “பம்பு” களை (PUMPS) தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத் தேர்வு செய்து பொருத்துகிறார்கள் !


நீருக்குள் அமிழ்ந்து நின்று, நீரை உறிஞ்சி மேலே கொண்டு வரும் ”சப்மெர்சிபிள் பம்பு” (SUBMERSIBLE PUMP) , நீருக்குள் மூழ்கி இருக்கும் ஒரு குழாயின் கீழ்முனைக்கு, வேறொரு குழாய் வழியாகக் காற்றை அழுத்தத்துடன் அனுப்பி, அந்தக் காற்றின் அழுத்தத்தினால் நீரை மேலே தள்ளிக் கொண்டு வந்து கொட்டும் “ஜெட் பம்பு” (JET PUMP) , ஆகியவை ஆழ்குழாய்க் கிணறுகளில் பயன்பாட்டில் உள்ளன !


ஆற்று நீர் அல்லது குளத்து நீரை மைய விலக்கு விசை (CENTRIFUGAL FORCE) மூலம் உறிஞ்சி வெளியே கொட்டும் “செண்ட்ரிபியூகல் பம்பு” (CENTRIFUGAL PUMP) அதிக உயரத்திற்கு நீரைக் கொண்டு செல்லத் தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன !


1956 –ஆம் ஆண்டு தமிழக அரசு, தமிழை ஆட்சி மொழியாக அறிவித்துச் சட்டம் இயற்றியது. அதன்பின் 63 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் பிறமொழிச் சொற்களே தமிநாட்டில் இன்னும் கோலோச்சுகின்றன. அரசு அலுவலகங்களிலும், செய்தித் தாள்களிலும், மின்ம ஊடகங்களிலும் “பம்பு” என்னும் சொல்லையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர் !


”பம்பு” (PUMP) என்பதைச் சிலர் “குழாய் ஏற்றம்” என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். வேறு சிலர் “விசைக் குழாய்” என்று தமிழாக்கம் செய்கிறார்கள். இவை இரண்டும் இருசொற் பெயராக உள்ளன. வடிவிலும் பெரியதாக உள்ளன. ஒரே சொல்லில் குறுகிய வடிவம் உடையதாக ஒரு பெயரை உருவாக்க முடியுமா என்பதைச் சற்று ஆய்வு செய்வோம் !


ஒரு நீர் இறைக்கும் “பம்பு” எப்படி வேலை செய்கிறது ? தண்ணீர் நிரம்பியுள்ள கிணறு, குட்டை, குளம் அல்லது ஏரியிலிருந்து ”பம்பு”டன் பொருத்தியுள்ள நெளிகுழாய் (HOSE PIPE) ”பம்பு”வின் விசையால் நீரினை உள்ளிழுத்து ”பம்பு”க்குள் அனுப்புகிறது. “பம்பு” அதனை வேறொரு குழாய் வழியாக வெளியே உமிழ்கிறது !


ஊர்திகளின் ஆழித் தூம்புகளில் (TUBES) காற்றினை ஏற்றும் “பம்பு”களும் இதே முறையில்தான் இயங்குகின்றன. வெளியில் உள்ள காற்றை உறிஞ்சி ஆழித் தூம்பினுள் உமிழ்கிறது !


நீர் இறைக்கும் ”பம்பு”வாக இருந்தாலும் சரி, காற்று ஏற்றும் “பம்பு”வாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கலனுக்குள் இருக்கும் காற்றினை உறிஞ்சி வெளியே துப்பும் “வேக்குவம் பம்பு”வாக இருந்தாலும் சரி, அவற்றினுடைய இயக்க முறை ஒரே தன்மையதே !


இவ்வாறு உறிஞ்சி உமிழும் “பம்பு”வை “உமிழி” என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் அல்லவா ? “உமிழி” என்ற சொல் வடிவில் சிறியது; ஒலி நயம் உடையது; காரணப் பெயராகவும் அமைகிறது. எனவே, இனி நாம் “பம்பு” என்று சொல்லாமல் “உமிழி” என்றே சொல்வோமே !


“உமிழி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் வேறு சில சொற்களையும் தமிழாக்கம் செய்வோமே !


============================================================


PUMP....................................................= உமிழி

PUMP SET............................................= உமிழிக் கணம்

SUBMERSIBLE PUMP.........................= நீர்மூழ்கி உமிழி

JET PUMP............................................= வளிவிசை உமிழி

F.H.P.MOTOR PUMP.............................= சிறு திறன் உமிழி

PUMPING STATION..............................= நீரேற்று நிலையம்

VACUUM PUMP....................................= வெட்புல உமிழி

PETROL PUMP......................................= கன்னெய் உமிழி


DIESEL PUMP........................................= தீயல் உமிழி

BI-CYCLE PUMP....................................= ஈருருளி உமிழி

HAND PUMP..........................................= கையியக்க உமிழி

FUEL PUMP............................................= எரிபொருள் உமிழி

CENTRIFUGAL PUMP............................= மையவிலக்கு உமிழி


---------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ;2050,மடங்கல் (ஆவணி),26]

{12-09-2019}


---------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------



உமிழி




உமிழி


புதிய தமிழ்ச் சொல் (51) துளிப் பொறி ( SPRAYER ); தூளிப் பொறி ( DUSTER )


புதுச் சொல் புனைவோம் !

SPRAYER -துளிப்பொறி

DUSTER - தூளிப்பொறி

-------------------------------------------------------------------------------------------------------

 

பயிர்களுக்குப் பூச்சி மருந்து அடிப்பதைப் பார்த்திருக்கிறோம். பூச்சி மருந்தைத் தண்ணீரில் கலந்து “ஸ்பிரேயர்” (SPRAYER) என்னும் கருவி மூலம் பயிர்கள் மீது தெளிக்கிறார்கள் !

 

இந்த “ஸ்பிரேயர்” என்பது,  ஒரு கொள்கலன் (CONTAINER), கொள்கலனுக்குள் காற்றினால் அழுத்தம் ஏற்படுத்த ஒரு விசையமைப்பு, கொள்கலனிலிருந்து மருந்து நீரை வெளியேற்ற உதவும் நீண்ட மெல்லிய பித்தளைக்குழாய், அதன் முனையில் நுண்ணிய துளைகள் உள்ள ஒரு குருகு மூக்கு (NOZZLE), ஆகியவையுடன் கூடிய அமைப்பு !

 

கொள்கலனுக்குள் மருந்து கலந்த நீரை நிரப்பி, கையியக்க அல்லது காலியக்க விசையினால் காற்றை கொள்கலனுக்குள் ஏற்றி அழுத்ததை ஏற்படுத்துகிறார்கள். அடைப்பு விசையைக் கையினால் திறந்தவுடன், மருந்து நீர், பித்தளைக் குழாய் வழியாக, மிகுந்த அழுத்ததுடன் குருகு மூக்கின் நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறி பல மெல்லிய துளிகளாகச் சிதறிக் காற்றில் கலந்து பயிர்களின் மீது படிகிறது !

 

மருந்து கலந்த நீரை மெல்லிய துளிகளாகப் பகுத்து, பயிர்களின் மீது தூவுவதால், இப்பொறியினை “துளிப் பொறி” என்று அழைக்கலாம் !

 

இக்கருவியைத் “தெளிப்பான்” என்று சொல்கிறார்கள்; இது தவறு.  ‘ஆன்’ விகுதி  உயர்திணை ஆண்பாலுக்கு  உரித்தானது  என்பதால், அஃறிணைப் பொருளாகிய இக்கருவிக்கு ”ஆன்’ விகுதி சேர்த்து “தெளிப்பான் எனப்பெயரைச் சூட்டுதலும் அழைத்தலும்  சற்றும் பொருத்தமாக இல்லை !

 

எனவே “ஸ்பிரேயர்” (SPRAYER) என்று ஆங்கிலத்திலும் “தெளிப்பான்” என்று தமிழிலும் அழைக்கப்படும் இக் கருவியை இனி “துளிப்பொறி” என்று அழைப்போம் !

 

நீர்ம வடிவில் (LIQUID STATE) இருக்கும் மருந்தினைத் தெளிக்க “துளிப்பொறி” பயன்படுவது போல், தூளி (பொடி)   வடிவில் (POWDER STATE) இருக்கும் பூச்சி மருந்தினைத் தெளிக்க இப்போது “டஸ்டர்” (DUSTER) என்னும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். இக்கருவியில் எரிபொருளாக (FUEL) கன்னெய் (PETROL) சிறிது நிரப்பப்பட்டு, சிறிய உந்து (MOTOR) ஒன்று இயக்கப் படுகிறது ! 

 

அந்த உந்தின் (MOTOR) இயக்க விசையால், கொள்கலனுக்குள் நிரப்பப்பட்டுள்ள பூச்சி மருந்துப் பொடி (POWDER) ஒரு நெளிகுழாயுடன்  (HOSE PIPE) இணைந்த  மூக்கு (NOZZLE) வழியாக வெளியேறி காற்றில் படர்ந்து பயிர்களின் மேல் படிகிறது. இதுதான் “டஸ்டர்” இயங்கும் முறை !

 

“தூளி” என்ற சொல் “பொடி”யைக் குறிப்பதாகும். “புழுதி” என்றும் பொருளுண்டு. தூளி பறக்கிறது என்னும் சொல்லாடலைக் கேட்டிருப்பீர்கள். ஆங்கிலத்தில் “பவுடர்” (POWDER) என்று சொல்லப்படுவதைத் தமிழில் “தூளி” என்று மொழியாக்கம் செய்யலாம் !

 

மருந்துப் பொடியை, அதாவது தூளியைத் தெளிக்க உதவும் பொறியைத் “தூளிப் பொறி” என்று அழைக்கலாமே ! இப்போது இதைத் “தூவுவான்” என்று தவறாக அழைக்கிறார்கள் !

 

முன் பத்தியொன்றில் சொல்லியுள்ளவாறு, “தூவுவான்” என்னும் சொல் ”ஆன்” விகுதியுடன் அமைவதால், இச்சொல் உயர்திணை ஆண்பாலுக்கு  உரிய ஒன்றாகும். அஃறிணைப் பொருளாகிய இக்கருவியை “தூவுவான்” என்று அழைப்பது இலக்கண வழுவாகும் !

 

தமிழின் சொல் மரபுக்கு இணக்கமாக இல்லாத ஒன்று. எனவே, “டஸ்டர்” (DUSTER)  என்னும் கருவியை இனி, “தூளிப் பொறி “ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் !

 

தமிழ்  ஆட்சி மொழியாகி 63 ஆண்டுகள் கடந்த பின்பும், ”ஸ்பிரேயர்”, “டஸ்டர்” என்று சொல்வதும் எழுதுவதும் அல்லது “தெளிப்பான்”, “தூவுவான்” என்று இலக்கண வழுவுடைய சொற்களைப் பயன்படுத்துவதும் முறையன்று !

 

”துளிப்பொறி” கொண்டு “மாலத்தியான்” கலவையைப் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். ”தூளிப்பொறி”யைப் பயன்படுத்தி பூச்சி மருந்துப் பொடியைத் தூவ வேண்டும் என்ற குரலை இனி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  கேட்போமாக !

 

“ஸ்பிரேயர்”, & “டஸ்டர்” என்னும் சொற்கள் தொடர்புடைய கலைச் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போமா !

 

=======================================================

 

 

SPRAYER....................................= துளிப்பொறி

HAND SPRAYER.........................= கையியக்கத் துளிப் பொறி

MACHINE SPRAYER..................= விசையியக்கத் துளிப் பொறி

DUSTER......................................= தூளிப் பொறி

SPRAYER & DUSTER................= துளி, தூளிப் பொறி

SPRAY PAINT..............................= ஈர்மத் துளிப்பு

SPRAY GUN................................= துளிப்புக் குருகு

 

 

=============================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),28]

{14-09-2019}

 

========================================================


துளிப்பொறி
தூளிப்பொறி