name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 2019

வியாழன், டிசம்பர் 26, 2019

வரலாறு பேசுகிறது (13) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை !


தோற்றம்:

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 1888 –ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 –ஆம் நாள், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். தந்தை பெயர் வெங்கட்ராமன் பிள்ளை. தாயார் அம்மணியம்மாள் !

தந்தை வெகட்ராமன் பிள்ளை காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். வெங்கட்ராமன்அம்மணியம்மாள் இணையருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு எட்டாவதாகப் பிறந்தவர் இராமலிங்கம். மறவனப்பு (இதிகாசம்), தொன்ம(புராணம்)க் கதைகளையெல்லாம் தன் மகனுக்குச் சொல்லி, அறம் தவறாமல் வாழவேண்டும் என்று இராமலிங்கத்தை வளர்த்தவர் தாயார் !

கல்வி:

இராமலிங்கம் நாமக்கல்லில் உள்ள நம்மாழ்வார் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது, கோயம்புத்தூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் 6 -ஆம் படிவம் வரை (OLD S.S.L.C.)  பயின்றார். தனது கல்லூரிப் படிப்பைத் திருச்சியில் மேற்கொண்டார் !

திருமணம்:

இராமலிங்கம், தனது அத்தை மகள் முத்தம்மாளை 1909 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ! இராமலிங்கம் பிள்ளையின் மனைவி முத்தம்மாள் 1924 -ஆம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, அவரது தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன

ஆசிரியப்பணி:

இராமலிங்கம், சிறிது காலம் ஆசிரியராகப்  பணியாற்றினார். ஆனால் அதில் நிலைத்து நீடிக்க முடியவில்லை. பின்பு வேறு சில பணிகளில் அமர்ந்தார். ஒன்றிலும் நிலைத்து இருக்க முடியவில்லை !

ஓவியக் கலைஞர்:

இயற்கையிலேயே ஓவியக் கலை மீது நாட்டமும் திறமையும் கொண்டிருந்த இராமலிங்கத்திற்கு, இவரது ஆசிரியராக இருந்த எலியட் என்பவர் உதவி செய்து, இவரது படைப்புகளை வெளிக்கொணரச் செய்தார். இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலை போயின ! இவர் வரைந்த ஐந்தாம் சார்சு மன்னரின் ஓவியத்தைப் பாராட்டி, 1912 -ஆம் ஆண்டு மன்னர் குடும்பம் இவருக்குத் தங்கப் பதக்கம் அளித்துப் பெருமைப்படுத்தியது !

கவிஞராக மலர்வு:

இராமலிங்கம் பிள்ளைக்குக் கவிதை எழுதும் ஆற்றல் மிகுதியாக இருந்தது. 1930 -ஆம் ஆண்டு உப்பு அள்ளும் அறப்போருக்காக இவர் எழுதியகத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுஎன்னும் பாடல் இவரைத் தமிழகமெங்கும் அறிமுகப்படுத்திப் புகழ் சேர்த்தது. இவர் எழுதிய பாடல்கள் சங்கு கணேசன் என்பவரின்சுதந்திரச் சங்குஇதழில் தொடர்ந்து வெளிவந்தது !

அரசியல் ஈடுபாடு:

இராமலிங்கம் பிள்ளைக்கு 1906 -ஆம் ஆண்டு முதல் நாட்டு விடுதலையில் வேட்கை பிறந்தது. கரூரில் தனது தமக்கை வீட்டில் தங்கி இருக்கையில் காங்கிரசு இயக்கத்தில் முனைப்பாக ஈடுபடலானார் !

1914 -ஆம் ஆண்டு திருச்சி மாவட்டக் காங்கிரசின் செயலாளராகப் பணிபுரிந்தார். கரூர் வட்டக் காங்கிரசுத் தலைவராகவும் செயலாற்றினார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் நகரக் காங்கிரசின் தலைவராக இருந்தார் !

நூல்கள் வெளியீடு:

தேவகோட்டை சின்ன அண்ணாமலை என்பவரின்  புத்தக வெளியீட்டு நிறுவனம் மூலம் இராமலிங்கனாரின் நூல்கள் பதிப்பிக்கப் பெற்று வெளியாகின. இவரது கவிதைத் தொகுதிகள் நாட்டு விடுதலை வேட்கையில் திளைத்திருந்த பொதுமக்களிடையே நன்கு வரவேற்பைப் பெற்றன !

போராட்டமும் சிறை வாழ்வும்:

நாட்டு விடுதலைப் போராட்டத்தின் விளைவாக 1932 -ஆம் ஆண்டு இராமலிங்கம் பிள்ளைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. 1945 -ஆம் ஆண்டு இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராசர், திரு.வி.., பி.இராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு பாராட்டிப் பெருமைப்படுத்தினர் !

மலைக்கள்ளன் நெடுங்கதை:

இராமலிங்கம் பிள்ளை எழுதிய நெடுங்கதையான மலைக்கள்ளன்,” .கோ.இராமச்சந்திரன் (M.G.R.), பி.பானுமதி நடிப்பில் திரைப்படமாக வெளியாகி இவரைத் தமிழ் நாடெங்கும் அறிந்த ஆளிநராக உயரத்திற்குக் கொண்டு சென்றது !


பன்முகச் செம்மல்:

இராமலிங்கம் பிள்ளை, கவிஞர், எழுத்தாளர், இதழாளர், விடுதலை வீர்ர், குமுகாயச் சீர்திருத்தச் செம்மல் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். ”கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”, ”தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”, ”கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கிலை ஒத்துக்கொள்போன்ற பாடல் வரிகளுக்குச் சொந்தக் காரர் !

படைப்புகள்:

இராமலிங்கம் பிள்ளையின் படைப்புகள் பலப்பல. இசைப் புதினங்கள் - 3., கட்டுரைத் தொகுதிகள் – 12., தன் வரலாறு – 3., புதினங்கள் – 5., இலக்கியத் திறனாய்வு நூல்கள் – 7., கவிதைத் தொகுப்புகள் – 10., சிறு காப்பியங்கள் – 5., மொழிபெயர்ப்புகள் – 4., எனப் பட்டியல் நீள்கிறது !

இவர் எழுதிய நூல்கள் மலைக்கள்ளன் (புதினம்), காணாமாற் போன கல்யாணப் பெண் (புதினம்), பிரார்த்தனை (கவிதை), நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறளும் பரிமேலழகரும், என் கதை (தன் வரலாறு), அவனும் அவளும் (கவிதை), சங்கொலி (கவிதை), மாமன் மகள் (நாடகம்), அரவணை சுந்தரம் (நாடகம்) இன்னும் பல !

அரசவைக் கலைஞர்:

கவிஞரின் நாட்டுப் பற்றையும், தமிழ்ப் புலமையையும் பாராட்டும் வகையில், நாட்டு விடுதலைக்குப் பிறகு, தமிழ்நாடு மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், இருமுறை சட்ட மேலவை உறுப்பினராகவும் அமர்த்தம் செய்து பெருமைப்படுத்தியது !

நினைவாலயம்:

கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னைத் தலைமைச் செயலகத்தின்  பத்து மாடிக் கட்டடத்திற்குநாமக்கல் கவிஞர் மாளிகைஎனப்  பெயர் சூட்டி  அவரைப் பெருமைப் படுத்தினார் ! நாமக்கல் நகரில், உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு கவிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது !

மறைவு:

பல பெருமைகளுக்குச் சொந்தக் காரரான நாமக்கல் கவிஞர் 1972 ஆம்  ஆண்டு, ஆகத்து 24 ஆம் நாள், தமது 84 ஆம் அகவையில்  தான் பற்றுக் கொண்டிருந்த தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் மீளாத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்து போனார் !

முடிவுரை:

தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா !” என்னும் எழுச்சிப் பாடலை நமக்களித்த வண்ணப்பறவை வானில் பறந்து எங்கோ மறைந்து போயிற்று !. அவர் விதைத்த வரிகள் இன்னும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன; ஆனால் நாம் எப்போது தலைநிமிர்ந்து நிற்கப் போகிறோம் என்பதுதான் தெரியவில்லை ?


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, சிலை (மார்கழி) 10]
{26-12-2019}


-----------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை ! 

-----------------------------------------------------------------------------------------------------------செவ்வாய், டிசம்பர் 24, 2019

வரலாறு பேசுகிறது (12) பன்மொழிப் புலவர், கா.அப்பதுரையார் !

மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !


பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் !


தோற்றம்:

தமிழக மக்களால் பன்மொழிப் புலவர் என்று அன்புடன் போற்றப் பெறும் கா. அப்பாதுரையார் 1907 –ஆம் ஆண்டு சூன் மாதம் 24 –ஆம் நாள் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார்.  தந்தை பெயர் காசிநாத பிள்ளை. தாயார் முத்துலட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர்நல்லசிவம்” !

கல்வி:

தொடக்கக் கல்வியை ஆரல்வாய்மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர் கோயிலிலும், கல்லூரிக் கல்வியைத் திருவனந்தபுரத்திலும் பயின்ற அப்பாதுரை ஆங்கில இலக்கியத்தில் கலையியல் மேதை (M.A.) பட்டம் பெற்றார். இந்தி மொழியில்விசாரத்தேர்ச்சி அடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் கலையியல் மேதை (M.A.) பட்டதாரி ஆனார் ! சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயிற்றுவிப்பு உரிமைப் (L.T.) பட்டம் பெற்றார் !

திருமணம்:

திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் 1937 –ஆம் ஆண்டு சேர்ந்து ஈராண்டுகள் இந்தி பயிற்றுவிப்பு ஆசிரியராகப் பணி புரிந்தார். இந்தக் கால கட்டத்தில் அவர் நாச்சியார் என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.  நாச்சியார் இரண்டே ஆண்டுகளில் இறந்து போனார். சோகத்தில் ஆழ்ந்த அப்பாதுரையார், பின்னொரு காலத்தில் அலர்மேலு என்பவரை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார் !

ஆசிரியப் பணி:

காரைக்குடி அருகில் உள்ள அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது, இவரிடம் கல்வி பயின்ற மாணவர் (கவிஞர்) கண்ணதாசன் என்பது குறிப்பிடத் தக்கது ! சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணி புரிந்தார் !

ஏற்றிருந்த பிற பணிகள்:

நடுவணரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் ஈராண்டு காலம் பணிபுரிகையில்இந்தியாவின் மொழிச் சிக்கல்என்ற ஆங்கில நூலை எழுதியதால், தனது வேலையை இழந்தார் !

சென்னைப் பல்கலைக் கழக  ஆங்கிலம்தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை ஆறாண்டு காலம் அதன் ஆசிரியராகப் பணி செய்தார். தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார் !

அப்பாதுரையாரின் எழுத்துப் பணி, திராவிடன், JUSTICE, இந்தியா,  விடுதலை,  குமரன், தென்றல், LIBERATOR, ஆகிய ஏடுகளில் பல்வேறு கால கட்டங்களில் இருந்து வந்துள்ளது !

இந்தி எதிர்ப்பு:

அப்பாதுரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர்; ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயமாகத் திணிக்கப் பட்டபோது, அதை எதிர்த்து 1938 – 39 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்  பங்கு கொண்டார் !

பன்மொழிப் புலவர்:

அப்பாதுரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, பிராகிருதம், ஆங்கிலம்  ஆகிய ஆறு மொழிகளிலும் தங்கு தடையின்றிப் பேசவும் எழுதவும் கூடியத் திறமை இருந்தது ! இவையன்றி ஆப்பிரிக்க, கிரேக்க, சப்பானிய மொழி உள்பட பல்வேறு மொழிகளைக் கற்றவர் அப்பாதுரையார் !

வரலாற்று நூல்கள்:

குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, தென்னாட்டுப்  போர்க்களங்கள், சரித்திரம் பேசுகிறது, சென்னை நகர வரலாறு, .நா.வரலாறு, கொங்குத் தமிழக வரலாறு முதலிய வரலாற்று நூல்களை அப்பாதுரையார் எழுதியுள்ளார். திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பனவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூல்களில் அளித்துள்ளார் !

அப்பாதுரையாரின், தென்னாட்டுப் போர்க் களங்கள் என்ற வரலாற்று நூல், போர்க் களங்களின் பட்டியலன்று ! போர்க் காரணங்கள், போர்களின் பின் புலங்கள், போர்ச்செயல்கள், போரின் விளைவுகள், போர்களின் வழியாகப் புலப்படும் அரசியல் நெறிகள் ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்துள்ளது !

வாழ்க்கை  நூல்கள்:

கிருட்டிணதேவராயர், நேதாசி, அரியநாத முதலியார், இரவிவர்மா, சர்ச்சில், ஈன்சுடீன், பெர்நாட்சா, ஐதர் அலி மற்றும் ஆங்கிலப் புலவர்கள் வரலாறு, சங்க காலப் புலவர்கள் வரலாறு, பெஞ்சமின் பிராங்களின் உள்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார். சங்க காலப் புலவர்களில் பிசிராந்தையார், கோவூர் கிழார், ஔவையார், சீத்தலைச் சாத்தனார் முதலிய நால்வர் பற்றியும் எழுதியுள்ளார் ! மொத்தம் 170 நூல்களுக்கு மேல் இவர் எழுதியுள்ளார் என்பது வியக்கத்தக்க செய்தியாக  அன்றோ உளது !

திருக்குறள் பற்றிய நூல்கள்:

அப்பதுரையாரின்திருக்குறள் மணி விளக்கவுரைஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. கண்ணதாசனின்தென்றல்வார இதழில்அன்னை அருங்குறள்என்ற தலைப்பில் புதிய குறட்பா படைத்துள்ளார். திருக்குறள் உரைக்கெனவேமுப்பால் ஒளிஎன்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார். அவரது திருக்குறள் விளக்கவுரையில் உலகின் பல மொழிகளில் உள்ள அறிவார்ந்த  அற நூல்களோடு ஒப்பிட்டு, திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது !

வரலாறு, வாழ்க்கை வரலாறு, மொழி பெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, சிறுகதை, நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என எத்துறைக்கும் ஏற்றதான 170 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற தமிழறிஞர் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் !

தமிழின் தொன்மைக் கோட்பாடு:

தமிழும் தமிழர் இனமுமே உலக மொழிகளுக்கும், மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற் பூர்வமாக தனது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளவர் அப்பாதுரையார் !

பன்முகத் தமிழர்:

ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம் கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் !


மறைவு:

தமிழ்ச் சுரங்கமாக விளங்கிய அப்பாதுரையார்,  1989 –ஆம் ஆண்டு மே மாதம் 26 –ஆம் நாள், தமது 82 –ஆவது அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் ! அவரது சாதனைகளை நோக்கி நடை பயில இற்றைத் தமிழர் யாருக்குமே துணிவில்லை !


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2050: சிலை( மார்கழி) 08]
{24-12-2019}


-----------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு, டிசம்பர் 22, 2019

சொல் விளக்கம் (01) உங்களுக்குக் காக்கை பிடிக்கத் தெரியுமா ?

பலருக்கும் இதுபற்றித் தவறான புரிதலே உள்ளது !மருதவனம் ! பெயருக்கு ஏற்றாற்போல் ஒருகாலத்தில் மருதமரங்கள் நிறைந்து வனமாகக் காட்சியளித்த ஊர். இப்போது எங்காவது ஒரு சில மரங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மரத்தின் பெயரும் கூட உருமாறிவிட்டது. கருமருது, பிள்ளை மருது  என்று சொன்னால் தான் மக்களுக்குப் புரிகிறது !

மீனவன் நல்லூர்மாங்குடி சாலையிலிருந்து கீழ்புறமாக சற்று உள்ளடங்கி இருக்கும் ஊர்  மருதவனம். திருவாரூர் மாவட்டத்தில் பசுமை போர்த்திய வயல்கள் நிறைந்த சிற்றூர்களில் இதுவும் ஒன்று. மருதவனத்தில் உப்பரிகையுடன் (BALCONY) அமைந்த தெற்குப் பார்த்த மச்சு வீடு.  வீட்டு வாசலில் நான்கு வேப்ப மரங்கள். மேழத் திங்களின் (சித்திரை) வெப்ப வீச்சினைத் தணித்து, இவை குளிர்ந்த நிழலைத் தந்துகொண்டிருந்தன !

பிரம்பு பின்னிய இருக்கையுடன் மடக்குக் கை வைத்த அந்தக் காலத்துச் சாய்வு நாற்காலியில் (EASY CHAIR) ஓய்வாகப் படுத்திருந்தார் பண்ணையார் நல்லதம்பி. பெயர்தான் நல்லதம்பியே தவிர உண்மையில் அவர் செல்வச் செருக்கு (ஆணவம்) மிக்க கெட்டதம்பி. எளியவர்களை  ஏளனமாகப் பார்க்கும்   இரக்கமில்லாத்தம்பி. அகன்ற குறுங்காலி (STOOL) மீது இரண்டு கால்களையும் வைத்து நீட்டியபடி, வேப்பமரக் காற்றில் மிதந்து வந்த மெல்லிய நறுமணத்தை உள்வாங்கி இயற்கையின் இனிமையை மனதிற்குள் சுவைத்த படி நல்லதம்பி  கண்களை மூடி இளைப்பாறிக் கொண்டிருந்தார் !

வீட்டின் மேற்புறமாக, சற்றுத் தள்ளி,  நீண்டு உயர்ந்த வைக்கோல் போர் மருதவனத்தின் செழுமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. வைக்கோல் போர் முன் கட்டப்பெற்றிருந்த ஈரிணை (TWO PAIR) வண்டி மாடுகளின் கழுத்திலிருந்த சதங்கைகள் மெல்லிய இசையை எழுப்பிக் கொண்டிருந்தன. தோட்டத்து மாமரத்திலிருந்து சில குயில்கள் தம் இணையைக் கூவிக் கூவிக் குழைந்து  அழைத்துக் கொண்டிருந்தன !

முற்றத்து முன்வாயிலைத் திறந்துகொண்டு  தெற்குத் தெரு முருகவேல் அடக்க ஒடுக்கமாக உள்ளே வந்தார். நல்லதம்பி மெல்லக் கண் விழித்து அவரைப் பார்த்தார். “ஐயா ! கும்பிடுகிறேனுங்க !“  யாரப்பா அது ?” “நான்தாங்க தெற்குத் தெரு முருகவேல்” ”வா ! வா ! முருகவேல் ! என்னப்பா இந்தப் பக்கம் ?” ”சும்மாதாங்க ! ஐயா உடம்புக்கு முடியாம இருந்தீங்கண்ணு கண்ணுச்சாமி சொன்னானுங்க ! அதுதான் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன் !”

சும்மா, காய்ச்சல் தான். வேறொன்றுமில்லை ! சரியாகிவிட்டது. சற்றுக் களைப்பாக இருக்கிறது. உடம்பெல்லாம் ஒரே வலி. அதுதான் வேப்பங்காற்று வாங்கி கொண்டு படுத்திருக்கிறேன்.”


முருகவேல், பண்ணையாரின் பக்கத்தில் வந்து நின்று, சாய்வு நாற்காலியின் மடக்குக் கைகளின் மீது கிடத்தியிருந்த அவரது கைகளை மெல்லப் பிடித்து  விட்டார். காய்ச்சலால் ஏற்பட்டிருந்த  உடம்பு வலிக்கு முருகவேலின் உடம்புப் பிடிப்பு’ (MASSAGE) மிகவும் இனிதாகத் தோன்றியது. முருகவேல் பண்ணையாரின் இரண்டு கைகளையும் மாறி மாறி மெல்லப் பிடித்துவிட்டார். ”உன் பையன் என்னப்பா செய்கிறான் ?” பண்ணையார் கேட்டார்.

இரு கைகளையும் மென்மையாக அமுக்கி, அழுத்தி,  பிடித்துவிட்ட முருகவேல், அடுத்து குறுங்காலி மேல் நீட்டி இருந்த பண்ணையாரின் வலப் பக்கக்  காலைப் பிடித்துவிடத் தொடங்கினார். பிடித்துவிட்டுக் கொண்டே, “ஐயா, அவன் துவாக்குடி அரசினர் பல்தொழில் பயிலகத்தில் (POLYTECHNIC COLLEGE) மின்னியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.” என்று சொன்னார் !

பண்ணையாரின் வலக் காலை மென்மையாக அமுக்கிப்  பிடித்து விட்ட  முருகவேல், அடுத்து அவரது இடக் காலையும் பிடித்துவிடத் தொடங்கினார். “முருகவேல் ! வீட்டுக்குப் போகும் போது வண்டி மாடுகளுக்கு பருத்திக் கொட்டையும் கடலைப் பிண்ணாக்கும் தவிட்டுடன் கலந்து தீனி வைத்துவிட்டுச் செல். பண்னையாள் கருப்பையன் இன்று வெளியூரில் இருப்பதால் வரவில்லை; அவன்தான் வழக்கமாகத் தீனி வைப்பான்

சரி ஐயா! அப்படியே செய்கிறேன் !” என்றபடி, குறுங்காலி மீது நீட்டியிருந்த பண்ணையாரின் கால்களை மெல்ல மெல்ல நீவிப்  பிடித்து விடுவதைத் தொடர்ந்தார்.. அறுபது அகவையைக் கடந்துவிட்ட பண்ணையாருக்கு, முருகவேலின் மென்மையான உடம்புப் பிடிப்பு (MASSAGE) மிகுந்த இன்னலமாய்த் (சுகமாக) தோன்றியது !

கை,கால்களை மாறி மாறி பிடித்துவிடுவதைத் தொடர்ந்த முருகவேலுக்கு தான் வந்த நோக்கத்தைச் சொல்ல அச்சமாக இருந்தது. பண்ணையார், சினமேற்பட்டுத் தன்னைத் திட்டினால் என்ன செய்வது என்று பயந்தார்.  முருகவேல் ! என்னப்பா ! உன் பெண் என்ன செய்கிறாள் ?” இந்தக் கேள்வி முருகவேலுக்குத் தான் வந்த நோக்கத்தை மெல்ல எடுத்துரைக்க வாய்ப்பாக இருந்தது.  வீட்டில்தாங்க இருக்கிறாள். அவளுக்குத் திருமணம் கூடி வந்திருக்கிறது.  மாப்பிள்ளை கோவையில் வேலையில் இருக்கிறார் !”

சரி ! பணம் ஏதாவது வேண்டுமா முருகவேல் ?” “ஆமாங்க ஐயா !” “சரி ! ஒரு ஐந்தாயிரம் போதுமா ?” “உங்க விருப்பமுங்க ! எல்லாவற்றுக்கும் பணம் திரட்டிவிட்டேன். மாப்பிள்ளைக்கு பத்து கிராமில் மோதிரம் போட வேண்டும். அதற்குத் தாங்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறேன்

அப்படியா ?” சரி உள்ளே அம்மாவிடம் போய் நான் சொன்னேன் என்று சொல்லி ஒரு முப்பதாயிரம் உருபா வங்கிக் கொள். இதில் பத்தாயிரம் உன் பெண்ணுக்கு என் சீராக வைத்துக் கொள். மீதம் இருபதாயிரமும் உன்னால் முடிந்த போது திருப்பித்தா !”

வண்டி மாடுகளுக்குத் தீனி வைத்துவிட்டு, முப்பதாயிரம் உருபா பணத்துடன்  முருகவேல் மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றார்.  எப்படி நடந்தது இந்த மாயம் ?  செல்வச் செருக்கில் ஏழைகளை இளக்காரமாகப் பார்க்கும் பண்ணையார் நல்லதம்பியின் மனம் இளகியது எப்படி ?

காய்ச்சலால் உடம்பில் ஏற்பட்ட வலி, முருகவேலில் கால், கை பிடிப்பில் (MASSAGE) பண்ணையாருக்கு மறைந்து போயிற்று. அவர் மனம் உடல்வலியின் பீடிப்பிலிருந்து மீண்டு, இனிமையான துய்ப்பை (சுகமான அனுபவத்தை) உணர்ந்தது. மனதின் இனிய துய்ப்பு, அவரது கடினமான மனதை இளக்கி, முருகவேலின் பால் அன்பு பாராட்டச் செய்தது. முருகவேலின் எதிர்பார்ப்புத் தடங்கலின்றி நிறைவேறியது !

முருகவேலின் கால், கைபிடிப்புதான் (MASSAGE) இதை நிறைவேற்றித் தந்திருக்கிறது. ஆம் ! “கால், கைபிடிப்புக்குத் தான் எத்துணை ஆற்றல் ! இந்தக் கால், கை பிடிப்புத் தான் கால்கை பிடிப்பாகி. கால்க்கை பிடிப்பாக உருவெடுத்து, பின்பு காக்கை பிடிப்பாக மாறி, இறுதியில் காக்கா பிடித்தலாக மக்களிடையே உலா வருகிறது ! “காக்காபிடித்தல் என்னும் சொலவடை தோன்றிய வரலாறு இப்போது உங்களுக்குப் புரிகிறதா ?

ஏதாவது செயலை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நீங்கள் யாரையாவதுகாக்காபிடித்திருக்கிறீர்களா ? ”ஆம்என்றால் அந்தக் கதையை எங்களுக்கும் சொல்லுங்களேன் ! “இல்லையா ?” அப்படியென்றால் இந்த உலக வாழ்க்கை உங்களுக்குக் கடினமாக இருக்குமே ! எப்படிக் காலந் தள்ளுகிறீர்கள் ?

என் கட்டுரைகளுக்குவிழைவு” (LIKE) அல்லது  கருத்துரை” (COMMENTS) அல்லது பகிர்வு (SHARE) பெறும் பொருட்டு நானும் உங்களைக்காக்காபிடிக்க வேண்டும் போலும் ! என்னே உலகமிது !


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050: சிலை (மார்கழி) 06]
{22-12-2019}

---------------------------------------------------------------------------------------------------------
             
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------சனி, டிசம்பர் 21, 2019

வரலாறு பேசுகிறது (11) பேரா.சி.இலக்குவனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


வாய்மைமேடுபேராசிரியர்சி.இலக்குவனார் !


தோற்றம்:

பேராசிரியர் சி.இலக்குவனார் 1909 –ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17 –ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் சிங்காரவேல் தேவர். தாயார் இரத்தினத்தம்மாள். பிறந்த ஊர் வாய்மைமேடு (வாய்மேடு). திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியிலிருந்து திருமரைக்காடு (வேதாரணியம்) செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது !

பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் இலட்சுமணன்.  தந்தை சிங்காரவேல் தேவர் குறுநிலக் கிழாராகவும், மளிகைக் கடை உரிமையாளராகவும் திகழ்ந்தார். பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவர், தன் தந்தையை நான்கு வயதிலேயே இழந்தார் !

தொடக்கக் கல்வி:

வாய்மைமேட்டில் முதலில் சுப்பையா என்னும் ஆசியரின் திண்ணைப் பள்ளியிலும் பின்பு  கண்ணுச்சாமி என்னும் ஆசிரியரின் திண்ணைப் பள்ளியிலும் தனது கல்விச்செலவைத் (பயணத்தை) தொடங்கினார். அடுத்து  அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைத் தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்பு அண்ணன் நல்லபெருமாளுடன் வேளாண் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று !

இடைநிலைக் கல்வி:

இலட்சுமணனின் தாயாருக்குத் தன் பிள்ளை படிப்பை நிறுத்தியதில் உடன்பாடில்லை. எனவே, மன்னர் சரபோசி அறக்கட்டளை சார்பில் பட்டுக் கோட்டையை அடுத்த இராசாமடம் என்னும் ஊரில் இயங்கி வந்த நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் இலட்சுமணன் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் போது, அங்கு தமிழாசிரியராக இருந்த சாமி. சிதம்பரனார்  இலட்சுமணன் என்னும் பெயரைஇலக்குவன்என்று பள்ளி ஆவணங்களில் மாற்றி அமைத்தார் ! அப்பொழுது முதலே தனித் தமிழ் மீது நாட்டமும், தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனாருக்கு ஏற்பட்டது !

உயர்நிலைக் கல்வி:

பின்னர் 1924 –ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு முதலான உயர்நிலைக் கல்வியை உரத்தர் நாடு (அறிவும் திட்பமும் மிகுந்தோர் நாடு) என்னும் ஒரத்தநாட்டில் மேற்கொண்டார்.  தஞ்சாவூர் -  பட்டுக்கோட்டை பேருந்து வழித்தடத்தில் 15 கல் தொலைவில் இவ்வூர் உள்ளது.

தமிழ்ப் புலவர் படிப்பு:

பள்ளிப் படிப்பை முடித்த பின்பு தஞ்சையை அடுத்து உள்ள திருவையாறில் இருந்த அரசர் தமிழ்க் கல்லூரியில் பயின்று 1936 –ஆம் ஆண்டு புலவர் பட்டம் பெற்றார் ! இக்கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். !

பணி:

1936 சூன் மாதம் தொடங்கி 1942 –ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்டத்தில் இயங்கிவந்த பல உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். கலைஞர் மு.கருணாநிதி, திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கையில் அப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்து அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் இலக்குவனாருக்குக் கிடைத்தது !

பின்பு, குலசேகரன்பட்டினத்தில் தமிழ்க் கல்லூரி முதல்வர், நெல்லை, .தி.தா.இந்துக் கல்லூரியில் விரிவுரையாளர், எனப் பல்வேறு இடங்களில் பணி புரிந்தார் !

கீழைமொழி மேதை:

அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகம் வகுத்திருந்த விதிகளின்படி, தமிழில் புலவர் பட்டம் பெற்றிருந்தோருக்கு கலையியல் வாலை (B.A.) பட்டத்திற்கு இணையான கீழைமொழி வாலை ( B.O.L.) பட்டம் வழங்கப்பட்டது. இபட்டத்தைப் பெற்ற இலக்குவனார், பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்  என்னும் தலைப்பில் ஆய்வு செய்து கீழை மொழி மேதை (M.O.L) பட்டமும் பெற்றார் !

தமிழ்த் துறைத் தலைவர்:

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் இயங்கிவரும் தியாகராயர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலக்குவனாருக்குக் கிடைத்தது. அங்கு தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு தனது தமிழ்ப் பணியைத் தொடங்கினார் !

முனைவர் பட்டம்:

தொல்காப்பிய ஆய்வுக்காக 1963 –ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், இடையிடையே ஏற்பட்ட பணியிழப்புகளின் காரணமாகவும், முனைவர் பட்டத்தை அவர் தனது 53 – ஆம் அகவையில் தான் பெறமுடிந்தது.  காலந் தாழ்ந்து முனைவர் பட்டம் பெற்றாலும், தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்து போயின. பாராட்டு விழாக்கள் பல ஊர்களில் நடந்தன !

அண்ணாவின் அணிந்துரை:

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில நூலுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டிப் பெருமைப் படுத்தினார். அண்ணா அவர்கள் தமது அயல்நாட்டுப் பயணத்தின் போது, இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார் என்றால் அந்நூலின் விழுமிய தன்மையும் மேன்மையும் உங்களுக்குத் தெற்றென விளங்கும் !

தமிழ் காப்புக் கழகம்:

மதுரையை அடுத்த திருநகரில் 1962 –ஆம் ஆண்டுதமிழ்க் காப்புக் கழகம்என்னும்  அமைப்பை இலக்குவனார் தொடங்கினார். ”தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! தமிழில் பெயரிடுக ! தமிழில் பயில்க ! “ என்னும் நான்கு திட்டங்களை முன்வைத்து இந்த அமைப்பு பணியாற்றத் தொடங்கியது ! இவ்வமைப்பின் செயலாளராகப் புலவர் இளங்குமரன் அவர்கள் இலங்கி இலக்குவனாருடன் இணைந்து பணியாற்றி வந்தார் !

இந்தி எதிர்ப்பும் சிறை வாழ்வும்:

1965 –ஆம் ஆண்டு சனவரி 25 அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், இலக்குவனார் பங்கேற்றார். இதன் விளைவாக தான் வகித்து வந்த கல்லூரிப் பேராசிரியர் பணியை அவர் இழக்க நேர்ந்தது. மொழிகாப்புப் போராட்டத்தின் எதிரொலியாக முதன்முறையாகச் சிறைப்படுத்தப்பட்டார்.  ஐந்து வாரங்கள் சிறையில் இருந்தார். பின்பு மே மாதம் இரண்டாம் முறையாகத் தளைப்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தார் ! அன்னைத் தமிழ் காக்கச் சிறை சென்ற இலக்குவனார், தமிழர் நெஞ்சங்களில் அழிக்கவியலாப் படிமையாக இன்றும் வாழ்ந்து வருகிறார் !

தமிழகம் தந்த பட்டங்கள்:

மொழிப்போர் ஈகியார் (தியாகி) பேராசிரியர் இலக்குவனாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் உச்சி மோந்து முத்தமிட்டுப் பாராட்டிக் கொண்டாடியது. முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சி மொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ்காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல் போன்று மொத்தம் 14 பட்டங்களைத் தமிழர்கள் இவருக்கு அளித்து மகிழ்ந்தனர் !

நடத்திய இதழ்களும் படைத்த நூல்களும்:

சங்க இலக்கியம்”, “இலக்கியம்”, “திராவிடக் கூட்டரசு”, “குறள்நெறிஆகிய இதழ்களையும் நடத்தி இருக்கிறார். தொல்காப்பிய ஆராய்ச்சி உள்பட 21 தமிழ் நூல்களையும், 4 ஆங்கில நூல்களையும் படைத்துத் தமிழுக்குப் பெரும்பணி ஆற்றி இருக்கிறார் !

மாநிலக் கல்லூரியில் பணியேற்பு:

1967 –ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சார் ஆன பின்பு, சென்னை மாநிலக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். ஆனால் கல்வி அமைச்சர் நாவலருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஓராண்டுக்குப் பின் அப்பணியிலிருந்து விலகினார் !

கிட்டாமற்போன துணைவேந்தர் பதவி:

தமிழில் புலமை மிக்கவர்களிடம் செருக்கும் இணைந்திருக்கும் என்பது பொதுவான கூற்று ! இதுவே, இலக்குவனாருக்குக் கிடைத்திருக்க வேண்டிய துனைவேந்தர் பொறுப்பினைத் தொலைவில் துரத்திச் சென்று விட்டது என்பது பல அறிஞர்களின் கருத்து !

மறைவு:

தமிழ்த் தாயின் போர்த் தளபதி இலக்குவனார் தனது 64 –ஆம் அகவையில் 1973 –ஆம் ஆண்டு, செப்டம்பர்த் திங்கள் 3 –ஆம் நாள் தனது பூவுலக வாழ்வைத் துறந்து புகழுடம்பு எய்தினார் ! நீடுதுயில் நீக்க வந்த நிலா, தன் பணிமுடித்து, நிலையாகத் துயில் கொள்ளச் சென்றுவிட்டது !

முடிவுரை:

தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! தமிழில் பெயரிடுக ! தமிழில் பயில்க ! “ என்னும் அவருடைய சங்கொலி மீண்டும் எதிரொலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ! இலக்குவனார் ஊதி ஊதி உருவாக்கிப்  பெருக்கிய தமிழ்க் கனல் இன்று சாம்பல் பூத்துக் கிடக்கிறது ! இற்றைத் தமிழன் அக்கனலை மீண்டும் சுடர்விட்டு ஒளிரச் செய்வானா அல்லது தன்மானம் இழ்ந்து தளர்ந்து போவானா ? காலம் தாம் விடை சொல்ல வேண்டும் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050; சிலை (மார்கழி) 05]
{21-12-2019}

------------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------