name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 01/03/20

வெள்ளி, ஜனவரி 03, 2020

வரலாறு பேசுகிறது (14) தேவநேயப் பாவாணர் !

மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !


ஞா.தேவநேயப் பாவாணர் !


தோற்றம்:

தேவநேயப் பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 7 ஆம் நாள் நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலை அடுத்த கோமதி முத்துபுரம் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பெயர் ஞானமுத்து. தாயார் பரிபூரணம் ! இவரது இயற்பெயர் தேவநேயன் ! பாவாணரின் பாட்டனார்  பெயர் முத்துசாமி என்றும் பாட்டியார் பெயர் வள்ளியம்மாள் என்றும், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது !

கிறித்தவ அருட் தந்தையின் உதவி:

முத்துசாமிவள்ளியம்மாள் இணையர் சங்கரன் கோயிலில் கிறித்தவ மதகுரு ஒருவரிடம் பணிபுரிந்து வந்ததாகவும், அவர்களை கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்து அவர் ஆதரித்து வந்ததுடன், அவர்களது மகனை ஞானமுத்து தோக்கசு என்ற பெயருடன் அவர் தம் உதவியாளராக வைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தேவநேயன் கிறித்தவ மதம் சார்ந்தும் கிறித்தவ விடையூழியப் பள்ளிகளில் (Christian Mission Schools) தம் படிப்பை மேற்கொண்டும் வந்திருக்கிறார் !


கல்வி:

பாவாணர் 1912 –ஆம் ஆண்டு தம் ஐந்தாம் அகவையில் ஆம்பூர் அருகில் உள்ள சோழபுரம் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். அடுத்து ஆம்பூரில் எட்டாம் வகுப்பு வரைப் படிப்பு. பின்பு 1916 –ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளிப் படிப்பைப் பாளையங்கோட்டையில் (9,10,11 ஆகிய வகுப்புகள்) தொடர்ந்தார் !

ஆசிரியர் பணி:

1919 ஆம் ஆண்டு சங்கரன்கோயில் வட்டத்தின் வடஎல்லையாகிய முறம்பு என்னுமிடத்தில் (சீயோன் மலை) ஆறாம் வகுப்பு ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு 1921 –ஆம் ஆண்டு ஆம்பூர் உயர்நிலைப் பள்ளியில் உதவித் தமிழாசிரியராக 3 ஆண்டுகள் பணி புரிந்தார்.

தமிழ்ப் புலமை:

மதுரைத் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பெற்ற தமிழ்ப் பண்டிதர் தேர்வில் 1924 –ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார் பின்னர் 1926 –ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ““வித்துவான்”, கீழைநாட்டு மொழியியல் வாலை (B.O.L.) இரண்டிலும் தேர்ச்சி பெற்றுத்  தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றார் !

திருமணம்:

தேவநேயன் தமது 24 ஆம் அகவையில் 1926 –ஆம் ஆண்டு எசுத்தர் என்னும் மங்கையை மணந்து கொண்டார். ஒரு குழந்தையைப் பெற்ற பின் அவர் இறந்து போனார். இத்துன்ப நிகழ்வினால் மனம் உடைந்த நிலையில் இருந்த தேவநேயன், பின்பு ஒருவாறு மனம் தேறி நேசமணி அம்மையாரை 1930 –ஆம் ஆண்டு மணந்து கொண்டார் !

தமிழாசிரியர்:

மன்னார்குடி பின்லே உயர்நிலைப்பள்ளியில் 1929 முதல்  ஐந்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியராகத் தேவநேயன்   பணி புரிந்தார். இங்கு இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசையையும் பயின்றார். பின்பு திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப் பள்ளியில் 1934 முதல் ஏறத்தாழ  ஒன்பது  ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார் !

பேராசிரியர்:

சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசியராக 1944 –ஆம் ஆண்டு சேர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார். பணியில் இருக்கையிலேயே
தமிழில் கலையியல் மேதை (M.A.) பட்டமும் பெற்றார். அடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1956 –ஆம் ஆண்டு பேராசிரியராகப் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் பணி புரிந்தார் !

குடும்ப வாழ்வு:

பாவாணருக்கு ஆறு ஆண் மக்களும் ஒரு பெண் மகவும் பிறந்தனர்.. (01) அழகிய மணவாளதாசன் (02) நச்சினார்க்கினிய நம்பி (03) செல்வராசன் (04) அடியார்க்கு நல்லான் (05) மங்கையர்க்கரசி (06) மணிமன்ற வாணன் (07) பாண்டியன், என்பவை அவர்களது பெயர்கள் !

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் வேலூரை அடுத்த காட்டுப்பாடியில் (காட்பாடி) நிலையான இருப்பிட வாழ்வுத் தொடங்கியது. அவரது குடும்ப வாழ்வில் அடுத்த துன்பியல் நிகழ்வு 1963 –ஆம் ஆண்டு ஏற்பட்டது.  ஆம் ! அவரது மனைவி நேசமணி அம்மையார் காலமானார் !

பாவாணர்:

பாவாணர் மிகச் சிறந்த தமிழறிஞரும் சொல்லாராய்ச்சி வல்லுநரும் ஆவார். இவர் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித் தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய், ஆணிவேராய் இருந்து கடினமாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, பெருஞ்சித்திரனார் இவரைமொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்என்று விளித்தார். தமிழ்கூறும் நல்லுலகம் அனைத்தும் இவரை அவ்வாறே அன்புடன் அழைக்கத் தொடங்கியது !

மொழி ஆய்வு:

தமிழ், உலக மொழிகளில் மூத்தது எனவும் திராவிட மொழிகளுக்குத் தாயாகவும் ஆரியமொழிகளுக்கு மூலமாகவும் விளங்கிய மொழி எனவும் பாவாணர் ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகளுடன் நிறுவினார். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தமொழி தமிழ் என ஆதாரங்களுடன் மெய்ப்பித்துக் காட்டினார் ! தமிழின் வேர்ச் சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக் காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் தன் நூல்களின் வாயிலாக உலகிற்கு எடுத்து இயம்பியுள்ளார் !

படைப்புகள்:

பாவாணர் பல நூல்களைப் படைத்துள்ளார். தமிழியற் கட்டுரைகள் 27, மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் 15, மொழிநூற் கட்டுரைகள் 17, பண்பாட்டுக் கட்டுரைகள் 16, தென்சொற் கட்டுரைகள் 16, செந்தமிழ்ச் சிறப்புக் கட்டுரைகள் 19, மறுப்புரை மாண்புக் கட்டுரைகள் 9, தமிழ் வளக் கட்டுரைகள் 29, பாவாணர் நோக்கில் பெருமக்கள் கட்டுரைகள் 16, பாவாணர் உரைகள் தொகுதி 11  ஆகிய அனைத்தும் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இவையன்றி, தமிழர் மதம், தமிழர் வரலாறு, தமிழ் வரலாறு உள்பட பாவாணர் ஆக்கிய நூல்கள் 43 ஆகும். இவை அனைத்தும் தமிழுக்கு வளம் சேர்க்கும் கருவூலங்கள் ஆகும். இவற்றுள் தமிழர் மதம், தமிழர் வரலாறு, தமிழ் வரலாறு ஆகியவை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல்கள் !

அகரமுதலித் திட்ட இயக்குநர்:

பாவாணரின் அறிவாற்றலைத் தமிழுக்கு முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் திருவாரூர் சரவணத் தமிழன் அவர்களின்  சீரிய முயற்சியின் காரணமாக, தமிழக முதல்வராக இருந்த திரு, கருணாநிதி அவர்களுடன் பாவாணரின் சந்திப்பு நிகழ்ந்தது. அதன் விளைவாக 1974 –ஆம் ஆண்டு பாவாணர் அவர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலித் திட்ட இயக்குநராக அரசினால் அமர்வு செய்யப் பெற்றார். அரசின் ஒத்துழைப்புடன் பாவாணர் அகரமுதலியின் பல மடலங்களை உருவாக்கினார்.

மறைவு:

திரு..கோ.இரா. தமிழக முதல்வராக இருந்தபோது 1981 –ஆம் ஆண்டு சனவரி 5 –ஆம் நாள் மதுரையில்  உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.  அதில் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட சில நிகழ்வுகளால் பாவாணருக்கு மனத் துன்பம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர் மேடையிலேயே மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  பத்து நாள் பண்டுவத்திற்குப் பிறகு 15-1-1981 இரவு 12-30 மணிக்கு பாவாணர் காலமானார். மறுநாள் (16-1-1981) கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் பாவாணரின் உடல் நல்லடாக்கம் செய்யப்பட்டது !

வாழ்க்கை வரலாறு:

தேவநேயப் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை புலவர் இரா.இளங்குமரன் அவர்கள்பாவாணர்என்னும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். பாவாணரின் மகன் மணி மன்ற வாணன் என்னும் மணி பாவாணர் நினைவலைகள்என்னும் தலைப்பில் அவரது முழு வாழ்க்கை வரலாற்றையும் நூல் வடிவில்  வெளியிட்டுள்ளார் !

முடிவுரை:

தனித் தமிழுக்காகத் தம் இறுதி மூச்சு உள்ளவரை உழைத்த உயர்நெறியாளர் பாவாணர். அவரை இழந்து தமிழன்னை, வடிக்கும் கண்ணீர் மட்டும் இன்னும் நின்றபாடில்லை ! தமிழகம் அவரது உழைப்பை முழுமையாகப் போற்றிக் கொள்ளவும் இல்லை !

சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்ற தமிழ் மாதப் பெயர்களைக் கண்டறிந்து நமக்களித்த பாவாணரின் நினைவைப் போற்றும் வகையில் அவற்றைத் தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் பொருட்டு , தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்கள் தம் இடுகை ஒவ்வொன்றிலும் திருவள்ளுவர் ஆண்டு, தமிழ் மாதப் பெயர், நாள் ஆகியவற்றைத் தவறாது  பதிவு செய்து வருகின்றனர் ! எமது இச்சிறு தொண்டு என்றென்றும் தொய்வின்றித் தொடரும் என்பதை உலகிற்கு அறிவிப்பதில் உவகை கொள்கிறோம் !


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2050,சிலை (மார்கழி)14]
{29-12-2019}

----------------------------------------------------------------------------------------------------------


      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில்வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------