name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 12/20/19

வெள்ளி, டிசம்பர் 20, 2019

பல்வகை (20) இந்தியாவின் முகம் !

நம் நாட்டுக்கும் ஒரு முகம் உண்டு  - அது என்ன முகம் ?

                       

மனிதனை அடையாளப் படுத்துவது முகம். அதுபோல் விலங்குகள் போன்ற நகரும் உயிரினங்களையும் அடையாளப் படுத்துவது முகமே ! முக வேறுபாடுகள் இல்லையேல் குழப்பம் குடிகொண்டுவிடும் !

நகரும் உயிரினங்களைப்  போல் நாடுகளுக்கும் முகங்கள் உள்ளன.  ஒவ்வொரு நாடும் பின்பற்றிவரும் கொள்கைகளே அவற்றின் முகம். அமெரிக்காவின் முகம் பிற நாடுகளை அடக்கியாள நினைப்பது. சீனாவின் முகம் தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்கின்ற  பேராசை. இலங்கையின் முகம் புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லிக் கொண்டே ஈழத் தமிழ் இனத்தைக் வேரறுப்பது. அதுபோல் நம் நாட்டுக்கும் ஒரு முகம் உள்ளது !

நம் நாட்டின் முகம் பிற நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எந்த வகையில் என்று கேட்கிறீர்களா ? ஆய்வு செய்யலாம் வாருங்கள் !

பதினெட்டு அகவை நிறைந்த எனக்கு வாக்களிக்கும் தகுதி  இருக்கிறது. வாக்காளர் பட்டியலிலும் என் பெயர் இருக்கிறது; ஆனால் என்னால் வாக்களிக்க முடியவில்லை; காரணம் என் வாக்கினை இன்னொருவன் கள்ளத்தனமாகப் போட்டுவிட்டுப் போய்விடுகிறான் ! உண்மையான வாக்காளனான என்   உரிமைக்கு இங்கு மதிப்பு இல்லை; கள்ளத்தனம் பண்ணியவனின் வாக்கு கணக்கில் சேர்க்கப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது ! இதுதான் நம் நாட்டின் முகம் !

அடித்தட்டு மற்றும் நடுத்தர இனத்தவருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தேர்தலில் போட்டியிட முடிகிறதா ? முடியாது ! ஏனென்றால் அதற்கான கட்டுத் தொகையைச் (DEPOSIT)   செலுத்த அவர்களால் முடியாது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்போம்; ஆனால் கட்டமுடியாத அளவுக்குப் பெரிய தொகையைக் கட்டுத்தொகையாக வரையறை செய்து  அடித்தட்டு மற்றும் நடுத்தர இன மக்களைத் தேர்தல் களத்திலிருந்து விலக்கி வைப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

காந்தியாருக்கு ஊரெங்கும் சிலை வைப்போம். அவர் பிறந்த நாள், இறந்த நாள்களில் அவர் படத்திற்கு மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்துவோம். அமைச்சர்கள் காந்தியைப் பற்றி விலாவாரியாகப் பேசுவார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் மதுக் கடைகளை இன்னும் எங்கெங்கு திறக்கலாம் என்று அதிகாரிகளுடன்  கலந்துரையாடுவார்கள். இதுதான் இந்தியாவின் முகம் !

சாதி வேறுபாடு கூடாது என்று பேசுவோம்; எழுதுவோம். சாதி மறுப்புத் திருமணங்கள் தான் சாதி ஒழிப்புக்கு முதற்படி என்று தொண்டை கிழியப் பேசுவோம். கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிக்கை விடுவோம். ஆனால் தேர்தல் களத்தில் சாதி பார்த்துத் தான் வேட்பாளர்களை நிறுத்துவோம். சாதிக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். இதுதான் இந்தியாவின் முகம் !

தாய்மொழியின் மேன்மை பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் புகழுவோம்.  தாய்மொழி வழிக் கல்வி தான் மாணவர்களை அறிவாளிகளாக்கும் என்று பள்ளிவிழாக்களில் பறைசாற்றுவோம். எங்கள் ஆட்சியில் தாய்மொழி வழிக்கல்விக்கு எத்தனை கோடிப்பணம் ஒதுக்கினோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோம். ஆனால் ஊரெங்கும் ஆங்கில வழிப் பள்ளிகளை யாராவது சில முகமறைவு (பினாமி) ஆளிநரின் பெயரில் திறந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவோம். இதுதான் இந்தியாவின் முகம் !

குற்றங்களைத் தடுக்கக் காவல் துறைக்கு நிரம்பப் பணம் ஒதுக்குவோம். நிரம்பப் புதிய பதவிகளை உருவாக்குவோம். சிறைச்சாலைகளை விரிவாக்குவோம். கூடுதலாகப் பல முறை மன்றங்களைத் (COURTS) திறப்போம். குண்டர் தடுப்புச் சட்டம் போல பல சட்டங்களைக் கொண்டு வருவோம். ஆனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரை, சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சர் பொறுப்பிலும் அமர்த்தி அழகு பார்ப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

பொதுவாழ்க்கையில் நேர்மை வேண்டும், என்று வலியுறுத்துவோம். ஊழல் செய்வோருக்கு வாக்களிக்கக்கூடாது என்று மக்களிடம் பரப்புரை செய்வோம். எதிர்க்கட்சியினரைப் பார்த்து வசைமாரி பொழிவோம். ஆனால், தேர்தல் முடிவில் போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடைக்கவில்லை என்றால், கோடிகளைக் கொட்டிக் கொடுத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்போம் ! இதுதான் இந்தியாவின் முகம் !

உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்று எதுகை மோனையுடன் பேசி உழவனின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வள்ளுவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வேளாண்மைக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று  உழவனைக் குளிரக் குளிரக் குளிப்பாட்டி வாக்குக் கேட்போம். விளைநிலங்களில் எண்ணெய்க் கிணறுத் துரப்பணப் பணியை மேற்கொள்ளாதீர்கள், எங்கள் விளை நிலங்கள் பாழாகிவிடும் என்று உழவன் போராடினால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் காவல் துறையைக் கொண்டு அவனை அடித்து உதைத்துச் சிறையில் அடைப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

பூஞ்சுருட்டு (CIGARETTE) வனையும் பன்னாட்டு நிறுவனங்ளை அழைத்துத் தொழில் தொடங்கச் சொல்வோம். பூஞ்சுருட்டு வனைவைத் தடை செய்ய மாட்டோம். ஆனால் புகை பிடிக்காதீர்; புற்றுநோய் வரும் என்று பரப்புரை செய்யப் பலகோடிச் செலவழிப்போம். இதுதான் இந்தியாவின் முகம் !

ஞெகிழி வனைவுத் தொழிற்சாலைகளுக்கு உரிமம் தருவோம். அவை செயல்படுவதைத் தடை செய்ய மாட்டோம்; ஊக்குவிப்போம். ஆனால்,  ஞெகிழிப் பயன்பாடு உடல் நலத்திற்குக் கேடு என்று பரப்புரை செய்வோம். அதிகாரிகளை ஏவிக் கடைகளில் ஞெகிழிப் பைகள் இருக்கின்றனவா என்று தேடுதல் மேற்கொள்ளச் சொல்வோம். வைத்திருப்போரை முறை மன்றத்தில் (COURT) நிறுத்தி ஒறுப்போம் (தண்டிப்போம்). இதுதான் இந்தியாவின் முகம் !

இந்தியப் பண்பாடு மிக உயர்ந்தது என்று அயல்நாடுகளில் உரையாற்றுவோம். தொன்மங்கள் (புராணங்கள்), மறவனப்புகள் (இதிகாசங்கள்), தோற்றரவுகள் (அவதாரங்கள்) பற்றி எல்லாம் பரப்புரை செய்வோம். ஆனால் முத்தக் காட்சி, முதலிரவுக் காட்சி, முக்காலே அரைக்கால் ஆடை துறப்பு (நிர்வாணம்) நடனக் காட்சிகள் அமைத்து, பண்பாட்டைச் சீரழிக்கும் திரைப்படங்களைத் தடைசெய்யாமல் விருது கொடுத்துப் பாராட்டுவோம். இதுதான் இந்தியாவின் முகம் !

செல்வச் சீமான்களுக்கு உரிமம் கொடுத்துத் தொலைக்காட்சித் தொடங்கச் செய்வோம். அவர்கள் எதையெதை  ஒளிபரப்புகிறார்கள் என்பதைக் கண்டுகொள்ள மாட்டோம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பழிவாங்கல், வன்புணர்வு, சிறார் கொடுமை ஆகியவற்றை எல்லாம் விலாவாரியாகத்  நாடகமாக்கிக் காட்டிப் பணம் குவிக்கும் கொடுமையைக் கண்டுகொள்ள மாட்டோம். நல்லொழுக்கம் பற்றிப் பேசும் அரசினரும் அதிகாரிகளும் இவற்றைக் கண்டு கொள்ளமாட்டார்கள். இதுதான் இந்தியாவின் முகம் !

திட்டப் பணிகளுக்காக நூறு கோடி ஒதுக்குவோம். இந்த நூறு கோடியில் 75 கோடி அவருக்கு, இவருக்கு, என்று தரகாகப் (COMMISSION) பங்கு போட்டுக் கொள்வோம். எஞ்சிய 25 கோடியில், ஒப்பந்தக் காரரின் ஆதாயம் (PROFIT) 20 கோடி போக மீதமுள்ள 5 கோடியில் மிக வலுவாகப் பணிகளைச் செய்து முடிப்போம். இது தான் இந்தியாவின் முகம் !

எங்கள் முக அழகை எவராவது ஏளனம் செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். முறைமன்றத்தில் (COURT) அவர்களை நிறுத்தி இழப்பீடு கோருவோம் !

வாழ்க எங்கள் பண்பாடு ! வளர்க ஊழல்வாதிகளின் கூட்டணி ! வெல்க எங்கள் குடியாட்சிக் கோட்பாடு !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050: சிலை (மார்கழி) 04]
{20-12-2019}
------------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------


வரலாறு பேசுகிறது (10) பாரதியார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


பாரதியார் !


தோற்றம்:

பாரதியார் 1882 –ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 11 –ஆம் நாள் (137 ஆண்டுகளுக்கு முன்பு) நெல்லை மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்தார்.  தந்தை சின்னச்சாமி ஐயர். தாயார் இலட்சுமி அம்மாள். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்; செல்லப் பெயர் சுப்பையன் !

பாரதி

தனது 5 -ஆவது அகவையிலேயே (1887 -ஆம் ஆண்டு) தாயாரைப் பறிகொடுத்தார். பின்பு தந்தை சினச்சாமி ஐயர் (1889 –ஆம் ஆண்டில்) மறுமணம் செய்து கொண்டார். 5 -ஆவது அகவையிலேயே கவிதை புனையும் திறனைப் பெற்றிருந்த பாரதியாரை எட்டயபுரம் அரசவைப் புலவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, அவருக்குபாரதிஎன்று பட்டம் அளித்து மகிழ்ந்தனர் !

திருமணம்:

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் 10-ஆம் வகுப்பு வரைப் பயின்றார். அவருக்கு 15 அகவை நடைபெறுகையில் 1897 –ஆம் ஆண்டு சூன் திங்களில் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் செல்லம்மாள். அடுத்த ஆண்டே (1898 –ஆம் ஆண்டு) பாரதியாரின் தந்தையார் மறைந்தார் !

காசியில் படிப்பு:

பெற்றோர் இருவரையுமே இளம் அகவையில்  இழந்துவிட்ட  பாரதியார், அத்தை குப்பம்மாளுடன் வசிக்கும் பொருட்டு 1898 –ஆம் ஆண்டு காசி மாநகருக்குச் சென்றார். அங்கு நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து கல்லூரியில் படித்தார். அத்துடன் சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார் !

தலைப்பாகை:

காசியில் தங்கி இருக்கையில் தலைப்பாகை அணியும் பழக்கமும், மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் தோன்றின. நான்கு ஆண்டுகள் காசி மாநகர வாழ்க்கைக்குக் பின் 1903 இறுதியில் எட்டயபுரம் திரும்பினார். 1904 –ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் (22 வயதில்) தமிழாசிரியராகப் பணியேற்றார். ஆனால் அதே ஆண்டில் சென்னை வந்துசுதேசமித்திரன்செய்தித்தாளில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார் !

இதழாசிரியர்:

வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் மூலம் 1905 –ஆம் ஆண்டு பாரதியாருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. ”இந்தியாஎன்னும் கிழமை இதழின் பொறுப்பாசிரியராக (1906 –ஆம் ஆண்டு), தனது 24 –ஆம் அகவையில் பணியேற்றதன் மூலம், செய்தித் தாள் துறையில் அடியெடுத்து வைத்தார் !

அரசியல் ஈடுபாடு:

சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், திலகர் தலைமையிலான தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்பட்டது. அரசியல் ஈடுபாடு தொற்றிக் கொண்டது. தனது கவிதைத் திறனுக்கு உயிர்ப்பூட்டும் வகையில் 1908 –ஆம் ஆண்டு (26 –ஆம் அகவையில்) “சுதேச கீதங்கள்என்னும் கவிதைத் தொகுதி நூலை வெளியிட்டார் !

புதுச்சேரி வாழ்க்கை:

இந்தியா செய்தித் தாள் ஆசிரியர் வெள்ளைக்கார அரசினரால் தளைப் படுத்தப்படுகிறார். இதைத் தொடர்ந்து பொறுப்பாசிரியர் பாரதியார், 1908 –ஆம் ஆண்டு பிரஞ்சு ஆட்சிப் பகுதியான புதுச்சேரிக்குத் தப்பிச் செல்கிறார். அங்கிருந்தபடியே வெள்ளையர் அரசுக்கு எதிராக அவரது அனல் பறக்கும் கட்டுரைகள் வெளியாகின்றன !

பாடல் தொகுதி வெளியீடு:

புதுச்சேரியில் இருந்த காலத்தில், பாரதியார், “ஜன்மபூமிகவிதைத் தொகுதியையும், “கனவு”, “சுயசரிதைபாடல்கள் அடங்கியமாதா மணி வாசகம்நூலையும் வெளியிட்டார். கீதையின் தமிழ் மொழி பெயர்ப்பு, “குயில்பாட்டு, “பாஞ்சாலி சபதம்ஆகியவற்றை  1912 –ஆம் ஆண்டு, தனது 30 –ஆம் அகவையில் பாரதியார் வெளியிட்டார் !

சிறைவாழ்வு:

புதுவையிலிருந்து வெளியேறுகையில் வெள்ளையர் அரசினால் 1918 –ஆம்  ஆண்டு தளைப்படுத்தடுகிறார். 34 நாள் சிறைவாழ்வுக்குப் பின் விடுதலையாகி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்குச் செல்கிறார். 1919 ஆம் ஆண்டு சென்னையில் இராசாசியின் வீட்டில் காந்தி அடிகளைச் சந்தித்து அவருடன் உரையாடுகிறார் !

புரட்சிக் கவிஞன்:

அரசியல் ஈடுபாடு மிகுதியானாலும். தமிழ் ஆர்வம் அவருள் கனன்று கொண்டே இருந்தது ! சமற்கிருதமே உயர்ந்த மொழி என்று சொல்லாலும் செயலாலும் மெய்ப்பித்து வரும் பார்ப்பன குலத்தில் பிறந்தாலும், ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்என்று 120 ஆண்டுகளுக்கு முன்பே எழுச்சிப் பாடலை இசைத்தவன் பாரதி ! “நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வாரடிகிளியே ! வாய்ச்சொல்லில் வீர்ரடி !” என்று பாரதி அன்று பாடிய பாடல் இன்றும் நமக்குப் பொருந்துகிறது ! உறங்கிக் கிடந்த தமிழ்க் குமுகாயத்தை ஓங்கி முதுகில் தட்டி விழிப்படைய வைத்தவன் பாரதி ! இத்தகைய எழுஞாயிறு சென்னையில் தன் பணிகளைத் தொடர விரும்பியது தமிழுக்கு இழப்பாகிப் போயிற்று ! !

சென்னை வாழ்வு:

சுதேசமித்திரன் செய்தி இதழில் மீண்டும் உதவி ஆசிரியராக 1920 –ஆம் ஆண்டு சேர்கிறார். நிறையக் கட்டுரைகள் எழுதி விடுதலை உணர்வை வீறிட்டு எழச் செய்கிறார். திருவல்லிக் கேணிப் பகுதியில் குடியிருப்பு !

திருவல்லிக் கேணி கோயில் யானைக்கு வாழைப்பழம் தருகையில் 1921 -ஆம் ஆண்டு சூலைத் திங்களில் தூக்கி வீசப்பட்டு, குவளைக் கண்ணனால் காப்பாற்றப்படுகிறார். ஆனால் அதிர்ச்சியில் நோயுறுகிறார் !

மறைவு:

1921 –ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 –ஆம் நாள் நள்ளிரவு  1-30 மணிக்கு பாரதியாரின் உயிர் பிரிகிறது ! அகவை 39 நிறையாத ஆலமரம் வீழ்ந்தது !

இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பேபாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ ? சொல்வீர் !””  என்று புரட்சிப் பாடல் இசைத்த எழிற் கவிஞன் மறைந்து போனான் !

சூத்திரனுக்கு ஒரு நீதி ! – தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி ! சாத்திரம் சொல்லிடு மாயின்அது சாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்! “ என்று புரட்சிப் பூக்களை  யாத்த பூங்குயில் மறைந்து போனது !

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர் ! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் ! “ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மை பார்த்து விழிப்படையச் சொல்லி சாட்டையைச் சுழற்றிய மாமேதை மறைந்து போனான் !

முடிவுரை:

நாம் தான் இன்னும் விழிக்க வில்லை ! தமிழ் வழிக் கல்விக்கு மூடு விழா நடத்துகிறோம் ! ஆங்கிலவழிக் கல்விக்கு அரசாணை வெளியிடுகிறோம். பிற மொழி கலந்து பேசுவதைப் பெருமையாக நினைக்கிகிறோம் ! கடைகளின் பெயர்களில் தமிழுக்கு இடமளிக்க மறுக்கிறோம் ! கவலைப் படாமல்ஹைக்கூவுக்கு வெண்சாமரம் வீசுகிறோம் ! திருவள்ளுவர் ஆண்டையும், தூய தமிழ் மாதங்களையும் முகநூல் இடுகைகளில் எடுத்தாள வெட்கப்படுகிறோம் !

பார்ப்பன குலத்தில் பிறந்தாலும், பார்ப்பனீயக் கொள்கைகளை மறுத்துபார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே ! வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே ! “ என்று புரட்சி செய்த பாரதியாரின் துணிச்சல் நமக்கு ஏன் இல்லாமற் போயிற்று ?


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{தி.:2050, சிலை (மார்கழி) 03]
{19-12-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------