name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 01/21/21

வியாழன், ஜனவரி 21, 2021

புறநானூறு (51) நீர் மிகின் சிறையும் இல்லை !

தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலுமில்லை  !

                                         *******

சீறி வரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்த வல்லமையுள்ள அணைகள் எதுவுமில்லை. கடுமையாக பற்றிப் பரவி வரும் தீச் சுவாலையிடமிருந்து உயிரினங்களை மீட்பதற்கு தடுப்புக் குடைகளும் ஏதுமில்லை. மிகுந்து வரும் காற்றை எதிர்த்து நிற்கும் வலிமை யாருக்கும் இல்லை. வெயிலின் பெரு வெளிச்சத்தையும் நம்மால் தடுக்க இயலாது !

அதுபோல, பாண்டிய மன்னன் வழுதியை எதிர்த்து நிற்க இந்த நிலவுலகில் யாரும் இல்லை. தமிழ் கூறும் நல்லுலகம் (தமிழ்நாடு) எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை அவன் பொறுத்துக்கொள்ள மாட்டான். தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப் போரிடுவான் !

திறை செலுத்த வேண்டும் என்று வழுதி கேட்பானாகில், மறுப்பின்றி ஏற்றுக் கொள்வோர் தொடர்ந்து தமது நாட்டினை ஆட்சி புரியலாம். மாறாக, அவனது அரவணைப்பை இழந்துவிட்டால், அத்தகைய மன்னர்கள் மிகுந்த இரக்கத்திற் குரியவர் ஆகிவிடுவர். புற்றிலிருந்து கிளம்பும் ஈயல் ஒருநாள் வாழ்ந்து  அழிவது போல அவர்களின் வாழ்வும் அழிந்து போகும் !

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பற்றி ஐயூர் முடவனார் என்னும்  புலவர் பெருமான் பாடிய  புறநானூற்றுப் பாடல் இது ! பாண்டிய மன்னன் வழுதியின் வீறு மிகு வீரத்தை இதைவிட வேறு சொற்களில் விளக்கிக் கூறிட முடியாது !

பாண்டியன் வழுதியின் வீரத்தை மட்டும் இப்பாடல் வெளிப்படுத்தவில்லை;  அது வேறு சில உண்மைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது ! என்ன உண்மைகள் ?  அவை (01) நீர் மிகின், சிறையும் இல்லை  (02) தீ மிகின்,மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை (03) வளி மிகின், வலியும் இல்லை (04) ஒளி மிக்கு அவற்று ஓர் அன்ன ! இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு பாடல் 51.

------------------------------------------------------------------------------------------------------------

நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின்,

மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு

அவற்று ஓர் அன்ன; சினப் போர் வழுதி,

'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,

கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக்

கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே;

அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே-

நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த

செம் புற்று ஈயல் போல,

ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-------------------------------------

மிகின் = மிகுந்தால்; சிறை = தடுத்து நிறுத்தும் அணை; மன் உயிர் = இவ்வுலகில் வாழும் உயிரினங்கள்; நிழற்றும் = பாதுகாத்தல்; வளி = காற்று; வலியும் இல்லை = எதிர்த்து நிற்கும் வலிமை இல்லை; ஒளி மிக்கு = வெயிலின் பெரு வெளிச்சம் மிகுந்தால்; அவற்று ஓர் அன்ன = முன்பு கூறியதைப் போன்றதே.

சினப் போர் வழுதி = சோழ மன்னன் வழுதி போர்க்களத்தில் புகுந்து விட்டால் ; பொறாஅன் = பொறுக்க மாட்டான்; எதிர்ந்து = ஏற்றுக் கொண்டு ; கொண்டி = கப்பம்; வேண்டுவன் ஆயின் = திறை செலுத்துங்கள் என்று கேட்பானாயின் ; “கொள்கஎனக் கொடுத்த மன்னர் = திறை செலுத்த ஒப்புக் கொள்ளும் பிற மன்னர்கள்; நடுக்கு = பயம்; அற்றனரே = நீங்கி வாழலாம்.

அளியரோ அளியர் = பாவம் ! ; அவன் அளி இழந்தோரே = அவனது அன்பை இழந்தவர்கள்; நுண் பல சிதலை = நுண்ணிய கறையான்கள் ; அரிதின் முயன்று எடுத்த செம்புற்று = கடுமையாக உழைத்துக் கட்டிய செம்மண் புற்று; ஈயல் போல = புற்றிலிருந்து வெளி வரும் ஈசல் போல; உலமருவார் = அழிந்து போவார்.

----------------------------------------------------------------------------------------------------------

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2052, சுறவம் (தை),08]

{21-01-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

நீர்மிகின் சிறையும் இல்லை

புறநானூறு (47) வள்ளியோர்ப் படர்ந்து !

புள்ளின் போகி, நெடிய என்னாது !

                                     ***********

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என இரு சோழ மன்னர்கள், சோழ நாட்டின் இருவேறு பகுதிகளை ஆண்டு வந்தனர்.  இருவருக்கும் இடையே நட்பு  மலரவில்லை; பகைமைதான்  பற்றிப் படர்ந்து  வந்தது !

இந்தச் சூழ்நிலையில்  நலங்கிள்ளியின் நாட்டைச் சேர்ந்த  இளந்தத்தன் என்னும் புலவர்  நெடுங்கிள்ளி நாட்டின் தலைநகரான உறையூருக்கு  வருகிறார்.  இதைக் கண்ணுற்ற மனக்கோட்டம் கொண்ட சில மனிதர்கள், மன்னன் நெடுங்கிள்ளியிடம் சென்று இளந்தத்தன் வருகை பற்றித் திரித்துக் கூறுகின்றனர் !  அவன் நம் பகை நாட்டைச் சேர்ந்த ஒற்றனாக இருக்கக் கூடும்  என்று நாங்கள் கருதுகிறோம் என்றனர்.

நெடுங்கிள்ளியின் மனதில்  அயிர்ப்பு (ஐயம்) குடிகொண்டது . இளந்தத்தனைக் கொன்றுவிடுவது என்னும் முடிவுக்கு வருகிறான். காவலர்களை அழைத்து , நம் நகருக்குள் புகுந்திருக்கும் ஒற்றன் இளந்தத்தனைக் கொன்று வாருங்கள் எனக்  கட்டளை இடுகிறான் !

அரசனது அவையில் வீற்றிருந்த கோவூர் கிழார் என்னும்  பெரும் புலவர், மன்னனின் கட்டளையை கேட்டுப் பதறிப் போகிறார். இளந்தத்தனையும்  அவனது  வரலாற்றைப் பற்றியும்  அறிந்திருந்த  கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் ஒரு பாடல் மூலம் தம் மனக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார் !

மன்னா ! வறுமையில் வாடும் புலவர்கள் மன்னர்களை நாடிச் சென்று, அவர்களைப்   பற்றிப் பாடிப் பரிசில் பெறுவது  வழக்கம் ! இளந்தத்தனும் அந்த எண்ணத்துடன் தான் உறையூருக்கு வந்திருக்க வேண்டும்; அவனை நம் எதிரிகளின் ஒற்றன் என்று கருதக் கூடாது; பிழையான முடிவுக்கு  மன்னர்  வரலாகாதுஎன்னும் கருத்தை, மறைமுகமாக தன் பாடல் மூலம் உணர்த்துகிறார் !

கோவூர் கிழாரின் பாடலைக்  கேட்ட நெடுங்கிள்ளி தன் முடிவை மாற்றிக் கொள்கிறான். இளந்தத்தனை அரசவைக்கு அழைத்து வருமாறு காவலர்களைப் பணிக்கிறான் ! கோவூர் கிழார் மன்னனின் மனதை எப்படி மாற்ற முடிந்தது ?  அவரது பாடலைப் பாருங்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு, பாடல் (47)

-------------------------------------

வள்ளியோர்ப் படர்ந்துபுள்ளின் போகி,

நெடிய என்னாது  சுரம்பல கடந்து,

வடியா நாவின் வல்லாங்குப் பாடி,

பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,

ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,

வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீதறிந் தன்றோ ? இன்றே; திறப்பட

நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,

ஆங்கினிது ஒழுகின் அல்லது, ஓங்குபுகழ்

மண்ணாள் செல்வம் எய்திய

நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

-------------------------------

மன்னா ! வரையாது  கொடுக்கும் வள்ளல்களை  நாடி வருவது புலவர்களின் வழக்கம் ! அப்படி வருகையில்மன்னனின் தலைநகர் நெடுந்தொலைவில் இருக்கிறதே என்று மலைப்புக் கொள்ளாமல், கடுமையான பாலை நிலங்களையெல்லாம் கடந்து துன்பப்பட்டு  வந்து சேர்கின்றனர் .

அவர்கள், பழமரம் இருக்கும் திசை நோக்கிப்  பறக்கும் பறவைகள்  !வள்ளல்களைப் பார்த்துதம் நாவால்  பாமாலை சூட்டுவதும், பரிசில்கள்  பெறுவதும், பெற்ற செல்வங்களை எண்ணி மகிழ்வதும் புலவர்களின் மனதில் உறைந்து கிடக்கும்  நல்வழக்கம் ! பெற்ற பரிசில்களைத் தனக்காகதனது பிற்காலத்திற்காகதன்னிடமே வைத்துக் கொள்ளாது, பிறர்க்கும் குறைவின்றிக் கொடுப்பது தான் புலவர்களின் இயல்பு !

தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக நன்றியுடன் நினைத்து மகிழ்வதே புலவர்கள் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை பிறர்க்கு ஈத்துவக்கும் வாழ்க்கை - வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டார்கள் !

கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள் புலவர்கள் . அது மட்டுமல்லாமல், உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போலவே  அவர்களும் தம் புலமையால் செம்மாப்பு உடையவர்கள் ! அவர்கள் பிறர்க்குத் தீமை செய்ய ஒருநாளும் துணிய மாட்டார்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

கோவூர் கிழார் தன்  பாடல் மூலம் மறைமுகமாகத் தனக்குச் சொன்ன செய்தியை உணர்ந்து, இளந்தத்தனைக் கொல்லும் முடிவினைச் சோழன் நெடுங்கிள்ளி கைவிட்டான் ! 

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

வள்ளியோர் = வரையாது கொடுக்கும் வள்ளல்கள்; படர்தல் = நினைத்தல்;  புள் = பறவைசுரம் = பாலைவழி ; வடியா = தீங்கு உரையாதஅருத்தல் = உண்பித்தல்ஓம்புதல் = பாதுகாத்தல்; கூம்பல் = ஊக்கங்குறைதல். வீசுதல் = வரையாது கொடுத்தல்; வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு; பரிசில் = கொடை, ஈகைதிறம் = திறமை (அறிவு); திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்; நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்). 11. செம்மல் = தருக்கு (பெருமிதம்).

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[veda70.vv@gmail.com]

(தி.பி,2052, சுறவம் (தை) 08)

21-01-2021

------------------------------------------------------------------------------------------------------------

வள்ளியோர்ப் படர்ந்து

புறநானூறு (45) இரும்பனை வெண்தோடு மலைந்தோன் !

ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே !

-----------------------------------------------------------------------------------------------------------

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்று இரண்டு மன்னர்கள். இருவருமே சோழர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதுவதற்குத் தயாராக நின்றார்கள். அந்த நேரத்தில், கோவூர்கிழார் என்னும் புலவர் அவர்களைச் சந்திக்கச் சென்றார். இருவரிடமும் சமாதானம் பேசி, போரை நிறுத்த முயன்றார். அப்போது அவர் பாடிய பாடல் இப்படித் தொடங்குகிறது:
------------------------------------------------------------------------------------------------------------
புறநானூறு.பாடல்.45
-------------------------------------------------------------------------------------------------------------

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்,
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே,
ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே.'
-----------------------------------------------------------------------
பொருளுரை;
-----------------------------------------------------------------------
'மன்னா, எதிரே நிற்பது யார் என்று பார். அவன் கழுத்தில் என்ன மாலை இருக்கிறது என்று கவனி.'
'அவன் கழுத்தில் பனம்பூ மாலை இருக்கிறதா? இல்லை!'
'அப்படியானால், உன்னை எதிர்த்து நிற்பவன் பனம்பூ அணிந்த சேரன் இல்லை!'
'அவன் கழுத்தில் வேப்பம்பூ மாலை இருக்கிறதா? இல்லை!'
'அப்படியானால், உன்னை எதிர்த்து நிற்பவன் வேப்பம்பூ அணிந்த பாண்டியன் இல்லை!'
'அவன் கழுத்தில் உள்ளது, ஆத்திப்பூ.'
'இப்போது, உன் கழுத்தைப் பார். அங்கேயும் ஆத்திப்பூ.'
'ஆக, நீயும் சோழன், அவனும் சோழன். ஆத்திப்பூ அணிந்த ஒரு சோழனும் இன்னொரு சோழனும் மோதுகிறீர்கள்.'
'இந்தப் போரில் நீங்கள் இருவரும் வெல்லமுடியுமா?'
'வாய்ப்பில்லை. இருவரில் ஒருவர்தான் வெல்லமுடியும்.'
'அப்படியானால், தோற்கப்போவது ஒரு சோழன், இல்லையா?'
'நீயும் சோழன், அவனும் சோழன், ஒரு சோழன் தோற்பதற்கு இன்னொரு சோழன் காரணமாகலாமா? இந்தப் போரை விட்டுவிடுங்களேன். இருவரும் நண்பர்களாகி விடுங்களேன் !'
-------------------------------------------------------------------------------------------------------------

இப்படிச் சிறப்பாகப் பேசி, ஒரு போரையே நிறுத்திவிட்டார் கோவூர்கிழார். அதன்மூலம் பல உயிர்கள் காக்கப்பட்டன !
இதை படிக்கும் போது, அன்றைக்குத் தமிழ்ப் புலவர்கள் மீது, அரசர்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். மன்னர்களாகவே இருந்தாலும், அவர்கள் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும் துணிவு புலவர்களுக்கு இருந்தது என்பதை உணர்கிறோம் !
-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
-------------------------------------

இரும் பனை = கரிய பனைமரம் ; வெண் தோடு = வெண்மையான பூ; மலைந்தோன் = அணிந்தவன் ; கருஞ் சினை = கருமையான கிளைகளை உடைய  வேம்பின் = வேப்பம் பூ; தெரியலோன் = தொடுக்கப்பெற்ற மாலை ; நின்ன = நீ அணிந்திருக்கும்  ; கண்ணியும் = மாலையும் ; ஆர் = ஆத்திப் பூ ; மிடைந்தது = தொடுக்கப் பெற்றது; அன்றே = அல்லவா ; நின்னொடு = உன்னுடன் ; பொருவோன் = போரிட இருப்பவன்;  கண்ணியும் = அணிந்துள்ள மாலையும் ; ஆர் = ஆத்திப்பூ ; மிடைந்து = தொடுக்கப் பெற்றது; அன்றே = அல்லவா ; ஒருவீர் = உங்கள் இருவரில் யார் ஒருவர் ; தோற்பினும் = போரில் தோற்றாலும் ; தோற்பது = தோற்று துன்பத்தை எதிர்கொள்ளப் போவது ; உம் குடியே = உங்கள் இருவரது முன்னோர்களான  சோழர்களின்  குலமல்லவா ?

-------------------------------------------------------------------------------------------------------------

மூவேந்தர்களும் தங்களுக்கிடையே வேறுபாடு தெரிவதற்காக, இந்த மலர்களைச் சூடிக்கொண்டார்கள்:
------------------------------------------------------------------------------------------------------------
சேரர்கள்: பனம்பூ (போந்தை) 
பாண்டியர்கள்: வேப்பம்பூ (வேம்பு)
சோழர்கள்: ஆத்திப்பூ (ஆர்)

 ------------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050, மீனம்,16]

{30-03-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
இரும்பனை வெண் தோடு

புறநானூறு (30) செஞ்ஞாயிற்றுச் செலவும்

  கோள்களை நேரில் சென்று கணித்தது  போல்  !

                                                       *********

ஒரு நாள் சோழன் நலங்கிள்ளி  அரசவையில்  தனது அரியணையில் அமர்ந்திருக்கிறான்அவன் எதிரே கற்றறிந்த சான்றோர் பலர் தமது இருக்கைகளில் அமர்ந்திருக்கிறர்கள்அப்பொழுது உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் பெரும் புலவர் அரசவைக்கு வருகிறார் !

சோழன் நலங்கிள்ளி புலவரை வரவேற்று  இருக்கையில் அமரவைக்கிறான்.  சற்று நேரம்  நாட்டு நடப்புகளைப் பற்றி இருவரும் உரையாடுகிறார்கள் ! 

புலவரே தாங்கள் அண்டை நாடுகள் பலவுக்கும்  சென்று வந்திருப்பீர்கள்.  சோழ நாட்டைப் பற்றி அங்குள்ள மன்னர்களும் புலவர்களும் மக்களும் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூறுங்கள்.”

மன்னவா ! உனது  பூம்புகார்த் துறைமுகத்திற்கு நித்தமும் மரக்கலங்கள் பலவும் வந்து செல்கின்றன.  அவற்றில் ஏற்றி  இறக்கப்படும் பண்டங்கள் உன் நாட்டின் செழுமையைப் பறை சாற்றுகின்றன !

வலிமை மிக்கவன் நீ !  உன் வலிமையை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் அடக்கமாக ஆட்சி புரிகிறாய்.

ஞாயிறு என்னும் சூரியனின் பயணம், அது சூழ்ந்த மண்டிலம் (பிற கோள்கள்) காற்றின் திசை, காற்றே இல்லாத ஆகாயம் என இவற்றை எல்லாம் நேரில் சென்று அளந்தது போல் கணித்து சொல்வோர்  அண்டை நாடுகளில் இருக்கத்தான் செய்கின்றனர் !

ஆனால் அவர்களாலேயே கணிக்க முடியாத  அளவுக்கு   உன் வல்லமையை வெளிப்படுத்தாமல்   நீ மறைத்து வைத்திருகிறாய்.  அப்படி இருக்கையில் உன் வலிமையைப் பற்றி பிற மன்னர்களாலும், புலவர்களாலும்  எவ்வாறு கருத்தை வெளிப்படுத்த முடியும் ?   எவ்வாறு பாட முடியும் ?”

இதோ அந்தப் பாடல்:-

-------------------------------------------------------------------------------------------------------------

செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்

பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,

வளிதிரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றளந்து அறிந்தார் போல என்றும்

இனைத்துஎன் போரும் உளரே; அனைத்தும்

அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்

களிறுகவுள் அடுத்த எறிகல் போல

ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட

யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியும்

கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

-------------------------------------------------------------------------------------------------------------

 பொருள்:

--------------

காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள  உனது பூம்புகார்த் துறைமுகத்திற்கு   மரக்கலங்கள்  நிரம்பவும் வந்து செல்கின்றனதுறைமுகத்தில் நீரின் ஆழம் அதிகம் என்பதால் அவை பாய்மரத்தை  இறக்காமலும், பாரத்தைக் குறைக்காமலும் உள்ளே வர முடிகிறது.

உள்ளே  வரும்  மரக்கலங்களிலிருந்து இறக்கப்படும் பண்டங்கள்  இடைவழியெங்கும் சிதறிக் கிடகிகின்றன; அதை யாரும் பொருட்படுத்துவதில்லை ! அந்த அளவுக்கு உன் நாடு செல்வ வளம் மிக்கதாகத் திகழ்கிறது !

சூரியனின் செலவு  (பயணம்), அதன் இயக்கம், அதைச் சூழ்ந்து பிற கோள்கள் இயங்கும் மண்டிலம்காற்றின் திசை, காற்றே இல்லாத விசும்பு என  அவற்றை எல்லாம் நேரில் சென்று அளந்தது போல் கணித்து சொல்லக் கூடிய அறிவு படைத்தவர்கள்   உன் நாட்டிலும் அண்டை அயலிலும் இருக்கின்றனர் !

இத்தகைய  சான்றோர்கள்   கூட  கணிக்கமுடியாத  அடக்கம்  உடையவனாக நீ இருக்கின்றாய்போர்க்களத்தில் யானை, பகைவர்கள் மீது வீசுவதற்காகத் தன் கன்னத்தினுள் அடக்கி வைத்திருக்கும் கல்லைப் போல, உன் வலிமையானது  மாற்றார்களால் தெரிந்து கொள்ள முடியாதபடி மறைபொருளாகவே  (இரகசியம்)   இன்றும்  இருக்கிறது !

ஆகையால் உன் வலிமையைப் பற்றி  பிற மன்னர்களும், புலவர்களும் தம் கருத்தை வெளிபடுத்தி  எப்படிப்  பாடமுடியும் ? அவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்தினால் அல்லவோ யான் அவற்றை அறிய முடியும் ?

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:-

-------------------------------

செலவு = பயண வழி; பரிப்பு = இயக்கம்; மண்டிலம் = வட்டம்; வளி = காற்று; காயம் = ஆகாயம்; இனைத்து = இத்துணை அளவு; செறிவு = அடக்கம்; கவுள் = கன்னம் ; அடுத்தல் = சேர்த்தல்; துப்பு = வலிமை; கூம்பு = பாய்மரம்; மீப்பாய் = மேற்பாய்; பரம் = பாரம்; தோண்டல் = அகழ்தல் (எடுத்தல்); புகார் = ஆற்றுமுகம்; தகார் = தகுதி இல்லாதவர்; தாரம் = அரும்பண்டம்.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 08]

(21-01-2021)

------------------------------------------------------------------------------------------------------------

செஞ்ஞாயிற்றுச் செலவும்