அங்குக் கண்டேன், அப்படிக் கேட்டேன், அந்தப் பையன் = சரி !
சந்திப் பிழைகளைப் பற்றியும்
சென்ற அதிகாரத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சொல்லுடன்
மற்றொரு சொல் சேரும்போது இடையில் புது எழுத்துத் தோன்றுவது சந்தி (எ-டு) கொத்தி + தின்றது = கொத்தித் தின்றது). இன்னொரு வகைச்சந்தியில், இடையில் எழுத்துகள் உருமாறும். (எ-டு) முன் + பிறப்பு + முற் பிறப்பு) இவ்விரண்டில், முதல் வகைச் சந்திகளில் பிழை நேராமல் காத்துக்கொள்வது இன்றியமையாதது.
இரண்டாவது வகைச் சந்திகளில்
இடையில் மாற்றம் செய்யாமல் எழுதுவதால் குறையில்லை. (முன்
+ பிறப்பு = முற்பிறப்பு, இதை முன்பிறப்பு என்றும் எழுதலாம்) இதுவே தமிழறிஞர்கள்
பலரின் கருத்து. இஃது அவர்கள் கையாளும் முறையும் ஆகும்.
------------------------- முதல்வகை-------------------
.........பிழை..........................................திருத்தம்...................
-------------------------------------------------------------------------------------
கைபட........................................கைப்பட
அதை கொடுத்தேன்............அதைக் கொடுத்தேன்
மிக பொருத்தம்......................மிகப் பொருத்தம்
இதற்கு தேவை........................இதற்குத் தேவை
நாளைக்கு செல்வோம்........நாளைக்குச் செல்வோம்
மர பெயர்..................................மரப் பெயர்
சிரா பள்ளி................................சிராப் பள்ளி
மதுரை கல்லூரி.....................மதுரைக் கல்லூரி
தமிழ் பணி மன்றம்...............தமிழ்ப் பணி
மன்றம்
வாழ்த்தி சென்றார்................வாழ்த்திச் சென்றார்
கனா கண்டேன்......................கனாக் கண்டேன்
ஆற்று படை.............................ஆற்றுப் படை
உர தொட்டி...............................உரத் தொட்டி
--------------------------------------------------------------------------------------
மேற்கண்ட சொற்களிலும், இவை போன்றவற்றிலும் இடையில் “க், “ச்”,”த்”, “ப்”, இவ்வெழுத்துகள் இடம் பெறவில்லையானால் ஓசை இழுக்கும். சொல்லிப் பாருங்கள், உங்களுக்கே தெரியும். எனவே, இத்தகைய
சந்திப் பிழைகள் நேராமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அங்கு, இங்கு, எங்கு;
அப்படி, இப்படி, எப்படி;
அந்த, இந்த, எந்த;
இச்சொற்களுக்கு முன்னே ( அதாவது இச்சொல்லை அடுத்து ) வருமொழி முதலில் வரும் எழுத்து
( வருகின்ற சொல்லின் முதலெழுத்து ) வல்லினம் ஆயின்
( க, ச, ட, த, ப, ற ), மிகும். அங்குக் கண்டேன், அப்படிக்
கேட்டேன், அந்தப் பையன், இவ்வாறு.
(வல்லினத்தில் “க”, “ச”,
”த”, “ப” ஆகிய நான்கு மட்டுமே
ஒரு சொல்லில் முதல் எழுத்தாக வரும். “ட”, “ற” இரண்டும் அவ்வாறு வராது,.
(டப்பா,
டமாரம், டபேதார், டபாய்த்தல்,
டிமிக்கி, டூ விடுதல், டெங்கு
சுரம், டேரா, டேவணித் தொகை, டேக்கா கொடுத்தல், றெக்கை, றெண்டு, போன்றவை தமிழ்ச்
சொல் அன்று என்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்கும்)
-------------------------------------------------------------------------------------
அங்கு + காண் = அங்குக் காண் !
அங்கு + செல் = அங்குச் செல் !
அங்கு + தருக = அங்குத் தருக !
அங்கு + போ = அங்குப் போ !
இங்கு + கவிழ் = இங்குக் கவிழ் !
இங்கு + சாப்பிடு = இங்குச் சாப்பிடு !
இங்கு + தாங்கு = இங்குத் தாங்கு !
இங்கு + பார் = இங்குப் பார் !
அப்படி + கொடு = அப்படிக் கொடு !
இப்படி + பார் = இப்படிப் பார் !
அந்த + கிண்ணம் = அந்தக் கிண்ணம் !
எந்த + படம் = எந்தப் படம் ?
-----------------------------------------------------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர்
கீ.இராமலிங்கனார் எழுதிய
“தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,30]
{15-08-2019}
----------------------------------------------------------------------------------------------------------