எளிய மனிதன் வாழ்வில் ஏற்றம் பெறுவதும் உண்டு !
*********
நலங்கிள்ளி பத்தாம் வகுப்புப் படித்து முடித்து விட்டு, வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். வேலை கிடைத்தபாடில்லை ! ஒரு நாள் மனச் சோர்வுடன் குளக்கரை ஆல மரத்தடியில் வந்து அமர்ந்தான் !
அங்கு நிழலில் படுத்திருந்த ஒரு முதியவர், அவனைப்
பார்த்து, “ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய் ? என்ன காரணம் ?” என்று அன்பாகக் கேட்டார். நலங்கிள்ளி
தன் சோர்வுக்கான காரணத்தைக் கூறினான் !
முதியவர் அவனுக்கு மனத்தெம்பூட்டும் வகையில் பேசினார். அவரது பேச்சில் ஈர்ப்புக் கொண்ட நலங்கிள்ளி, அவரைப்
பற்றி உசாவினான். தான் கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒரு இரவலர்
என்றும், தனக்குக் குடும்பமோ பிள்ளை குட்டிகளோ கிடையாது என்றும் கூறினார் !
நலங்கிள்ளியின் இல்லத்தில் அவனது தந்தை, தாய், ஒரு
தங்கை அவன் உள்பட நான்கு பேர் உள்ளதாகவும், தந்தை
கூலித் தொழிலாளி என்றும் அவரது வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டுமெ போதுமானதாக இருப்பதாகவும் கூறினான்
!
அவனது பேச்சினைக் கேட்ட முதியவர், வேலை கிடைக்காவிட்டால்
என்ன, சிறிய அளவில் கடை வைத்து வருவாய் ஈட்டலாமே என்று தனது கருத்தை
எடுத்துச் சொன்னார் !
கடை வைக்கும் அளவுக்கு முதலீடு செய்யத் தன் தந்தையிடம் பணமில்லை என்பதை நலங்கிள்ளி அவரிடம் எடுத்துச் சொன்னான். அதைக்
கேட்ட முதியவர், ” தம்பி
! கடை வைக்கலாம் என்பதை நீ ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பணத்திற்கு நான் வழிவகை
செய்கிறேன்” என்றார்
!
அவரை வியப்புடன் நோக்கிய நலங்கிள்ளி,” ஏற்றுக்
கொள்கிறேன் ஐயா !” என்றான். அவர், “வா ! உன்
வீட்டிற்குச் செல்வோம்”
என்று அழைத்தார். இருவருமாக, நலங்கிள்ளி
வீட்டை அடைந்தனர். நலங்கிள்ளியின் தந்தையுடன் முதியவர் கலந்து உரையாடினார் !
நலங்கிள்ளியின் தந்தையிடம் அவர், “ஐயா ! என்னிடம்
பத்தாயிரம் உருபா பணம் இருக்கிறது,
பிச்சை எடுத்துச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கிறேன். அதைத்
தருகிறேன். அதை வைத்து நலங்கிள்ளி சிறிய அளவில் ஒரு கடை தொடங்கட்டும்” என்றார் !
”உங்கள் கருத்தை ஏற்றுக்
கொள்வதானால், நான் சொல்வதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; உங்களுக்கோ
குடும்பம் , மனைவி, மக்கள்
என்று ஏதுமில்லை என்கிறீர்கள்; அப்படி
இருக்கையில் , நீங்களும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன் சேர்ந்து வாழ ஒப்புக் கொள்வதானால், உங்கள்
கருத்தை ஏற்றுக் கொள்கிறோம்”
என்றார்
!
இருதரப்பினரும் ஒப்புக்கொள்ள, ஒரு நல்ல நாளில் நலங்கிள்ளி
சிறிய அளவில் கடை ஒன்றைத் திறந்தான். ஊர் மக்கள் மெல்ல
மெல்ல அவன் கடையில் பொருள்கள் வாங்கத் தொடங்கினர் !
ஆனால், ஊர் மக்களில் இன்னொரு பகுதியினர், சின்னஞ்சிறிய
கடையை வைத்துக் கொண்டு நலங்கிள்ளி எப்படிப் பிழைக்கமுடியும், கடைக்கான
முதலீடு போதாது; கடையை விரைவில் இழுத்து மூடிவிடுவான் என்று கேலி பேசலானார்கள் !
நலங்கிள்ளியை இளக்காரமாகப் பார்க்கலானார்கள் ! அவன் செய்திருப்பது சிறு முதலீடு என்றாலும், அதையே ஊர்க்காரர்களில் சிலர் பேசு பொருளாக மாற்றி அவனைச் சிறுமைப்படுத்த முயன்றார்கள் !
ஊர்க்காரர்களின் இளக்காரப் பேச்சு நலங்கிள்ளியை உசுப்பி விட்டது. கடுமையாக உழைத்தான்; கடை
வணிகம் சூடு பிடித்தது.
ஆதாயம் பெருகியது; கடை
விரிவாகியது; எந்தப் பொருளைக் கேட்டாலும் “இல்லை” என்று
சொல்லாத அளவுக்கு, அவன் பொருள்களை வாங்கி இருப்பு வைத்தான் !
ஏழை வீட்டுப் பையனாக
இருந்த நலங்கிள்ளி, முதியவரின் பண உதவியாலும், தனது
கடுமையான உழைப்பாலும், நேர்மையான செயல்படுகளாலும், தனது
கடையை விரிவு படுத்தி, அதைச் சிறப்பங்காடி (SUPER MARKET) என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறான் !
இதைத் தான் பண்டைப் புலவர் முன்றுறை அரையனார் தனது பாடல் மூலம் உலகோருக்கு அறிவிக்கிறார்,’”ஒருவனிடம் உள்ளது மிகச்
சிறிய முதலீடு
என்றாலும், ஊர்க்காரர்கள் அதை இளக்காரமாக எண்ணலாகாது; ஏனெனில்
கடைத் தெருவிலே கிடைத்ததை உண்டு வாழும் பழைய கன்று என்றாலும், பிற்காலத்தில்
அது வீறு மிக்க ஏறு (கம்பீரமான காளை) ஆதலும்
உண்டு” !
இதோ அந்தப் பாடல்
!
---------------------------------------------------------------------------------------------------------
பழமொழி நானூறு
(பாடல்.108)
--------------------------------------------------------------------------------------------------------
உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும்; இலங்கிழாய் ! – தள்ளாது
அழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு.
---------------------------------------------------------------------------------------------------------
பாடலின் கருத்துரை:
-----------------------------------
ஒரு மனிதனிடம் உள்ளது
மிகச் சிறிய செல்வம் தான்
(முதலீடு தான்) என்று தெரியவந்தாலும் உள்ளூர்க்காரர்கள் அவனை ஏளனம் செய்யக் கூடாது ! இளக்காரமாகப்
பார்க்கக்கூடாது ! ஏனெனில், இன்று
கடைத்தெருவில் திரிந்து அலைந்து
, கிடைத்தவற்றை உண்டு வாழும் சிறு கன்று கூட பிற்காலத்தில் வீறுமிக்க ஏறாக (காளையாக) வளர்ச்சி
அடையக் கூடும் !
கருத்துச் சுருக்கம்:
-------------------------------
கைம்முதல் சிறிதேயானாலும்,
விடாமுயற்சியால் அதனைப் பெரிதாக்கி, தன்னை
இகழ்ந்த ஊர்மக்கள் மெச்ச வாழமுடியும் ! முயற்சிதான் வேண்டும் !
----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
--------------------------------------
உள்ளூர் அவரால்
= உள்ளூர் மக்களால் ; உணர்ந்தாம்
முதலெனினும் = மிகச் சிறிய முதலீடே என்று உணரப்பட்டாலும் ; எள்ளாமை வேண்டும் = இளக்காரமாகப்
பார்க்கலாகாது ; இலங்கிழாய் = ஒளிமிக்க அணிமணிகளைப்
பூண்டவளே !; தள்ளாது
= ஒதுக்கிவிடாது ; அழுங்கல் = ஆரவாரம்
நிறைந்த ; முதுபதி = பமையான
ஊர் ; அங்காடி = கடைத்
தெரு ; மேயும் பழங் கன்று = அலைந்து
திரிந்து கிடைத்ததை உண்ணும் கன்று; ஏறு
= பிற்காலத்தில் வீறு மிக்க காளையாக ; ஆதலும்
உண்டு = வளர்ச்சி பெறுவதும் உண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் +இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.பி:2052, சுறவம் (தை) 20]
(02-02-2021}
-------------------------------------------------------------------------------------------------------------