name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 08/19/19

திங்கள், ஆகஸ்ட் 19, 2019

புதிய தமிழ்ச் சொல் (43) மடலாட்டம் ( CRICKET )

 மடலாட்டம்  = CRICKET 

-----------------------------------------------------------------------------------------------------------

இடைநிலை அகவையினரையும், இளநிலை அகவையினரையும் இன்று ஆட்டிப் படைக்கும் விளையாட்டுப் போட்டியாக மடலாட்டம் (CRICKET MATCH) திகழ்கிறது. முழுவதும் ஆங்கிலச் சொற்களே ஆளுமை பெற்றிருக்கின்ற இப்போட்டியைத் தமிழில் நேர்முக வண்ணனை செய்யப் பல்லாண்டுகள் முன்பு திரு.அப்துல் ஜப்பார், திரு. பாலு அழகண்ணன் ஆகியோர் முயன்றனர் !



வானொலி மூலமாக நிகழ்ந்த நேரடி வண்ணனையில் அவர்கள் ஓரளவே வெற்றி பெற முடிந்தது. மடலாட்டம் தொடர்பான ஆங்கிலச் சொற்கள் தமிழாக்கம் செய்யப்படாத காலம் அது. இனி எத்துணைக் காலம்தான் ஆங்கிலவழி நேர்முக வண்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பது ? இப்போக்கினை மாற்ற முயல்வோமே !



பெயர்ச் சொற்கள் மூன்று வகைப்படும் என்கிறது நன்னூல். இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின” (நூற்பா 62). அவை (01) இடுகுறிப் பெயர் (02) காரணப் பெயர் (03) காரண இடுகுறிப் பெயர். மரம்என்பது இடுகுறிப் பெயர். மரம் என்று ஏன் பெயர் வந்தது என்று யாரும் காரணம் சொல்ல முடியாது. இத்தகைய பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் !



எரிபொருள் என்பது காரணப் பெயர். எரிகின்ற தன்மை உடையதால் இது எரி பொருள் என்று வழங்கப்படுகிறது. கன்னெய் (PETROL) ஒரு எரி பொருள். எரிபொருள் என்ற பெயர் வந்தமைக்கு நாம் காரணம் சொல்ல முடிகிறது இத்தகைய பெயர்கள் காரணப் பெயர்கள் ஆகும் !



கருப்பையன் என்பது கரிய நிறத்தின் காரணமாக மனிதனுக்கு அமைந்த காரணப் பெயர். ஆனால் சிவப்பாக இருப்பவனுக்கும் கருப்பையன்எனப் பெயர் வைக்கப்படுகிறது. கருப்பையன்என்னும் காரணப் பெயர், இங்கு சிவப்பாக உள்ளவனுக்கும் காரணமே இல்லாமல் வைக்கப்படுவதால் இடுகுறிப் பெயராகவும் அமைகிறது !



காரணத்தின் அடிப்படையில் உருவான இத்தகைய பெயர்கள் பிற நிறத்தவருக்கும் இடுகுறியாக வைக்கப்படுவதால், இவை காரண இடுகுறிப் பெயர்கள் ஆகின்றன !



பிறமொழிகளிலிருந்து ஒரு சொல்லைத் தமிழாக்கம் செய்கையில் காரணப் பெயராக மட்டுமே இருத்தல் வேண்டும் என்னும் தவறான கருத்து படித்த மக்கள் பலரிடையே காணப்படுகிறது. NAIL CUTTER என்பதை நகம் வெட்டிஎன்று மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறோம் !



அமைகின்ற தமிழ்ச் சொல் காரணப் பெயராக மட்டுமே இருத்தல் வேண்டும் என்னும் தவறான கருத்தின் அடிப்படையில் மொழி பெயர்ப்பு செய்யப் பெற்றிருப்பது இச்சொல் !



அருவி என்பது அழகிய தமிழ்ச் சொல். அருவி கொள் உழு வியன்..என்கிறது புறநானூறு (105). “அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து..என்பது நற்றிணைப் பாடல் (399). இதை ஆங்கிலேயர்கள் WATER FALL என்றனர் !



ஆர்வக் கோளாறின் காரணமாக சில தமிழர்கள் இதைச் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்து நீர் வீட்சி” (WATER = நீர் ; FALL = வீழ்ச்சி) என்று பெயர் சூட்டி உலவ விட்டுவிட்டனர். இவர்கள் அருவியில் குளித்தது இல்லை போலும் !



இத்தகைய மொழி பெயர்ப்புச் சொற்கள் தான் தொலைக்காட்சி”, “தொலைபேசி”, “கரைப்பான்”, “அழிப்பான்”, ”வடிகட்டி”, ”குளிரூட்டி”’ ”இயக்குநர்”, “ஓட்டுநர்”, “நடத்துநர்எல்லாம். ஆங்கிலச் சொல் உரைக்கும் அதே காரணத்தை அல்லது பண்பைத் தமிழ்ச் சொல்லிலும் கொண்டுவர வேண்டும் என்னும் தவறான கருத்து தான் இதற்குக் காரணம் !



காரணப் பெயர்அன்றி, “இடுகுறிப் பெயர்”, ”காரண இடுகுறிப்பெயர்என வேறு இரு வகைகளும் இருக்கின்றன என்பதை மொழியாக்கம் செய்ய நினைப்போர் கருத்திற் கொள்ள வேண்டும் !



கிரிக்கெட் என்பதற்கு ஒவ்வொன்றிலும் 11 ஆட்கள் கொண்ட இரண்டு அணிகள், பந்து, மட்டைகள், முளைக் குச்சிகள் துணையுடன் திறந்த வெளித் திடலில் ஆடுகின்ற ஒரு விளையாட்டுஎன்று பொருள் சொல்கிறது எருதந்துறை ஆங்கில அகரமுதலி. ( OPEN AIR GAME PLAYED WITH BALL, BATS AND WICKETS, BETWEEN TWO SIDES OF ELEVEN PLAYERS EACH – OXFORD ENGLISH DICTIONARY ).



ஆங்கிலத்தில் 16 சொற்களில் சொல்லப்படும் ஒரு கருத்தைத் தமிழில் ஒரே சொல்லில் உள்ளடக்கி இவ்விளையாட்டுக்குப் பெயர் சூட்ட முடியாது !



இக்காரணத்தால் தான் கிரிக்கெட்என்பதை மட்டைப் பந்தாட்டப் போட்டி”, “துடுப்புப் பந்தாட்டப் போட்டி” ”மட்டைப் பந்து விளையாட்டுப் போட்டிஎன்றெல்லாம் பலரும் பலவாறாக எழுதியும் பேசியும் வருகிறார்கள் !



இவை நீண்ட வடிவம் உடையவை. எழுதவும் பேசவும் எளிதாக இருக்கும் சொற்களே நிலைத்து நிற்கும். இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு, புதிய சொற்களைப் படைப்பதே பொருத்தம் உடையதாக இருக்கும் !



தென்னைமடல், பனைமடல், கமுகுமடல், ஈச்சைமடல், தாழை மடல் போன்ற சொல்லாடல்களைக் கேட்டிருப்பீர்கள். இங்கு மடல் என்னும் சொல் நீண்டு, ஒடுங்கிஇருக்கும் குருத்தோலைக் கற்றை அல்லது பூங்கற்றைப் பாளையைக் குறிக்கிறது !



வாழைப் பூவின் செந்நிற இதழுக்கும் மடல் என்று பெயர். தாழம் பூவில் தாதுக்களை மூடியிருக்கும் வெண்ணிற இதழுக்கும் மடல் என்றும் பெயர். வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண்தோட்டு...என்பது சிலப்பதிகாரம்.(1:6:175). கற்றாழையின் சதைப் பிடிப்பான இலைக்கு மடல் என்னும் பெயர் வழங்கப்படுகிறது !



இத்தகைய மடலை ஒத்த உருவ அமைப்புடைய கிரிக்கெட் பேட்டினை மடல்என்று மொழியாக்கம் செய்யலாம். இதைக் காரணப் பெயராக மட்டுமே பார்க்க வேண்டியதில்லை. காரண இடுகுறிப் பெயராகவும் கொள்ளலாம் !



மடல்என்பதை அடிப்படையாக வைத்து CRICKET என்பதை மடல் விளையாட்டுஎன்று மொழியாக்கம் செய்ய முடியும். CRICKET MATCH, மடற் போட்டி ஆகிறது. மடற்போட்டிஎன்பது பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) சற்று நிரடலாக இருந்தால் மடல் போட்டிஎன்றே அழைக்கலாம். மடலாட்டம்என்றும் அழைக்கலாம் !



ஆங்கிலத்திற்கு அடிமைப் பட்டு கிரிக்கெட்என்று பொருளே புரியாமல் புலம்புவதை விட, நமது தாய்த் தமிழில் மடற்போட்டி”, “மடலாட்டம்என்று அழைப்பதில் நமக்கு இழப்பு ஒன்றுமில்லை அல்லவா ?



STUMP என்பதற்கு வெட்டிய மரத்துண்டு என்று பெயர். இதற்குத் தமிழில் குச்சி, கம்பு, கழி, கோல், கழுந்து, முளை, தறி என்று பல சொற்கள் உள்ளன. தறித்த மரத்துண்டின் ஒரு முனையைக் கூர்மையாகச் சீவி, நிலத்தில் அடித்து ஊன்றி, அதில் மாட்டின் கழுத்தில் பிணைக்கப்பட்டுள்ள தும்பினைக் கொண்டு மாட்டைக் கட்டி வைப்பதால் தான் அதற்குக் கட்டுத் தறிஎன்று பெயர் வந்தது !



தறிஎன்பது மரக் கொம்பினால் ஆன முளை. ”STUMP”, ”தறிஇரண்டும் வடிவத்தில் ஒன்றே. ஆகையால் STUMP என்னும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் தறிஎன்போம். இந்த வகையில் LEG STUMP, MIDDLE STUMP, OFF STUMP என்பதை கால் தறி”, நடுத்தறி”, கடைத்தறி”, என்று மொழியாக்கம் செய்யலாம் !



CRICKET = மடலாட்டம், CRICKET MATCH = மடற்போட்டி, STUMP = தறி, என்று மொழியாக்கம் செய்தமைக்கான காரணத்தை முன் பத்தியில் பார்த்தோம் !



மடற்போட்டி நடைபெறுகையில் ஒருவர் பந்து வீசுவார். அவரை வீசுநர்” (BOWLER) என்போம். வீசப்படும் பந்தை, எதிர் முனையில் நிற்கும் வேறொருவர் எதிர்கொள்வார். இவருக்கு BATSMAN என்று பெயர். இவர், நடப்பட்டிருக்கும் மூன்று தறிகளுக்கு (STUMPS) முன்னதாக, இயங்கு களத்திற்குள் (POPPING CREASE) நின்று பந்தை அடித்து விளையாடுவார். தறிகளுக்கு (STUMPS) முன்னதாக இவர் நின்று விளையாடுவதால், இவரை முன்னவர்என்போம் !



BATSMAN என்பதைச் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்தால் மடல் மனிதன்அல்லது மடலாளர்அல்லது மடல் பிடிப்பாளர்என்று சொல்ல வேண்டி இருக்கும். இப்படித்தான் சொல்ல வேண்டுமா என்ன ? மடலைக் (BAT) கையில் பிடித்துக்கொண்டு தறிகளுக்கு (STUMPS) முன்பாக நிற்பவரை முன்னவர்” (BATSMAN) என்று சொன்னால் பொருந்தாமலா போகும் !



முன்னவர் என்று ஒருவர் இருக்கையில் பின்னவர்ஒருவரும் இருப்பது தானே முறை ! தறிகளுக்குப் (STUMPS) பின்னால் நின்றுகொண்டு, முன்னவரை (BATSMAN) ஏமாற்றி விட்டுப் பின்புறமாக ஓடி வரும் பந்தினைத் தடுத்துப் பிடிக்கும் ஆடகரைப் (PLAYER) பின்னவர் (WICKET KEEPER) என்று அழைக்கலாம் அல்லவா ?



WICKET KEEPER என்பதற்கு FIELD MAN STATIONED CLOSE BEHIND BATSMAN’S WICKET என்று பொருள் சொல்கிறது ஆங்கில அகரமுதலி. FIELDSMAN CLOSE BEHIND BATSMAN என்றால் பின்னவர்” (WICKET KEEPER) என்றுதானே பொருள் ! என்ன பொருத்தமான சொல் !



அடிக்கப்படும் பந்து (BALL) தடுத்து எடுக்கப்பெற்று தறிகளை (STUMPS) நோக்கி வீசி, அவற்றை வீழ்த்துவதற்கு முன், முன்னவரால் (BATSMAN) ஓடி எடுக்கப்பெறும் புள்ளிகளுக்கு “RUN” என்று பெயர். “RUN” என்பதை ஓட்டம்என்று மொழி பெயர்ப்புச் செய்து பயன்படுத்தி வருகிறோம். எத்தனை “RUN” எடுத்திருக்கிறார் என்று கேட்டால் எத்தனை புள்ளிகள்எடுத்திருக்கிறார் என்று கேட்பதாகத் தானே பொருள் ! “RUN” என்பதை இனி ஓட்டம்என்று சொல்லாமல் புள்ளிஎன்று சொல்வோமே !



முன்னவருக்கு (BATSMAN) எதிரில் மூன்று புறமும் உள்ள ஆடு திடல்” (GROUND) நன்புலம் (ON SIDE), புன்புலம் (OFF SIDE) என இரண்டாகப் பகுத்துப் பார்க்கப்படுகிறது. நன்புலம் (ON SIDE) என்றால் பந்தை அடிப்பதற்கு வாகான திசை (நல்ல திசை) என்று பொருள். புன் புலம் (OFF SIDE) என்றால் பந்தை அடிப்பதற்கு வாகு இல்லாத திசை (புல்லிய திசை) என்று பொருள் !



பந்து அடிக்கப்படும் திசையையும் தொலைவையும் வைத்து “MID ON”, ”MID OFF”, “LONG ON”, “LONG OFF” என்று திசைகள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை முறையே இடை நன்புலம்”, ”இடைப் புன்புலம்”, “கடை நன்புலம்”, “கடைப் புன்புலம்என்று தமிழாக்கம் செய்யலாம் !



அடிக்கப்படும் பந்தைப் பிடிப்பதற்கு அல்லது தடுப்பதற்கு (BATSMAN) முன்னவரைச் சுற்றி, “புலவர்கள்” (FIELDERS) (புலம் = களம் - புலத்தில் நிற்கும் வர்ர்கள் = களத்தில் நிற்கும் வீர்ர்கள்) பலர் நிற்பார்கள். இவர்கள் நிற்கும் இடங்களுக்கும் பெயர்கள் உள்ளன !



மடக்கு (COVER), மிகை மடக்கு (EXTRA-COVER), வழுவாய் (SLIP), ஓடை (GULLY), பக்கல் (POINT), குறுந்தாள் (SHORT-LEG), செந்தாள் (FINE-LEG), படர்க்கை (3rd Man) என்பவை பந்து பிடிப்புப் புலவர்கள் (FIELD MEN) நிற்கும் இடங்கள். முதல் வழுவாய் (First Slip), இரண்டாம் வழுவாய் (2nd Slip), மூன்றாம் வழுவாய் (3rd Slip) போன்ற இடங்களும் உண்டு !



பந்து, மடலில் பட்டு நன்புலம் (ON-SIDE) பக்கம் செல்லாமல், புன்புலம் (OFF-SIDE) பக்கம் முன்னவருக்குப் (BATSMAN) பின்னால் சற்றுப் பக்கவாட்டில் நழுவி அல்லது வழுக்கிச் சென்று விழும் இடம் வழுவாய்” (SLIP). (வழுவாய் = நழுவுதல், தவறுதல், தப்புதல், விலகுதல்). வழுவாயில் நிற்பவரை ஏமாற்றிவிட்டு அதற்கும் பின்னால் செல்லும் பந்தை மடக்கிப் பிடிப்பவர் நிற்கும் இடம் மடக்கு” (COVER). இவரையும் தாண்டிப் பந்து சென்றால், அதை மடக்கிப் பிடிக்கக் கூடுதலாக ஒருவர் நிற்கும் இடம் மிகை மடக்கு” (EXTRA COVER) !



முன்னவருக்கு (BATSMAN) அருகே, பக்கவாட்டில் (ALONG SIDE) புன்புலத்தில் (OFF-SIDE) குறுந் தொலைவில் ஒருவர் நிற்பார். அவர் நிற்குமிடம் பக்கல்” (POINT) எனப்படும். (பக்கல் = பக்கம் = SIDE). “பக்கல்”, “வழுவாய்இரண்டிற்கும் இடையில் குறுகிய நீரோடை போல் உள்ள பகுதி ஓடை” (GULLY) எனப்படும். [GULLY IS THE POSITION BETWEEN POINT AND SLIP. GULLY MEANS GUTTER, DRAIN, ARTIFICIAL CHANNEL, SINK ETC.]



முன்னவருக்கும் (BATS-MAN) பின்னவருக்கும் (WICKET-KEEPER) பின்புறமாகத் தொலைவில் எல்லைக் கோட்டருகே ஒரு புலவர்” (FIELDSMAN) நிற்பார். இவருக்குப் படர்க்கை” (3rd MAN) என்று பெயர். தமிழ் இலக்கணத்தில் இடங்களைக் குறிப்பிடும்போது தன்மை, முன்னிலை, படர்க்கை என்கிறோம். இதை ஆங்கிலத்தில் 1st PERSON, 2ND PERSON, 3RD PERSON என்பார்கள். 3RD PERSON என்பது மூன்றாவது இடத்தில் (படர்க்கையில்) நிற்கும் 3RD MAN தானே ! அவர் நிற்குமிடம் தன்மையும் அன்று; ”முன்னிலையும் அன்று; ”படர்க்கைஆகும். எனவே 3RD MAN = “படர்க்கை” !



LEG என்பதைக் கால்என்றும் தாள்என்றும் சொல்வோம். (தாள் பணிவோம் = கால்களைத் தொட்டு வணங்குவோம்) எனவே SHORT LEG = ”குறுந்தாள்”; FINE LEG = ”செந்தாள்” (FINE = செம்மை); DEEP FINE LEG = ”கடைத்தாள்” !



கதிப்புக் கொண்டு ஓடி வந்து விரைவாகப் பந்து வீசுதலைக் கதி வீச்சு” (FAST BOWLING) என்போம்; (கதித்தல் = விரைதல்). பந்து சுழன்று செல்லும்படி வீசுவதை (SPIN BOWLING) ”சுழல் வீச்சுஎன்போம்; ஓடி வராமல் நடப்பதைப் போல வந்து பந்து வீசுவதை (MEDIUM PACE) ”நடை வீச்சுஎன்போம்; பந்து ஆடுகளத்தில் (CREASE) குத்தி எகிறும் படி வீசுவதை (BOUNCER) ”எகிறு வீச்சுஎன்போம் !



முன்னவரின் (BATSMAN) காலடியில் பந்து தரையில் குத்தி எழும் வகையில் வீசப்படுவதை கால்வீச்சு” (YORKER) என்போம்; பந்து தரையில் குத்தி எழும் வகையில் வீசாமல் நேராக முன்னவரின் (BATSMAN) முகத்தை நோக்கி வீசப்படுவதை முகவீச்சு” (FULL TOSS) என்போம்; பந்து வீசுநர்” (BOWLER) இயங்கு களத்தைத் (POPPING CREASE) தாண்டி வந்து பந்து வீசுவதைப் பிழை வீச்சு” (NO BALL) என்போம்; முன்னவரை (BATSMAN) விட்டு, பந்து விலகி, வெளிப்புறமாகச் செல்லும் வகையில் வீசப்படுவதை அகல்வீச்சு” (WIDE BALL) என்போம் !



வீசப்படும் பந்து முன்னவரின் மடலில்” (BAT) அல்லது காற்காப்பில்” (LEG PAD) படாமல் களத்தினூடே (FIELD) செல்கையில் எடுக்கப்படும் புள்ளியை (RUN) “அடியாப் புள்ளி” (BYE-RUN) எனலாம்; முன்னவரின் (BATSMAN) ”மடலில்படாமல் காற்காப்பில்பட்டு, களத்தில் உருண்டு செல்கையில் எடுக்கப்படும் புள்ளியை” (RUN) “காற்புள்ளி” (LEG-BYE) எனலாம் !



அடிக்கப்பட்ட பந்து உருண்டு ஓடி எல்லைக் கோட்டினைக் கடந்து சென்றால், கிடைக்கும் புள்ளியை (RUN) “நான்மை” (BOUNDARY) (நன்னூல் நூற்பா.146.காண்க) எனலாம்; தரையில் படாமல் மேலாகவே பறந்து சென்று எல்லையைத் தாண்டி விழுந்தால் அதை அறுமை” (SIXER) எனலாம் ! (அறுமை = SIX; COLLECTION OF SIX; SIXFOLDNESS – தமிழ் ஆங்கில அகராதி தமிழ்ச் சங்க வெளியீடு)



வீசுநர்(BOWLER) தொடர்ச்சியாக, ஆறு தடவை பந்து வீசுவதை ஒரு அறுகால்” (OVER) என்று கூறலாம். (கால் = தடவை, முறை; அறுகால் = ஆறு தடவை) FIFTY OVER MATCH என்பதை ஐம்பது அறுகாற் போட்டி என்றும் TWENTY - TWENTY என்பதை இருபது அறுகாற் போட்டி என்றும் TEST MATCH என்பதை ஐநாட் போட்டி என்றும் கூறலாம் ! (ஐநாள் = ஐந்து நாள்).



=======================================================

மடலாட்டம் (CRICKET) தொடர்பான கலைச் சொற்கள்

================================================================

 

1St SLIP..................................= முதல் வழுவாய்

2nd SLIP..................................= 2 ஆம் வழுவாய்

3rd MAN..................................= படர்க்கை

3rd SLIP...................................= 3 ஆம் வழுவாய்

ABDOMINAL GUARD.............= இடைக்காப்பு

ARM PAD................................= தோட்காப்பு (தோள்+காப்பு)

BAIL.........................................= புள்

BALL........................................= பந்து

BAT..........................................= மடல்

BATSMAN OUT...................... = வீட்சி

BATSMAN...............................= முன்னவர்

BATTING SIDE.......................= அடியல் அணி

BATTING.................................= மடல் வீச்சு

BOUNCER .............................= எகிறு வீச்சு

BOUNDARY (RUN)................= நான்மை

BOUNDARY............................= எல்லை

BOUNDARY LINE..................= எல்லைக் கோடு

BOWLER.................................= வீசுநர்

BOWLING SIDE.....................= வீசல் அணி

BOWLING................................= வீசல்

BYE-RUN.................................= அடியாப்புள்ளி

BYE-RUNNER.........................= மாற்றோடி

CAPTAIN.................................= குரிசில்

CATCH....................................= பிடிகை

CATCH DROPPED................= தவறிய பிடி

CENTURY...............................= நூறு

CLEAN SWEEP.....................= அடலடி (அடல் = வலிமை)

CONSISTENCY......................= உறுதி

COVER...................................= மடக்கு

CREASE.................................= ஆடுகளம் (குறு.31.4)

CRICKET MATCH.................= மடல் போட்டி

CRICKET................................= மடல் ஆட்டம்

DEEP FINE LEG..................= கடைத்தாள்

DRESSING ROOM................= ஓய்வறை

DUCK OUT............................= சுழி வீட்சி (சுழி = Zero)

FITNESS.................................= தகைமை

EXTRA COVER.....................= மிகை மடக்கு

FAST BOWLING....................= கதிவீச்சு

FIELDER.................................= புலவர் (புலம்=களம்)

FIFTY OVER MATCH..........= ஐம்பது அறுகால் போட்டி

FINE LEG..............................= செந்தாள்

FLOOD LIGHT......................= அவிரொளி (அவிர்+ஒளி)

FULL LENGTH BALL...........= நெடுங்கள வீச்சு

FULL TOSS...........................= முகவீச்சு

GALLERY...............................= அமரகம் (அமர்+அகம்)

GLOVES.................................= கையுறை / கோதை

GOOD LENGTH....................= நெடுவீச்சு

GOOD SHOT........................= நேர்த்தியடி

HALF CENTURY..................= அரை நூறு

GROUND................................= ஆடுதிடல்

GULLY....................................= ஓடை

HELMET.................................= தலைச்சீரா

HURT-RETIRED.....................= ஊறோய்வு (ஊறு=காயம்)

INNER CIRCLE....................= உள்வட்டம்

INNINGS................................= ஆட்டை (வே.சொ.76)

IN-SWINGER..........................= அகப்பரிவு (உள் நோக்கிப் பரிதல்)

L.B.W. OUT...........................= தறிகால் வீட்சி

L.B.W......................................= தறிமுன் கால்

LEG BYE (RUN)..................= காற்புள்ளி

LEG PAD...............................= காற்காப்பு

LEG  UMPIRE......................= காற்புல நடுவர்

LEG SIDE..............................= கால் திசை

LEG STUMP..........................= கால் தறி

LONG OFF............................= கடைப் புன்புலம்

LONG ON..............................= கடை நன்புலம்

MATCH...................................= ஈடாட்டம்

MEDIUM PACE.....................= நடைவீச்சு

MID OFF................................= இடைப் புன்புலம்

MID ON..................................= இடை நன்புலம்

MIDDLE ORDER...................= நடுவரிசை

MIDDLE STUMP....................= நடுத்தறி

NO BALL...............................= பிழைவீச்சு

OFF SIDE..............................= புன்புலம்

OFF STUMP..........................= கடைத்தறி

OFF-DRIVE.............................= புன்புல விரட்டு

ON SIDE................................= நன்புலம்

ON-DRIVE...............................= நன்புல விரட்டு

ONE DAY MATCH................= ஒருநாள் போட்டி

OUT.........................................= வீட்சி

OUT-SWINGER......................= புறப்பரிவு (வெளி நோக்கிப் பரிதல்)

OVER......................................= அறுகால்

PERFORMANCE....................= செயல்பாடு

PLAYER..................................= ஆடகர் (வே.சொ.76)

POINT.....................................= பக்கல்

POPPING CREASE...............= இயங்கு களம்

PYE-RUN................................= அடியாப்புள்ளி

RETIRED – HURT.................= ஊறியல் ஓய்வு

RUN – BOUNDARY..............= நான்மை (நன்னூல்.நூ.146)

RUN – SIXER........................= அறுமை

RUN........................................= புள்ளி

RUN-OUT...............................= இடைவீட்சி

SECOND SLIP.......................= 2-ஆம் வழுவாய்

SHORT BALL.........................= குறு வீச்சு

SHORT LEG..........................= குறுந்தாள்

SHORT PITCHED BALL.......= குறுங்களவீச்சு

SIXER......................................= அறுமை

SLIP.........................................= வழுவாய்

SLOW BALL............................= மந்த வீச்சு

SPIN BALL..............................= சுழற்பந்து

SPIN BOWLING......................= சுழல்வீச்சு

STUMP.....................................= தறி

SWING.....................................= திசைமாறல்

TAILENDERS...........................= பின்வரிசை

TARGET SCORE....................= குறியிலக்கு

TEST MATCH.........................= ஐநாள் போட்டி

THIGH PAD.............................= காற்காப்பு

THIRD MAN............................= படர்க்கை

THIRD SLIP............................= 3-ஆம் வழுவாய்

THIRD UMPIRE......................= 3-ஆம் நடுவர்

TOSS........................................= சுண்டல்

TOP ORDER...........................= முன் வரிசை

TWENTY-TWENTY MATCH...= இருபது அறுகால் போட்டி

UMPIRE....................................= நடுவர்

WICKET DOWN.......................= முன்னவர் வீட்சி

WICKET KEEPER...................= பின்னவர்

WICKET....................................= தறி

WIDE BALL.............................= அகல்வீச்சு

YORKER...................................= காற்புல வீச்சு

 

 

=============================================================== 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப்பணி மன்றம்” முகநூல்,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 04]

{19-12-2021}

==============================================================

 


மடலாட்டம்