name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 12/13/15

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

புதிய தமிழ்ச் சொல் (12) ஒளியுருக்கு ( STAINLESS STEEL )

புதுச்சொல் புனைவோம் !


STAINLESS STEEL = ஒளியுருக்கு
-------------------------------------------------------------------------------------------------------

இரும்பு பழங்காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. பண்டைத் தமிழர்கள் இரும்பின் பயனை அறிந்திருந்தனர் !
          
கருங்கைக் கொல்லன் இரும்பு விசைத்தெறிந்த...” என்று பெரும் பாணாற்றுப் படை பேசுகிறது ! (பாடல் வரி : 437)
          
“இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ” என்பது நெடுநல்வாடைப் பாடல் வரி ! (பாடல் வரி ; 42)
          
“இரும்பு கவர்வுற்றன பெரும் புனவரகே...”என்று கூறுகிறது மலைபடுகடாம் ! (பாடல் வரி : 113)           


இரும்பு உறுதியானது என்றாலும் வளையக்கூடியது. காலப்போக்கில் வளையாத, மிக உறுதியான இரும்பையும் மனிதன் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கினான். இரும்புடன் கரிமம் (கார்பன்) சேர்ந்தால் ”உருக்கு” கிடைக்கிறது. உருக்கின் இன்னொரு பெயர் தான் ”எஃகு” என்பது !
           
இரும்புடன் கார்பன் எனப்படும் கரிமத்தை வெவ்வேறு விகிதங்களில் கலக்கும் போது குறை கரிம உருக்கு (Low Carbon Steel ) ,இடை கரிம உருக்கு (Medium Carbon Steel), நிறை கரிம உருக்கு (High Carbon Steel) ஆகிய வலிமையான கலப்பு உருக்குகள் (Steel Alloys) கிடைக்கின்றன என்பதை மனிதன் கண்டுகொண்டான் !         

உருக்கினைப் பயன்படுத்திப் போர்க் கருவிகள் செய்யும் கலையை அக்காலத் தமிழன் அறிந்திருந்தான் என்பது நாம் பெருமைப் படத் தக்க செய்தி !
          
எஃகு எனப்படும் உருக்கு (Steel) உறுதியானதாக இருந்தாலும் துருப்பிடிக்கும் தன்மை உடையது. இரும்புடன் கார்பன்,, சிலிகான், மேங்கனீஸ், மாலிப்டினம் குரோமியம், நிக்கல் போன்றவற்றைக் கலந்தால் கிடைப்பது ஸ்டெயின்லஸ் ஸ்டீல் (Stainless Steel) என்னும் கலப்பு உருக்கு. இந்த கலப்பு உருக்கு மிக உறுதியானது !
           
துருப் பிடிக்காதது. துரு என்னும் கறை பிடிக்காத உருக்கு என்பதால் தான் இதற்கு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் (Stainless steel) என்ற பெயர் வந்தது. உருக்கினுடைய இயல்பான நிறம் கருமை கலந்த வெள்ளை. ஆனால், ஸ்டெயில்ஸ் ஸ்டீலின் நிறம், உருக்கினுடைய நிறத்தை விடக் கூடுதலான ஒளி மிகுந்த வெண்மை ஆகும் !
           
ஸ்டெயின்லஸ் ஸ்டீல் என்பதற்குத் தமிழ்ச் சொல் என்று நினைத்துக் கொண்டு, இன்றும் கூட  சிலர் “ எவர் சில்வர் ‘ என்று சொல்வதைக் காண்கிறோம் !         

துருப் பிடிக்காத காரணத்தால் இதன் நிறம் மங்குவதே இல்லை. பளீரென்ற ஒளி உடைய உருக்கு என்பதால் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் என்று ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில் “ஒளியுருக்கு” என்று சொல்லலாம் அல்லவா ? ஒளிரும் உருக்கு அல்ல; ஒளி உடைய உருக்கு !

“ஸ்டெயின்லஸ் ஸ்டீல்” என்றால் “கறை இல்லாத உருக்கு”, என்று பொருள். ”ஒளியுருக்கு” என்ற சொல் ”கறை இல்லாத உருக்கு” என்னும் கருத்தை எதிரொலிக்க வில்லையே என்று சிலர் வாதிடக் கூடும் !
          
மொழியாக்கம் செய்யும்போது ஆங்கிலச் சொல்லின் உட்கருத்தைத் தமிழ்ச் சொல்லும் அப்படியே எதிரொலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அப்படியொரு கட்டாயமும் கிடையாது !
           
மோர்” என்னும் தமிழ்ச் சொல்லை பட்டர் மில்க் (Butter milk) என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருப்பது பொருத்தமாக இருக்கிறதா ? “மோர்” என்பதை “வெண்ணெய்ப் பால்” (Butter Milk) என்று ஆங்கிலேயர் சொல்வது எந்த விதத்தில் பொருத்தம் என்பதை இந்த “எதிர்பார்ப்பாளர்கள்” எண்ணிப் பார்க்க வேண்டும் !
          
“ஒளியுருக்கு” என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமே !


-----------------------------------------------------------------------------------------------------

STAINLESS STEEL.......................= ஒளியுருக்கு
STAINLESS STEEL SHEET..........= ஒளியுருக்குத் தகடு
STAINLESS STEEL VESSELS.....= ஒளியுருக்குக் கலன்கள்
STAINLESS STEEL PLATE..........= ஒளியுருக்குத் தட்டம்
STAINLESS STEEL TUMBLER....= ஒளியுருக்குக் குவளை
STAINLESS STEEL SPOON.........= ஒளியுருக்குப் பொட்டுக்கரண்டி
STAINLESS STEEL DOOR...........= ஒளியுருக்குக் கதவு
STAINLESS STEEL BODY............= ஒளியுருக்கு உடல்


--------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்


----------------------------------------------------------------------------------------------------
     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------


ஒளியுருக்குக் கலன்கள்

புதிய தமிழ்ச் சொல் (11) அரம் ( FILE )

புதுச்சொல் புனைவோம் !


FILE - அரம்   
------------------------------------------------------------------------------------------------------      


அரம் என்பது பழைய சொல் தான். திருவள்ளுவர் காலத்திலேயே இச்சொல் புழக்கத்தில் இருந்துள்ளது !
          
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது
உட்பகை உற்ற குடி ( குறள் 888 )

அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
       
“அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்என்பது பொருநர் ஆற்றுப் படை ! (பாடல் வரி 144)
         
“நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை என்று மலைபடு கடாம் பேசுகிறது  !  (பாடல் வரி 35)

புதிய தமிழ்ச் சொல் (10) குயிலி ( DRILL BIT )

புதுச்சொல் புனைவோம் !


  குயிலி - DRILL BIT
-----------------------------------------------------------------------------------------------------     

மரத்தில் துளை இடுவதற்குத் துரப்பணம் என்ற கருவி பயன்படுவது போல் இரும்பில் துளையிட, டிரில் பிட் (Drill Bit) என்ற கருவி பயன் படுகிறது. இந்தக் கருவியைத் தமிழில் எவ்வாறு அழைப்பது ? சிலர் துளையுளி என்கின்றனர். வேறு சிலர் துளையிடும் கருவி என்கின்றனர். இன்னும் சிலர் துளைப்பான் என்கின்றனர் !


புதிதாக ஒரு சொல் உருவாக்கும் போது, அது சுருங்கிய வடிவினதாகவும், பொருள் பொதிந்ததாகவும், ஒலி நயம் உடையதாகவும் அமைந்தால் அச்சொல் நிலைத்து நிற்கும் !
       

முற்காலத்தில், முத்துக்களை மாலையாகக் கோப்பதற்கு வசதியாக அதில் மெல்லிய துளை வழி ( through hole ) இடுவது வழக்கம். இத்தகைய துளையிடும் பணியைச் செய்தோர் “ குயினர் “ என்று அழைக்கப் பட்டனர். “ குயிலல் “ செய்தவர்கள் “ குயினர் “ ஆயினர். ” குயில் ‘ , “ குயிலல் “ , “ குயிலுதல்” என்ற சொற்கள் எல்லாம் “ துளைத்தல் “என்பதைக் குறிக்கும் சொற்களே !


புதிய தமிழ்ச் சொல் (09) ஈன்பொறி ( GENERATOR )

புதுச்சொல் புனைவோம் !

GENERATOR - ஈன்பொறி
----------------------------------------
         
”ஜெனரேட்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பிறக்கச் செய்தல் அல்லது பிறப்பித்தல் என்று பொருள். உற்பத்தி செய்தல், உண்டாக்குதல். ஆக்குதல் என்றும் கூடப் பொருள் சொல்லப் படுகிறது !
         
எலக்ட்ரிசிட்டி ஜெனரேட்டர் என்பதை “ மின்சார ஜனனி” என்று முன்பு மொழி பெயர்த்தனர். பிறகு அதை “மின்னாக்கி” என்று சொல்லி வருகின்றனர். வினைச் சொல்லின் அடிப்படையில் பெயர்ச் சொற்களை உருவாக்கும் போது புதிய சொல்லானது பொருள் நயத்துடன் ஒலி நயமும் உடையதாக இருத்தல் வேண்டும். ”மின்னாக்கி” என்ற சொல்லில் ஒலி நயம் அமையவில்லை !

புதிய தமிழ்ச் சொல் (08) இருப்பு வழி ( RAILWAY )

புதுச்சொல் புனைவோம் !



RAILWAY = இருப்பு வழி
------------------------------------------------------------------------------------------------------

“ரயில்” என்ற சொல் நமது ஆடையில் ஒட்டிக் கொண்டுவிட்ட ஒட்டுப் புல். இதை அகற்றவே முடியாதோ என்று ஐயப்படும் அளவுக்கு அது மிக வலிமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது !

ஆமாம்..... ”ரயில்” என்றால் என்ன ? நாம் ஏறிப் பயணம் செய்கிறோமே அந்த வண்டி இயக்கப் படுவதற்கான வழித் தடத்தில் பொருத்தப் பட்டிருக்கும் தண்டவாளத்திற்குத் தான் ”ரயில்” என்று பெயர். வியப்பாக இருக்கிறதா ? உண்மை அது தான். நாம் பயணிக்கும் வண்டிக்குப் பெயர் டிரைன் (Train), ”ரயில்” அல்ல !

”ரயில்வே” (Railway) என்றால் என்ன ? தண்டவாளப் பாதை என்று பொருள். இந்தத் தண்டவாளப் பாதையில் பயணிகள் வண்டியும் செல்லும்; சரக்கு வண்டியும் செல்லும். ஆய்வு ஊர்தியும் (Trolly) செல்லும். அதனால் தான் வண்டியை மையமாக வைத்துப் பெயரிடாமல், பாதையை மையமாக வைத்து இருப்புப் பாதை (Railway) என்று பெயரிடப் பட்டுள்ளது !

புதிய தமிழ்ச் சொல் (07) செங்களம் (CHESS )

புதுச்சொல் புனைவோம் !



CHESS - செங்களம்
------------------------------------------------------------------------------------------------------------------------

செஸ் (Chess) விளையாட்டுப் பற்றித் தமிழ்ப் பணி மன்ற நண்பர்கள் அறிவார்கள். சிலர் அதில் வாகையம் (Champion ship) பெற்றவர்களாகவும் இருக்கக்கூடும். உலக அளவில் உற்று நோக்கப்படும் இந்த செஸ் விளையாட்டின் அடிப்படைக் கருத்து என்ன ?


இரண்டு நாடுகள் அருகருகே உள்ளன.. அவற்றின் மன்னர்கள் போருக்குத் தயார் ஆகிறார்கள். யானைப்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளுடன் வந்து போர்க்களத்தில் சந்திக்கிறார்கள் !

         
இரண்டு படைகளும் மோதுகின்றன. இறுதியில், படைகளை நடத்திச் செல்வதில் எந்த மன்னன் தவறு செய்கிறானோ அவன் வலிமை குன்றிப் போகிறான். அந்த மன்னனை எதிரணிப் படைகள் சூழ்ந்து கொண்டு தளைப்படுத்துகின்றனர். (கைது செய்கின்றனர்). இது தான் செஸ் ஆட்டத்தின் உட்பொருள் !

       
” செஸ் “ என்னும் ஆங்கிலச் சொல்லை “சதுரங்கம்” என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள். .”சதுரங்கம்” என்பது தமிழ்ச் சொல்லே அல்ல. ”சதுர்” என்னும் வடமொழிச் சொல்லுக்கு “நான்கு” என்று தமிழில் பொருள் !

       
போர்ப் படையின் நான்கு உறுப்புகளான யானைப்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை, காலாட்படை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு “சதுரங்கம்” என்ற சொல்லைப் படைத்து இருக்கிறார்கள் போலும் ! .”சதுரங்கம்“ என்பதத் தமிழில் “ நாற்படைகள்” என்று கூறலாம் !

       
“செஸ்” ஆட்டத்தின் மையக்களம் எது ? இரண்டு எதிரெதிர்ப் படைகளும் ஒன்றையொன்று நேருக்கு நேர் சந்திக்கும் போர்க்களம் தானே ! இந்தக் களத்தில்தான்  இரண்டு படைகளும் மோதுவதற்கு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன; மோதுகின்றன; ஒன்று எழுகிறது; மற்றொன்று வீழ்கிறது !

         
இத்தகைய முதன்மை இடம் பெறும் ”போர்க்களத்தினை” மையமாக வைத்து இந்த ஆட்டத்திற்குப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் “.போர்க்களம்” என்பதைக் குறிக்க “செங்களம்” என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது !

       
எனவே ”செஸ்”. விளையாட்டிற்கு நாம் “செங்களம்” என்று புதுப் பெயரைச் சூட்டலாம். “செங்களம்” என்ற சொல் பொருள் நயமும், ஒலி நயமும், சுருங்கிய வடிவும் உடையதாக இருப்பதால் “செஸ்” என்பதை இனி “செங்களம்” என்றே அழைப்போமே !

       
“செங்களம்” தொடர்பான பிற சொற்களையும் பார்ப்போமா ?
 

====================================================================


CHESS.....................................= செங்களம்
CHESS BOARD.......................= செங்களரி
CHESSMEN.............................= களமர்
KING.........................................= மன்னன்
QUEEN / MINISTER............... = தளவாய்
ELAPHANT /FORT..................= யானைப்படை
CANNON / ROOK....................= பீரங்கிப்படை
HORSE....................................= புரவிப் படை
PAN..........................................= காலாட்படை
CHECK-MATE.........................= தளைப்பு
CHESS TOURNAMENT...........= செங்களப் போட்டி
CHESS CHAMPION.................= செங்கள வாகையர்
CHAMPIONSHIP......................= வாகையம்


====================================================================

போரில் பங்கேற்கும் படை அல்லது படைத் தலைமைக்கு QUEEN / MINISTER / COMMANDANT; FORT / ELEPHANT ; BISHOP / CANNON / ROOK என வெவ்வேறு பெயர்கள் வழங்குகின்றன. அவரவர் விருப்பப்படி பெயர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

====================================================================



செங்களம்

புதிய தமிழ்ச் சொல் (06) குந்தம் ( PUNCH )

புதுச்சொல் புனைவோம் !

PUNCH = குந்தம்
----------------------------------------------------------------------------------------------------------

” குல் “ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் “ குந்தம் “. குல் > குன் > குந்து > குந்தம். “குல்” என்னும் வேர்ச்சொல் “குத்துதல்” என்னும் கருத்தைத் தழுவிய சொல் !

குல் > குள் > குளவி = கொடுக்கு
போன்ற உறுப்பினால் கொட்டும் தேனீ
குல் > கள் > கள்ளி = குத்தும் முட்செடி
குல் > கிள் > கிளி =கிள்ளும் அலகுடைப் பறவை
குல் > குன் > குந்து > குந்தம் = குத்தும் கருவி.


"குந்தம் "என்பது குத்தும் தொழிலுக்குப் பயன்படுத்தப் பட்ட ஒரு கருவி.



”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப் பாட்டு என்னும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வரி !(வரி : 41)

”குந்த மலியும் புரவியான்“ என்பது புறப் பொருள் வெண்பா மாலை  ! (4:7)

“வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி  ! (1678).



பொறியியல் பணி மனைகளில் மாழை (Metal) வில்லைகளில் அல்லது தளங்களில் ஒரு ஆழமான புள்ளியையோ அல்லது வட்டத்தையோ அல்லது எழுத்தையோ அல்லது இலக்கத்தையோ அல்லது உருவத்தையோ அழுத்தமாகக் குத்திப் பதிவதற்கு ” பஞ்ச் “ எனப்படும் சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது !

மாழைத் தளத்தில் “ பஞ்ச் “ சின் முனையை வைத்து, அதன் தலைப் பகுதியில் சுத்தியால் (Hammer) ஓங்கித் தட்டும்போது, “பஞ்ச்” சின் முனை மாழைத் தளத்தில் குத்தி இறங்கி, தனது தடத்தைப் பதிக்கிறது !


இவ்வாறு குத்தித் தடம் பதிக்கும் கருவியைக் “ குந்தம் “ என்று அழைப்பது சாலப் பொருத்தமே. “பஞ்ச்” என்னும் பெயரைப் பஞ்சாய்ப் பறக்க விட்டு விட்டால், “குந்தம்” நம்மிடம் வந்து குந்திக் கொண்டு உதவிகள் செய்யாதா ?


வாருங்கள் நண்பர்களே ! குந்தம் என்னும் சொல்லின் அடிப்படையில் பிறக்கும் ஏனைய சொற்களையும் கூப்பிட்டுக் கொஞ்சி மகிழலாம் !!


==============================================================


PUNCH................................= குந்தம்
BELL PUNCH......................= மணிக் குந்தம்
CENTER PUNCH.................= மையக் குந்தம்
DOT PUNCH........................= புள்ளிக் குந்தம்
FIGURE PUNCH..................= உருக் குந்தம்
HOLLOW PUNCH................= புழல் குந்தம்
LETTER PUNCH..................= மொழிக் குந்தம்
NUMBER PUNCH................= இலக்கக் குந்தம்
NAIL PUNCH........................= ஆணிக் குந்தம்
PRICK PUNCH.....................= கூர்க் குந்தம்
PIN PUNCH..........................= ஊசிக் குந்தம்


==============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

==============================================================
எண் குந்தம்

மொழிக் குந்தம்

மையக்குந்தம்


புதிய தமிழ்ச் சொல் (05) கயம் (CARROM )

புதுச்சொல் புனைவோம் !


கயம் - CARROM 

-------------------------------------------------------------------------------------------------------

கேரம் (Carrom) என்பது உள்ளரங்க விளையாட்டுகளில் ஒன்று. பெரும்பாலும் அனைத்து நண்பர்களும் பள்ளிப் பருவத்தில் இதை விளையாடி இருப்பீர்கள் !

 

கேரம் விளையாட்டில் சவுக்கமான (Square sized) ஒரு பலகை இருக்கும் அதன் நாற்புறமும் விளிம்புகளில் வரம்புச் சட்டங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். பலகையின் நான்கு பக்க மூலைகளிலும் ஓட்டைகள் இருக்கும். விளையாடுவதற்காக 9 வெள்ளைக் காய்களும், 9 கறுப்புக் காய்களும் ஒரு சிவப்புக் காயும், ஆக மொத்தம் 19 காய்கள் இருக்கும் !

 

பலகையின் மையத்தில் காய்களை வைத்து அடிசில் (Striker) ஒன்றினால் அடித்துப் பலகையின் மூலைகளில் உள்ள குழியில் காய்களை வீழ்த்த வேண்டும். இருவரோ, நால்வரோ விளையாடும் இந்த விளையாட்டுக்கு என விதி முறைகள் வகுக்கப் பட்டுள்ளன !

 

 

இந்த விளையாட்டின் உள்ளார்ந்த பொருள் என்ன ? காட்டில் யானைக் கூட்டம் ஒன்று உள்ளது. மனிதனுக்குக் கட்டுப்படாத, பழகாத யானைகள். 9 ஆண் யானைகள்; 9 பெண் யானைகள்; இக்கூட்டத்தின் தலைவனான கொம்பன் யானை ஒன்று. இவற்றைப் பிடித்துக் கொண்டு வந்து வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் !

 

இவற்றை எப்படிப் பிடிப்பது ? வனத்துறையினர் கையாளும் முறை தான். காட்டில் ஆங்காங்கே ஆழமான குழிகள் தோண்டப்பட்டு, அவை இலை தழைகளால் மூடப்பட்டு இருக்கும். பழக்கப் படுத்தப் பட்ட யானை ஒன்றைக் கொண்டு, காட்டு யானைகள் விரட்டப்படும் !

 

 

பயந்து ஓடும் காட்டு யானைகள் இலை தழைகளால் மூடப்பட்டிருக்கும் குழி மீது கால் வைத்ததும், இலை தழைகள் உள்வாங்கி யானையைக் குழிக்குள் வீழ்த்தி விடும் !

 

 

கேரம் பலகையின் நடுவில் வைக்கப்படும் காய்கள் அடிசில் (அடி + சில் = அடிசில்) (STRIKER) கொண்டு அடித்து விரட்டப்பட்டு மூலைகளில் உள்ள குழிகளில் வீழ்த்தப்படுகின்றன. பழகிய ஒரு யானையைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிக் குழிகளில் வீழ்த்திப் பிடிப்பது போல, கேரம் விளையாட்டில் ஒரு ஸ்டிரைக்கரைக் கொண்டு பலகையில் உள்ள காய்கள் அனைத்தும் அடித்து விரட்டப்பட்டுக் குழிக்குள் வீழ்த்தப் படுகின்றன! 

 

 

கேரம் விளையாட்டும், காட்டில் யானை பிடிப்பதும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்தீர்களா ? மைசூர்க் காடுகளில் இப்போதும் நடைபெறுகின்ற இத்தகைய யானை பிடிக்கும் நிகழ்ச்சிக்கு கெட்டா ஆப்பரேஷன் (Keddah operation) என்றுபெயர் !

 

 

ஒரு யானையைக் கொண்டு பல யானைகளை விரட்டிக் குழிக்குள் தள்ளிப் பிடிப்பது போல, கேரம் விளையாட்டில் ஒரு ஸ்டிரைக்கரைக் கொண்டு பல காய்களை அடித்து விரட்டிக் குழிக்குள் தள்ளி வெற்றி பெறுவது அமைந்துள்ளது அல்லவா ?

 

 

ஆகையால் கேரம்என்பதைக் கயம்என்று தமிழாக்கம் செய்யலாம். . யானைக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களுள் கயம்என்பதும் ஒன்று. என்வே கேரம்என்பதை இனி கயம்என்போம் !

 

 

கயம்என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற துணைச் சொற்களையும், தொடர்புடைய ஏனைய சொற்களையும் பார்ப்போமா !!

 

===========================================================


                          CARROM.....................................= கயம்
                          CARROM BOARD.......................= கயப் பலகை
                          CARROM TOURNAMENT...........= கயப் போட்டி
                          STRIKER......................................= அடிசில் (அடி+சில்)
                          COINS..........................................= காய்கள்

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

 

===========================================================

கயப் பலகை

புதிய தமிழ்ச் சொல் (04) ஓரி ( MICROPHONE )

புதுச்சொல் புனைவோம் !


MICROPHONE - ஓரி

----------------------------------------------------------------------------------------

மைக்ரோபோன்என்ற ஆங்கிலச் சொல் சுருங்கி மைக்ஆகி விட்டது. இந்த மைக்கிற்கு ஆங்கிலத்தில் செல்லமாக இன்னொரு பெயர் உண்டு. அது தான் மின் செவி”. அது என்ன ஐயா மின் செவி”.?

 

மைக்என்ன செய்கிறது ? பேச்சு அல்லது பாட்டு, காற்றில் ஒலி அலைகளாக மிதந்து வரும் போது அவற்றை உள்வாங்கி, மின் காந்த அலைகளாக மாற்றி ஆம்பிளிபையர்என்ற சாதனத்திற்கு அனுப்புகிறது !

 

இந்த ஆம்பிளிபையர்மின் காந்த அலைகளின் வலிமையை, (கருவி இயக்குபவர் விரும்பும் அளவுக்கு) பெருக்கி, “ஸ்பீக்கர்என்னும் கருவிக்கு அனுப்புகிறது. இந்த ஸ்பீக்கர்மின்காந்த அலைகளை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றிக் காற்றில் இழையோட விடுகிறது. மைக்கிடம் வந்த சிறிய ஒலி ஸ்பீக்கர்வழியாக (விரும்பும் அளவுக்குப்) பேரொலியாக வெளிப்படுகிறது !

 

வகுப்பறையில், ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் நான் சொல்வதைத் உரக்கச் சொல் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு மி ழ் தமிழ்என்று சொல்கிறார். அவரது பேச்சின் ஒலி அலைகள் மைக்போன்று செயல்படுகின்ற, மாணவனின் செவிப் பறைகளில் பட்டு உணர்வலைகளாக மாற்றப்பட்டு, ”ஆம்பிளிபையர்போலச் செயல்படும் மூளைக்குச் செல்கிறது !

 

மூளையின் கட்டளையின் பேரில் அந்த உணர்வலைகள் ஸ்பீக்கர்போல் செயல்படும் குரல் வளைக்கு வந்து மீண்டும் ஒலி அலைகளாக மாறி, மாணவனின் வாய் மூலம் மி ழ் தமிழ்என்று உரப்பு ஒலியாக வெளிப்படுகிறது !


 

மைக்கும் செவியும் செயல்படும் விதத்தில் ஒன்றாக இருக்கிறது பார்த்தீர்களா ? இதனால் தான் மைக்கினை மின்செவிஎன்று கூறுவது வழக்கம்.செவியின் வேலை என்ன ? காற்றில் வரும் ஒலி அலைகளை உள்வாங்கி மூளைக்கு உணர்வலை வடிவில் செய்தி அனுப்புதல் !

 

இதையே சுருக்கமாகச் சொன்னால் கேட்டல்என்று கூறலாம். கேட்டல்என்பதை தமிழ் இலக்கியங்கள் ஓர்தல்என்று குறிப்பிடுகின்றன !

 

பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்....என்கிறது பட்டினப் பாலை!  (பாடல் வரி :113)

 

குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்... என்று பேசுகிறது மலைபடு கடாம்  ! (பாடல் வரி : 23)

 

புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்.... மலைபடு கடாம் இன்னொரு இடத்தில் சொல்கிறது (பாடல் வரி: 448)

 

இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்....என்பது முல்லைபாட்டு. (பாடல் வரி : 88)

 

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா.... என்பது திருக்குறள் (357)

 

இந்தப் பாடல்களில் ஓர்தல் என்ற சொல் காதால் கேட்டு, மனதால் உணர்ந்து, அதற்கேற்பச் செயல்படல் என்னும் பொருளில் எடுத்தாளப் பட்டுள்ளது.

 

ஓர்தல் (ஒலியை உள் வாங்குதல்) செய்கின்ற மைக்கும், அதேபோல் ஒலியை உள் வாங்குகின்ற செவியும் இயங்கும் வகையில் ஒப்புமை உடையவை. .ஓர்தல் செய்கின்ற மைக்கினை ஓரிஎன்று உரைத்தால் பொருத்தமாக இராதா என்ன ? வல்வில் ஓரியின் நினைவாகச் சூட்டிய பெயராகவும் அமையும் அல்லவா ?

 

மைக்கினை முன்பு ஒலிபெருக்கி என்று மொழி பெயர்த்தோம். அடுத்து ஒலி வாங்கிஎன்று சொல்லி வருகிறோம். ஒலிவாங்கிசற்று நீளமான சொல். எனவே ஒலிவாங்கியை ஒதுக்கி வைத்து விட்டு ஓரியைக் கையில் எடுத்துப் பேசினால் நமது பேச்சு அழகாக இருக்காதா என்ன ?

 

ஓரிஎன்னும் புதிய சொல்லின் வழியாகப் பிறக்கும் பிற சொற்களையும், “ஓரியுடன் இணைந்த கருவிகளின் தமிழ்ப் பெயர்களையும் காண்போமா ?

 

====================================================

 

MICROPHONE (MIC)............= ஓரி

CRYSTAL MIC.......................= படிகவோரி 

CARBON MIC........................= துகளோரி

DYNAMIC MIC.......................= வில்லோரி 

CONDENSOR MIC................= திரையோரி 

MIC STAND............................= ஓரித் தளி

HAND MIC.............................= கையோரி 

AMPLIFIER............................= ஒலி பெருக்கி

SPEAKER..............................= கிளவி 

SPEAKER – HORN TYPE ....= கிளவிக் கொம்பு

SPEAKER - BOX TYPE........ = கிளவிப் பேழை

STERIO SPEAKER ...............= பன்மக் கிளவி

SPEAKER SET.......................= கிளவிக் கணம்

 

====================================================

 

CRYSTAL ..........................=  படிகம்+ஓரி = படிக ஓரி 

CARBON ....... = (கரிமத்) துகள் + ஓரி = துகளோரி 

DYNAMIC (Spring)............ = வில் + ஓரி = வில்லோரி  

CONDENSER = திரை (மணி) + ஓரி = திரையோரி 

HAND ................................... = கை + ஓரி + கையோரி 

SPEAKER......................... = கிள ( கிளத்தல்) பேசுதல்.

.............................கிளத்தல் செய்யும் கருவி கிளவி”.

 

====================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com0

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

 

===================================================

 





ஓரி