name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (10) குயிலி ( DRILL BIT )

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

புதிய தமிழ்ச் சொல் (10) குயிலி ( DRILL BIT )

புதுச்சொல் புனைவோம் !


  குயிலி - DRILL BIT
-----------------------------------------------------------------------------------------------------     

மரத்தில் துளை இடுவதற்குத் துரப்பணம் என்ற கருவி பயன்படுவது போல் இரும்பில் துளையிட, டிரில் பிட் (Drill Bit) என்ற கருவி பயன் படுகிறது. இந்தக் கருவியைத் தமிழில் எவ்வாறு அழைப்பது ? சிலர் துளையுளி என்கின்றனர். வேறு சிலர் துளையிடும் கருவி என்கின்றனர். இன்னும் சிலர் துளைப்பான் என்கின்றனர் !


புதிதாக ஒரு சொல் உருவாக்கும் போது, அது சுருங்கிய வடிவினதாகவும், பொருள் பொதிந்ததாகவும், ஒலி நயம் உடையதாகவும் அமைந்தால் அச்சொல் நிலைத்து நிற்கும் !
       

முற்காலத்தில், முத்துக்களை மாலையாகக் கோப்பதற்கு வசதியாக அதில் மெல்லிய துளை வழி ( through hole ) இடுவது வழக்கம். இத்தகைய துளையிடும் பணியைச் செய்தோர் “ குயினர் “ என்று அழைக்கப் பட்டனர். “ குயிலல் “ செய்தவர்கள் “ குயினர் “ ஆயினர். ” குயில் ‘ , “ குயிலல் “ , “ குயிலுதல்” என்ற சொற்கள் எல்லாம் “ துளைத்தல் “என்பதைக் குறிக்கும் சொற்களே !


"குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் என்பது மதுரைக் காஞ்சி என்னும் இலக்கியத்தில் வரும் பாடல் வரி  ! (வரி : 474)
         
”கோடுபோழ் கடைநரும், திருமணிக் குயினரும்... என்பதும் இதே இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரி  !  (வரி: 511)
       
” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்று நெடுநல் வாடை என்னும் இலக்கியமும் பேசுகிறது ! ( வரி: 88)
       
“ குயில் “ ( துளைத்தல் ) என்னும் வினையப் புரிகின்ற கருவியை “ குயிலி “ என்று கூறுதல் பொருத்தமாக அமையும் அல்லவா ? இனிமேல் டிரில் பிட் (Drill Bit) என்பதை “ குயிலி “ என்றே அழைப்போமே !! சுருங்கிய வடிவம் ; ஒலி நயம் ; பொருள் ஆழம் . வேறு என்ன வேண்டும் ?
         
”குயிலி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !!!

===========================================================


DRILL BIT..............................


= குயிலி

STRAIGHT SHANK DRILL BIT............................................


= செங்காற் குயிலி

TAPPER SHANK DRILL BIT

= கணைக்காற் குயிலி

TWIST DRILL........................


 = சுழற் பீலிக் குயிலி

COMBINATION CENTER DRILL......................................


= குழிப்புக் குயிலி

DRILL CHUCK......................

= குயிலிச் சிமிழி

DRILL  BRACE......................

= குயிலிச் சூரல்

DRILLING MACHINE..........

= குயிற் பொறி

HAND DRILLING MACHINE

= கைவலக் குயிற் பொறி

BENCH DRILLING
MACHINE...............................


= விசிக் குயிற் பொறி

PILLAR DRILLING MACHINE...............................


= நிலைக் குயிற் பொறி

RADIAL DRILLING MACHINE...............................


= சுழலியல் குயிற் பொறி

============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

============================================================



சுழற் பீலி செங்கால் குயிலி.




குயிலிகள்

4 கருத்துகள்:

  1. Coined new word is very fine. We need lot of such new words to help improve Tamil to regain its peak. Keep it up.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  3. குயிலின் குழைவான குரலைவிட இனிமையாகவும் காரணத்துடனும் அமைந்துள்ளது ”குயிலி”

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .