name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கணம் (09) எனது, என்னுடைய, என்- எது சரி ?

வெள்ளி, அக்டோபர் 04, 2019

இலக்கணம் (09) எனது, என்னுடைய, என்- எது சரி ?

எனது நூல்கள்” என்று எழுதுகிறோம்.  இது தவறு !


உச்சரிப்புக் குறைபடாமல், திருத்தமாகத் தமிழைப் பேசும் பழக்கம், நமக்குக் குன்றிவிட்டிருக்கிறது.  அதற்குச் சில காரணங்கள் உண்டு.  அவற்றில் முக்கியமானது, பிறமொழிகளின் வரவும், நடமாட்டமுமே ஆகும்.  அவற்றின் விளைவாகத் தமிழை, அம்மொழிக்கு இயல்பாக அமைந்த ஒலியுடன் பேசமாட்டாத நிலைக்கு இழிந்துவிட்டிருக்கிறோம் !  

தமிழகத்தின் தென் பகுதிக்குச் செல்லச் செல்ல, உச்சரிப்பு சிறிது இயல்பாக இருப்பதைக் காண்கிறோமாயினும், தென்கோடியிலும் இன்னமும், தமிழ் பேசுவதில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.  திருத்தமாகப் பேசத் தவறுவதால், அக்குறை  எழுத்திலும் புகுந்து விடுகிறது !

இன்னொரு பெரிய காரணம் நமது விழிப்பின்மையே ஆகும். உச்சரிக்கும் போது வழு (பிழை) இல்லாமல் உச்சரித்துவிட்டு, எழுதும்போது மட்டும் உச்சரிக்கின்றபடியே எழுதவேண்டுமே என்னும் கவனமே நமக்கு  இருப்பது  இல்லை !

எனக் கூறினேன்என்று திருத்தமாக உச்சரித்துவிட்டு, வரையும் போது மட்டும், “க்எழுத்தை இடையில் இடாமல், “என-கூறினேன்என்று வரைந்து விடுகிறோம். இப்படியேதிருப்பெயர்”, “திருபெயர்ஆகிவிடுகிறது. “அறக்கொடை”, “அறகொடைஎன எழுதப்படுகிறது. இங்ஙனே இது போன்ற பிறவும் !

மாடுகள் வந்ததுஎனப் பேசவும் செய்கிறோம்; எழுதியும் விடுகிறோம். “மாடுகள்பன்மை ஆயிற்றே, அச் சொல்லுக்கு ஏற்ற வினைச் சொல்வந்தனஎன்றல்லவோ இருக்க வேண்டும், என்று சிறிது உன்னிப்போமானால், ஒருமை பன்மை பிழைகளே நேரா !

ஒருமை பன்மை பிழைகளில் சில நுணுக்கங்கள் சென்ற இயலில் குறிப்பிடப் பெற்றன.  இரண்டொன்று ஈண்டுக் கூறினால் சாலும் !

எனது நூல்கள்என்று எழுதுகிறோம்.  இது தவறு. ”எனது என்னும் சொல்எனக்கு உரிய அஃறிணைப் பொருள் (உயிரற்ற பொருள்கள்) ஒன்றைக் குறிக்கிறது. “எனது நூல் என் + அது + நூல் என்பது விரிவான வடிவம். எனக்கு உரிய  ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களைக் குறிக்க வேண்டுமானால்என்னுடைய நூல்கள்என்று எழுத வேண்டும்.  இதனைச் சுருக்கிஎன் நூல்கள்என்போம் !

அப்படியேஎனது நூல்என்பதையும் சுருக்கமாகஎன் நூல்என்போம். ”என்என்னும் சொல்நூல்  என்னும் சொல்லுக்கு முன் வரும்போதுஎனதுஎன்றும், “நூல்கள்என்னும் சொல்லுக்கு முன் வரும் போதுஎன்னுடையஎன்றும் பொருளாகும் !



[ எனக்குரிய நூல்  ஒன்று மட்டும் (SINGULAR)  எனில், “எனது நூல்என்றும், பல (PLURAL) எனில்என்னுடைய நூல்கள்என்றும் குறிப்பிட வேண்டும். இங்கு இரண்டையும் சுருக்கி :என் நூல்”, “என் நூல்கள்என்றே குறிப்பிடலாம் ]

அடி முடி இதுவென உணர்த்தினார்என்பது பிழை. “அடி முடி இவையெனஎன்று இருக்க வேண்டும்.  எனது நண்பர்கள்என்று எழுதுவதில் இரண்டு பிழைகள் இருக்கின்றன.  ஒன்று, “நண்பர்கள்என்னும் பன்மைக்குஎன் அதுஎன்னும் ஒருமை அடைமொழியை இடுகின்ற பிழை.  மற்றொன்றுஅதுஅஃறிணை (உயிரற்ற) பொருளைக் குறிக்கும் சொல்.  நண்பர்கள்உயர்திணைப் (உயிருள்ள) பெயர்.  எனவேதிணைப் பிழையும் நேர்கிறது !


[ உயர்திணைப் பெயர்கள் வருகையில்எனதுஎன்று சொல்லவே கூடாது. “என்என்று மட்டுமே சொல்ல வேண்டும் ]

எனது தந்தை”, “எனது அன்னை”, என்பவற்றிலும் இத் திணைப் பிழை இருப்பதை அறியலாம். “என் தந்தை”, “என் அன்னைஎன்று எழுத வேண்டும். இவற்றில்என்என்னும் சொல். “எனக்குஎன்னும் சொல்லின் சுருக்கம்.  எனக்குத் தந்தை”, “எனக்கு அன்னைஎன்பவற்றையேஎன் தந்தை”, “என் அன்னைஎன்கிறோம் !

-----------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
தமிழில் எழுதுவோம்” 
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,29]
{14-08-2019}

------------------------------------------------------------------------------------------------------------
    
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .