மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் !
தோற்றம்:
தமிழக
மக்களால் பன்மொழிப் புலவர் என்று அன்புடன் போற்றப் பெறும் கா. அப்பாதுரையார்
1907 –ஆம் ஆண்டு சூன் மாதம் 24 –ஆம் நாள் குமரி
மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பெயர் காசிநாத பிள்ளை.
தாயார் முத்துலட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்குச்
சூட்டிய பெயர் “நல்லசிவம்” !
கல்வி:
தொடக்கக்
கல்வியை ஆரல்வாய்மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர் கோயிலிலும், கல்லூரிக் கல்வியைத் திருவனந்தபுரத்திலும் பயின்ற அப்பாதுரை ஆங்கில இலக்கியத்தில்
கலையியல் மேதை (M.A.) பட்டம் பெற்றார். இந்தி மொழியில் “விசாரத்” தேர்ச்சி
அடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று
தமிழில் கலையியல் மேதை (M.A.) பட்டதாரி ஆனார் ! சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்
சேர்ந்து பயிற்றுவிப்பு உரிமைப் (L.T.) பட்டம் பெற்றார்
!
திருமணம்:
திருநெல்வேலி
ம.தி.தா.இந்துக் கல்லூரியில்
1937 –ஆம் ஆண்டு சேர்ந்து ஈராண்டுகள் இந்தி பயிற்றுவிப்பு ஆசிரியராகப்
பணி புரிந்தார். இந்தக் கால கட்டத்தில் அவர் நாச்சியார் என்னும்
மங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.
நாச்சியார் இரண்டே ஆண்டுகளில் இறந்து போனார். சோகத்தில் ஆழ்ந்த அப்பாதுரையார், பின்னொரு காலத்தில்
அலர்மேலு என்பவரை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார் !
ஆசிரியப்
பணி:
காரைக்குடி
அருகில் உள்ள அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப்
பணியாற்றிய போது,
இவரிடம் கல்வி பயின்ற மாணவர் (கவிஞர்) கண்ணதாசன் என்பது குறிப்பிடத் தக்கது ! சென்னை,
பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணி புரிந்தார்
!
ஏற்றிருந்த
பிற பணிகள்:
நடுவணரசின்
செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் ஈராண்டு காலம் பணிபுரிகையில்
“இந்தியாவின் மொழிச் சிக்கல்” என்ற ஆங்கில நூலை
எழுதியதால், தனது வேலையை இழந்தார் !
சென்னைப்
பல்கலைக் கழக ஆங்கிலம் – தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை ஆறாண்டு காலம் அதன் ஆசிரியராகப் பணி செய்தார். தமிழக
வரலாற்றுக் குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார் !
அப்பாதுரையாரின்
எழுத்துப் பணி,
திராவிடன், JUSTICE, இந்தியா, விடுதலை, குமரன், தென்றல்,
LIBERATOR, ஆகிய ஏடுகளில் பல்வேறு கால கட்டங்களில் இருந்து வந்துள்ளது
!
இந்தி
எதிர்ப்பு:
அப்பாதுரையார்
இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர்; ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயமாகத்
திணிக்கப் பட்டபோது, அதை எதிர்த்து 1938 – 39 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார் !
பன்மொழிப்
புலவர்:
அப்பாதுரையாருக்கு
தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி,
பிராகிருதம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளிலும் தங்கு தடையின்றிப்
பேசவும் எழுதவும் கூடியத் திறமை இருந்தது ! இவையன்றி ஆப்பிரிக்க,
கிரேக்க, சப்பானிய மொழி உள்பட பல்வேறு மொழிகளைக்
கற்றவர் அப்பாதுரையார் !
வரலாற்று
நூல்கள்:
குமரிக்
கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, தென்னாட்டுப் போர்க்களங்கள், சரித்திரம் பேசுகிறது, சென்னை நகர வரலாறு, ஐ.நா.வரலாறு, கொங்குத் தமிழக வரலாறு முதலிய வரலாற்று நூல்களை அப்பாதுரையார் எழுதியுள்ளார்.
திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பனவற்றுக்கெல்லாம்
மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூல்களில் அளித்துள்ளார் !
அப்பாதுரையாரின், தென்னாட்டுப்
போர்க் களங்கள் என்ற வரலாற்று நூல், போர்க் களங்களின் பட்டியலன்று
! போர்க் காரணங்கள், போர்களின் பின் புலங்கள்,
போர்ச்செயல்கள், போரின் விளைவுகள், போர்களின் வழியாகப் புலப்படும் அரசியல் நெறிகள் ஆகியவற்றையெல்லாம் ஆராயும்
நூலாக அமைந்துள்ளது !
வாழ்க்கை
நூல்கள்:
கிருட்டிணதேவராயர், நேதாசி,
அரியநாத முதலியார், இரவிவர்மா, சர்ச்சில், ஈன்சுடீன், பெர்நாட்சா,
ஐதர் அலி மற்றும் ஆங்கிலப் புலவர்கள் வரலாறு, சங்க
காலப் புலவர்கள் வரலாறு, பெஞ்சமின் பிராங்களின் உள்பட பலரின்
வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார். சங்க காலப்
புலவர்களில் பிசிராந்தையார், கோவூர் கிழார், ஔவையார், சீத்தலைச் சாத்தனார் முதலிய நால்வர் பற்றியும்
எழுதியுள்ளார் ! மொத்தம் 170 நூல்களுக்கு
மேல் இவர் எழுதியுள்ளார் என்பது வியக்கத்தக்க செய்தியாக அன்றோ உளது !
திருக்குறள்
பற்றிய நூல்கள்:
அப்பதுரையாரின் “திருக்குறள்
மணி விளக்கவுரை” ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
கண்ணதாசனின் “தென்றல்” வார
இதழில் “அன்னை அருங்குறள்” என்ற தலைப்பில்
புதிய குறட்பா படைத்துள்ளார். திருக்குறள் உரைக்கெனவே
“முப்பால் ஒளி” என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து
நடத்தி வந்தார். அவரது திருக்குறள் விளக்கவுரையில் உலகின் பல
மொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு, திருக்குறளைக் காணும் காட்சி
மிகப் புதியது !
வரலாறு, வாழ்க்கை
வரலாறு, மொழி பெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு,
சிறுகதை, நாடகம், பொது அறிவு
நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என எத்துறைக்கும் ஏற்றதான 170 எண்ணிக்கைக்கும்
மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற தமிழறிஞர் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் !
தமிழின்
தொன்மைக் கோட்பாடு:
தமிழும்
தமிழர் இனமுமே உலக மொழிகளுக்கும், மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது
கோட்பாட்டை அறிவியற் பூர்வமாக தனது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளவர் அப்பாதுரையார்
!
பன்முகத்
தமிழர்:
ஆய்வறிஞர்
அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப்
புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும்
செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத்
தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம் கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்;
பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த
பேரறிவாளர் !
மறைவு:
தமிழ்ச்
சுரங்கமாக விளங்கிய அப்பாதுரையார், 1989
–ஆம் ஆண்டு மே மாதம் 26 –ஆம் நாள், தமது 82 –ஆவது அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்துப்
புகழுடம்பு எய்தினார் ! அவரது சாதனைகளை நோக்கி நடை பயில இற்றைத்
தமிழர் யாருக்குமே துணிவில்லை !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
[தி.ஆ.2050: சிலை( மார்கழி)
08]
{24-12-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .