name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: மூதுரை (12) மடல் பெரிது தாழை !

சனி, ஆகஸ்ட் 31, 2019

மூதுரை (12) மடல் பெரிது தாழை !

மகிழம்பூ உருவில் சிறியது; மணத்தில் பெரியது  !

மூதுரையில் வரும் பாடல்கள் நான்கு அடிகளால் ஆனவை. அடியளவில் சிறியவையானாலும் அவை நமக்கு எடுத்து உரைக்கும் நீதிக் கருத்துகள்  மதிப்பளவில் பெரியவை. ஔவையாரின்  அருட்கொடை இந்நூல். அதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------------

பாடல்.12.

-------------------------------------------------------------------------------------------------------------

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டாகடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூரல்
உண்ணீரு மாகி விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------------------------------------------------------------------

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்;
உடல் சிறியர் என்று இருக்க வேண்டாகடல் பெரிது
மண் நீரும் ஆகாது அதனருகே சிற்றூரல்
உண்ணீரும் ஆகி விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

தாழை மடல் பெரிது = தாழம் பூ இதழ்களினாலே பெரிதாக இருக்கின்றது ;மகிழ் கந்தம் இனிது = மகிழம் பூ (இதழ்களினாலே சிறிதாக இருந்தாலும்) மணத்தினாலே (தாழம் பூவினும்)  பெரிதாக இருக்கின்றது ; கடல் பெரிது = ஆழிப் பெருங்கடலானது வடிவில் பெரிதாக இருக்கின்றது; மண் = (ஆயினும்) உடம்பின் அழுக்கைக் கழுவுவதற்குக் கூட  (மண்ணுதல் = கழுவுதல்) ; நீரும் ஆகாது = உகந்த நீரும் ஆகாது ; அதனருகே = அப் பெரிய கடலின் அருகே ; சிற்றூரல் = (தோண்டப் பெறும்) சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீர் ; உண் நீரும் ஆகும் = குடிக்கத் தக்க நீரும் ஆகும் ; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா =  உருவத்தினாலே சிறியவர் என்று மதியாமல் இருக்க வேண்டாம்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

தாழம் பூ உருவத்தில் பெரியதாக  இருந்தாலும், அதன் மணம், (சிலருக்குப் பிடித்தாலும்) இனியது என்று பெரும்பாலோர் சொல்வதில்லை. ஆனால் மகிழம் பூ உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இனிய நறுமணத்தில்  தாழம் பூவை விடப் பெரியது. அதுபோல், கடலானது வடிவத்தில் மிகப் பெரியது என்றாலும், அதன் நீரானது அழுக்கு உடம்பைக் கழுவுவதற்குக் கூடப் பயன் படுவதில்லை. ஆனால், அதன் பக்கத்தில் தோண்டப்படும் சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீரானது, அழுக்கு தீரக் குளிப்பதற்கு மட்டுமின்றிக் குடிப்பதற்கும் கூடப் பயன்படுகிறது. ஆதலால், ஒருவரை உருவத்தினாலே சிறியவர் என்று மதிப்புத் தராமல் புறந் தள்ளக் கூடாது !

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்
------------------------------

உருவத்தால் பெரியவர், குணத்தால் சிறியராக இருப்பதுண்டு; உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியராக இருப்பதும் உண்டு. ஆகையால், தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது !

----------------------------------------------------------------------------------------------------------
     
கலைச் சொற்கள்
     உண்ணீர் = DRINKING WATER ;
             மண்ணீர் = WATER USED FOR OTHER PURPOSES.( சென்னை            மக்கள் மொழியில்உப்புத் தண்ணீர்”)
     சிற்றூரல் = SPRING

----------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------

  ஆக்கம் + இடுகை:
  வை.வேதரெத்தினம்,
  ஆட்சியர்,
   தமிழ்ப் பணி மன்றம்.
   [தி.:2050,மடங்கல்(ஆவணி),16]
  {02-09-2019}

-----------------------------------------------------------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. அழகான பாடல்,அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  3. இப்பதிவுகள் மிகவும் பயனளிக்கின்றன...
    நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னே! அற்புதமான பாடல்!! படிக்க படிக்க இனிமை பயக்குதே!!.

      நீக்கு
  5. மண்ணீர் = தூய்மைப்படுத்தப் பயன்படும் நீர். (மண்ணுதல்= தூய்மைப்படுத்தல்).
    சிற்றூறல் = சிறிய ஊற்று.
    (சிற்றூரல் என்பது பிழை).

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .