name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: மூதுரை (17) அற்றகுளத்து அறுநீர்ப் பறவை !

சனி, ஆகஸ்ட் 31, 2019

மூதுரை (17) அற்றகுளத்து அறுநீர்ப் பறவை !

நீர் வற்றிய குளத்தை விட்டு நீங்கிச் செல்லும் பறவைகள் !


அற்ற குளத்து அறு நீர்ப்பறவை போலஎன்ற வரிகளைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். காலங்கள் பல கடந்தாலும், கரைந்து போகாத இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் நமது தமிழ் மூதாட்டி ஔவையார் தான். இவர் இயற்றியமூதுரையில் 17 –ஆவது பாடலாக வரும்அற்ற குளத்து அறு நீர்ப்பறவை....” என்ற பாடலைப் பார்ப்போமா !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (17)
------------------------------------------------------------------------------------------------------------

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர்அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

அற்ற குளத்தின் = நீர் வற்றிய குளத்தினின்றும் ; அறு = நீங்குகிற ; நீர்ப் பறவை போல் = நீர் வாழ் பறவைகள் போல ; உற்றுழி = நமக்கு வறுமை வந்த பொழுது ; தீர்வார் = நம்மை விட்டு விலகிச் செல்வோர் ; உறவு அல்லர் = உறவினர் ஆகார் ; அக்குளத்தில் = அந்தக் குளத்திலுள்ள ; கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல = கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ; ஒட்டி உறுவார் = நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உறவு = உறவினராவார்.

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------
குளத்தில் நீர் நிறைந்திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மனமில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களேயானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. “உறவினர்கள்என்று சொல்லிக் கொள்ளும் அருகதை அற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள் !


-----------------------------------------------------------------------------------------------------------
      
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மீனம்,02]
{16-03-2019}

----------------------------------------------------------------------------------------------------------



5 கருத்துகள்:

  1. தங்கள் பணி சிறந்து ஓங்குக

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பணி சிறந்து ஓங்குக

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பணி சிறந்து ஓங்குக

    பதிலளிநீக்கு
  4. உங்கள் விளக்க உரையை படித்து படித்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  5. சிறந்த கொள்கைகளுடன் வாழும் மாமனிதர் நீடூழிவாழ்க!நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் என்பதற்கு சரியான பொருள் தேவை.அ.இருளப்பன்/9942470199

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .