name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி (22) பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (22) பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து !

உழைத்துச் சேர்த்த செல்வத்தை  நல்வழியில் செலவிடுக  !

ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி, நல்வழி ஆகியவை ஔவையார் இயற்றிய நூல்கள். இவற்றுள் நல்வழியிலிருந்து ஒரு செய்யுளைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.22
-----------------------------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டிங்
காவிதான் போயினபின் பாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
----------------------------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டுஇங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

---------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து பசியாற உண்ணாமலும், அறவழிச் செயல்களில்  ஈடுபடாமலும், பாதுகாப்புக் கருதி, யாருக்கும் தெரியாமல் பூமியிலே புதைத்து வைக்கின்ற புத்திகெட்ட மனிதர்களே கேட்பீர்களாக ! உங்களுக்குப் பிற்காலம் அந்தப் பணத்தின் பயனை அடையப் போவது யார் என்று உங்களுக்கே தெரியாது ! அப்படி இருக்கையில் எதற்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் ? உலக வாழ்வை நீப்பதற்கு முன் நற்செயல்களைச் செய்து நல்லவர் என்று பெயர் எடுங்களேன் !

--------------------------------------------------------------------------------------------------------

இன்னொரு கருத்து:
---------------------------------

வருந்தி வருந்தி உழைத்து கோடி கோடியாகச் சேர்த்து அளகைப் (BANK) பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகளாக மறைத்து வைக்கும் மதிகெட்ட மாந்தர்களே கேளுங்கள் ! வாழும் காலத்தில் அறச் செயல்களுக்குப் பணத்தைப் செலவிட்டு நற்பெயர் ஈட்டுங்கள் ! அதை விடுத்து, அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்க விழைவீர்களானால், அந்தப் பணமே உங்கள் கான்முளைகளை (வாரிசுகள்) சோம்பேறிகளாக்கி, உங்கள் குலக்கொடியையே வேரறுத்து வீழ்த்தி விடும் !

----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எளிய சொற்களில் அமைந்திருப்பதால் அருஞ் சொற்பொருள் தேவையில்லை எனக் கருதி விடப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,06]
{20-03-2019}

------------------------------------------------------------------------------------------------------------

7 கருத்துகள்:

  1. Aiyaa, Avvaiyaarin iththagaya pokkisha noolgal ippozhudhu engu kidaikkiradhunnu. Thayavu seidhu avargal mugavari martrum kaipedi yenngalai veliyudavum.

    பதிலளிநீக்கு
  2. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி.டி.கே.சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை 600 018 என்னும் முகவரியில் கிடைக்கும். துழனி எண்: 044-421,123,32.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .