name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தமிழ் (07) குமரி அனந்தன் அறைகூவல் !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

தமிழ் (07) குமரி அனந்தன் அறைகூவல் !


தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்!


திரு. கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்த போது, கோவில்களில் தமிழில் வழிபாடு (அர்ச்சனை) நடத்த உத்தரவு இட்டிருந்தார். ஏறத் தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. அப்போது சமற்கிருத அடிவருடிகள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டனர். அந்தச் சூழ்நிலையில், திரு. குமரி அனந்தன், இராணி வார இதழில், தமிழ் வழிபாட்டை ஆதரித்துக் கட்டுரை எழுதி இருந்தார். அதை அப்படியே, அடி பிறழாமல் உங்களுக்குத் தருகிறேன் !

(திரு.நரேந்திர மோடி அவர்கள் தனது கீச்சகப் பக்கத்தில் (TWITTER)  தன் பெயரைசௌக்கிதார். நரேந்திர மோடிஎன்று மாற்றிக் கொண்டார். ”சௌக்கிதார்என்னும் இந்திச் சொல்லுக்குகாவலாளிஎன்று பொருள். அவரைப் பின்பற்றி அவரது கட்சியினர் தமது பெயருடன்சௌக்கிதார்என்பதை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழுணர்வு மிக்க திரு. குமரி அனந்தனின் மகளான திருமதி. தமிழிசை சௌந்தரராசன்  தனது கீச்சகத்தில் (TWITTER) ”காவலாளி. தமிழிசை சௌந்தரராசன்என்று மாற்றிக் கொண்டிருந்தால், பாராட்டலாம். தன் பெயருக்கு முன்னால்சௌக்கிதார்என்பதை இணைத்துக் கொண்டிருக்கும் அவரை என்னவென்று சொல்வது ! பதவி ஆசை அவரது தமிழையும் அல்லவா குப்புறத் தள்ளிவிட்டது ! இந்த நேரத்தில், ”தமிழிசைக்குஅவரது தந்தையின்  கட்டுரையைப் பரிசாக்கி இங்கு வெளியிடப்படுகிறது)
---------------------------------------------------------------------------------------------------
தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் !
--------------------------------------------------------------------------------------------------

ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்வது கூடாது என்று இந்துக் கோவில்களைப் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் சிலர் கூக்குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், வடபழனி முருகன் கோவிலிலும் அறங்காவலர் குழுக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி, அதன்படித் தமிழில் வழிபாடு நடைபெறுகிறது !

பேரூர் ஆலயத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்  வழிபாடு நடைபெறுகிறது !

மதுரையில் முதல் மாதத்தில் ஏறத்தாழ 250 பேர் மட்டுமே வடமொழியில் அர்ச்சனை வேண்டும் என்று வழக்கத்தின் காரணமாகக் கேட்டு இருக்கலாம். ஆனால் சில வாரங்களில் தமிழில் வழிபாடு வேண்டுவோர் 40,000 ஆகவும், வடமொழியில் வழிபாடு வேண்டுவோர் எவரும் இலர் என்றும் ஆயிற்று. இந்நிலையில் யாரைப் பாதுகாக்க தமிழுக்கு எதிராகக் குரல் எழும்புகிறது !

கி.பி.1311 –ஆம் ஆண்டுவரை ஆலயங்களில் தமிழ் தான் வழிபாட்டு மொழியாக இருந்தது. அதன் பிறகுதான் வடமொழி புகுந்தது. பாமர மக்கள் கோவில்களிலிருந்து மெதுவாக ஒதுங்கினர். அவர்களைப் பிற மதங்கள் ஈர்த்தன !

கோவில்கள் சிலரின் கைப்பிடிக்குள் அடங்கத் தொடங்கின. அதை அடித்து நொறுக்குவோம் என்ற பெயரிலே தான் கடவுள் மறுப்புக் கொள்கை தமிழகத்தில் வளர்ந்தது.  ஆக இந்து மத விரோதிகள் யார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியுமே !

இன்று இந்து மதத்தைத் தங்கள் இடுப்பிலே மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பவர்களும், தமிழைக் கோவிலுக்குள் நுழைய விடமாட்டோம் என்பவர்களுமே இந்து மதத்தின் பெரும் விரோதிகள் !

திராவிடர் கழகத்தை விட, உடன் பிறந்தும், இருந்தும் கொல்லும் இந்த நோய்களே ஆபத்தானவர்கள். இவர்களை எதிர்த்து முறியடித்து, ஆலயங்களில் தமிழை முழங்கச் செய்வது, இறைவன் மீது பக்தி உள்ளவர்கள் செய்யும் கடமை ஆகும் !

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்என்று இராமலிங்க அடிகள் பாடினார். மனம் இறைவனோடு ஒருமைப் பட வேண்டுமானால் தாய்மொழியில் வழிபாடு இருந்தால் தானே முடியும். அப்படிப்பட்ட உத்தமர்களது உறவு கோவிலுக்கு வேண்டாம் என்கிறீர்களா ?

அப்பரை, சம்பந்தரை, மாணிக்க வாசகரை சுந்தரரை, நாயன்மார்களைவிடப் பெரிய கொம்பன் எவன் ? அவன் எவனாயினும்சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளால், அவன் தாள் வணங்கிஅத்தமிழுக்கு விரோதியைஆண்டவனுக்கு விரோதியைஎதிர்ப்பது நமது கடமை !

காந்தி மகான், பாரதியார் போன்றோர் தாய் மொழியிலேயே வழிபாடு இருக்க வேண்டும் என்று போதித்தனர். கடவுள் கொள்கையைப் பரப்புகிற குன்றக்குடி அடிகளாரும், வாரியாரும், கீரனும் தமிழிலே சொற்பொழிவு ஆற்றுகிறார்கள். அதே சொற்பொழிவைக் கேட்கும் தமிழன் தமிழில் வழிபாடு செய்யக் கூடாதா ?

தமிழைக் கோவிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, தமிழனைக் கோவிலுக்குள் அழைக்கவும் முடியாது. தமிழ் விரோதிகள் கோவிலை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கவும் முடியாது !

வாரியார் தமிழ் வெளியேயும், வடமொழி அர்ச்சனை மட்டும் உள்ளேயும் நடக்க வேண்டுமா ?

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்என்றார் பாவேந்தர். தமிழையும் பழித்து அதன் மூலம் கோவில்களையும் அழித்து தம் வயிறு வளர்க்க நினைக்கும்  சுயநலக் கும்பலுக்கு எதிராகப் போர்க்களம் புக, தமிழ்க் குலமே எழுக என அறைகூவி அழைக்கிறேன் !

தமிழகத்துக் கோவில்களில் உள்ள அறங்காவலர் குழு அனைத்தும் உடனே கூடி தமிழில் வழிபாடு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், அவர்களுக்கு எதிராகவும் தமிழ் நெஞ்சங்கள் கொதித்து எழும் என்பதை மறக்க வேண்டாம் !

தாய் மொழியின் உரிமையைக் காக்கவும், கடவுள் கொள்கையை வளர்க்கவும், தேவைப்பட்டால் கோவில்கள் முன் மறியல் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன் !

------------------------------------------------------------------------------------------------------------
          
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம், 08]
{22-03-2019}

------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .