name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி (36) நண்டு, சிப்பி, வேய், கதலி !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (36) நண்டு, சிப்பி, வேய், கதலி !

ஞானம்செல்வம்கல்வி  மூன்றும்  அழிவது  எப்போது ? 

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
-----------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.36.
-----------------------------------------------------------------------------------------------------------------

நண்டுசிப்பி  வேய்கதலி  நாசமுறுங்  காலத்தில்
கொண்ட  கருவளிக்குங்  கொள்கைபோல் - ஒண்டொடீ
போதந்  தனங்கல்வி  பொன்றவருங்  காலம்அயல்
மாதர்மேல்  வைப்பார்  மனம்.

-----------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------

தாய் போட்ட குட்டி நண்டுகள் தாயைத் தின்று வளரும். கிளிஞ்சில் சிப்பிகள் உடைந்த பின்பே அவற்றின் வயிற்றிலிருந்து முத்துக்கள் பிறக்கும். மூங்கில்கள் நெல் விளைந்த பின் வெடித்துச் சிதறும் காலத்தில் அவற்றின் வேர்களில் முளைகள் தோன்றி வளரும். தாய் வாழை நாசமடையும் காலத்தில் வாழைக்கன்றுகள் முளைக்கும் !

அதுபோல, அறிவு, செல்வம், கல்வி ஆகியவை அழிய வரும் காலத்தில் ஆண்கள் அயலார் வீட்டுப் பெண்ணின் மேல் ஆசைப்படுவர் !

-----------------------------------------------------------------------------------------------------------------
சுருக்க விளக்கம்:
-----------------------------

ஒருவன் தன் மனைவியை அன்றி பிற மகளிரின் மேல் ஆசை வைத்தால், அஃது அவனிடத்து உள்ள ஞானம், செல்வம், கல்வி என்னும் மூன்றும் கெடுதற்கு அறிகுறியாகும் !

-----------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்;
------------------------------------

ஒண் தொடீ ! = ஒளி பொருந்திய வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணே ! ; நண்டு = நீரில் வாழும் நண்டு; சிப்பி = கடலில் வாழும் முத்துச் சிப்பி; வேய் = மூங்கில்; கதலி = வாழை ; நாசமுறும் காலத்தில் = தாம் அழிவை அடையும் காலத்திலே; கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் = (முறையே தாம்)  கொண்ட  (குஞ்சும், முத்தும், அரிசியும், காய்க் குலையும் ஆகிய) கருக்களை ஈனும் தன்மை போல ; (மனிதர்கள்) போதம் தனம் கல்வி  பொன்ற வரும் காலம் = ஞானமும், செல்வமும், கல்வியும் அழிய வரும் காலத்திலே; அயல்  மாதர் மேல் மனம் வைப்பார்  =  பிற மகளிர் மேல் ஆசை வைத்து அவர்களைய அடைய முயல்வார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------
          
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.: 2050, கடகம்,01]
{17-07-2019}
-----------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .