name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி (29) மரம் பழுத்தால் வௌவாலை !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (29) மரம் பழுத்தால் வௌவாலை !

”வா”, “வா” என்று கூவி அழைப்பார் உண்டோ ?

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செயத பல நூல்களுள் நல்வழியும் ஒன்று. அதிலிருந்து, கொடையாளருக்கு எல்லாரும் உறவினரே என்பதை வலியுறுத்தும்  ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.29.
------------------------------------------------------------------------------------------------------------

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவரு மங்கில்லை  - சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்.
-----------------------------------------------------------------------------------------------------------

மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கில்லைசுரந்து அமுதம்
கன்று ஆ தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
---------------------

மரத்தில் காய்கள் முற்றிப் பழுத்திருந்தால்,  பழத்தைத் தின்று பசியாறும் வௌவாலை “வா”, “வா’ என்று  வருந்தி அழைப்பவர்கள்  அம்மரத்தருகில் ஒருவருமில்லை. கன்றை உடைய பசு, பாலைச் சுரந்து கொடுத்தல் போல் ஏழை எளியவர்க்கு”இல்லை” என்று சொல்லாமல், தம்மிடம் உள்ள மிகுதியான செல்வத்தைக் கொடுத்து அவர்தம் துன்பத்தைத் தீர்ப்பாராயின்,  அத்தகைய ஈகையாளருக்கு  உலகத்தார் அனைவரும்  உறவினர் ஆகிவிடுவர் !

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:
--------------------------

மரம் பழுத்தால் = மரத்தில் காய்கள் முற்றிப் பழுத்திருந்தால் ; வௌவாலை = பழத்தைத் தின்று பசியாறும் வௌவாலை ; வா என்று கூவி =  வா” “வாஎன்று கூவி ;  இரந்து அழைப்பார் = வருந்தி அழைப்பவர்கள் ; யாவரும் அங்கு இல்லை = அம் மரத்தருகில் ஒருவருமில்லை ; கன்று ஆ (கற்றா) = கன்றை உடைய பசு ; அமுதம் சுரந்து தருதல் போல் = பாலைச் சுரந்து கொடுத்தல்போல் ; கரவாது அளிப்பரேல் = ஏழை  எளியவர்க்கு  இல்லைஎன்று சொல்லாமல், (ஒளிக்காமல்,) தம்மிடம் உள்ள மிகுதியான செல்வத்தைக்  கொடுத்து அவர்தம் துன்பத்தைத் தீர்ப்பாராயின் ; உலகத்தவர் உற்றார் = உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே  வந்து ) ஈகையாளருக்கு உறவினர் ஆகிவிடுவார் !

------------------------------------------------------------------------------------------------------------
         
 “தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050,மீனம்,11]
{25-03-2019}

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .