வாழ்வின் இறுதியும் அதனுடன் இணைந்தே வருகிறது !
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் சிறுபஞ்ச மூலமும்
ஒன்று. 102
பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் காரியாசான்
என்னும் புலவர்.
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்.09.
----------------------------------------------------------------------------------------------------------
சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்; நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான்
வலம்படா
மாவிற்குக் கூற்றமாம்; ஞெண்டிற்குத்
தன்பார்ப்பு;
நாவிற்கு நன்றுஅல் வசை.
----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
சிலம்பிக்கு = சிலந்திப்பூச்சிக்கு; தன் சினை = தன்னுடைய முட்டை; கூற்றம் = அழிவைத் தரவல்லது.; விலங்கிற்கு = கொம்புடைய விலங்குகட்கு ; நீள்கோடு = நீண்டகொம்புகள் ; வலம்படா மாவிற்கு = கவரிமானுக்கு ; மயிர் தான் = அதனுடைய உடம்பிலுள்ள முடி தான் ; ஞெண்டிற்கு = நீரில் வாழும் நண்டுக்கு ; தன் பார்ப்பு = தன் குஞ்சுகள் ; நாவிற்கு = மனிதனின் நாவுக்கு; நன்று அல் வசை = நன்மை தராத வசை மொழிகள்
------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
சிலந்திப் பூச்சிக்கு
அழிவைத் தருவது அதன் முட்டை. முட்டை பொரித்து குஞ்சு வெளிவரும் நிலையில்
தாய்ச் சிலந்தி இறந்துவிடும்; நீண்ட கொம்பினை உடைய
கலைமான் போன்றவை காட்டில் மரங்களுக்கு இடையே ஓடுகையில் அதன் கொம்புகள் மரக்
கிளைகளில் சிக்கிக் கொண்டு, அதன் விளைவாக மான் இறந்து
போக நேரும். ஆகையால் மான் போன்ற விலங்குகளுக்கு அதன்
கொம்புகளே அழிவைத் தரும். கவரி மானின் வாலில் உள்ள முடி மகளிருக்குப்
பொய்முடியாகப் பயன்படுவதால், அதை வேட்டையாடி வாலைத்
துண்டித்து விடுகின்றனர். இந்த வகையில் கவரி மானுக்கு அதன் வால் முடியே கூற்றமாக
அமைகிறது. நீரில் வாழும் நண்டு குஞ்சு பொரித்தவுடன் இறந்துவிடும். எனவே நண்டுக்கு
அதன் குஞ்சுகளே கூற்றமாக அமைந்து விடுகிறது. நல்லனவற்றையே பேசவேண்டிய நாக்கு,
எப்பொழுது தீயனவற்றைப் பேசத் தொடங்குகிறதோ, அந்த
நொடியே அம்மனிதனுக்கு கேடுகாலம் தொடங்கிவிடுகிறது. எனவே வசை மொழிகளே நாவிற்குக்
கூற்றமாக அமைகிறது !
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ:2050:மடங்கல்(ஆவணி,20]
{06-09-2019}
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .