திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31-ல் தொடங்குகிறது !
மறைமலை அடிகள், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதன், நெல்லை. வ.சுப்பையாப் பிள்ளை, பன்மொழிப் புலவர். கா. அப்பாதுரையார், காழி, சிவ.கண்ணுசாமிப் பிள்ளை போன்ற நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1935-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி திருவள்ளுவரின் காலம் கி.மு.31- ஆம் ஆண்டு என்று வரலாற்றுச் சான்றுகளையும், இலக்கியச் சான்றுகளையும் ஆய்வு செய்து முடிவாக அறிவித்தார்கள்.
இதை அடிப்படையாகக் கொண்டு 1972- ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு 1971-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இதன்படி 1972-ல் நடைமுறைக்கு வந்த திருவள்ளுவர் ஆண்டு (1972 + 31 = 2003 ) 2003 – ஆக அமைந்தது. தமிழ் நாட்டில் அனைத்து அரசுத் துறைகளும் திருவள்ளுவர் ஆண்டினைத் தமது கடிதப் போக்கு வரவுகளிலும், ஆவணங்களிலும் பயன்படுத்த வேண்டுமென்று 1981 – ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்து இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இப்பொழுது தொடங்கி இருக்கும் ஆங்கில ஆண்டு 2019 என்பது திருவள்ளுவராண்டு 2050 –க்குச் சமம். (2019 + 31 = 2050)
திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் – அதாவது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை மாதம் முதல் தேதி என்று திரு.மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 2008- ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது இந்த ஆணை நீக்கப்பட்டு, சித்திரை முதல் நாள் தான் புத்தாண்டின் தொடக்கம் என்று புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு இன்று வரை அரசினால் பின்பற்றப்படுகிறது. புத்தாண்டின் தொடக்க நாள் தான் தை முதல் நாளிலிருந்து, சித்திரை முதல் நாளுக்கு மாற்றப்பட்டதே தவிர திருவள்ளுவர் ஆண்டு மாற்றப்படவில்லை.
இஃது இவ்வாறு இருக்க, சித்திரை முதல், பங்குனி வரை உள்ள மாதங்களின் பெயர், வடமொழிப் பெயராக இருப்பதால், அதற்கு மாற்றாகப் புதிய பெயர்களை தேவநேயப் பாவாணர் அவர்கள் அறிவித்தார்கள். அவை வருமாறு :- சித்திரை --- மேழம்; வைகாசி --- விடை; ஆனி --- ஆடவை; ஆடி --- கடகம்; ஆவணி --- மடங்கல்; புரட்டாசி --- கன்னி; ஐப்பசி --- துலை; கார்த்திகை --- நளி; மார்கழி --- சிலை; தை --- சுறவம்; மாசி --- கும்பம்; பங்குனி --- மீனம்.
இந்தப் பெயர்கள் பாவாணர் அவர்கள் இட்டுக்கட்டியவை அல்ல. முற்காலத்தில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பெயர்களே. தமிழகம் மன்னராட்சிக் காலத்தில் இருந்த போது வடமொழியாளர்களின் அணுக்கம் காரணமாக தமிழ் மாதப் பெயர்கள் மறைந்து வடமொழிப் பெயர்கள் வழக்கிற்கு வந்து விட்டன. பாவாணர் அவர்களால் அறிவிக்கப் பெற்ற மாதப் பெயர்களை சூடாமணி நிகண்டு போன்ற நூல்களிலிருந்து இன்றும்கூட நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் பணி மன்றத்தில் இனி திருவள்ளுவர் ஆண்டும், பாவாணர் அறிவித்த தமிழ் மாதங்களும் நடைமுறைப்படுத்தப்படும். (ஆங்கிலத் தேதி, மாதம், ஆண்டு ஆகியவையும் அடைப்புக் குறிக்குள் இடம் பெறும்) திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் சுறவம் (தை) முதல் நாளில் இருந்து தொடங்கும். தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளும் இதுவே ! தமிழ்ப் பணி மன்றம் தமிழன்னைக்குச் செலுத்தும் அஞ்சலியாக இதைக் கருதுகிறது !
இந்த பதிவின் இறுதியில்ல் திருவள்ளுவர் ஆண்டு, மாதம், நாள் ஆகியவை எவ்வாறு அமைத்து இடுகை இடப்பட்டு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, அவ்வாறே பின்பற்றுமாறு மன்ற நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை.
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்பணி
மன்றம்,
[தி.ஆ: 2050, சிலை, 19.]
{03-01-2019}
--------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .