சீறி வரும் வெள்ளத்தைச் சிறைப்படுத்த முடியாது !
-----------------------------------------------------------------------------------------------------------------------
சீறி
வரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்த
வல்லமையுள்ள அணைகள் எதுவுமில்லை. கடுமையாக பற்றிப் பரவி வரும் தீச் சுவாலையிடமிருந்து உயிரினங்களை
மீட்பதற்கு தடுப்புக் குடைகளும் ஏதுமில்லை. மிகுந்து வரும்
காற்றை எதிர்த்து நிற்கும் வலிமை யாருக்கும் இல்லை. வெயிலின் பெரு வெளிச்சத்தையும்
நம்மால் தடுக்க இயலாது !
அதுபோல, பாண்டிய மன்னன் வழுதியை எதிர்த்து நிற்க இந்த
நிலவுலகில் யாரும் இல்லை. தமிழ் கூரும் நல்லுலகம் (தமிழ்நாடு) எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை அவன் பொறுத்துக்கொள்ள மாட்டான்.
தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப் போரிடுவான் !
திறை செலுத்த
வேண்டும் என்று வழுதி கேட்பானாகில், மறுப்பின்றி ஏற்றுக் கொள்வோர் தொடர்ந்து தமது நாட்டினை ஆட்சி புரியலாம்.. மாறாக , அவனது அரவணைப்பை இழந்துவிட்டால், அத்தகைய மன்னர்கள் மிகுந்த
இரக்கத்திற் குரியவர் ஆகிவிடுவர். புற்றிலிருந்து கிளம்பும்
ஈயல் ஒருநாள் வாழ்க்கையில் அழிவது போல அவர்களின் வாழ்வும் அழிந்து போகும் !
------------------------------------------------------------------------------------------------------------
புறநானூறு – பாடல் 51.
-------------------------------------------------------------------------------------------------------------
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின்,
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு
அவற்று ஓர் அன்ன; சினப் போர் வழுதி,
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக்
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே;
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே-
நுண் பல சிதலை அரிது முயன்று
எடுத்த
செம் புற்று ஈயல் போல,
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
------------------------------------------------------------------------------------------------------------
மிகின் = மிகுந்தால்;
சிறை = தடுத்து நிறுத்தும் அணை; மன் உயிர் = இவ்வுலகில் வாழும் உயிரினங்கள்; நிழற்றும் = பாதுகாத்தல்; வளி = காற்று;
வலியும் இல்லை = எதிர்த்து நிற்கும் வலிமை
இல்லை; ஒளி மிக்கு = வெயிலின் பெரு
வெளிச்சம் மிகுந்தால்; அவற்று ஓர் அன்ன = முன்பு கூறியதைப் போன்றதே;
சினப் போர் வழுதி = சோழ மன்னன் வழுதி
போர்க்களத்தில் புகுந்து விட்டால் ; பொறாஅன் = பொறுக்க மாட்டான்; எதிர்ந்து = ஏற்றுக் கொண்டு ; கொண்டி = கப்பம்;
வேண்டுவன் ஆயின் = திறை செலுத்துங்கள் என்று கேட்பானாயின்
; “கொள்க” எனக் கொடுத்த மன்னர் = திறை செலுத்த ஒப்புக்
கொள்ளும் பிற மன்னர்கள்; நடுக்கு = பயம்;
அற்றனரே = நீங்கி வாழலாம்; அளியரோ அளியர் = பாவம் ! ; அவன் அளி இழந்தோரே = அவனது அன்பை இழந்தவர்கள்; நுண் பல சிதலை = நுண்ணிய கறையான்கள் ; அரிதின் முயன்று எடுத்த
செம்புற்று = கடுமையாக உழைத்துக் கட்டிய செம்மண் புற்று;
ஈயல் போல = புற்றிலிருந்து வெளி வரும் ஈசல்
போல; உலமருவார் = அழிந்து போவார்.
--------------------------------------------------------------------
(பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
வழுதியை ஐயூர் முடவனார் பாடியது)
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,ஆடவை,30]
{15-07-2019}
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .