name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பழமொழி நானூறு (47) ஆயிரவர் ஆயினும் அறிவிலார் !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

பழமொழி நானூறு (47) ஆயிரவர் ஆயினும் அறிவிலார் !

காய் கலா ஆகும் நிலா !

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள்     ஒன்றான பழமொழி”   என்பது முன்றுரை அரையனார் என்பவர் இயற்றிய நானூறு வெண்பாக்களால் ஆகிய    ஒரு இலக்கியம் . ஒவ்வொரு  வெண்பாவிலும்   ஈற்றடியில் ஒரு பழமொழியை அமைத்து  இவ்விலக்கியத்தை  அவர் படைத்துள்ளார் !

--------------------------------------------------------------------------------------------------------
 பாடல்.47.
--------------------------------------------------------------------------------------------------------

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்
பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்
காய்கலா வாகும் நிலா.

---------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
---------------------------------------------------------------------------------------------------------

ஆயிரவர்  ஆயினும்  அறிவிலார் தொக்கு அக்கால்
மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல் கலார்
பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும்
காய் கலா ஆகும் நிலா.

---------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
----------------------

இரவு நேரத்தில் எங்கும் சூழ்ந்துள்ள இருளை, நிலவு தன் இன்னொளியால் நீக்கிவிடுகிறது. ஆனால், பல விண்மீன்கள் ஒன்று கூடி ஒளிர்ந்தாலும் கூட, நிலவின் ஒளிக்கு அவை ஈடாகா; இருளைப் போக்கா ! அதுபோல, அறிவு இல்லாதவர்கள் ஆயிரம்பேர் திரண்டாலும், அறிவிற் சிறந்த   மாண்புடைய ஒருவரைப் போல அவர்கள்  விளங்க முடியாது !

---------------------------------------------------------------------------------------------------------

பொருள் விளக்கம்:
-------------------------------

பல விண்மீன்கள் ஒன்றிணைந்து ஒளிர்ந்தாலும்  ஒரு நிலவின் ஒளி போல இருளை விரட்ட அது உலகிற்குப் பயன்படாது. அதுபோல, அறிவிலார் பலர் திரண்டாலும் அவரால் உலகிற்குச் சிறிதும் பயன் இல்லை !

--------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:
-------------------------------------

பாய் இருள் = எங்கும் பரவியுள்ள இருள் ; நீக்கும் = போக்கும் ; மதியம் போல் = நிலவைப்போல ; பல் மீனும் = பல விண்மீன்கள் ஒன்று சேர்ந்து ஒளிர்ந்தாலும் ; நிலா காய்கல் ஆ(கா) = நிலவு போல  ஒளி தர முடியாது. (அதுபோல), அறிவிலார் = அறிவில்லாதவர்கள் ; ஆயிரவர் ஆனும் = ஆயிரக் கணக்கில் திரண்டாலும் ; தொக்கு = புல்லிய ; அக்கால் = குணமுடையவர்களே ;  மா இரு ஞாலத்து - இப்பெரிய உலகத்தில் ; மாண்பு ஒருவன் = பேரறிவு உடைய மாண்பு மிக்க ஒருவர் போல ; கலார் = ஆகமுடியாது.

---------------------------------------------------------------------------------------------------------

          “தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.: 2050,விடை,03 ]
{ 17 -05 -2019 }

---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .