name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நல்வழி (35) பூவாதே காய்க்கும் மரமும் உள !

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (35) பூவாதே காய்க்கும் மரமும் உள !

பூக்காமல் காய்க்கின்ற மரங்களும் உள்ளன !

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாடல்களும் ஔவையார் இயற்றியன !

அரிய பல கருத்துகளை எடுத்துரைக்கும் நல்வழியில் நாற்பது பாடல்கள் உள்ளன. அவற்றுள், 35-ஆவதாக இடம் பெறும் இப்பாடல் பேதையிடம் எத்துணை  உரைத்தாலும் அதை அவன் உணரான் என்பதை விளக்குகிறது !

-------------------------------------------------------------------------------------------------------------
பாடல்.35.
-------------------------------------------------------------------------------------------------------------

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே  -  தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு !

-------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------------------------------------------------------------------

பூவாதே காய்க்கும்  மரமும் உள மக்களு(ள்)ளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரேதூவா
விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

பூவாதே காய்க்கும் = பூக்காமலேயே காய்க்கின்ற ; மரமும் உள = மரங்களும் உள்ளன.  ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் = (அதுபோல) மனிதர்களுள்ளும் ஏவுதல் இல்லாமலேயே தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு.; தூவா = தூவி ; விரைத்தாலும் நன்று ஆகா வித்து என = விதைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதை போல ; பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது = மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்துஉண்டாகாது !

------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------

பூக்காமலேயே காய் காய்க்கின்ற மரங்கள் சில உண்டு. அதுபோல, மனிதர்களுள்ளும் யாரும் சொல்லாமலேயே தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு. வளமான நிலத்தில் தூவி விதைத்தால் கூட  முளைத்துப் பயன்படாத விதைபோல, மூடனுக்கு எடுத்து விளங்கச் சொன்னாலும் அதனை அறிந்து கொள்ளும் அறிவுத் திறன் அவனிடத்தில் உண்டாகாது  !

குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையோர்; அறிவித்த பின்பு கூட அதை உள்வாங்கி அறிந்து செய்யாதவர் மூடர் என்பதே இப்பாடல் நமக்கு உணர்த்தும் கருத்து ஆகும் !

-------------------------------------------------------------------------------------------------------------
        
  ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, ஆடவை,24,]
{09-07-2019}
-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .