name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (28) கறவைகள் பின் சென்று !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (28) கறவைகள் பின் சென்று !

கட்டுச் சோறு  கொண்டு போய்க் காட்டிலே அமர்ந்து   உண்பவர்கள் !


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
.........அறிவொன்று  மில்லாத ஆய்க் குலத்து  உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,
.........குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
.........அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை
சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே
.........இறைவா நீதாராய் பறையலோ ரெம்பாவாய் !

-----------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

! கண்ணா ! நாங்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்.  கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போய் காட்டிலே சாப்பிடுபவர்கள். அறிவில்லாத அப்பாவிகள். நாங்கள் ஆயர் குலத்தவர்கள். நீ எங்கள் குலத்தில் பிறப்பு எடுத்ததற்கு  நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறோம். நீ குறை இல்லாதவன்; நற்குணங்கள் படைத்த கோவிந்தன்; இனி நம்முடைய உறவை யாரும் விலக்க முடியாது ! நாங்கள் அறியாதவர்கள் ! அன்பினாலே உன்னைப் பேர் சொல்லி அழைத்திருந்தாலும், ஒருமையில் பேசி   இருந்தாலும்   கோபப்படாதே  !  இறைவா  !   எங்களுக்கு  அருள் புரிவாய் !!

------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
---------------------------

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் = கறவை மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுக்கு  அழைத்துச் சென்று, அங்கேயே பகலெல்லாம் தங்கி கட்டுச் சோற்றினை உண்போம். அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து = ஆயர் குலத்தவர்களான நாங்கள் அறிவில்லாத அப்பாவிகள் ; உன்றன்னை = உன்னை; பிறவிப் பெறுந்தனை = எங்கள் குலத்தில் வந்து நீ பிறந்தமைக்கு ; புண்ணியம் யாமுடையோம் = நாங்கள் மிகுந்த புண்ணியம் செய்திருக்கிறோம்;  குறைவொன்றுமில்லாத கோவிந்தா = நீ குறை இல்லாதவன்; உன்றன்னோடு உறவேல் = எங்கள் குலத்தில் வந்து பிறந்துவிட்டமையால் நீ எங்களுக்கு உறவினன் ஆவாய்; நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது = நம்முடைய உறவை யாராலும் பிரிக்க முடியாது ; அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள் ; அன்பினால் உன்றன்னை = உன் பேரில் உள்ள அன்பின் மிகுதியால் ; சிறு பேர் அழைத்தனவும் = உன்னைப் பெயர் சொல்லி அழைத்திருந்தாலும் ; சீறி அருளாதே = எங்கள் மீது கோபம் கொள்ளாதே; இறைவா நீ தாராய் பறையே = கண்ணா நீ எங்களுக்கு அருள் புரிய வேண்டும்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் பாடி வணங்குவோம் பாவையரே வாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:-
     வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2049, சிலை, 27]
(11-01-2019)

------------------------------------------------------------------------------------------------------
      
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------




1 கருத்து:

  1. கோதையின் ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு வகையில் தனித்துவமான சுவையும் பொருளும் உடையவை. இறைவனைப் பாடும் பாடல்களின் இறுதியில், ஏதும் தவறு இருந்தால் இறைவனிடம் மன்னிப்பு கோரும் வண்ணம் க்ஷமா பிரார்த்தனை என்று சொல்லும் மரபு உண்டு. அது போலத்தான் இந்த பாசுரம் கூட. சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய் என்று தங்கள் அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மிகவும் பிடித்த பாடல் இது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .