name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (19) குத்து விளக்கெரிய !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (19) குத்து விளக்கெரிய !

கொத்துமலர் சூடிய குழலாள் நப்பின்னை !


குத்து  விளக்கெரியக்  கோட்டுக்கால் கட்டிலின்மேல்
.........மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,
கொத்தலர்  பூங்குழல் நப்பின்னை  கொங்கைமேல்,
.........வைத்துக் கிடந்த மலர்மார்பா !  வாய்திறவாய் !
மைத்தடங்  கண்ணினாய் !  நீயுன்  மணாளனை,
.........எத்தனை போதும்   துயிலெழ  ஒட்டாய்காண் !
எத்தனை ஏலும்  பிரிவாற்ற  கில்லாயால்
.........தத்துவம் அன்று தகவேலோர் ரெம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தினால் ஆன கால்களை உடைய கட்டிலில், மெத்தென்றிருக்கும் பஞ்சு மெத்தையில், கொத்துமலர் சூடிய குழலாள் நப்பின்னை படுத்திருக்கிறாள். அவளது மார்பின் மேல் தலை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா ! கண்ணா ! கொஞ்சம் வாய் திறந்து நப்பின்னையிடம் சொல்லையா ! மைவிழி மாதே ! நப்பின்னை ! நீ என்ன ஒரு பொழுதும் உன் மணவாளனை எழுந்திருக்கவே விட மாட்டாயா ? கட்டிப் பிடித்தே படுத்திருப்பாயா ? ஓகோ ! ஒரு கணம் கூட உன்னால் பிரிவைச் சந்திக்க முடியாதோ ! நல்லது ! இது வெறும் தத்துவமல்ல ! உனக்கு நியாயம் தான் ! எங்களையும் கொஞ்சம் கவனித்து அவனை எழுப்பி விடம்மா !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

கோட்டுக் கால் = யானைத் தந்தத்தினால் ஆன கால்களை உடைய கட்டில்; பஞ்ச சயனத்தில் = பஞ்சு மெத்தையில் ; கொத்து அலர் = கொத்துக் கொத்தான மலர்;   பூங்குழல் = பூப்போன்ற மென்மையான தலை முடி; நப்பின்னை = கண்ணனின் மனைவியாகிய நப்பின்னை; கொங்கை மேல் = மார்பின் மேல்; வைத்துக் கிடந்த = தலை வைத்துப் படுத்திருக்கும்; மலர் மார்பா = மலர் மாலை அணிந்த மார்புடைய கண்ணா !; வாய் திறவாய் = வாய் திறந்து பேசு ஐயா! மைத் தடங் கண்ணினாய் = மைவிழி மாதே !; எத்தனை போதும் = ஒரு பொழுதும்; துயில் எழ ஒட்டாய் காண்= எழுந்திருக்க விட மாட்டாயா ?; எத்தனை ஏலும் = சிறிது நேரம் கூட பிரிவு ஆற்றகில்லாய் = பிரிந்து இருக்க மாட்டாயா ; தத்துவமன்று = கணவனும் மனைவியும் துயில்வதில் கூட பிரியக் கூடாது என்பது வெறும் தத்துவம்அல்ல ; தகவு ; அதுதான் கற்பு என்னும் நல்லொழுக்கமும் கூட;  ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனை போற்றிப் பாடுவோம் , வாருங்கள் பாவையரே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,18.]
{02-01-2019}

------------------------------------------------------------------------------------------------------------
        “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .