மாயவனை, வடமதுரையின் இளங்குமரனை !
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
.........தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
.........தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்த்தூ வித்தொழுது,
.........வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
.........தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் !
------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
--------------
அந்த மாயவனை, வடமதுரையின் இளங்குமரனை, வெள்ளம் பெருக்கெடுக்கும் யமுனைக்குத் தலைவனை, யாதவர் குலத் திருவிளக்கை, தாயின் வயிற்றில் பால் வார்த்த தாமோதரனை, தூயவர்களாக வந்து, நாம் மலர் தூவித் தொழுது, வாயாரப் பாடுவோம்; மனதாரச் சிந்திப்போம்; அவன் நமது கடந்த காலத் தவறுகளை மன்னிப்பான். எதிர்காலத்தில் நமது அறியாமையையும் மன்னிப்பான். நமது தவறுகள் எல்லாம் தீயினில் விழுந்த தூசு போலாகும் !
-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
------------------------
மாயனை = மாயங்கள் புரியும் கண்ணனை; மன்னு = நிலைத்த புகழ் பெற்ற; வடமதுரை மைந்தனை = வடமதுரை என்னும் வடநாட்டு நகரத்துப் புதல்வனை; யமுனைத் துறைவனை = யமுனை ஆற்றின் தலைவனை; ஆயர் குலம் = இடையர் குலம்; அணி விளக்கு = திருவிளக்குப் போன்றவன்; தாயைக் குடல் விளக்கம் செய்த = பிள்ளை இல்லாத யசோதைக்கு வளர்ப்புப் பிள்ளையாக வந்து சேர்ந்து அவளுக்குப் பிள்ளை இல்லாக் குறையைத் தீர்த்த கண்ணனை; தாமோதரன் = தாமம் (கயிறு) + உதரன் (வயிறு உடையவன்) = தாமோதரன். எங்கும் போய் விடாதவாறு வயிற்றில் கயிறு கட்டி உரலுடன் பிணைக்கப்படிருந்த குழந்தை கண்ணன் = தாமோதரன்; தூயோமாய் = தூய மனமும் மெய்யும் உடையவர்களாய்; தூ மலர்த் தூவித் தொழுது = மலர் தூவி வணங்கி; வாயினாற் பாடி = கண்ணனை வாயினால் பாடி; மனத்தினால் சிந்தித்து = கண்ணனையே மனதில் சிந்தித்து; போய பிழையும் = இதுவரை செய்த பிழைகளும்; புகுதருவான் நின்றனவும் = எதிர்காலத்தில் நமது அறியாமையினால் செய்யக் கூடிய பிழைகளையும்; தீயினால் தூசாகும் = கண்ணன் மன்னித்து விடுவதால் அவை எல்லாம் தீயில் இட்ட தூசுகள் போல மறைந்து போகும்; செப்பு ஏல் ஓர் = எனவே கண்ணனை ஏத்திப் போற்றிப் பாடி வணங்குவோம். எம்பாவாய் = எமது குலப் பெண்களே !
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை,04.]
{19-12-2018}
-----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .