மாடத்தில் நான்கு பக்கமும் விளக்கு எரிகிறது !
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
.........தூபம் கமழ, துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள்திறவாய் !
.........மாமீர் அவளை எழுப்பீரோ உம்மகள்தான்,
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ?
.........ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
.........நாமம் பலவும் நவின்றுஏல்ஓர் எம்பாவாய் !
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------
அழகிய மாணிக்கங்கள் அமைந்த மாடத்தில் நான்கு பக்கமும் விளக்கு எரிகிறது ! அகில் புகை எழுந்து எங்கும் மணம் பரப்புகிறது ! பஞ்சணையில் உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே ! மணிக் கதவைக் கொஞ்சம் திற ! எங்கள் மாமியரே ! அவளைக் கொஞ்சம் எழுப்புங்கள் ! உங்கள் மகள் என்ன ஊமையா ? செவிடா ? அல்லது தூங்கு மூஞ்சியா ? உறக்க மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறாளா ? அந்த மா மாயன் வைகுந்தன் வருகிற வேளையில் தூங்கி வழிகிறாளே ! அவனைப் பாடி வணங்குவதற்கு அவளை எழுப்புங்கள் !
--------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------------
தூ மணி மாடம் = அழகிய மேல் மாடம்; சுற்றும்= நாலாபுறமும்; தூபம் = நறும்புகை மணம்; துயில் அணை = உறங்கும் பஞ்சு மெத்தை; கண் வளரும் = கண் மூடித் தூங்கும்; தாள் = தாழ்ப்பாள்; மாமீர் = மாமன் மனைவியரான மாமிகளே ; எழுப்பீரோ = எழுப்புங்களேன்; உம் மகள் = உங்கள் மகள்; ஊமையோ = வாய் பேசாதவளோ; செவிடோ = காது கேளாதவளோ; அனந்தல் = உறக்க மயக்கம்; ஏமம் = துயிலறை; பெருந்துயில் = ஆழ்ந்த உறக்கம்; மந்திரப் படுதல் = கட்டுண்டு கிடத்தல்; மா மாயன் = மாயத் திருவிளையாடல்கள் புரிபவன்; மாதவன் வைகுந்தன் = மாதவன் என்றும் வைகுந்தன் என்றும் சொல்லப்படும் கண்ணனின் ; நாமம் பலவும் நவின்று = பெயர்களைச் சொல்லி; ஏல் = துயில் எழுந்து; ஓர் = அவனைப் பாடி வணங்குவாய் ! எம்பாவாய் = எமது பதுமை போன்ற அழகிய பெண்ணே !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை,08.]
{23-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .