name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை - (23) மாரி மலை முழஞ்சில் !

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (23) மாரி மலை முழஞ்சில் !

குகையிலே உறங்கிய சிங்கம்  விழித்து எழுந்தது !


மாரி  மலைமுழஞ்சில்  மன்னிக்  கிடந்துறங்கும்
.........சீரிய  சிங்கம்  அறிவுற்றுத்   தீவிழித்து
வேரி  மயிர்பொங்க  எப்பாடும்  பேர்த்துதறி
.........மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா  போலேநீ  பூவைப்பூ  வண்ணாஉன்
.........கோவில்நன்  றிங்கனே  போந்தருளிக் கோப்புடைய
சீரிய  சிங்கா  சனத்திலிருந்து   யாம்வந்த
.........காரிய  மாராய்ந்து  அருளேலோர்   எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------
     
பொருள்:-
---------------

அதோ எங்கள் கண்ணன் எழுந்து வந்துவிட்டான்.  மழைக் காலத்தில் குகையிலே உறங்கிய சிங்கம் கதுமென விழித்து எழுந்தது; அதன் பிடரி மயிரைச் சிலிர்த்தது; நிமிர்ந்து பார்த்தது; விண்ணைப் பார்த்து உரத்து முழங்கியது; புறப்பட்டது ! 

அதுபோல வந்துவிட்டாயேபூவையர்க்கெல்லாம் பூப்போன்ற கண்ணா ! உன் கோயிலிலிருந்து மெதுவாக வந்து அரண்மனையில் உள்ள மாணிக்க அரியாசனத்தில் உட்கார் ! அதன் பிறகு நாங்கள் வந்திருப்பதன் காரணத்தைக் கேட்டு அருள் புரி ! கண்ணன் வரும்வரை அவனைப் போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள் பாவையரே !

---------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

மாரி = மழைக்காலத்தில்; மலை முழைஞ்சு = மலையில் உள்ள குகை;  மன்னி = (நிலையாக) நெடு நாள்களாக;  அறிவுற்று = விழித்தெழுந்து; தீ விழித்து = தீப்பொறி பறக்கும் கண்களால் பார்த்து; வேரி மயிர் பொங்க = மெல்லிய மணம் வீசும் பிடரி மயிரைச் சிலிர்த்து;  எப்பாடும் பேர்த்து உதறி = மறுபடியும் தலையை ஆட்டிப் பிடரியைக் குலுக்கி உதறி; மூரி நிமிர்ந்து = சோம்பல் தீரத் தலையைச் ஆட்டிச் சிலிர்த்து; முழங்கி = உரத்து ஒலி எழுப்பி முழக்கமிட்டு (கர்ஜித்து), புறப்பட்டுப் போதருமாப் போல = புறப்பட்டு வருதல் போல்; பூவைப் பூவண்ணா = மகளிர் மனம் கவரும் காயா மலர் வண்ணனே; உன் கோயில் = உன் கோயிலிலிருந்து ; நன்று இங்ஙனே = நல்லபிள்ளையாக உன் அரண்மனைக்கு;  போந்தருளி = எழுந்தருள்வாய்; கோப்பு உடைய = பன்மணிகள் கோத்து அழகாகத் திகழும்; சீரிய சிங்காசத்திலிருந்து = பெருமை மிகு அரியாசனத்தில் அமர்ந்து ; யாம் வந்த காரியம் ஆராய்ந்து = நாங்கள் வந்திருக்கும் நோக்கம் அறிந்து; அருள் = அருள் புரிவாயாக ! ஏல் ஓர் எம்பாவாய் = அதுவரைக் கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவோம், வாருங்கள் பாவையரே !

-------------------------------------------------------------------------------------------------------

முழைஞ்சு = மலைக் குகையை குறிக்கும் சொல். இந்த புதிய சொல்லை மனதில் இருத்துங்கள் நண்பர்களே ! முழங்கி = விண்ணைப் பார்த்து உரத்து ஒலி எழுப்பி (முழங்கி என்று பொருள்). சிறு வயதிலிருந்து நமக்குசிங்கம் கர்ஜிக்கும்என்று தான் சொல்லித் தந்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இனிமேல் ”கர்ஜிக்கும்” என்பதை விட்டு விட்டுமுழங்கும்என்று சொல்லிப் பழகுவோம்.

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 22]
{06-01-2019}

------------------------------------------------------------------------------------------------------
     
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .