எங்கள் நோன்புக்குப் பரிசு கொடு; பெற்றுக் கொள்கிறோம் !
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்றன்னை,
.........பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
.........சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
.........ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
.........கூடி இருந்து குளிர்ந்துஏல்ஓர் எம்பாவாய் !
----------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
பகைவர்களை வெல்லுகின்ற கோவிந்தா ! உன்னைப் பாடிப் பாடி நாங்கள் மகிழ்கின்றோமே, இது எங்களுக்குப் போதும். ஆனாலும், உன் கையால் ஏதாவது சன்மானம் தர விரும்புகிறாயா ?
மெத்தச் சரி ! அள்ளிக் கொடு ! எங்கள் நோன்புக்குப் பரிசு கொடு; வாங்கிக் கொள்கிறோம் ! கைக்குச் சூடகம் கொடு; தோளுக்கு வளையல் கொடு; காதுக்குத் தோடு கொடு; மேல் செவிக்குக் கொப்புக் கொடு; எல்லாவற்றையும் அணிந்து கொள்கிறோம் ! புதிய பட்டாடை அணிகிறோம். அதன் பிறகு நிறைய நெய் ஊற்றிச் சர்க்கரைப் பொங்கல் செய்து உனக்குப் படைக்கிறோம் ! அந்த நெய் முழங்கை வழியாக வடியும்படி, கூடியிருந்து சாப்பிடுகிறோம் ! கொடு ! கொடு !
-----------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
---------------------------
கூடாரை = பகைவரை; உன்றன்னை = உன்னை; பாடிப் பறை கொண்டு = இனிய சொற்களைக் கொண்டு போற்றிப் பாடி; சம்மானம் = வெகுமதி; நாடு புகழும் பரிசினால் நன்று ஆக = ஊரே புகழ்ந்து பேசி மெச்சுமளவுக்கு; சூடகமே = கைகளுக்கு சூடகம் (BRACELET) ; தோள் வளையே = மேற் கைகளுக்கு நெளிவளையல் ; தோடே = காதுகளுக்குத் தோடு; செவிப் பூவே = செவி மடலுக்கு பொற்பூ; பாடகமே = கால்களுக்குப் பாடகம் ; என்று = என ; அனைய = அனைத்து; பல்கலனும் = அணிகலன்களும்; யாம் அணிவோம் = நாங்கள் அணிந்து கொள்வோம்; மூட நெய் = உடலுக்குக் குளிர்ச்சி தரும் நெய் ; வழிவார = வழிந்து வர; கூடியிருந்து குளிர்ந்து = ஒன்றாகக் கூடி இருந்து
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை :
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை, 26]
. (10-01-2019)
------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .