கொத்து (01) மலர்
(042)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு இடமாற்றாலாகிச்
செல்கின்ற அலுவலக உதவியாளர்
கு.ப.திருஞான சம்பந்தத்திற்கு அளிக்கப்பெற்ற தேனீர்
விருந்தில் நான் ஆற்றிய உரை !
(ஆண்டு 1969)
------------------------------------------------------------------------------------------------------------
நீலத் திரைவானில் நீந்திவரும் ஆழியவன்
நிலமடந்தைக் கண்மணியாம் நீள்கடலை மாலையிட்டான்.
கோலத் திருமழலைக் கொண்டலதைச் சேயாக்கி ,
குடகுமலை மாளிகையில் கொண்டுவிட்டான் கண்மலர !
காலைக் கருக்கலதில் கட்டவிழும் மொட்டிதழாம்
காவிரியாள் கடலாடக் கீழ்த்திசையில் பாய்ந்தோட ,
ஓலைச் சருகாக உலர்ந்துவிட்ட ஞாலமலர்
உயிரூட்ட வந்தவளை உரைத்திடுவார் பொன்னியென !
மாலைப் பிணியுற்று மயக்கமுற சோழனவன்
மருத்துவனாய் வந்திட்டான் ; மகிழ்ந்திட்டாள் திருவரங்கில் !
பாலகராம் ஐவரினைப் பரிசாக்கி வரலாடும்
பைங்கூழின் சிறுசாலில் பசுமணியாள் வாழுகிறாள் !
சீலமுறு செல்வங்கள் சிலம்பனையக் காவியமாய்
சிந்துபலப் பாடிவர சிலுசிலுத்து ஓடுகிறார் !
ஆலைக் கரும்புகளும் அருங்கதலிப் பைங்கமுகும்
ஆடுதுறை ஏடிடீ இருபத்து ஏழுகளும்
சாலைகளின் ஓரமெலாம் சதிராட ஓடுகிறார் !
சந்தித்து உரையாட நம்மவரும் ஓடுகிறார் !
பாலை வனத்திடையே பல்லாண்டு பாடிவிட்டு
பசுமைச் சிறைதேடி பைங்குயிலார் ஓடுகிறார் !
சேலைத் துணைநாடி சிறுபறவை செல்கிறதோ ?
சீராடும் ஐயாற்றில் நீராடச் செல்குதுவோ ?
வாலை நினைவூற்றில் வட்டமிடும் வான்குருகு,
வாழியநீ பல்லாண்டு ! வாழியநீ வாழியவே !
-----------------------------------------------------------------------------------------------------------
இப்படித்தான் வாழவேண்டும் என்றநல்லோர்
இயல்பான வறைமுறைக்குக் கட்டுப்பட்டு !
செப்பனிட்ட பாதையிலே தடம்மாறாமல் ,
சீராகச் செலுத்திடுக ! வாழ்க்கைத்தேரை !
ஒப்பரிய உத்தமர்தம் கொள்கைச்சாலை ,
உறுதியுடன் செல்வதுடன் கடமையாற்றி ,
செப்பரியக் கண்ணியத்தைக் காத்துப்போற்றி ,
சிறப்புடனே கட்டுப்பா டாகவாழ்ந்து ,
வாழ்வினிலே மென்மேலும் நலன்கள்பெற்று ,
வாழ்ந்திடுக ! வாழ்த்துகிறோம் ! வாழி ! வாழி !!
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .