கொத்து (01) மலர் (11)
-----------------------------------------------------------------------------------------------------------
மனதில் நிறைந்த நண்பர் தாணிக்
கோட்டகம் இரத்தின. இராசேந்திரன் எழுதிய
கவிதை மடலைக் கண்டு மகிழ்ந்து,
நான்
விடுத்த மறுமொழி மடல் !
(ஆண்டு 1969)
------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
இன்பத்தின் சிகரமதில் கொடியை நாட்டி,
ஈரைந்துத் திங்களதைக் காவல் காத்து,
துன்பத்தில் துடிக்குமுடல் துவண்டு வாட,
தோகையவள் தாயாகும்
காலம் தன்னில்,
பெற்றெடுத்த பிள்ளையது பேசும் ஆற்றல்,
பெற்றிலது என்றுணரும் தாயின் உள்ளம்,
குற்றுயிராய்ச் செத்துவிழும் குயிலைப்
போல,
குமைகின்ற காட்சிபெருங் கொடுமை அன்றோ ?
அருந்தவமும் அறப்பணிகள் பலவும் செய்தேன்,
ஆலயங்கள் தொழுதுவந்து நீரில் மூழ்கி,
இருந்திருந்துப் பெற்றனனே இந்தப் பிள்ளை,
என்விதியை என்னவென்றுக் கூறல் சாலும் ?
என்பனவாய்
ஏங்கியுளம் புலம்பிட் டாலும்
“என்னருமைக் கண்மணியே !
இன்பத் தேனே !
உன்னருளால் உற்றவினை யாவும் நீங்கி
உய்ந்திடுவேன்” என்றிடுவாள் மறுப்பார் யாரோ ?
பேசுகின்றத் திறமையில்லை பிள்ளைக்
கென்று
பெருங்குறையாய் மனதினிலே எண்ணும் போதும்
மாசகன்றப் பிஞ்சுவுடல் மருண்ட பார்வை,
மயங்குநடை, புன்னகையில் மழலை இன்பம்
கண்டிடுவாள் ! அஃதன்றிக் கலங்க மாட்டாள் !
கருத்தழிந்து வாழ்நாளைக் கழிக்க மாட்டாள் !
உண்டியுடை
சீராட்டி உறங்கச் செய்ய
ஒருபாடல் இசைத்திடுவாள் உண்மை அன்றோ ?
இப்படியாய்ப் பிள்ளையுடன் வாழும் போழ்தில்,
எதிர்பாரா நாளொன்றில் ஊமைப் பிள்ளை,
அப்படியே
தன்முகத்தில் முகத்தைச் சேர்த்து,
அமுதொழுகும் இதழ்விரித்து “அம்மா” என்று,
அழைத்துவிடின் நெஞ்சமதில் ஆவல் துள்ள,
அன்னையவள் அன்பொழுக
முத்தம் தந்து
மழைத்துளிகாண் பயிரைப்போல் மகிழ்வாள் மற்றும்
மதிமயங்கச் சிலையெனவே
சமைவாள் அன்றோ!!
கரும்புமொழி சிலதுமிகள் வாயில் வாரா !
கண்மயங்க காதுகளும்
ஒலியைக்
கேளா !
அரும்புநகை இதழ்க்கடையின் அருகில் வாரா !
அரவணைக்கும் கையிரண்டும் ஏவல் செய்யா !
கலையணிந்த
காலிரண்டும் கரகம் ஆடும் !
கண்ணெதிரில் காசினியும் குடைபோ லாகும் !
மலையளவாய்த் தாரகைகள் விழிமுன் ஆடும் !
மயங்குமனம் கனவுலகில்
கீதம் பாடும் !
கற்பனையில் தீட்டிவிட்ட கதைபோல் என்னைக்
கற்சிலையாய்ச் சமைத்துவிட்டாய் கவிதை
கொண்டு!
பொற்பனையில் விளக்கம்போல், புவனம் போல,
புகழுடனே வாழ்ந்திடுக ! பொன்னார் மேனி,
நலமுடனே
நற்றமிழும் சிறக்க வாழ்ந்து
நல்லபல செயலாற்றி
வழியும் காட்டி,
நிலவோடு
நீரும்போல் வானும் போல,
நித்திலமே வாழ்ந்திடுக ! நின்கவிதை வாழ்க !
==============================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .