கொத்து (01) மலர் (030)
----------------------------------------------------------------------------------------------------------------------------
கணையாழி இதழுக்காக எழுதிய கவிதை
(ஆண்டு 1969)
-------------------------------------------------------------------------------------------------------
அன்புமிகு பூங்கொடிநீ அழுவதை நிறுத்திவிடு !
அலைபாயும் எனதுள்ளம் அமைதியுடன் வாழவிடு !
துன்பமிகு நினைவுகளைத் தூக்கி எறிந்துவிடு !
துயர்நீங்கி நான்வாழத் தூமணியே சிரித்துவிடு !
நன்றியுள்ள நின்னிதயம் நிலவைப் பொழியவிடு !
நலிந்துவரும் எனதுள்ளம் நலமுடனே வாழவிடு !
அன்றுமுதல் இன்றுவரை அருட்சுனையில் மூழ்கிவந்தேன் !
அருமையுள்ள தங்கையென அன்புடனே பழகிவந்தேன் !
தோன்றிவரும் துன்பமெலாம் துடைத்து எறிந்துவந்தேன் !
துளிக்கூடக் கவல்கொண்டு துடித்து வருந்தவில்லை !
கன்றிழந்த தாய்ப்பசுவும் கதறி அழுவதுபோல்,
கனிமொழிநீ மனமுருகிக் கண்மயங்க வாடுவதேன் ?
அன்றலர்ந்த தாமரைபோல் அழகு ததும்புமுகம்
அடிபட்டு வீழ்ந்துவிட்ட அன்றிற் பறவையைப்போல்,
கன்றியுள்ள காட்சிதனைக் காணச் சகிக்கவில்லை !
கண்ணீர் பெருகிவரக் கனன்று துடிப்பதுவேன் ?
நின்முகம் சிரித்திருந்தால் நேயன்நான் இன்புறுவேன் !
நீசிரிக்க மறுத்தனையேல் நெஞ்சமதில் நானழுவேன் !
மானிடரின் வாழ்வுதனில் மரணமெனும் துன்பமுண்டு !
மனங்களிக்க வாழுவதே மாந்தரது பண்பாடு !
இம்மொழியை நெஞ்சிருத்தி இன்னல் தவிர்த்திருந்தேன்
இன்றுநீ நினைவூட்டி ஏழையெனை வதைக்கின்றாய் !
அம்புதைத்த உள்ளமதை அனல்கொண்டு தாக்காதே !
அன்பெனும் பால்வார்த்து அடியவனை வாழவிடு !
ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம் ! உண்மைவழி சென்றிடுவோம் !
உளமார்ந்த அன்பிற்கு ஒளிமறைக்கும் திரைவேண்டாம் !
===========================================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .