புதுச்சொல் புனைவோம் !
GENERATOR - ஈன்பொறி
----------------------------------------
”ஜெனரேட்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பிறக்கச் செய்தல் அல்லது பிறப்பித்தல் என்று பொருள். உற்பத்தி செய்தல், உண்டாக்குதல். ஆக்குதல் என்றும் கூடப் பொருள் சொல்லப் படுகிறது !
எலக்ட்ரிசிட்டி ஜெனரேட்டர் என்பதை “ மின்சார ஜனனி” என்று முன்பு மொழி பெயர்த்தனர். பிறகு அதை “மின்னாக்கி” என்று சொல்லி வருகின்றனர். வினைச் சொல்லின் அடிப்படையில் பெயர்ச் சொற்களை உருவாக்கும் போது புதிய சொல்லானது பொருள் நயத்துடன் ஒலி நயமும் உடையதாக இருத்தல் வேண்டும். ”மின்னாக்கி” என்ற சொல்லில் ஒலி நயம் அமையவில்லை !
மின்சார ”ஜெனரேட்டர் “ என்பது மின்சாரத்தை உற்பத்தி செய்து வெளியே அனுப்பும் ஒரு சாதனம். உற்பத்தி செய்து வெளியே அனுப்புதல் என்பது “ஈனுதல்” தானே ! பசு ஆண் கன்று ஈன்றுள்ளது என்னும் தொடரில் ஈனுதல் என்றால் என்ன என்பது அனைவருக்கும் புரிகிறதல்லவா ? Maternity Home என்பதைத் தமிழில் “ஈனில்” என்று சொல்கிறோம். அதுபோல “Generator” என்பதை “ஈன் பொறி” என்று சொல்லலாம் அல்லவா ?
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு ? (குறள்:31)
அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. (குறள்:74)
சிறப்புஈனும் செல்வம் பெரினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள் (குறள்:311)
ஜெனரேட் என்பதை ஈன் என்று தமிழாக்கம் செய்வதன் மூலம் மேலும் பல புதிய சொற்களைப் படைக்கலாம். அவற்றையும் பார்ப்போமா ?
=====================================================
GENERATE | = ஈன் |
GENERATOR | = ஈன் பொறி |
ELECTRICITY GENERATOR | = மின்விசை ஈன்பொறி |
A.C.GENERATOR | = மாறலை ஈன்பொறி |
D.C.GENERATOR | = நேரலை ஈன்பொறி |
GAS GENERATOR | = வளிம ஈன்பொறி |
GAS GENERATOR( Water to carbide ) | =.வளிம ஈன்பொறி (நீருடன் கரி ) |
GAS GENERATOR( Carbide to Water) | =வளிம ஈன் பொறி (கரியுடன் நீர்) |
PORTABLE GENERATOR | = எடுப்பு வகை ஈன்பொறி. |
ஈன் பொறி ஏற்றமுள்ள மொழியாக்கம் ! சிறப்பான தேர்வு !
பதிலளிநீக்குநன்றி !
பதிலளிநீக்கு