கொத்து (01) மலர் (047)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு இடமாற்றலானதை
முன்னிட்டு எனக்கு அளிக்கப்பட்ட தேனீர் விருந்தின்போது
நான் ஆற்றிய நன்றியுரை !
(சூலை 1971)
-------------------------------------------------------------------------------------------------------------
அன்புநிறை உளம்கொண்ட அவைத்தலைமைக்
கெழுதகையே !
அறிவுச் சுடர்கொளுத்தும் ஆசிரியப்
பெருமக்காள் !
துன்பம் விளையுங்கால் தோள்கொடுக்கும்
நன்னண்ப !
தோழர்காள் ! அனைவர்க்கும் உளமார்ந்த
நல்வணக்கம் !
*************************************
பணியினின்று விடுபடாமல் கடமையாற்றும் காலையில்,
பரபரப்பாய் விருந்தளிக்கும் பாங்கினைஎன் சொல்லுவேன் ?
அணியமுடன் வதிகிறேனென் பணிதொடர ஆளில்லை !
அன்பனேநின் கதைமுடிந்தது புறப்படுக ! என்கிறீர் !
இல்லம்வந்த விருந்தினரை எப்பொழுது போகிறீர் ?
என்றுவினவும் பான்மையினை என்னவென்று சொல்லுவேன் ?
நல்லது ! நான் எப்படியோ போகத்தானே போகிறேன் !
நவிலுகிறேன் நன்றிநீவிர் தகைமையுடன் ஏற்பீரே !
*********************************************
திருச்சிமா நகரம் தனது
திருக்கரம் இரண்டை நீட்டி,
வருகஎன் குழந்தாய் என்று
வரவேற்பு நல்க ! நீவிர்
பிரிந்திடும் நண்பா ! நீயும்
பெருவாழ்வு பெறுக ! செல்க !
அரும்பணி ஆற்றி வாழ்வை,
அமைத்திடு ! என்று கூறி,
உள்ளத்தால் வாழ்த்தி எனக்கு
விடைதரும் தங்கள் பெருமை,
சொல்லிநான் தெரிவது இல்லை !
தோழர்காள் ! நன்றி ! வணக்கம் !
***********************************************
சிறுமுகை போன்ற தோற்றம்
சிந்தையில் தெளிவு இன்மை !
குறுகிய உலகியல் அறிவு,
குவலயம் தெரியாத் தன்மை !
பொறுமையாய் நடந்தால் கூடப்
பூத்திடும் முனிவு ! கலக்கம் !
இத்தனைத் தகுதி ஏந்தி
இம்மனை புகுந்த என்னை,
நித்தமும் அறிவு ஊட்டி,
நேரிய வழியைக் காட்டி,
பத்தரை மாற்றுப் பொன்போல்,
பக்குவப் படுத்திச் சென்றார்
முத்தமிழ்ச் செல்வன் மேனாள்
மேலாளர் அரங்க ராசன்,
தத்துவப் பெருந்தகை யாளன்
தகைமைசால் சக்கர வர்த்தி,
மாற்றுதல் பெற்று நானிம்
மன்றத்தில் நிற்கும் காலை,
போற்றுதற் குரிய அவர்தம்
புகழ்தனை நினைவு கூரல்,
வேற்றுமை உடையது ஆகா !
விளம்புவேன் நன்றி ! நன்றி !
அனுபவப் பள்ளி தன்னில்
அடைந்தநற் பாடம் எல்லாம்,
பனுவலாய் ஆக்கி எனக்குப்
படைத்தபண் பாளர் நண்பர்
அருள்திரு வீரா சாமி
அவர்கட்கும் எந்தன் நன்றி !
வருத்தங்கள் தோன்றும் போது
வாரிபோல் விரைந்து வந்து,
நல்வழி உரைத்து என்னை
நலமுடன் இலங்கச் செய்த
வல்லவர் சைமன் அன்பு
வழங்கிடும் சீனி வாசன்,
நல்லவர் அழகிரி சாமி,
நண்பர்கருப் பைய ! நன்றி !
கைவினைத் தொழிலில் வல்ல
கலைஞனாம் பழனி யாண்டி,
ஐயன்சுப் பிரமணி மற்றும்
அன்பர்சிவ சிதம்பரம், பால
கிருட்டிணன் போன்றோர்க் கும்நான்
கழறுவேன் நன்றி ! நன்றி !
விருப்பமாய்ப் பழகி நெஞ்சில்
விரைந்துற்ற அழகிரி சாமி,
அரும்பலா நண்பர் என்னை
ஆட்கொண்ட நல்மெய் யப்பன்
சுரும்பரை ஒத்த மேலோன்
சுந்தரம் அவர்க்குமென் நன்றி !
மட்டற்ற அன்பி னாலென்
மனதினில் நிறைந்து நிற்கும்
சுட்டவெண் சங்கு சுவாமி
கோபாலன் இருவர்க்கும் நன்றி !
வெருனியர் கொண்டு அளந்து
வேண்டிய பொருளின் நீளம்
சரிவரக் கணிக்கும் பண்டகக்
காப்பாளர் இவரே என்று
அரும்புகழ் ஆரம் சூட்டி,
அகமகிழ் வுற்ற நண்பர்
அருந்திறல் மறவன் நினைவில்
அழியாத ஜேக்கப் ராசு
முத்துமுத்து ராம லிங்கம்,
முக்கனிக் கல்யாணம் நன்றி !
கோட்டுத்தேன் போல உள்ளம்
குளிர்விக்கும் கோவிந்த ராசு,
வாட்டத்தைப் போக்கும் சூசை
இரத்தினம், அரங்க ராசன்
மூவர்க்கும் எந்தன் நன்றி !
முன்கோபம் இருந்தா லும்நல்
உவகையாய் உதவிகள் செய்து
உறுதுன்பம் மறக்கச் செய்யும்
நரசிங்கன் பேட்டைச் செல்வம்
நல்லவர் கிருட்டிண மூர்த்தி,
அரியலூர் துறந்து புதுகை
அடைந்தகாத் தையன் நன்றி
!
இணையற்ற பொறுமை சாலி
எந்தமிழ் போற்றும் செல்வன்,
மணித்திரு ஞானம் அறிவின்
மணம்திகழ் நற்குற் றாலம்,
பாண்டியன் நல்வழித் தோன்றல்
பண்பாளர் துரைப்பாண் டியன்நல்
நண்பராம் கணபதி எந்தன்
நலம்நாடும் அகமது உசேன்
அனைவர்க்கும் எந்தன் நன்றி !
அமைதியாய்ப் பணிகள் ஆற்றும்
தெட்சணா மூர்த்தி தாமஸ்,
முருகேசன் மூவர்க்கும் நன்றி !
கட்டளை ஏதும் இன்றிக்
கனிவுடன் அன்பு காட்டும்
வித்தகன் தமிழின் தொண்டன்
வேதையன் அவர்கட்கு நன்றி !
புத்தகம் போன்று அறிவு
பொதிந்துள்ள அரிய மூளை,
முத்தமிழ் ஆற்றல் வீரன்,
முக்கனித் தேன்சுவைப் பாகு !
எத்தனை மொழிந்திட் டாலும்
இணையற்ற நல்மணி யாரம் !
உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
உறுதுணை மணிக்கு என்நன்றி !
வெள்ளிய நிலவின் துண்டு,
விளங்குநல் ஆற்றல் அமைதி
தெள்ளிய உள்ளத் தானென்
துணைவர் திருஅரிக்கும் நன்றி !
தள்ளினும் தள்ளா நீர்போல்
தழுவிடும் சந்திர சேகர்,
சிறப்புடன் பணிகள் ஆற்றி
சீர்பெறும் ஜெயச்சந் திரன்நல்
முறுவலை முகத்தில் தேக்கி
முரல்திருக் கல்யாண சுந்தரம்,
மூவர்க்கும் நன்றி ! மற்றும்
முனைப்புடன் பணிகள் ஆற்றும்
ஆவின்பால் போன்ற தூய
அன்பர்திரு இரத்தினம் பிள்ளை
தாய்மையின் நெகிழ்ச்சி காட்டும்
தமிழ்மகன் பாலு, இராசு,
ஓய்வினை அறியாத் தேனீ
உயர்மாரி முத்து ! நன்றி !
காய்நிலா போல என்றும்
கனிவுடன் ஏவல் செய்யும்
சேய்களாம் குற்றேவ லர்க்கும்
செப்புவேன் நன்றி ! நன்றி !
இளகிய நெஞ்சும் அன்பில்
இழைந்திடும் உணர்வும் பண்பும்
மிளிர்ந்திடும் செயலும் கொண்ட
முதல்வர்க்கும் பணிவுடன் நன்றி !
*********************************************
கலங்கிய குடும்பச் சூழல்
கால்தடு மாறும் வாழ்க்கை
விலங்கிடும் பொருளா தாரம்,
விடிவெள்ளி நோக்கும் இல்லம்,
இத்தனை இடர்ப்பா டுற்று
இயங்கிய என்னை இன்று
குத்தினார் முதுகில் அந்த
கோமகன் இயக்குநர்க்கும் நன்றி !
********************************************
என்னையும் மதித்து இங்கு
இனியநல் விருந்த ளித்து
பொன்னினும் மேலாம் சொற்கள்
பொழிந்தனை ! என்ன சொல்வேன் !
அன்பிற்கும் எல்லையில் லைநும்
அருளுக்கும் குறைவு இல்லை !
மன்றத்தின் தலைவ ! நண்ப !
மலரடிப் பணிந்தேன்
! வணக்கம் !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
{ -07/1971}