name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வீரராகவர் பாடல்
வீரராகவர் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரராகவர் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 03, 2022

வீரராகவர் பாடல் (11) வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் !

உனக்குத் திருமணம் செய்விக்கப் பெண் கிடைப்பதில்லையே !

------------------------------------------------------------------------------------------------------------

கண்பார்வையை இழந்திருந்தாலும் தமிழ்க் கல்வியைக் கசடறக் கற்று ஊர் புகழும் கவிஞராகத் திகழ்ந்தவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார்”. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பொன்விளைந்த களத்தூர் என்பதாகும் !

பல அரிய பாடல்களைப் பாடியுள்ள இவர் பத்துக்கும் மேற்பட்ட பாடல் தொகுதிகளை இயற்றியுள்ளார்அவர்து பாடல் தொகுதியிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக :--

-----------------------------------------------------------------------------------------------------------

வீரஞ்சொரி கின்றபிள்ளா யுனக்குப் பெண்வேண்டு மென்றால்

ஆருங்கொடா ருங்களப்பன் கபாலி யம்மான் திருடன்

ஊருஞ்செங் காடுநின்றன் முகம்யானை யுனக்கிளையோன்

பேருங்கடம்ப நின்றாய்நீலி நிற்கும் பெருவயிறே. 

----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------

வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் வேண்டும் என்றால்

ஆரும் கொடார் உங்கள் அப்பன் கபாலி அம்மான் திருடன் !

ஊரும் செங்காடு நின் தன் முகம் யானை உனக்கு இளையோன்

பேரும் கடம்பன் நின் தாய் நீலி நிற்கும் பெரு வயிறே !

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

வீரச் செயல்கள் பல புரிகின்ற பிள்ளையே உனக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றால் யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லையே ! காரணம் என்ன தெரியுமா உன் தந்தையோ கையில் மண்டையோட்டை ஏந்திக் கொண்டிருக்கும் கபாலியாக இருக்கிறான் ! அவன் குடியிருக்கும் இடமோ  (செங்காடுசுடுகாடு உன் அம்மானோ (மாமன்வீடு வீடாகச் சென்று வெண்ணெய் திருடித் தின்று வருபவன்  ! உன் தம்பி பெயரோ  (கடம்பன்முரடன் உன் தாய் (நீலிகருப்பி ! உனக்குப் பானை வயிறு  யானைமுகம்  யாரப்பா உனக்குப் பெண் தருவார்கள் ?

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

--------------------------------------

ஆரும் யாரும் கொடார் கொடுக்கமாட்டார் கபாலி கையில் மண்டையோடு வைத்திருப்பவன் அம்மான் மாமன் செங்காடு =  சுடுகாடு கடம்பன் முரடன் நீலி கறுப்பு நிறத்தவள் நிற்கும் நினக்கும் ;

-----------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

--------------------

பிள்ளையாரை இகழ்வது போல் புகழும் பாடல்இது வஞ்சப் புகழ்ச்சி எனப்படும் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 20]

{03-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------------

பிள்ளையார்

திங்கள், மே 02, 2022

வீரராகவர் பாடல் (10) மாடேறு தாளும் மதியேறு சென்னியும் !

உழவனின் நெல் அரி மீது சிப்பிகள் முத்து ஈனும் திருக்கழுக்குன்றம் !

------------------------------------------------------------------------------------------------------

அந்தகக் கவி வீரராகவ முதலியார் பல்வேறு பாடல் தொகுதிகளைப் படைத்துள்ளார். கழுக்குன்றப்புராணம், கழுக்குன்றமாலை, சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா, சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன்பிள்ளைத் தமிழ், கயத்தாற்றரசன் உலா ஆகியவை அவற்றுள் அடங்கும் !

அவர் இயற்றியுள்ள கழுக்குன்ற மாலையிலிருந்து ஒரு பாடல்:

--------------------------------------------------------

மாடேறு தாளு மதியேறு சென்னியு மாமறையோன்

ஓடேறு கையு முடையார் தமக்கிட மூருழவர்

சூடேறு சங்கஞ் சொரிமுத்தை முட்டையென் றேகமலக்

காடேறு மன்னஞ் சிறகா லணைக்குங் கழுக்குன்றமே !

---------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

மாடு ஏறு  தாளும் = தனது ஊர்தியான காளை மீது ஏறி அமர்ந்திருக்கும் கால்களையும்;

மதி று சென்னியும் = பிறையைச் சூடி இருக்கும் தலையையும்,

மாமறையோன் ஓடேறு கையு முடையார் =

மண்டையோட்டை ஏந்தியிருக்கும் கைகளையும் உடையவர் ஆகிய

தமக்கு = சிவபெருமான்,

ஊர் இடம் = எழுந்தருளியிருக்கும் ஊர்,

கழுக்குன்றமே = திருக்கழுக்குன்றமாகும்.

உழவர் சூடு ஏறு = உழவர் அறுவடை செய்து வைத்த  நெல் 

அரிகள் மீது ஏறி;

சங்கம் சொரி முத்தை = சிப்பிகள் ஈன்ற  முத்தை;

முட்டை என்றே = தனது முட்டை என்று கருதி;

கமலக் காடு ஏறு = தாமரைகள் காடாக மண்டித்  திகழும் 

தடாகத்தில் வாழும்;

அன்னம் சிறகால் அணைக்குமே = அன்னப் பறவை தனது 

சிறகால் அணைத்துக் கொள்கிறது !

.

---------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------

காளை மீது அமர்ந்திருப்பவரும், தலைமுடியில் மதியைச் சூடி இருப்பவரும் கைகளில் மண்டையோட்டை ஏந்தியிருப்பவரும் ஆகிய சிவபெருமான், எழுந்தருளியிருக்கும் ஊர் திருக்கழுக்குன்றமாகும். இந்த ஊரில் உழவனின் நெல் அரிகள் மீது ஏறி சிப்பிகள் ஈன்ற முத்தை தனது முட்டை என்று கருதி காடாகத் திகழும் தாமரைத் தடாகத்தில் வாழும் அன்னப் பறவை தனது சிறகால் அணைத்துக் கொள்கின்றன ! இத்தகைய நீர்வளமும் நிலவளமும் மிக்கது திருக்கழுக்குன்றமாகும் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 19]

(02-05-2022}

---------------------------------------------------------------------------------------------------------

அன்னம்

.

,

ஞாயிறு, மே 01, 2022

வீரராகவர் பாடல் (09) ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து !

அந்தகக்கவி வீரராகவர் வேண்டிய பொருள் தான் யாது?

------------------------------------------------------------------------------------------------------------

அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும் புலவர் காஞ்சிபுரத்தை அடுத்த பொன் விளைந்த களத்தூரில் பிறந்தவர். பிறவியிலேயே கண் பார்வை அற்ற அவர் தமது அயராத முயற்சியால் தமிழ் கற்றுப் புலவரானவர். திருக்கழுகுன்ற புராணம், சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------------------

ஒருமுறை வீரராகவர் "தாகம் தீர்த்த செழியதரையன்' என்ற குறுநில மன்னனுக்குத்  தூக்குக்கவி (கவிதை வடிவக் கடிதம்) ஒன்றை அனுப்புகிறார். அந்தத் தூக்குக் கவி எப்படித் தொடங்குகிறது தெரியுமா ?

கோடி கோடியாய்  ஏடுகள் பலவற்றில் எழுதிப் படிக்காமல் அனைத்தையும் நெஞ்சத்திலேயே மனனம் செய்து இருத்திக் கற்ற வல்லவனும்,  எப்பொருளைப் பற்றி யார் கேட்பினும் அப்பொருளின் நுட்பம் உரைத்திடும் ஆற்றல் மிக்கவனுமாகிய வீரராகவன் என்னும் இந்தப் புலவன் விடுக்கும் தூக்கோலையை, ஆதிசேடனே சிரமசைத்துப் போற்றும் கலைகளின் அதிபதியும், கங்கைகுலத் தலைவனும், சேலம் மற்றும் தென்திசையில் உள்ள பாலைக்காடு (பாலக்காடு) ஆகிய இடங்களில் குறுநில மன்னர்களை வெற்றி கொண்டவனும் ஆகிய தாகம் தீர்த்த செழியன் காண்க !

சரி ! தூக்குக் கவியில் வீரராக முதலியார் அப்படி என்னதான் கேட்டிருந்தார் ?

-------------------------------------------------------------------------------------------------------------

ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து
எழுதிப் படித்த விரகன்,

எதுகொடுப்பினும் அதுவே எனச்சொலும் கவிவீர
ராகவன் விடுக்கும் ஓலை !

சேடாதிபன், சிரமசைக்கும் கலாகரன்
திரிபதகை குல சேகரன்,

தென்பாலை சேலம் செயித்த, தாகந்தீர்த்த
செழியன் எதிர்கொண்டு காண்க  !

பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,
பத்தி கோணாத கோணம்,

பறவாத கொக்கு, அனல் பண்ணாத கோடை,வெம்
படையாய்த் தொடாத குந்தம்,

சூடாத பாடலம், பூவாத மா, தொடை
தொகுத்து முடியாத சடிலம்,

சொன்னசொல் சொல்லாத கிள்ளை, ஒனிறெங்கும்
துதிக்க வர விடவேணுமே''

------------------------------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

--------------------------------------

விரகன் = கூர்மதியாளன் ;  சேடாதிபன் = மக்கள் தலைவன் ;   திரிபதகை = கங்கை ; குலசேகரன் = குலத்தவன் ; தென்பாலை = தென் திசையிலுள்ள பாலக்காடு ; ஒன்று + எங்கும் = ஒனிறெங்கும்.

-------------------------------------------------------------------------------------------------------

அந்தத் தூக்குக்கவியில் பறக்காத கொக்கு ஒன்றினைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று வேண்டினார். அதுமட்டுமா ? இன்னும் பலவற்றையும் கேட்கிறார். அவை யாவை ? பார்ப்போமா ?

இசைக்காத இசை, எறிந்து விளையாடாத பந்து, கோணல் அற்ற மூலை, வெப்பம் இல்லாத  கோடைக்காலம், ஊறு செய்யாத குந்தம் என்னும் படைக்கருவி,  காலில் அணிய முடியாத பாதுகை, பூக்காத மாமரம், தொகுத்துப் பின்னலிடாத சடை, சொன்னதைச் சொல்லாத கிளிப்பிள்ளை ஆகியவற்றையும் எனக்கு  அனுப்புக'' என்று கேட்டிருந்தார் !

இயற்கைக்கும் இயல்புக்கும் மாறான இத்தனையும் ஏன் புலவர் கேட்டார்? கட்புலன் அற்ற அப்புலவருக்கு, காடும் மேடும் திரிந்து பரிசில் பெற்று வாழ்பவருக்கு இயல்புக்கு மாறான இத்தனை பொருள்களும் ஏன் தேவைப்பட்டன ?

புலவர் பலவாறாய்க் கேட்டாலும் அவை அனைத்தும் ஒன்றையே குறிக்கும். அவர் வேண்டியது எளிதில் பயணப்பட ஒரு குதிரை. அவ்வளவுதான் !

-------------------------------------------------------------------------------------------------------------

பாடாத கந்தருவம் = இசைக்காத கந்தருவ இசை, (அதாவது கந்தருவம் எனப்படும் குதிரை).

எறியாத கந்துகம் = எறிந்து விளையாட உதவாத பந்து, (அதாவது கந்துகம் எனப்படும் குதிரை)

பத்தி கோணாத கோணம்
= கோடு மடங்காத மூலை மடக்குக் கோணம் (Angle), (அதாவது கோணம் எனப்படும் குதிரை),

பறவாத கொக்கு = பறந்து செல்ல முடியாத கொக்கு, (அதாவது கொக்கு எனப்படும் குதிரை),

அனல் பண்ணாத கோடை = வெப்பம் இல்லாத  கோடைக் காலம், (அதாவது கோடை எனப்படும் குதிரை),

வெம்படையாய்த் தொடாத குந்தம் = தாக்கிக் காயப்படுத்தாத குந்தம் என்னும் போர்க்கருவி, (அதாவது குந்தம் எனப்படும் குதிரை),

சூடாத பாடலம் =  யாரும் அணியாத மிதியடி, (அதாவது பாடலம் எனப்படும் குதிரை,

பூவாத மா = பூக்காத மாமரம், (அதாவது மா எனப்படும் குதிரை)

தொடை தொகுத்து முடியாத சடிலம் = பின்னப்படாத சடை, (அதாவது சடிலம் எனப்படும் குதிரை),

சொன்னசொல் சொல்லாத கிள்ளை = சொன்னதைத் திருப்பிச் சொல்லாத கிளி, (அதாவது கிள்ளை எனப்படும் குதிரை),

குதிரையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்தாம் எத்துணை எத்துணை ! [கந்தருவம் = கானம், குதிரை]  [கந்துகம் = பந்து, குதிரை] [கோணம் = மூலை, குதிரை]   [கொக்கு = பறவை, குதிரை]  [கோடை = கோடைக்காலம், குதிரை] [குந்தம் = போர்க்கருவி, குதிரை]  [பாடலம் = மிதியடி,  குதிரை]  [மா = மாமரம், குதிரை]  [சடிலம் = சடை, குதிரை]  [ கிள்ளை = கிளி, குதிரை]

”குதிரை” ஒன்று தனக்கு வேண்டும் என்று கேட்கும் வீரராகவர், தன் கருத்தைப் பாடல் வடிவில், திகைக்க வைக்கும் கருத்துடைய சொற்களைப் பெய்து தூக்குக் கவி வடித்திருக்கும் பாங்கினை எண்ண எண்ண வியப்புத்தான் மேலிடுகிறது !

கண்பார்வை இல்லாத ஒரு மனிதர் இணையற்ற திறமைகள் படைத்த தமிழ்ப் புலவராக சில நூற்றாண்டுகள் முன்பு விளங்கி இருக்கிறார் ! இரண்டு கண்களிலும் பார்வைப் புலன் படைத்திருக்கும் நாம் தமிழில் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா ? எண்ணிப் பாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------

வீரராகவர் பாடல் (08) சீராடை யற்ற வைரவன் வாகனம் !

கட்டுச் சோற்றை நாய் கவ்விக் கொண்டு போயிற்றே !

------------------------------------------------------------------------------------------------------------

அந்தகக்கவி வீரராகவ முதலியாருக்கு பிறப்பிலேயே கண்பார்வை இல்லாமற் போயிற்று. கண்பார்வை இல்லாவிட்டாலும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி அனைவரும் விதந்து போற்றும் பெரும் கவிஞராகத் திகழ்ந்தார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கவிஞர் தொண்டைமண்டலத்தில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பூதூரில் பிறந்தவர். அவரது அரிய பாடல் ஒன்றைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்:

----------------------------------------------------------------------------------------------------------

சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து

பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே!

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------------

சீராடை அற்ற வைரவன் வாகனம் சேர வந்து,

பார் ஆரும் நான்முகன் வானம் தன்னை முன்பற்றிக் கௌவி

நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று நம்மை முகம்

பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினில் பற்றினனே !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

சீராடை = அணியும் ஆடை ; அற்ற = இல்லாத ; வைரவன் வாகனம் = வைரவனின் வாகனமாகிய நாய் ஒன்று ; சேரவந்து = அருகில் வந்து ; பாராரும் = நிலத்திலிருந்த (அதாவது என் அருகில் தரையில் வைக்கப்பட்டிருந்த) ; நான்முகன் வாகனம் தன்னை = நான்முகக் கடவுளின் வாகனமாகிய அன்னத்தை (அன்னம் = சோறு - அதாவது சோற்றினை – கட்டுச் சோற்று மூட்டையினை) 

முன்பற்றிக் கௌவி = வாயில் கௌவிக் கொண்டு ; நாராயணன் உயர் வாகனம் = கருடன் (அதாவது கருடனைப் போல்) ஆயிற்று = விரைந்து சென்று விட்டது) ; நம்மை முகம் பாரான் = பசியால் வாடியிருக்கும் நம் (என்) முகத்தை பாராமல் - இரக்கமில்லாமல்; மை வாகனன் = (மை எனப்படும்) ஆட்டினை வாகனமாகக் கொண்டிருக்கும் அக்னி பகவான் (அதாவது பசி என்னும் நெருப்பு); வந்தே வயிற்றில் பற்றினனே = வயிற்றில் பற்றிக் கொண்டது.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

கட்டுச் சோற்று மூட்டையினை என்னருகில் தரையில் வைத்துவிட்டு ஓய்வாகப் படுத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று சோற்று மூட்டையைக் கவ்விக் கொண்டு கருடன் போல விரைந்து ஓடிவிட்டது. என் வயிற்றில் பசி என்னும் தீ பற்றிக் கொண்டு என்னை வாட்டுகிறது !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர், 

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022}

------------------------------------------------------------------------------------------------------------

சனி, ஏப்ரல் 30, 2022

வீரராகவர் பாடல் (07) மாலே நிகராகும் சந்திரவாணன் !

சந்திரவாணன் நாட்டில் தேன்மாரி பெய்கிறதாம் !

-------------------------------------------------------------------------------------------------------

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர் என்பதால் “அந்தகக் கவி” என்னும் அடைமொழி பெற்றவர் வீரராகவ முதலியார். “அந்தகம்” என்னும் வடமொழிச் சொல்லுக்கு பார்வை யின்மை என்று பொருள். பார்வையை இழந்து விட்டாலும் படிப்புத் திறனை அவர் இழந்து விடவில்லை ! 

தமிழைத் துளக்கமறக் கற்று   தமிழ்ப் புலமை அடைந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் !இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் என்பவர் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார் !

-------------------------------------------------------------------------------------------------------

 அவர் பாடிய கோவைச் செய்யுள் வருமாறு:-

-------------------------------------------------------------------------------------------------------

மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே

பாலே ரிபாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்

டாலே யெருவிட முப்பழச் சாற்றி னமுதவயன்

மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே !

-------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------------------

மாலே நிகராகும் சந்திரவாணன் வரை இடத்தே !

பால் ஏரி பாயச் செந்தேன் மாரி பெய்ய நற்பாகு கற்கண்டாலே !

எருவிட முப்பழச் சாற்றின் அமுத வயல் மேலே முளைத்த

கரும்போ இம் மங்கைக்கு மெய் எங்குமே !

-------------------------------------------------------------------------------------------------------

இந்தச் செய்யுளை வீரராகவர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த திருப்பனைங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை நல்லாள் கவிராயருக்குக் கண்தான் கெட்டது மதியும் கெட்டதோ? கரும்பு சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையேஎனச் சொன்னார் !

இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து அவள் சொல்வது சரிதான் என்பதை உணர்ந்து தன் மாணவனிடம் கொம்பை வெட்டி காலை நடுஎன்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின் என்பதனைச் சாற்றின் என மாற்றம் செய்து படித்தார். கேட்டுக் கொண்டிருந்த புலவர் பெருமக்கள் யாவரும் மிக்க களிப்பெய்தனர் !
-------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

-----------------------------------

திருமாலைப் போன்று புகழ் பெற்று விளங்கும் சந்திரவாணன் ஆள்கின்ற நாட்டில் ஏரிகளில் இருந்து  பால் பெருக்கெடுத்துப் பாய்ந்து வயல்கள் எல்லாம் செழித்து விளங்க, வானிலிருந்து செந்தேன் மாரியாகப் பொழிகிறது !

கற்கண்டுப் பாகு  வயல்களுக்கு எருவாகிட அவ்வயல்களில் முக்கனிச் சாறு தேங்கி நிற்க  அச்சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின் மேனி !

-------------------------------------------------------------------------------------------------------

கொம்பை வெட்டிக் காலை நடு:

-------------------------------------------------------------------------------------------------------

இதன் பொருள் என்ன ? ”முக்கனிச் சேற்றின் அமுத வயல்” என்று புலவர் முன்னதாகச் சொன்னார். அம்மைச்சி என்னும் மங்கை ”கரும்பு சேற்றில் முளைக்காது” என்றதும் புலவர் “சேற்றில்” என்பதில் வரும் கொம்பை (இரட்டைச் சுழி) வெட்டிவிட்டு, காலை நடு என்றார். அதாவது “சேற்றில் “ என்பதை  “சாற்றில்” என்று மாற்றியமைத்தார் புலவர் !

குழுமியிருந்த அவைக்களப் புலவர்கள் யாவரும் வீரராகவரின் கவித்திறத்தை விதந்து பாராட்டினர்; நெஞ்சார வாழ்த்தினர் !

இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர், பாடலைக் கேட்க வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது பணிவையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது !

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-------------------------------------------------------------------------------------------------------