name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 01/22/20

புதன், ஜனவரி 22, 2020

வரலாறு பேசுகிறது(19) பொ.வே.சோமசுந்தரனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


பொ.வே.சோமசுந்தரனார் !


தோற்றம்:

பொ.வே.சோமசுந்தரனார் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 -ஆம் நாள் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை  அடுத்த மேலப் பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை பெயர் பொ.வேலுத் தேவர். தாயார் சிவகாமி அம்மையார் !

மேலப்பெருமழை:

ஊர்திப் போக்குவரவு வசதி இல்லாத உள்ளடங்கிய சிற்றூர் மேலப்பெருமழை. கிழக்கே விளாங்காடு, தெற்கே இடும்பவனம், மேற்கே தில்லைவிளாகம் , வடக்கே இடையூர் சங்கேந்தி வடகிழக்கே குன்னலூர் என்று நாற்புறமும் சிற்றூர்களால் சூழப்பட்டு, மரைக்காக் கோரை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் மேலப் பெருமழை, நூறு ஆண்டுகளுக்கு முன்பு எளிதில் அணுகமுடியாத சிற்றூர் !

கல்வி:

இத்தகைய மிகப் பின் தங்கிய சிற்றூரான மேலப் பெருமழையில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அடிப்படைக் கல்வியுடன் , ஆத்திச் சூடி, வெற்றிவேற்கை, கொன்றைவேந்தன், , அருணாச்சலப் புராணம் முதலிய நூல்களைச் சோமசுந்தரம் கற்றறிந்தார். குடும்பச் சூழல் காரணமாக, அப்பா இவரது படிப்பை நிறுத்திவிட்டு, வேளாண் பணிகளில் தனக்கு உதவும் படிக் கூறிவிட்டார் !

திண்ணைப் பள்ளி ஆசிரியரால் கவரப்பட்ட சோமசுந்தரம், மேற்கொண்டு படிக்க வேண்டும் என உறுதி பூண்டார். எனவே பகற்பொழுதில் தந்தையுடன் வேளாண் பணிகளில் ஈடுபட்ட அவர், இரவில் தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்துப்  படிக்கலானார். ! கோவில்கள், மடங்கள் முதலிய  இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைக் கேட்டு வாங்கிப்  படித்து வந்தார்  !

பள்ளிக் கல்வி:

சோமசுந்தரத்தின் பத்தாவது வயதில் அவரது தாயார் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது தந்தையார் மறுமணம் செய்து கொள்ளவே, தாய்மாமன் ஆதரவில் திருத்துறைப் பூண்டியில் உள்ள மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தார் !

சர்க்கரைப் புலவரின் உதவி:

பள்ளி இறுதி வகுப்பு முடித்ததும், மேலப் பெருமழையிலிருந்து 5 கல் தொலைவில் உள்ள ஆலங்காடு என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்த சர்க்கரைப் புலவர் என்பவரைச் சந்தித்து, தனது மேற்படிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தி, தான் எழுதிய கவிதைகளையும் அவரிடம் காண்பித்தார் !

சர்க்கரைப் புலவர், சோமசுந்தரனின் கல்வி ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்து,  அவரைச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்று, அங்கு தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்த பூவராகன் பிள்ளையைச் சந்திக்குமாறு கூறி அவருக்கு ஒரு கடிதமும் கொடுத்தார் !

புலவர் பட்டப் படிப்பு:

பூவராகன் பிள்ளை உதவியுடன், சோமசுந்தரன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டப் படிப்பில் சேர்ந்து பயின்றார். அங்கு பணிபுரிந்து வந்த விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன் ஓதுவார், சோமசுந்தர பாரதியார், மு.அருணாசலம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அங்கு கிடைத்த படிப்பு உதவித் தொகையைக் கொண்டு புலவர் படிப்பை முடித்துத் தேர்ச்சி பெற்றார் !

திருவாசக உரை:

படிப்பு முடிந்து மேலப்பெருமழை திரும்பியதும், தனது ஆசிரியர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் கூறியதற்கு இணங்க,  திருவாசகத்திற்கு உரை எழுதினார். மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட அந்த உரைக்குக் கிடைத்த வரவேற்பால், தொடர்ந்து அவர் எழுதத் தொடங்கினார் !

தி.தெ.சை.சி.நூ... தொடர்பு

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு.சுப்பையாப் பிள்ளை அவர்கள், ஏற்கனவே உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கு, இவரையே மேலும் விளக்கமாக உரை எழுதச் சொல்லி அந்நூல்களை வெளியிட்டார் !

உரையாசிரியர்:

இவ்வாறு, சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், நீலகேசி உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்குச் சோமசுந்தரனார் உரை எழுதினார். பெருங்கதை, புறப் பொருள் வெண்பாமாலை, கல்லாடம், திருக்கோவையார், பட்டினத்தார் பாடல் ஆகியவைகளுக்கும் உரை எழுதி இருக்கிறார் ! 

படைப்புகள்:

நாடக நூல்களான செங்கோல், மானனீகை உள்பட பல நாடகங்களையும் எழுதினார். அஃதன்றி பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதினார். இவை பின்னாளில் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பெற்றிருந்தன !

பெருமழைப் புலவர்:

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008 –ஆவது நூல் வெளியீட்டுப் பொன் விழாவில் சோமசுந்தரனார் கேடயம் அளித்துப் போற்றிப் பெருமைப்படுத்தப்பட்டார் ! கவிஞர், உரைநடை ஆசிரியர், நாடகாசிரியர், எனப் பல்லாற்றானும் பெயரெடுத்த  சோமசுந்தரனார், ”பெருமழைப் புலவர்என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார் ! தமிழுக்கும், தமிழ் நூல்கள் வெளியீட்டுக்கும் இவரது பங்களிப்பு அளப்பரிது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கண்டெடுத்த நல்முத்து பொ.வே.சோமசுந்தரனார் என்றால் அது மிகையாகாது !

மறைவு:

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மாபெரும் தமிழறிஞரான பொ.வே.சோமசுந்தரனார்,  1972 –ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 –ஆம் நாள் அவரது 63 –ஆம் அகவையில் இப்பூவுலகிலிருந்து மறைந்தார் !  அவர் மறைந்தாலும், சங்க இலக்கியங்களுக்கு அவர் எழுதிய உரைகள் தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்என்பது திண்ணம் !

ஊர் மக்களின் நினைவேந்தல்:

பெருமழைப் புலவருக்கு, அவ்வூர் மக்களின் முயற்சியால் 5-9-2010 அன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழறிஞர்கள் பலர் அதில் பங்கேற்று சோமசுந்தரனாருக்குப் புகழஞ்சலி செலுத்தினர். அத்துடன், மேலப்பெருமழை ஊராட்சியில் உள்ள நூலகத்திற்குப்பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் நூலகம்என்றும் பெயர் சூட்டப்பெற்றது !!

முடிவுரை:

தமிழுக்கு வளம் சேர்த்த புலவரின் குடும்பத்தினர், பிற்காலத்தில் வறுமையுற்று வாடிவந்தனர் என்பதைக் கேள்விப்பட்ட அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் பிறந்த நாளான 17-9-2010 அன்று உருபா 10 நூறாயிரம் (10 இலட்சம்) பரிவுத் தொகையாகத் தந்து அக்குடும்பத்தினருக்குக் கைகொடுத்தார் என்பது தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் தரும் செய்தியாக அமைந்தது ! எத்துணையோ அறிஞர்கள் தமிழுக்குத் தொண்டு செய்து வரலாற்றில் நீங்காது நிலைத்து இருக்கின்றனர். நாம் ஏதும் செய்யாமல் வாளாவிருக்கிறோம் என்பதை எண்ணுகையில் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2051:சுறவம்:08]
{22-01-2020}

------------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------







வரலாறு பேசுகிறது (18) இராமலிங்க அடிகள் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


இராமலிங்க அடிகள் !


தோற்றம்:

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் கடலூர் மாவட்டம் மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை பெயர் இராமையாப் பிள்ளை. தாயார் சின்னம்மையார் !

இடப்பெயர்வு:

இராமலிங்கம்  பிறந்த ஆறாம் மாதத்திலேயே அவரது தந்தையார் மறைந்து போனார். கணவரை இழந்த சின்னம்மையார், தான் பிறந்து வளர்ந்த சிற்றூரான சின்னக் காவணத்திற்கு தம் குழந்தைகளுடன் சென்று வாழ்ந்து வரலானார். சென்னையை அடுத்து உள்ள பொன்னேரிக்கு அருகில் உள்ளது சின்னக் காவணம். பின்னர் அவரது குடும்பம் சென்னையில் ஏழு கிணறு பகுதியில் குடியேறியது !

கல்வி:

இராமலிங்கம் பள்ளிப் பருவம் எய்தியதும், அவரது மூத்த தமையனார் சபாபதி, தாமே கல்விப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் தான் பயின்ற  ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்வான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார்.!

இளமையிற் புலமை:

சிறுவனாக இருக்கும் போதே, பாடல்கள் எழுதும் திறனை இராமலிங்கம்  பெற்றிருந்தார்.  ஒருநாள் ஆசிரியர் பாடம் நடத்துகையில், ”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் !, ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் !’ என்று சொல்லிக் கொடுத்தார். அதனைக் கேட்ட இராமலிங்கம், ஐயா, ”வேண்டாம், வேண்டாம்என்று எதிர்மறைக் கருத்துடைய இப்பாடலைப்  பாட மனம் ஒப்பவில்லைஎன்று கூறினார் !

தெய்வக் குழந்தை:

அப்படியானால் நீயே ஒரு பாடலை கூறுஎன்றார் ஆசிரியர். உடனே இராமலிங்கம் எழுந்துஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்என்றுவேண்டும்” ”வேண்டும்என்று நேர்மறையான கருத்து உடைய  பாடலைப் பாடினார். அதைக் கேட்ட ஆசிரியர் வியப்பால் சிலையாகிப் போனார். ”இராமலிங்கம் ! நீ வாலாயமான (சாதாரணமான) குழந்தை இல்லை ! தெய்வக் குழந்தை ! உன்னிடம் தெய்வம் குடிகொண்டிருக்கிறது ! உனக்குப் பாடம் சொல்லித் தரும் தகுதி எனக்கில்லை !” என்று கூறி அவருக்குக் கற்பிக்கும் பணியிலிருந்து விலகிக் கொண்டார் !

பாடல் புனைவு:

அன்றிலிருந்து திண்ணைப் பள்ளிக்குச் செல்லாமல், சென்னையில் உள்ள கந்தகோட்டத்து முருகனை நாள்தோறும் வழிபட்டு, அங்கேயே முருகன் மீது பாடல்களையும் இயற்றிப் பாடலானார் !

பள்ளிக்குச் செல்லாத பாவலர்:

இராமலிங்கம் வேறு எந்தப் பள்ளிக்கும் சென்றதில்லை. எந்த ஆசிரியரிடத்தும் பாடம் கேட்டதில்லை. இறைக்க இறைக்க ஊறும் ஊருணி போலப் பாடல்கள் இராமலிங்கம் நாவிலிருந்து சுரந்து பொழியத் தொடங்கியது  இதை இராமலிங்க அடிகள்  சில பாடல்கள் வழியாகவே வெளிப்படுத்தி உள்ளார் !

வடலூர் வருகை:

தென்னாட்டில் உள்ள பல புகழ் பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று வந்த பின் இறுதியாக பார்வதிபுரத்தை அடுத்த கருங்குழி என்னும் ஊரில் தங்கினார் ! 1827 -ஆம் ஆண்டு பார்வதிபுரத்தின் அருகிலுள்ள வடலூரில் தனித் தன்மை வாய்ந்த எண்கோண வடிவமுள்ள மன்றத்தைக் கட்டி முடித்தார். அதன் வழிபாட்டு முறைகள் மற்றக் கோயில்களிலிருந்து வேறு பட்டவையாகும் !

துறவி:

இறைக் கொள்கை மீதும் இனிய தமிழ் மீதும் பற்றுக் கொண்ட இராமலிங்கம் இல்லற வாழ்வை நாடாமல் துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். அவருடைய எளிய துறவற வாழ்வு, அருட்கொள்கை, பிற உயிர்களிடத்து அன்புடைமை, உயிர்ப் பலி நீப்பு ஆகிய கொள்கைகளால் கவரப் பெற்ற மக்கள் அவரை இராமலிங்க அடிகள் என அன்புடன் அழைக்கலாயினர். !

பசிப்பிணி நீக்கல்:

மக்களின் துன்பங்களிலெல்லாம் பெருந்துன்பம் பசியே என்பதை உணர்ந்த அடிகளார் பசிப் பிணியைப் போக்கிட  1867 ஆம் ஆண்டு வடலூரில் தருமசாலையைத் தொடங்கி, அங்கு வருபவர்க்கெல்லாம் மூன்று வேளையும் உணவளிக்கும் திட்டத்தைத் செயல்படுத்தி வரலானார் !


வள்ளலார்:

மக்களின் பசிப்பிணிக்கு மருந்து கொடுத்துத் தணிக்கும் வகையில்தருமசாலையைத் தொடங்கி உணவளித்த  இராமலிங்க அடிகள், அதன் பின்புவள்ளலார்என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.  இத்திட்டம் 152 ஆண்டுகளாக இன்றுவரைத் தொடர்ந்து வடலூரில் நடைபெற்று வருகிறது என்பது தமிழ் நாட்டில் உள்ள பலருக்கு இன்னும் தெரியாத செய்தியாகும் !

பன்முகச் செல்வர்:

வள்ளலார் அருளாசிரியர், இதழாசிரியர், இறையன்பர், உரையாசிரியர், குமுகாயச் சீர்திருத்தச் செம்மல், சித்த மருத்துவர், சொற்பொழிவாளர், நூலாசிரியர், எனப் பன்முகத் தன்மை கொண்டவர் !

இறைவனின் வடிவு:

இறைவன் ஒருவனே, அவன் ஒளி வடிவானவன் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார் ! ஒளியே கடவுள் என்பதால் உருவ வழிபாட்டை வள்ளலார் ஏற்க வில்லை !
---------------------------------------------------------------------------

நலிதரு சிறிய தெய்வமென்று  ஐயோ
.........நாட்டிலே பலபெயர் நாட்டி,
பலிதர ஆடுபன்றிக் குக்குடங்கள்
.........பலிகடா முதலிய  உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
........புத்தி நொந்து உளம் நடுக்குற்றேன்

----------------------------------------------------------------------------
என்னும் வள்ளலார் சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லி, உயிர்ப்பலி கொடுப்பதைக் கடுமையாக எதிர்த்தார் !

அருளுள்ளம் கொண்ட அறிஞன்:

--------------------------------------------------------------------------------

வாடிய  பயிரைக்  கண்டபோ  தெல்லாம்
.........வாடினேன் பசியினால் இளைத்தே,
வீடுதோறும்  இரந்தும் பசியறாது அயர்ந்த
.........வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் !

---------------------------------------------------------------------------------
என்று அடுத்தவர் துன்பம் கண்டு மனம் பதறிய மாமனிதர் வள்ளலார் !
----------------------------------------------------------------------------------------------

இருட்சாதி  தத்துவச்  சாத்திரக்  குப்பை
.........இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
..........வழக்கெலாம் குழிக் கொட்டி மண்மூடிப் போட்டு

-----------------------------------------------------------------------------------------------
என்று சாதி, சமய சாத்திரப் பித்தர்களுக்குச் சாட்டையடி கொடுத்தவர் வள்ளலார் !

திருவருட்பா:

வள்ளலார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்த கொடை வள்ளல். இனிமை ததும்பும்தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டிஎன்பன போன்ற பாடல்களல்லாமல், உயிர்க் கொலையை விட்டிடுக என்று வேண்டும் பாடல்கள், மதங்களை விட்டொழித்திடுக என்று சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய பாடல்கள், பெண் பித்துப் பிடித்து அலையாதீர் என்று அறிவுரை நல்கும் பாடல்கள், பார்த்துப் பார்த்து வளர்க்கும் உடலை, இறப்புக்குப் பின் எரிக்காதீர், நிலத்திற்குள் அடக்கம் செய்க என்று வேண்டும் பாடல்கள்   என அவர் பாடாத பொருளில்லை; பேசாத கருத்தில்லை !

மறைவு:

சாதி சமய வேறுபாடுகளை நீக்குங்கள் ! அனைத்து மனிதர்களும் சமம் ! ஒருவர்க்கொருவர் அன்பு கொண்டு வாழுங்கள் ! என்று குழைவான தமிழ்ச் சொல்லில் கொள்கைப் பொழிவு செய்த அருட்சித்தரான , வள்ளலார், 1874 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 30 ஆம் நாள் தமது 51 ஆம் அகவையில் ஒரு அறைக்குள் சென்று, உட்புறம் பூட்டிக் கொண்டு மறைந்து விட்டார் என்பது சில ஆன்மிக மனிதர்கள் சொல்லும் அடிப்படை இல்லாத வரலாறு ! ஆனால் அதை அறவே ஏற்காத மனிதர்களும் இன்னும் நூறாயிரக் கணக்கில் இருக்கவே செய்கின்றனர் !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2051:சுறவம் (தை)06]
{20-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
      
 தமிழ்ப் பணி மன்றமுகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------





பல்வகை (21) முகநூல் - பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத தமிழர்கள் !

பொழுது போக்குவதற்கென்றே முகநூலில் உலவும் மடிமையாளர்கள்  !



முகநூல் என்பது சிற்றூர்களில் கூடும் சந்தை  போன்றது. என்னிடம் உள்ள பட்டறிவை (அநுபவம்), அறிவுச் செல்வத்தை  நான் அங்கு உங்கள் பார்வைக்கு வைக்கலாம். உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் வாங்கிச் செல்லலாம். உங்களிடமுள்ள பட்டறிவை, அறிவுச் செல்வத்தை நீங்கள் அங்கு பார்வைக்கு வைக்கலாம். அவற்றிலிருந்து எனக்குத் தேவையானவற்றை நான் வாங்கிக் கொள்ளலாம். சந்தைக்கும் முகநூலுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, சந்தையில் பணம் புழங்கும்; முகநூலில் கொள்வன, கொடுப்பன  எல்லாமே இலவயம்; அவ்வளவு தான் !


இத்தகைய பயன் மிகுந்த முகநூலைப் பலருக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிவதில்லை. சிலர் பாடல் (கவிதை) என்ற பெயரில் ஏதேதோ எழுதிப் படைக்கிறார்கள்; நேற்று எழுதிய பாடலை இன்று கேட்டால், எழுதியவருக்கே சொல்லத் தெரியாது. காற்றில் பறந்து செல்லும் எருக்கம் பஞ்சுகளாகப் பாடல்கள் முகநூலில் பறக்கின்றன !


வேறு சிலர், தமிழ் நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழால் வளர்ந்து, தமிழால் அறிவூட்டம் பெற்று, “கவிஞர்என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டுசப்பானிய மொழிக்குச் சேவை செய்கிறார்கள். யார் இவர்கள் ? இவர்கள் தான்ஹைக்கூகவிஞர்கள் ! உண்பது தமிழ்ச் சோறு; உழைப்பது சப்பானிய மொழிக்கா ?


ஹைக்கூஎன்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது ? “துளிப்பாஎன்று சொல்லலாம்; அல்லதுசிந்தியல் தேன்பாஎன்று சொல்லலாம் ! இரண்டையும் விடுத்துஹைக்கூவாம் ! ஹைக்கூ ! ”ஹைக்கூவைப் பரப்புவதற்குப் பத்துக்கும் மேற்பட்ட முகநூற் குழுக்கள் ! தாய்மொழி உணர்வு இவர்களிடம் துளிக்கூட இல்லையே ! தாய்மொழி மீது பற்று இல்லாதவர்கள் தமிழர்களென்று எப்படிச் சொல்லிக் கொள்வது ! உலகம் இவர்களைப் பார்த்து நகைக்காதா !


அறிவைத் தேட வேண்டிய மாந்தர்கள் பொழுது போக்குவதற்கென்றே  நூற்றுக் கணக்கான முகநூற் குழுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட முகநூற் குழுவின் பக்கத்தைத் திறந்தாலே போதும் ! நம் கண்களில் படுபவைஹாய் மச்சான் ! எப்பிடி இருக்கே”?,   மாப்ளே ! நேத்திக்கு படம் பாத்தேன். என்னமா நடிச்சிருக்கான் அந்த ஒல்லிப் பிச்சான். சூப்பர்ரா” ! இன்னும் இவை போன்ற திருவாசகங்கள் தான் ! தமிழ் நாடு ஒருப்படுமா (உருப்படுமா) ?


தமிழுக்குச் சேவை (?) செய்வதற்கென்றே பல முக நூற் குழுக்கள் இயங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம் ! ஒருவர் ஐயம் கேட்கிறார், “ஐயா பரிபாடலில் எத்தனை முறை சோறு என்ற வார்த்தை வருகிறது ?”. இதைத் தெரிந்து கொண்டு இவர் என்ன செய்யப் போகிறார் ? வார்த்தைஎன்பது தமிழ்ச் சொல் அன்று என்பதைக் கூடத் தெரியாத இவர்  பரிபாடலுக்குள் ஏன் நுழைய வேண்டும் ?


முகநூல் நண்பர் யாருக்காவது பிறந்த நாள் வந்து விட்டால் போதும் ! வாழ்த்து மழை தான் ! பெய்யும் மழை தமிழ் மழையாக இருந்தால் போற்றலாம்; ஆங்கில மழையாகவன்றோ அவை இருக்கின்றன ! HAPPY BIRTH DAY என்னும் சொற்களுடன் விதவிதமான படங்களை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் பிறந்த எலிக் குஞ்சுகள் போலும் ! தமிழைப் புறக்கணிக்கும் இந்த வேக்காடு குறைந்த சோற்றுப் பருக்கைகள், நான்கு நிமிடமாவது ஆங்கிலத்தில் உரையாட வல்லவர்களா என்றால் அதுவும் இல்லை !


மடலாட்டக் கலைஞர்கள் (CRICKET PLAYERS) விராட் கோலியும், உரோகித் சர்மாவும்  ஆளுக்கு 7 கோடி உருபா ஆண்டுச் சம்பளம் வாங்கிக் கொண்டு மடலாடுகிறார்கள். அதைக் காணத் தன் உழைப்பிலிருந்து அல்லது தன் தந்தையின் உழைப்பிலிருந்து 1500 முதல்  5000 உருபா வரை கொட்டிக் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு  உள்ளே சென்று கரவொலி எழுப்பி ஆட்டத்தில் கட்டுண்டு மயங்கிப் போகிறார்கள் சுவைஞர்கள் (ரசிகர்கள்)  ! கோலியும், சர்மாவும் ஏனையோரும் பணம் வாங்காமல் நாட்டுக்காக விளையாடும் ஈகிகளா (தியாகிகளா) என்னசுவைஞர்கள் தம் பணத்தைக் கொட்டிக் கொடுக்க !


நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக இரவு 3-00 மணியிலிருந்து கண் விழித்து வரிசையில் காத்துக் கிடக்கும் இந்தச் சுவைஞர்கள், கோலியும் சர்மாவும் ஏனையோரும்  செல்வச் சீமான்களாக  உயர்ந்திட, நுழைவுச் சீட்டு என்ற பெயரில் பெருந்தொகையைச் செலவிடுவதே அறிவு மழுங்கிய செயல் ! அத்துடன் அமைதியடையாமல் இந்தச் சுவைஞர்கள் முகநூலுக்குள் நுழைந்து, செய்கின்ற அலம்பல் இருக்கிறதே, அதுவும் அறிவின்பாற் பட்ட செயலாக இல்லை !


விராட் கோலிக்கு நேற்றுவீழ்ச்சி” (OUT) கொடுத்தது  தப்பு மச்சான் ! கேனப்பயல் அந்த மூன்றாவது  நடுவர் தீர்ப்பு மகா மட்டம்”. ”பும்ராவுக்கு என்ன ஆயிற்று மாப்பிளே ! பந்தே போடத் தெரியவில்லையே !” என்று முகநூலில் அங்கலாய்ப்புச் செய்யும்அறிவாளிகள்  கூட்டம் முகநூலை வலிப்பற்று (ஆக்கிரமிப்பு) செய்து, அறிவுக் களஞ்சியமாகத் திகழவேண்டிய அதை நகராட்சிக் குப்பைக் கிடங்காக மாற்றி வரும் கொடுமையும் நடைபெறத்தான் செய்கிறது !


-----------------------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)08]
{22-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------