name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: குறுந்தொகை
குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

குறுந்தொகை (277) ஆசில் தெருவின் நாயில் வியன்கடை !

சேமச்செப்பு = THERMOS FLASK

அழகிய சிற்றூர். தூய்மையாகப் பேணிவரப்படும் நீண்ட தெரு. தெருவின் இரு மருங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகள். கள்வர்கள் இல்லாமையால் அவ்வீடுகளுக்குக் காவல் எதுவும் தேவையில்லை. ஆகையால் நாய்கள் வளர்க்கப்படுவதில்லை !

இல்லத் தலைவன் பொருள் ஈட்டி வர எண்ணி, வேற்று நாடு சென்றிருக்கிறான். அடுத்து வரும் வாடைக் காலம் தொடங்குகையில் திரும்பி வந்து விடுவதாகவும், அதுவரைத் தோழியின் துணையுடன் மனக் கவலைக்கு இடம் தராமல்  வாழ்ந்து வருமாறும் தன் காதல் தலைவியிடம் அறிவுறுத்திச் சென்றிருக்கிறான் !

இத்தகைய சூழ்நிலையில், அத்தலைவன் இல்லத்தின் முன் இரந்துண்ணும் ஒருவர் கையில் பிச்சை ஏற்புக் கலனுடன் வந்து நிற்கிறார். தலைவி வாயிலுக்கு வருகிறாள் !

இல்லத்தில் தலைவன் இல்லாதபோது இரவலர்க்குப் பிச்சை இடலாகாது என்பது அக்கால மகளிர் பின்பற்றி  வந்த  வழக்கம். கேட்பவர்க்குஇல்லைஎனலாகாது என்பதும் அக்காலத்திய பண்பாடு. தலைவன் வேற்றூர் சென்றிருப்பதால் பிச்சை இடவும் மனமில்லை !

என்ன செய்வது என்று அறியாமல் ஒரு நொடி திகைத்த தலைவி, இரவலரிடம் வினவினாள், “ஐயனே ! பொருள் ஈட்டிவர வேற்று நாடு சென்றிருக்கும் என் தலைவன் வாடைக்காலத் தொடக்கத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். வாடைக்காலம்  எப்போது வரும் ? ”

தாயே ! இன்னும் இரு திங்களில் வாடைக்காலம் வந்து விடும். தலைவன் நலமுடன் திரும்பிவருவான். கவல் கொள்ளாதே ! வாழ்வாங்கு வாழ்வாய் ! “ என்று வாழ்த்தினார் !

ஐயனே ! தூய்மையான இத் தெருவில் காவலுக்கு நாய் இல்லாத அகன்ற நடை வாசலுடைய அதோ அந்த வீட்டில் நல்ல சம்பா அரிசிச் சோறும்  எருமையின் வெண்ணிற வெண்ணெயும் ஒரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, ஆற அமர அங்கேயே இருந்து உண்டு, குடிப்பதற்காக முன்பனிக் காலத்திற்கு இதமான வெந்நீரும் தங்கள் செப்புக் குவளையில் பெறுவீராக என உளமாற வாழ்த்துகிறாள் !

சங்க இலக்கியமான குறுந்தொகையில் 277 – ஆவது பாடலாக வரும் இச் செய்யுளைப் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------------------------------
குறுந்தொகைச் செய்யுள். 277.
-------------------------------------------------------------------------------------------------------------

ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடைச்
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே--
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக்கால் வருவது ?” என்றி;
அக்கால் வருவர்,  எம் காதலோரே.

-------------------------------------------------------------------------------------------------------------

அடிநேருரை:
----------------------

ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை தூய்மையான தெருவில் நாய் இல்லாத அகன்ற நடைவாயிலுள்ள வீட்டில்;
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது சிவப்புச் சம்பா அரிசிச் சோறும் வெண்மை கலந்த கரிய நிற  எருமையின் வெண்ணெயும்
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி ஒரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, அங்கேயே ஆற அமர உண்டு முடித்து;
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் பனிக்காலத்திற்கு இதமாகக் குடிப்பதற்கான வெந்நீரினை;
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே உங்கள் செப்புக் குவளையில் சேமிக்கவும் பெறுவீராக !
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை இடையிடையே மின்னல் வெட்டி, நடுக்கம் தரும் குளிர்ந்த  மழை பெய்கின்ற வாடைக்காலம்;
எக்கால் வருவது என்றி  எப்போது வருமெனச் சொல்லுங்கள்.
அக்கால் வருவர் எம் காதலோரே அப்போது இந்த வீட்டின் தலைமகனான எம் காதலரும் வருவார்.

----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள் :
-------------------------------------

ஆசு குற்றம்;    வியன்கடை  அகன்ற வாயில்;  அமலை -  சோற்றுத் திரள் ; வெண் மை வெண்மை கலந்த கரிய நிறமுள்ள எருமை;   வெள் இழுது வெண்ணெய்;  அற்சிரம் முன்பனிக்காலம் ; வெய்ய  விரும்பத் தக்க, இதமான; சேமச் செப்பு மூடியுள்ள  செம்புக்  குவளை,  பெறீஇயர் பெறுவீராக !

----------------------------------------------------------------------------------------------------------

இந்தச் செய்யுளில் ஐந்தாவது அடியில்சேமச் செப்புஎன்று ஒரு சொல் வருகிறது அல்லவா ? சேமச் செப்பு என்றால் காப்புத் திறன்  உடைய செப்பு என்று பொருள். அஃதாவது அச் செப்பில் இட்டு வைக்கப்படும் வெந்நீரானது தன் வெப்பத்தை இழக்காமல் நெடுநேரம் வைத்திருக்கும்  என்று பொருள். இரட்டைச் சுவர் உள்ள (DOUBLE WALL) செப்பு போலும் ! இக்காலத்தில் நாம்தெர்மாஸ் பிளாஸ்க்என்று சொல்கிறோமே, அதற்கு இணையான பண்புகள் உடைய செப்பு போலும் !

தெர்மாஸ் பிளாஸ்க்என்பதை நாம் இப்போது வெப்பக் குடுவை என்கிறோம். இச்சொல்லுக்கு மாற்றாகசேமச் செப்புஎன்று நாம் இனி சொல்வோமே !

------------------------------------------------------------------------------------------------------------
                     THERMOS FLASK = சேமச் செப்பு

------------------------------------------------------------------------------------------------------------
       
   ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,22]
(06-04-2019)

------------------------------------------------------------------------------------------------------------

குறுந்தொகை (40) யாயும் ஞாயும் யாராகியரோ !

என் தாயும் உன் தாயும் ஒருவர்க்கொருவர் என்ன உறவு ?

தலைவனும் தலைவியும்  நீண்ட நாள்களுக்குப் பிறகு சோலை   

ஒன்றில் சந்திக்கின்றனர். ”இத்துணை நாளும்

 எங்கே சென்றிருந்தீர்கள் என கவல் கொண்டு 

வினவுகிறாள் தலைவி. தந்தையின் பணி நிமித்தம் 

வேற்றூருக்குச் சென்றிருந்ததாகத் தலைவன் உரைக்கிறான். 

என்னை மறந்து விட்டீர்களோ  என  ஊடுகிறாள் தலைவி !

தலைவிக்குத் தலைவன் மேல் சிறு ஐயமேற்படுகிறது

எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானோ 

என்று உள்ளூர அச்சப்படுகிறாள்

தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை

 உணர்கிறான் தலைவன் !

அதோ அங்கு பார் ! நேற்று  பெய்த மழை இந்தச்

 செம்மண் நிலத்தில் எப்படித் தேங்கி நிற்கிறது ? 

செம்மண்ணுடன் சேர்ந்த மழையின் வண்ணம் எப்படி

 இருக்கிறது ?  இந்த நீரிலிருந்து  செம் மண்ணையும்

நிறமற்ற தூய மழையையும்  தனித்தனியே 

பிரிக்க முடியுமா ?  

முடியாதல்லவா ? அதுபோன்றே, அன்பால் கலந்து

 கட்டுண்ட நம் 

காதலும் திகழ்கிறது !

செம்மண் நிலத்தில் பெய்த மழை, மண்ணின் 

ண்ணத்துடன் கலந்து இணைந்து ஒன்றி நிற்பதைப்

 போல, நமது காதலும் அன்பினால் 

பிணிக்கப்பட்டு இறுகித் திகழ்கிறது. அதற்குப் பிரிவு

 எப்பொழுதும் நேராது

கவல் கொள்ளாதே .” என்று தேற்றுகிறான் தலைவன்.

இந்தக் காட்சியை 

மிகச் சுருக்கமாக நமக்கு விவரிக்கும்

 பாடலைப் பார்ப்போமா !
-
-------------------------------------------------------------------------------------------------------
குறுந்தொகை (பாடல். 40)
-------------------------------------------------------------------------------------------------------

யாயும் ஞாயும் யாரா கியரோ ?

எந்தயு  நுந்தையு  மெம்முறைக்  கேளிர் ?

யானும் நீயும் எவ்வழி  யறிதும் ?

செம்புலப் பெயல்நீர்  போல

ன்புடை நெஞ்சந்  தாங்கலந் தனவே !
--------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
--------------------------------------------------------------------------------------------------------

யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ ?

எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர் ?

யானும்  நீயும்  எவ்வழி  அறிதும் ?

செம்புலப்  பெயல் நீர்  போல 

அன்புடை  நெஞ்சம்  தாம் கலந்தனவே!’’.

------------------------------------------------------------------------------------------------------------
யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்எந்தை = என் 

தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்செம்புலம் = செம்மண் 

நிலம்; பெயல் = மழை;
-----------------------------------------------------------------------------------------------------------
பாடலின் பொருள்:
என் தாயும் உன் தாயும் ஒருவர்க்கொருவர்  

என்ன உறவு என் தந்தையும் உன்

தந்தையும் எம்முறையில் உறவானார்கள்

எந்த உறவின் 

வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்?

உறவுகளைப் பார்த்து வருவதல்ல காதல்; செம்மண் 

நிலத்தில் பெய்த 

மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம்

தாமாக ஒன்றுபட்டன!

[உறவினால் வருவதல்ல காதல்; அன்பினால் உருவாகி

 இறுகப் பிணிக்கப் 

படுவதே காதல்; பிணிக்கப்பட்ட காதலுக்கு

 என்றும் பிரிவு இல்லை ,  

என்பதே இப்பாடலின் உட்பொருள்]

---------------------------------------------------------------------------------------------------------
         
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை.

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.: 20150, மீனம், 15]

{29-03-2019}
--------------------------------------------------------------------------------------------------------