name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துப்பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 05, 2019

பத்துப்பாட்டு (10) மலைபடுகடாம் !

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள  மலைப்பகுதியை ஆண்ட நன்னன் மீது பாடப்பெற்ற இலக்கியம் !



திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் என்னும் ஊரை அடுத்துள்ள மலைப்பகுதியில் வாழ்ந்த நன்னன் என்ற சிற்றரசன்பால் பரிசு பெற்று மீண்டு வந்த ஒருவன், எதிர்ப்பட்ட கூத்தன் ஒருவனை அவன்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது மலைபடுகடாம் என்னும் இந்நூல் !

பத்துப் பாட்டுத் தொகை நூல்களுள் பத்தாவதாக வைத்து எண்ணப்பெறும் இந்நூலை இயற்றியவர் பெருங்கௌசிகனார் என்னும் புலவர். 583 அடிகளைக் கொண்ட பாடலால் யாக்கப் பெற்றுள்ளது இத் தொகைநூல் !

மதம் பிடித்த யானை  பேரொலி எழுப்பும். எதிர்ப்பட்ட அனைத்தையும் சிதைத்து அழிக்கும். இதனால் ஏற்படும் ஒலி எங்கும் எதிரொலிக்கும். அதைப் போல மலையில் பல்வகை இரைச்சல்கள் ஏற்படுவது இயல்பு. பெருங்கௌசிகனார் நன்னனது மலையை கடாம் (மதம்) கொண்ட யானைக்கு உவமையாகச் சொல்லி, மதயானையால் ஏற்படும் பலவகை இரைச்சலைப் போல, மலையில்  பல்வகை ஒலிகள் உண்டாவதைப் பட்டியல் இடுகிறார் தன் பாடலில். இதனால்தான்  இவ்விலக்கியத்திற்கு மலைபடு கடாம் எனப்பெயர் ஏற்பட்டது !

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும்.  முன்பின் அறிமுகம் ஆகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும்.  தமிழ்மண்ணில் பிறந்த அனைவர்க்கும் இது பண்பாகவே பதிந்து விட்டது.  இதுவே, விருந்தோம்பலுக்கு வழிவகுத்தது எனலாம் ! 

விருந்துஎன்ற சொல்லுக்கு புதுமை’, ‘புதிய வரவு’, ‘புதிய வருகைஎன்ற சிறப்புப் பொருள்கள் உண்டு.  முன்பின் தெரியாதவர்களை இன்முகங்காட்டி வரவேற்று உபசரிப்பது விருந்தோம்பல்எனப்படும். இதனை மிகுதியாகவே மலைபடுகடாம்நூலில் காண முடிகிறது !

பாணர், பாடினியர், கூத்தர், விறலியர் மற்றும் வழிப்போக்கர் முதலானோரைத் தத்தம் உறவினராகக் கருதி இனிதாய் வரவேற்று உபசரிப்பதை, பிற இலக்கியங்களில் காணமுடியா விருந்தோம்பலை மலைபடுகடாம்எனும் நூலில் விரிவாகக் காணமுடிகிறது.  வந்தாரை வரவேற்றுத் தத்தம் வளத்திற்கேற்ப உணவு பரிமாறி அன்பு காட்டி மகிழ்ந்த நிலையை மலைபடுகடாம்நூலில் தெளிவாகக் காண முடிகிறது !

மலைநாடு வழியாகச் செல்லும் வம்பல மாக்களுக்கு (புதிய மனிதர்கள்) குறிஞ்சி நிலக் குறத்தியர் உணவளித்து மகிழும் பாங்கு, கானவர் (வேடர்) அளிக்கும் விருந்து, உழவர் உண்பித்து மகிழும் விருந்தோம்பல் பண்பு, எனப் பல்வகை மக்களும் பின்பற்றி வந்த விருந்தோம்பலைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்துள்ளார் பெருங்கௌசிகனார் !

இவ்வாறு பண்டைத் தமிழகத்து மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் படம்பிடித்துக் காட்டும் இந்நூலில், இக்காலத்தில் புழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற நேர்ப்பொருள், இணைப்பொருள் அல்லது புனைப்பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் பல மலைபடுகடாத்தில் பரவலாகக் காணக் கிடக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !

---------------------------------------------------------------------------------------------------------

DRUM (MUSIC INSTRUMENT).........= ஆகுளி (மலை.வரி.03)
TOOL KIT.............................................= கலப் பை (மலை.வரி.13)
SONS....................................................= மகார் (மலை.வரி.236)
MIGRATION...........................................= புலம்பெயர்வு (மலை.வரி.392)
BEAR......................................................= குடாவடி (மலை.வரி.501)
BABY ELEPHANT................................= கயமுனி (மலை.வரி.107)
ARROW-ROOT......................................= கூகை (மலை.வரி.137)
SCHEME................................................= நடவை (மலை.வரி.432)(-.அக)
GLASS...................................................= பளிங்கு (மலை.வரி.516)
FEATHER..............................................= பீலி (மலை.வரி.5)
GUEST..................................................= மகமுறை (மலை.வரி.185)

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,19]
{4-07-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

பத்துப்பாட்டு (09) பட்டினப்பாலை !

காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாலைத் திணையில் பாடப் பெற்ற இலக்கியம்.



பத்துப் பாட்டு தொகை நூல்களுள் ஒன்பதாவதாக இடம்பெறுவது பட்டினப்பாலை. இந்நூலின் பெயரில் உள்ள பட்டினம் என்னும் சொல் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது. பாலை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தருவது !


காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாலைத் திணையில் இப்பாட்டு அமைந்து  உள்ளமையால், பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது. 301 அடிகளால் ஆன பாடலைக் கொண்டு இந்நூலை யாத்தவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் பெரும் புலவர் !


வேற்று நாட்டிற்குச் செல்ல எண்ணிய தலைவன் ஒருவன், தனது நெஞ்சை விளித்து, ‘என் தலைவியில் தோள்கள் கரிகால் வளவனுடைய செங்கோலைக் காட்டிலும் குளிர்ச்சி உடையவை; கடந்து செல்லக் கருதும் காட்டு வழிகள், அவ்வரசன் பகைவர் மேற் செலுத்தும் வேலைக் காட்டிலும் வெப்பத்தை உடையவை !


ஆதலால், பல சிறப்புகளை உடைய காவிரிப் பூம்பட்டினத்தையே பரிசாகப் பெறுவேன்; ஆயினும் என் தலைவியைப் பிரிந்து வரமாட்டேன்என்று தான் பிரிந்து செல்வதை தவிர்த்துக் கூறுவதாக இப்பாட்டு அமைந்துள்ளது !


இது கரிகாற் சோழன் மீது பாடப்பட்டது; இப்பாட்டில், சோழ வள நாட்டின் செழுமையும், காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்புகளும், கரிகாலனுடைய போர்ச் செயல்களும், ஆட்சிமுறையும், நகர மாந்தர் தம் பழக்க வழக்கங்களும், கடல் வாணிகப் பெருமையும், கடைத் தெருக்களின் சிறப்பும், பிறவும் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளன !


இப்பாட்டினைப் பாடியதற்காக, கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகால் வளவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாக வழங்கினான் என்பது, கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்தின் மூலம் தெரியவருகிறது !


மாசு மறுவற்றுப் பளிச்சென்று ஒளிவீசும் வெள்ளி (சுக்கிரன்) கிழக்கில் தோன்றாமல் தென் திசைக்குப் போகலாம், நீர்த் துளிகளை உண்டு, பாடித் திரிந்து  மகிழும் வானம்பாடி, வருந்தும் வகையில், மழை பெய்வதைத் தவிர்த்து வானம் பொய்க்கலாம், ஆனால் மலையில் தொடங்கிக் கடலில் புகும் காவிரி ஆறு என்றும் தவறாமல் தன்னுடைய நீரை வயல்களில் நிறைத்துப் பரப்பிப் பொன் கொழிக்கும் சோழ வள நாடு, என்று காவிரியைப் பற்றிப் பாடுகிறார் புலவர். இதோ அந்தப் பாடல் வரிகள் :-
------------------------------------------------------------------------

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளியுணவின்
புள்தேம்பப் புயல் மாறி,
வான் பொய்ப்பினும் தான் பொய்யா,
மலைத் தலைய கடற் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும்...”

-----------------------------------------------------------------------

காவிரியின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ! என்னே காலத்தின் கோலம் ! இயற்கையை மதிக்கத் தெரியாத மனிதன் ! மனிதனை மிதிக்கத் துணிந்துவிட்ட இயற்கை ! இஃது எங்கு கொண்டுபோய் விடுமோ !


சிறப்புகள் பல வாய்ந்த பட்டினப்பாலையில் ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் கலைச் சொற்கள் பல பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் காண்போமா !

---------------------------------------------------------------------------------------------------------

KITCHEN..................................= அட்டில் (பட்.43)
BAZAAR....................................= கடைத்தெரு (பட்.158)
VERANDAH..............................= இடைகழி (பட்.144)
CROCODILE.............................= கராம் (பட்.242)
PLANET....................................= கோள்மீன் (பட்.68)
PAIL...........................................= திண்ணை (பட்.143)
SLIPPER...................................= தொடுதோல் (பட்.265)
CENTER....................................= நாப்பண் (பட்.194)
STAIR–CASE STEPS...............= படிக்கால் (பட்.142)
CAKE.........................................= பண்ணியம் (பட்.203)
BANNER....................................= பதாகை (பட்.182)
VENUS......................................= வெண்மீன் (பட்.01)
BROAD......................................= வியன் (பட்.08)
GUEST HOUSE.........................= துச்சில் (பட்.58)
BRAIDED COCONUT LEAF.... = கிடுகு (பட்.78)
HUT............................................= குரம்பை (பட்.198)
JAIL............................................= பிணியகம் (பட்.222)
SOLDIER...................................= வயவர் (பட்.232)
FOREIGNERS...........................= வம்பலர் (பட்.249)
HUNTERS.................................= எயினர் (பட்266)

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,18]
{03-07-2019}
-------------------------------------------------------------------------------------------------------
     ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------



பத்துப்பாட்டு (08) குறிஞ்சிப் பாட்டு !

பண்டைய மலர்கள்   99-ன் பெயர்களை  இப்பாட்டில்   பட்டியலிடுகிறார் கபிலர் !



பத்துப்பாட்டுத் தொகை நூல்களுள் எட்டாவதாக இருப்பது குறிஞ்சிப் பாட்டு. இதனை இயற்றியவர் கபிலர். இருநூற்று அறுபத்தோறு அடிகளை உடைய குறிஞ்சிப் பாட்டில், அக்காலப் பூக்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் புலவர் பாடியுள்ள திறம் வியப்பை அளிக்கிறது !

தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காதல் வாழ்க்கைக்கு உடம்படுதல்குறிஞ்சிஒழுக்கமாகும். காதல் வாழ்வையடுத்து மணம் முடித்து இல்லற வாழ்வு தொடங்கும். இல்லறம் நடத்தும் காலை, பொருள் தேடித் தலைவன் பிரிந்து செல்வதுபாலைஒழுக்கம். பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் (மனத் துயருடன் பொறுத்து இருத்தல்) “முல்லைஒழுக்கம் !

தலைவன் பொருளீட்டிக் கொண்டு திரும்பி வருகிறான். ஆனால் சற்று கூடுதல் காலம் ஆகிவிட்டது. காலம் தாழ்த்தி வந்ததால் தலைவன் மீது சினம் கொண்டு தலைவி ஊடுகிறாள். இவ்வாறு ஊடல் கொள்ளும் வாழ்க்கை முறையைமருதம்ஒழுக்கம் என்றனர் நம் முன்னோர் !

ஊடல் கொண்ட  தலைவி, சற்று நேரத்தில் சினம் நீங்கி, தலைவன் மீது இரக்கம் கொள்கிறாள். இதைநெய்தல்ஒழுக்கம் என்கின்றன இலக்கியங்கள். குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்படும் நிகழ்வுகளுக்கு வருவோம் !

தலைவனும் தலைவியும் சந்தித்து ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு களவு முறையில் ஒழுகி வருகின்றனர்.  தலைவி தன் தலைவன் மீது கொண்ட காதலைத் தோழி  செவிலித் தாய்க்கு எடுத்துக் கூறுவது போல இப்பாட்டு அமைந்துள்ளது. ஆகையால் இதற்குக்குறிஞ்சிப் பாட்டுஎனப் பெயர் வழங்கலாயிற்று !

இப்பாட்டின்கண் முருகவேளைப் பற்றிய செய்திகளும், பற்பல பூக்களின் பெயர்களும், பற்பல பூச்சிகளின் பெயர்களும், குறிஞ்சி நில மக்களின் பழக்க வழக்கங்களும், பிறவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன !

பளிங்கினைக் கரைத்துச் சொரிவது போல அருவி வீழ்கிறது. அதில் உருவாகும் சுனையில் தலைவியும் தோழியரும், நீராடிக் கரையேறுகின்றனர். தலைமுடியைப் பிழிந்து உலர்த்தும் அவர்களது கண்கள், நீண்ட நேரம் நீராடியதால் சிவந்து காணப்படுகின்றன. இக்காட்சியைக் குறிஞ்சிப் பாட்டு வண்ணிக்கிறது பாருங்கள் !

---------------------------------------------------------------------------------------

அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு, தெள் நீர்
அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி, 
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,
நளி படு சிலம்பில் பாயம் பாடிப்
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி,  
உள்ளகம் சிவந்த கண்ணேம் !

----------------------------------------------------------------------------------------


அடுத்து என்ன செய்கின்றனர் ? அங்கு பூத்திருக்கும் மலர்களின் அழகில் மயங்கி, அவற்றைப் பறித்து, அகன்ற பாறையில் குவிக்கின்றனர். எத்துணைப் பூக்கள் தெரியுமா ?

செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், பூளை, நறுங்கண்ணி, குருகிலை, மருதம்......அப்பப்பா ! படித்து மூச்சு வாங்குகிறதா? இன்னும் இருக்கின்றன ! படியுங்கள் !

கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, கலிமா, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், மாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல், கைதை, நறுவழை, காஞ்சி, பாங்கர், மராம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி...அவ்வளவு தானா? இல்லை ! இல்லை ! இன்னும் இருக்கிறது ! படியுங்கள் !!

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, குருந்து, வேங்கை, புழகு, மால்...அம்மம்மா ! இத்துணைப் பூக்களையும் பறித்துப் பாறையில் குவித்திடும் பாவையரைப் பற்றிப் பாடும் குறிஞ்சிப் பாட்டு இலக்கியங்களிடையே தனி இடம் பிடித்து உயர்ந்து நிற்கிறது என்பதை மறுக்க முடியாது !

இத்தகைய சுவைமிக்கக் காட்சிகளைப் பாடலாகத் தொடுத்து நமக்கு அளித்திருக்கும் குறிஞ்சிப் பாட்டில், சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள்  அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------------------------------

DRAWING HALL................= அகலறை (பா.வரி.98)
MUSICAL INSTRUMENT. = இன்னியம் (பா.வரி.193)
HUNTING DOG..................= கதநாய் (பா.வரி.240)
GENTLE MAN....................= பெருந்தகை (பா.வரி.206)
GONG (சேகண்டி)..........= எறிமணி (பா.வரி.59)
HAIR DYE...........................= தகரம் (பா.வரி.108)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,17]
{02-07-2019}

--------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

பத்துப்பாட்டு (07) நெடுநல்வாடை !

துன்பம் தரும் இயல்புடைய  வாடை எப்படி (நெடு)  நல் வாடை ஆயிற்று ?



நெடுநல்வாடை பத்துப் பாட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களம் புக்கதால், அவனைப் பிரிந்து வாழும் அரசமாதேவிக்கு வாடைக் காலமானது நெடிய துன்பம் தரும் ஊழிக் காலம் போல் தோன்றியது. ஆனால் போர்க்களத்தில் அரசனுக்கு வெற்றியை ஈட்டித் தந்ததும் இதே வாடைக் காலம் தான் !


அரசமாதேவிக்கு நெடிய துன்பம் தந்த வாடைக் காலம், இப்போது அரசனின் வெற்றிக்குக் காரணமான நல் வாடைக் காலமாக  அமையப் பெற்றதால், நெடுநல் வாடை என்று இந்நூலுக்குப் பெயர் வரலாயிற்று என்று கூறுவர் கற்றறிந்த சான்றோர் !


இந்நூல் 188 அடிகள் கொண்ட பாடலால் யாக்கப்பெற்றது. பெரும்புலவர் நக்கீரனார் இப்பாடலை இயற்றியவர் !


பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் அரசமாதேவிக்கு, அவ்வருத்தம் தீரும்படி, ‘அரசன் பகைவரை வென்று விரைவில் திரும்பி வருவான்என்று கொற்றவைத் தெய்வத்தை வணங்கும் ஒரு பெண் கூறியதாக இப்பாட்டு அமைந்துள்ளது !

இந்நூலின்கண், ஆநிரை மேய்ப்போர் வாடைக்காற்றால் துன்புறுதல், கூதிர்க் கால நிலை, ஊரினது செழிப்பு, கூதிர்க்காலம் (குளிர்காலம்) நிலைகொண்டமையால் நேர்ந்த விளைவுகள், அரசியின் அரண்மனை, அரண்மனையில் எழும் ஓசைகள், அந்தப்புரத்தின் அமைப்பு, செவிலியரும் சேடியரும் அரசியைத் தேற்றி நன்மொழி கூறல், பாசறையில் அரசன் நிலை, போன்றவையும் பிறவும் விளக்கமுறக் கூறப்பட்டுள்ளன !

கூதிர்க் காலத்தின் குளிரின் கடுமையால் பாண்டிய நாட்டில் இயல்புநிலை பாதிக்கப்பட்டு அனைத்து உயிர்களும் எவ்வாறு முடங்கிப் போயின என்பதற்கு எடுத்துக் காட்டு ஒன்றை புலவர் தருகின்றார். வீட்டின் இறப்புகளில்  குடியிருக்கும் புறாக்கள், குளிரின் கடுமையால் வெளியில் சென்று இரை தேடாது, இராப் பகலாய், தம் குஞ்சுகளுடன் முடங்கிக் கிடந்தனவாம். (இறப்பு = சுவருக்கும் கூரைக்கும் இடையில் உள்ள பொந்து) இதோ அந்தப் பாடல் வரிகள்:-
-------------------------------------------------------------------------------------

மனையுறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது,
இரவும் பகலும் மயங்கி, கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப...”

-------------------------------------------------------------------------------------

இதுபோன்ற சுவைக்கத் தக்க பல நிகழ்வுகள் நெடுநல்வாடைப் பாடலில் பரவலாகக் காணப்படுகின்றன !


நெடுநல் வாடையில், கலைச் சொற்கள் சிலவும் பாடலூடே கலந்து காணக் கிடக்கின்றன. இக்காலத்தில் புழங்கும் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றுக்கு நேர்ப் பொருள் தரும் அல்லது இணைப் பொருள் தரும் அல்லது புனைப் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள்  உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. படித்துச் சுவையுங்கள், வாய்ப்பு வருகையில் வழக்கிலும் கொண்டு வாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------------

AUTUMN.....................= கூதிர் காலம் (பா.வரி.11)
SOFA..........................= இணையணை (பா.வரி.133)
KINDERGARTEN.......= மதலைப்பள்ளி (பா.வரி.48)
SKILLED ARTISAN...= கைவல் கம்மியன் (பா.வரி.57)
BED.............................= சேக்கை (பா.வரி.131)
NURSE........................= செவிலி (பா.வரி.153)
STOOL........................= பாண்டில் (பா.வரி.123)

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2015,ஆடவை,16]
(01-07-2019}
-----------------------------------------------------------------------------------------------------
         ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------

பத்துப்பாட்டு (06) மதுரைக் காஞ்சி !

எத்துணைக் கலைச் சொற்களை நமக்குத் தந்துள்ளார் மாங்குடி மருதனார் !


மதுரைக் காஞ்சி, பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று. மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான் 782 அடிகளை உடைய இந்நூலை இயற்றியுள்ளார் !


வீடுபேறு காரணமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் உணர்த்துதல் காஞ்சி எனப்படும். இது மதுரை நகரில், பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்குக் கூறிய காஞ்சியாதலால், ”மதுரைக் காஞ்சிஎனப்பட்டது !


இப்பாட்டில், பாண்டிய மன்னனின் முன்னோர் சிறப்பு, அவனது போர் வலிமை, பகைவரை வென்று அவர்களை அற நெறியில் நிறுத்திய மாண்பு, மதுரை நகர அமைப்பு, பாணர் இருக்கை, நாளாங்காடி, மன்னனது ஈகைச்  சிறப்பு முதலிவற்றைக் கூறி, வாழ்நாள் முழுவதும் மன்னன் இனிதாக வாழ்ந்திட வாழ்த்துகிறார் புலவர் !


சங்க காலத்தில் மதுரையில் திருவிழா நாட்களில் தெருக்களில் கடைகள் வரிசையாக  அமைந்திருந்தன. பகல் நேரத்தில் வாணிகம் செய்த வணிகர்கள், இரண்டாம் யாமத்தில் சங்குகளின் ஒலி அடங்கிய பின்பு அவர்களது கடைகளை அடைத்தனர்.  வீட்டுக் கதவை அடைத்துவிட்டு மகளிர் உறங்கத் தொடங்கினர். பல தின்பண்டங்களை  மடைத் தொழில் வல்லோர் செய்து விற்றனர் !


பகல் வேளையில் வணிகர்களின் மனைவியர் அவர்களுக்கு உதவியாய் இருந்து தேன் கூட்டைப் போன்ற இனிய அடை, தேங்காயும் சர்க்கரையும் கூட்டிச் செய்த மோதகம், அப்பம் போன்றவற்றையும் செய்து விற்றனர். திருவிழாக் காலங்களில் கூத்து இயற்றும் கூத்தர்களும் உறங்கச் சென்றனர்.  இக்காட்சியை விவரிக்கிறது கீழ்க் கண்ட பாடல் வரிகள் !
-------------------------------------------------------------------------------------

பணிலம் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்,
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர,
நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை,
அயிருருப் புற்ற ஆடமை விசயம்
கவவொடு பிடித்த வகையமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,
விழவின்  ஆடும் வயிரியர் மடிய,”

--------------------------------------------------------------------------------------

பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, அமணப் பள்ளி, அறங்கூறு அவையம், காவிதி மாக்கள், பண்டங்கள் விற்கும் வாணிகர், நாற்பெருங் குழு, பல்வேறு தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பொருள்களின் வகைகள், குரவைக் கூத்து, ஆகியவை பற்றிய செய்திகள் இப்பாட்டில் இடம்பெற்றுள்ளன !


அரசியல் பிழையாது அறநெறி காட்டி, பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது...” (பாடல் வரி.191, 192) ஆட்சி செலுத்த வேண்டும் என்பதை மதுரைக் காஞ்சி மூலம் சுட்டிக்காட்டுகிறார் மாங்குடி மருதனார் !


நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல..” (நீர்ச் சுழியில் அகப்பட்ட தோணி போல), “பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல” (பழங்களை நாடியுண்ணும் பறவை போல), முந்நீர் நாப்பண் ஞாயிறு போல (கடல் நடுவே எழும் கதிரவன் போல), பன்மீன் நடுவண் திங்கள் போல” (குவிந்து கிடக்கும் விண்மீன்களுக்கு இடையே உலாவரும் கொழுமதி போல) என்பன போன்ற அழகிய உவமைகள் மதுரைக் காஞ்சியில் நிறைந்து காணப்படுகின்றன !


ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப்பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்கில் பாடல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !
------------------------------------------------------------------------------------------------------


BANNER..........................= பதாகை (பா.வரி.373)
BUNGALOW....................= வளமனை (வரி.603)
CAKE SHOP...................= பண்ணியக்கடை (வரி.661)
CAKE...............................= பண்ணியம் (வரி.405)
CLIP.................................= கண்ணி (பா.வரி.596)
CROP CUTTER..............= அரிநர் (பா.வரி.110)
CROP...............................= விளையுள் (பா.வரி.109)
DAY – BAZAAR..............= நாளங்காடி (பா.வரி.430)
DITCH & CREST...........= அவலும் மிசையும் (வரி.240)
DRILLER..........................= குயினர் (பா.வரி.511)
EVENING BAZAAR.........= அல்லங்காடி (வரி.544)
HONORARY TITLE.........= காவிதி (பா.வரி.499)
HONORABLE...................= மேதகு (பா.வரி.565)
JANGRI (ஜாங்கிரி)......= தீம்புழல் (பா.வரி.395)
JUDICIAL COURT...........= அறங்கூறு அவையம்(வரி.492)
MECHANIC.......................= கம்மியர் (பா.வரி.521)
MOTO................................= பொன்னுரை (பா.வரி.513)
NECKLACE.......................= மதாணி (பா.வரி.461)
PASTURAGE....................= மேய் புலம் (பா.வரி.303)
SKILLED WORKER.........= வன்கை வினைஞர் (வரி.262)
SLIPPER...........................= தொடுதோல் (வரி.636)
TERRACE.........................= அரமியம் (பா.வரி.451)
TURNER...........................= கடைநர் (பா.வரி.511)
V.I.P..................................= விழுமியர் (பா.வரி.200)
WHIRL-POOL...................= நெடுஞ்சுழி (பா.வரி.379)
WORKER..........................= வினைஞர் (பா.வரி.539)

--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,ஆடவை,15]
{30-06-2019}
--------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

பத்துப்பாட்டு (05) முல்லைப்பாட்டு !

கலைச் சொற்கள் பல விரவிக்  கிடக்கும் கருவூலப் பெட்டகம் !



பத்துப் பாட்டு நூல்களுள் முல்லைப் பாட்டும் ஒன்று. அகப்பொருள் சார்ந்த இந்நூல் 103 அடிகளைக் கொண்ட பாவினால் இயன்றது.  இதை இயற்றியவர் நப்பூதனார் என்னும் பெரும் புலவர் !


தலைவன், போர்க்களம் செல்லும்  பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்ல நேர்கிறது.  தலைவி, தன் தோழியுடன் இல்லத்தில் தனித்து வாழ்கிறாள். பிரிவாற்றாமையினால் தலைவி துன்பம் கொள்கிறாள். எனினும், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, துன்பத்தைப் பொறுத்துக் கொள்கிறாள் !


இவ்வாறு, பிரிந்து சென்ற தலைவன் வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் (பொறுத்துக் கொள்ளுதல்) முல்லை எனப்படும். தலைவி மனத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு வாழ்ந்துவரும் ஒரு நாளில் தலைவன் போர்க்களத்தில் பகைவரை வென்று  திரும்பி வருகிறான் !


தலைவன் வருவதைக் காணும் தோழியர் தம்முள் உரையாடுவதாக அமைந்தது முல்லைப் பாட்டு என்னும் இந்நூல். இதன்கண், முதிய பெண்டிர் குறி சொல்பவரிடம் நற்சொல் (விரிச்சி) கேட்கும் முறையும், பாசறையின் இயல்பும், மங்கையர் இரவில் தூண்களில் விளக்கு ஏற்றுதல், முதலியவையும் விளக்கப்பட்டுள்ளன !


நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல், அரசன் சிந்தனையில் ஆழ்தல், பாசறையில் வெற்றி முழக்கம், தலைவியின் துயரம், போன்றவை இந்நூலில் சிறப்பான சொற்களால் வடிக்கப்பட்டுள்ளன !


சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் இனிய தமிழ்ச் சொற்கள் பல நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றை  மட்டும் காண்போம்!

---------------------------------------------------------------------------------------------------------

AUGURY (குறிசொல்லல்)............= விரிச்சி (வரி.11)
BENEDICTION....................................= வாய்ப்புள் (அருளாசி) (வரி18)
CONCAVE...........................................= அகவில் (பா.வரி.24)
ELEPHANT’S GOAD..........................= கவைமுட் கருவி (வரி.35)
HEARING.............................................= ஓர்தல் (பா.வரி.88)
PUNCH................................................= குந்தம் (பா.வரி.41)
ROPE...................................................= தாம்பு (பா.வரி.12)
CENTER..............................................= நாப்பண் (பா.வரி.43)
CONVEX..............................................= புறவில் (பா.வரி.24)
SENIOR CITIZEN...............................= மூதாளர் (பா.வரி.54)
SHIRT..................................................= மெய்ப்பை (பா.வரி.60)
TUMBLER............................................= நாழி (பா.வரி.09)
TOWERA.............................................= வட்டகை
LAMP STAND.....................................= மத்திகை (பா.வரி.59)
POINTED GRILLED COMPOUND....= இடுமுட் புரிசை (பா.வரி.27)
COOL BREEZED BED ROOM.........= ஈரறைப் பள்ளி (பா.வரி.64)
SEVEN STOREY BUILDING.............= எழு நிலை மாடம் (பா.வரி.86)

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,14]
{29-06-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணிமன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------