மது என்பது தன்னிடம் அகப்பட்டோரை மீளவிடாத உளைசேறு !
மது என்பது
மனிதனை மயக்கிக் கொல்கின்ற ஒரு கொடிய பிசாசு
! இறுகப் பற்றிக் கொள்கின்ற
சிலந்தி வலை ! மெல்ல மெல்லத் தன்னிடம் உள்வாங்கிக்
கொன்றுவிடும் புதைமணல் ! அகப்பட்டோரை மீளவிடாத உளைசேறு
!
இந்திய
அளவில்
96 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் மதுவுக்குப் பலியாவதாக தேசியக் குற்றப்பதிவுக்
கணக்கீட்டுப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது
! இங்கு நடைபெறுகின்ற பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு மதுவே காரணம்
என்றும் இந்தப் புள்ளி விரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது !
உலக அளவில்
மது அருந்துவோர் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில்
16% என்றும் இதில் 11% பேர் இந்தியாவில் உள்ளதாகவும்
இன்னொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது !
மதுவால்
உயிர் இழப்போர் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், தமிழ் நாடு மூன்றாம்
இடத்திலும் இருப்பதாக வேறொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது !
மது அருந்தலாகாது
என்று கூறிய அண்ணல் காந்தி பிறந்த நாட்டில், பீகாரைத் தவிர
வேறு எந்த மாநிலத்திலும் இன்று மதுவிலக்கு இல்லை ! நாட்டுக்கு
விடுதலை பெற்றுத் தந்தப் இந்தப் பெருந்தகையின் பேச்சுக்கு யாரும் மதிப்பு அளிக்கவில்லை
!
ஊரெங்கும்
காந்திக்குச் சிலை ! பணத்தாளில் காந்தி உருவம்
! நாடாளு மன்ற இரு அவைகளிலும், சட்ட மன்றங்களிலும்,
அரசு அலுவலகங்களிலும்
காந்திக்குப் படம் ! அவரது பிறந்த நாள்,
இறந்த நாள்களில் சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்துப் புகழஞ்சலி
! ஆனால் அவரது கொள்கைகளின்படி மட்டும் நடக்க மாட்டோம் !
என்ன
போலித் தனமான அரசியல் ! காந்தியின் முதன்மைக் கொள்கைகளான வாய்மை (சத்தியம்),
கொல்லாமை (அஹிம்சை), மது
அருந்தாமை ஆகிய அனைத்தையும் துறந்து விட்டோம் ! அப்புறம் எதற்குக்
காந்தி பிறந்த நாள் (காந்தி ஜயந்தி) கொண்டாட்டமும்,
தேசிய விடுமுறையும் ?
தேசிய
அளவில் இந்தியப் பேராயக் கட்சி (CONGRESS), பாரதிய சனதாக்
கட்சி (B.J.P). சனதாக் கட்சி (JANATHA PARTY), ஆகியவை ஆட்சியில் இருந்திருக்கின்றன ! மாநில அளவில் ஆட்சியில்
அமராத பெருங் கட்சிகளே இல்லை ! ஆனால் எந்தக் கட்சியும் மதுவிலக்கை
நடைமுறைப்படுத்த முன்வரவில்லை !
மது அருந்துவதால்
எந்த நன்மையும் கிடையாது; உடல் நலத்தைக் கெடுத்து, இறுதியில் உயிரையே குடித்து
விடுகிறது ! அப்படிப்பட்ட மதுவை மாநில அரசுகளே கடை விரித்து விற்பனை
செய்து மக்களைக் குடிக்க வைப்பது அறநெறி தவறிய செயல் அல்லவா ? மக்களைப் பார்த்து, வாருங்கள், வந்து மதுவை வாங்கிச் சென்று குடியுங்கள்
என்று அழைக்கும் விதமாக பல்லாயிரக்கணக்கில் மதுக் கடைகளைத் திறப்பதில் என்ன ஞாயமிருக்கிறது
?
மக்களின்
நல மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து நிறைவேற்ற வேண்டிய மாநில அரசு, மக்களின் நலத்தைக் கெடுக்கும் வகையில் மதுக்கடைகளைத் திறப்பதும், அங்கு மதுவை மக்களுக்கு விற்பதும்
தான் நல்லாட்சி நடத்துவதற்கான அடையாளமா
?
ஒரு பக்கம்
மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அவர்கள்
உடல் நலத்தைக் கெடுத்து விட்டு, இன்னொரு பக்கம் அவர்களுக்குப்
பண்டுவம் (சிகிச்சை) செய்திட இலவய மருத்துவ
மனைகளைத் திறப்பது தான் ”ஆட்சி” என்பதற்கான
இலக்கணமா ?
மாவட்டம்
தோறும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் திறப்பது எதற்காக ? மதுக் குடித்துக் குடல் வெந்து போன ”குடிமக்களுக்கு”ப் பண்டுவம் செய்யப் புதிய புதிய மருத்துவர்களை உருவாக்குவதற்காகவா
?
“குடி குடியைக் கெடுக்கும்” என்பதைத் தெரிந்தே,
”குடி கெடுக்கும் செயல்”களில் மாநில அரசுகள் முனைப்பாக
இயங்குவது ஒழுக்கம் தவறிய செயலாக ஆட்சியில் இருப்போர்க்குத் தெரியவில்லையா
?
”மக்களுக்காக ஆட்சி, மக்கள் நலனுக்காக ஆட்சி” என்னும் கோட்பாட்டை மறந்து விட்டு மதுக்கடைகளைத் திறந்து மக்களையே அழித்து
வரும் மாபாதகர்களே ! உங்கள் மனதில் இரக்கம் என்பதே இல்லையா ? முற்றிலுமாக
வற்றிப் போய்விட்டதா ?
அறிவாளிகளும், அருளாளர்களும் அமர வேண்டிய ஆட்சிக் கட்டிலில், அமர்ந்திருக்கிறோம்
என்பதை ஒரு கணமாவது சிந்தித்துப் பார்த்தீர்களா ? மக்களுக்கு
நல்லது செய்வதற்காகவே நமக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏன் மறந்து
விட்டீர்கள் ?
அரசை
நடத்துவதற்குப் பணம் தேவை என்பதற்காகத், தவறான பாதையில் செல்வது என்ன ஞாயம் ? பணம் திரட்டுவதற்கு இன்னும் எத்தனையோ தவறான பாதைகள் இருக்கவே செய்கின்றன.
அந்தப் பாதைகளையும் திறந்து விடுவீர்களா ?
நல்லொழுக்கமும், நற்சிந்தனையும், நாட்டுப் பற்றும் இல்லாத மனிதர்களை எல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துவிடுகிறது
நமது அரசியல் அமைப்பு ! இத்தகைய குறைபாடுகள், நமது மக்களாட்சிக் கோட்பாட்டையே குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது
!
கரையான்
புற்றெடுக்கக் கருநாகம் அதில் வந்து குடியேறியதைப் போல, அண்ணல் அம்பேதகார் போன்ற அறிஞர்களால் உருவாக்கப் பெற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை
வளைத்துக் கொண்டு, இன்று எல்லா மாநிலங்களிலும், தவறானவர்களே ஆட்சிக் கட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள் !
அருமை
தெரியாதவர்களின் கையில் அகப்பட்ட பூமாலை போன்று, மக்களாட்சி கோட்பாடு இன்று சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
அவற்றுள் ஒன்று தான், மது விற்பனை செய்து அதில்
கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற அவலம் !
மக்கள்
நல ஆட்சி,
ஒவ்வொரு மாநிலத்திலும், மக்களை மதிக்காத ஆட்சியாக
மாறிக் கொண்டிருக்கிறது. இந்த அழகில், ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை தேர்தல்; தேர்தலுக்குப்பின் ஒழுக்கமில்லாத இன்னொருவர்
வந்து ஆட்சியில் அமர்வதற்கு நாமெல்லாம் வாக்களிக்க வேண்டும் ! என்ன கோமாளித் தனமான அரசியல் !
மதுவிலக்குப்போன்ற
எத்துணையோ நல்ல திட்டங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தத்
துணிச்சல் இல்லாத அரசியல் வாதிகளைத் துரத்திட வேண்டும் ! நாடு
உருப்பட, மக்கள் நலம் பெற நாம் இதைத் செய்திட வேண்டும்
!
எனவே, மதிநுட்பம் வாய்ந்த மக்களே ! இனி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக அரசியல் பேசாதீர்கள்;
அரசியல் கட்சி ஆளிநர்க்கு எந்தத் தேர்தலிலும் வாக்களிக்காதீர்கள்;
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குப் போகாதீர்கள்; அரசியல் வாதிகளின் பின் அணி வகுத்து
நிற்காதீர்கள் !
அனைத்துக்
கட்சி ஆதரவாளர்களும் தங்கள் மீது படிந்திருக்கும் அரசியல் சேற்றைத் துடைத்துவிட்டு ஒதுங்கி விட்டால்,
அரசியல் களம் துப்புரவாகிவிடும். அரசியல் சார்பற்ற
அறிவாளிகளையும் வல்லுநர்களையும் ஆட்சியில் அமரச் செய்து நல்லாட்சி நடத்திட நல்ல பாதையை
அமைத்துத் தருவோம் !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி)16]
{30-06-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------